Skip to Content

08. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. பரிபூரணத் திறமையும், முறைமையும் நல்ல செயலைச் சூழுமானால் ஜடம் உயர்ந்து சத்தியஜீவியத்தை எட்டும்.

    திறமையும் முறைமையும் சத்தியஜீவியத்தைச் சாதிக்கும்.

    • ஆதிமனிதனுக்கு நம் அறிவு இருந்ததுஎனப் பகவான் கூறுகிறார். நடைமுறையில் அதை நாம் காண முடியும். எளிய மனிதனைக் கவனித்தால் அவனுக்குப் பெரிய மனிதர்கட்குள்ள தெளிவு இருப்பதைக் காணலாம். பகவான் The Life Divine முதல் அத்தியாயத்தில் சத்தியஜீவியத்தை எட்ட நாம் செய்ய வேண்டியதை "முயற்சியை முடிவு வரை கைவிடக்கூடாது'' என்கிறார். இம்மனநிலையை எளிய மனிதர்கள் அநேகரிடம் காணலாம். அப்படியிருந்தும் ஏன் அவர்கள் எளியவர்களாக இருக்கிறார்கள்எனில் அவர்களிடம் வேறொரு முக்கிய குறை இருக்கும்.

      "ஆமையும் முயலும்" என்ற சிறு குழந்தைகட்கான கதை விடாமுயற்சியைக் கூறுகிறது. 30,000 வருஷத்தில் மனிதன் பெறக்கூடிய சத்தியஜீவியத்தை இந்த ஜென்மத்தில் பெற விடாமுயற்சி மற்ற குறைகளின்றி இருந்தால் போதும்.

      திறமை சாதிக்கும். பெரிய அளவு சாதிக்கும். திறமை மட்டும் முழுமையாகச் சாதிக்காது. முறைமை அவசியம். அதுமட்டும் பூரணமாகச் சாதிக்காது. இவையிரண்டும் பூரணமானால் நல்லதையும் சாதிக்கலாம், கெட்டதையும் சாதிக்கலாம். யோகம் சத்தியஜீவியத்தை இம்முறையால் எட்டும்.

    • நமக்குப் பிரச்சினை எழுந்தால் பிரார்த்தனையால், சமர்ப்பணத்தால் தீர்க்கிறோம்.

      இது பிரச்சினை தீரவும், வாய்ப்பு பலிக்கும் முறை.

      பிரார்த்தனை பிரச்சினையைத் தீர்த்தால், மீண்டும் பிரச்சினை வருவதை பிரார்த்தனை தடுக்காது.

      இம்முறை தடுக்கும்.

      ஒரு காரியத்தை இம்முறையால் செய்தால் பிரச்சினையை விலக்கி, வாய்ப்பைப் பூர்த்தி செய்யும்.

      பிரச்சினை விலகுவது வெற்றி - முதல் நிலை.

      பிரச்சினை விலகுவதால் ஒரு வாய்ப்பும் எழுவது - இரண்டாம் நிலை வெற்றி.

      சூட்சும சக்தி செயல்பட்டால் இது நடக்கும்.

      பிரச்சினை விலகி பிரம்மாண்டமான வாய்ப்பு எழுவது - முடிவான மூன்றாம் நிலை.

      இது காரண லோகம் (causal plane,, சத்தியஜீவியம்) செயல்படுவது.

      ஜேன் திருமணத்தில் பிரச்சினை எழுந்து தீர்ந்தது. அதுவே எலிசபெத் நாடியது.

      அவள் முயற்சியில் தவற்றைக் கைவிட்டு, சரியானதை ஏற்க முயன்றாள்.

      விக்காம் கூறிய பொய்யை கைவிட்டு டார்சி கூறிய மெய்யை ஏற்றாள்.

      இது உணர்விலிருந்து மனத்திற்குப் போகும் பரிணாமமுறை.

      இதனால் சூட்சுமத்தைக் கடந்த காரணலோக சக்தி செயல்பட்டது.

      £ 100 சம்பாதிக்கும் விக்காமை, பொய்யான தறுதலை விக்காமை மணக்க முயன்றவளுக்கு £ 10,000 பவுன் வருமானமுள்ள பெரிய மனிதன் வரனாக வந்தான்.

      அவள் செயல் நல்லது. அதை முடிக்கும் முழுத் திறமையும் எலிசபெத்திற்கு இருந்தது.

      முறைகளை முழுமையாகப் பின்பற்றினாள். தனக்கென திருமணத்தையும் நாடவில்லை.

      ஜேனுக்கு அவள் விருப்பப்படி மணம்முடிந்ததும், அத்துடன் தனக்கு சத்தியஜீவியமாக டார்சி வந்ததையும் கண்டாள்.

      எலிசபெத்திற்கு டார்சி சத்தியஜீவியம்.

      அன்பருக்குப் பெரிய திரண்ட பிரம்மாண்டமான செல்வம் சத்தியஜீவியம்.

      நாம் செய்யும் எந்த நல்ல செயலும் திறமையும், முறைமையும் குறையாமல் விடாமுயற்சியுடன் செய்தால், அது சத்தியஜீவியமாகப் பலிக்கும். திரண்ட பெரிய செல்வம் சத்தியஜீவியத்திற்கு முன்னுரையாக வரும்.

  2. நற்செயல் எனில் பழைய நோக்கங்கள் விலக்கப்பட வேண்டும். கடந்ததுஎன்பதால் மட்டும் நல்லதாகாது.
    • நாம் கடந்ததைப் போற்றுகிறோம். பிறந்த மண்ணை தெய்வமாக, பூமாதேவிஎன வணங்குகிறோம். பெற்றோர், சம்பிரதாயம், சடங்கு, சாஸ்திரம், வேத காலம், சேர சோழ ராஜாக்கள், புத்தர், ஏசு, காந்திஜீ ஆகியவை நமக்கு உயர்ந்தவை.

      கடந்தவை புனிதம் என்பது கொள்கை.

    • காலம் மாறுகிறது. காலத்திற்கேற்ப நாமும் நடையுடை பாவனைகளில் மாறிக் கொள்கிறோம். நாலு பேர் மாறுவதால் நாமும் மாறுகிறோம். நமக்காகச் சில இடங்களில் மாறுகிறோம். மாறுவதற்குச் சட்டம் உண்டா? உண்டுஎனில் என்ன சட்டம்?

      நல்லவற்றை ஏற்க வேண்டும்.
      அல்லவற்றை விலக்க வேண்டும்.

    • எவை நல்லவை, எவை அல்லவை? ஆசிரமம் உயர்ந்த இடம் எனப் போனோம். பகவான் அன்னைக்குப் பிறகு ஆசிரமத்தை மூட வேண்டும்என்றார். 1972இல் அன்னை, இனி அன்பர்கள் ஆசிரமம் வரக் கூடாதுஎன்றார். அது உலகில் வெளிவர 80-85 ஆயிற்று. அதற்குப் பிறகு அங்கு செல்லக்கூடாது. அறியாமல் சென்றால் விளைவுகளைக் கொண்டு முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.
    • நல்ல செயல் புதிய செயலாகவும், புரட்சிகரமானதாகவுமிருக்கும். அதனால் அது எதிர்க்கப்படும், ஏற்கப்படாது. கேலி செய்யப்படும். அவை தடையாகும். உலகம் ஏற்காது என்பதால் இலஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது, உரமில்லாமல் நல்ல மகசூல் வாராது, பள்ளியில் பயிலாமல் வேலை கிடைக்காது, திருமணமாகாமல் ஒருவர் குடும்பம் நடத்த ஊர் சம்மதிக்காது. இவற்றைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் இலட்சியமாகச் செயல்பட இவை தேவை. பழைய நோக்கங்கள் அனைத்தும் விலக்கப்பட்டு, பண்புடனும், தன்மையுடனும் பொறுமையாக, நெறியாக செயல்பட முடிவு செய்தால் உடன் வேலை செய்ய எவரும் முன்வரமாட்டார்கள். எலக்ஷனில் நிற்பவர் போஸ்டர் அடித்து ஒட்ட முடியாவிட்டால், தொண்டர்களுக்கு செலவு செய்யாவிட்டால், ஓட்டுப்பெற பணம் செலவு செய்வது தவறுஎன்று முடிவு செய்தால், நடைமுறையில் எலக்ஷனுக்கு நிற்க முடியாது. நின்றால் உடன் வேலை செய்ய எவரும் வரமாட்டார்கள். வேட்பாளரை ஆமோதிக்கவும் ஆளிருக்காது. வாக்காளர்கட்கு, இப்படி வேட்பாளரிருப்பதாகவே தெரியாது. இதை ஒருவர் இன்று பின்பற்ற முடியாது. அரசியலிலேயே ஒருவர் நெடுநாளாக இம்மனப்பான்மையுடன் வேலை செய்து வந்தால், அவர் இன்று எலக்ஷனுக்கு நிற்க நிர்ப்பந்தமிருந்தால், அவர் அன்னையின் அன்பரானால், பழைய அத்தனை முறைகளையும் விலக்கி, முழுவதும் அன்னை முறைகளைப் பின்பற்றினால் அவருக்கு அனைத்தும் ஒத்துழைக்கும். வெற்றி பெறுவார். அன்பர்கள் அவர்கள் வாழ்வில் இயல்பாக எழும் செயலை இலட்சியமாகப் பூர்த்தி செய்ய முயன்றால் அங்கு இக்கருத்து பலன் தருவதைக் காணலாம். எலக்ட்ரிசிட்டி ஊழியர்கட்கு மாமூல் தாராமல் வேலை நடக்காது என்பது அனுபவம். அதை நம்பாமல், அந்த வேலைக்குப் போனால், அதில் பழைய முறைகளைக் கைவிட்டால், இராகு காலம் பார்க்காவிட்டால், சிபார்சு தேடாவிட்டால், இலஞ்சம் கொடுக்காவிட்டாலும் ஓரளவு அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்என்று மனம் கருதினால் அதையும் விலக்கிவிட்டு, நிதானமான பொறுமையுடன், தன்மையாக, இனிமையாக, மனம் "நான் அன்பன். இலஞ்சம் தர மாட்டேன்' என்று கர்வப்படாவிட்டால் Electricity Board ஊழியர்கள் வருவார்கள், வேலை நடக்கும், தடங்கலிருக்காது. அன்பர்கள் அனுபவத்தில் இது, சர்க்கார் ஆபீஸ்களில், பாங்கில், ஊழல் நிறைந்த மார்க்கட்டில், மாமூல் மாமூலான கல்லூரிகளில், காரியம் நடப்பதைக் கண்டது ஏராளம். இலஞ்சம் கொடுக்க மறுத்தாலும், மனம் இலஞ்சம் கொடுக்க மறுத்தாலும், மனம் இலஞ்சம் கொடுக்காமல் காரியம் முடியாதுஎன நம்பும். இராகு காலத்தில் வேலை அமைந்தால் அரை மணியில் என்ன ஆகப் போகிறது, ஏன் அவசரப்பட வேண்டும் என்பது, மனம் இராகு காலத்தை நம்புகிறது, இலஞ்சத்தை நம்புகிறது, பழைய முறைகளை நம்புகிறது எனப் பொருள். அந்தநம்பிக்கைப் போகும்வரை இக்கருத்து பலிக்காது. தகப்பனார் பேச்சைக் கேட்டு அடங்கி நடப்பது நல்லது எனில் அதையும் செய்யும் மனப்பான்மையிருக்கிறது. பரம்பரை என்பதால் செய்யலாம், நல்லதைத் தகப்பனார் சொல்கிறார் என்பதால் செய்யலாம், அன்னை சொல்கிறார் என்பதற்காகத் தகப்பனாரை ஏற்கலாம். மறுக்கலாம். மனப்பான்மை செயலை நிர்ணயிக்கும், அதுவே மனத்தை நிர்ணயிக்கும். அதுவே யோகப்பலனை நிர்ணயிக்கும். அறிவில் தெளிவு தேவை. மனம் தெளிவாக இருக்க வேண்டும். கொள்கை புரிய வேண்டும். ஏன் செய்கிறோம் என அறிய வேண்டும். அதுவே முக்கியம்.
  3. பொறுப்பற்றதாகத் தெரியும் அளவுக்குப் பற்றற்றிருப்பது எதையும் ஆரம்பிக்க மறுக்கும் சர்வாரம்பப் பரித்தியாகியின் நிலை.

    பற்றற்ற நிலை பொறுப்பற்றதாகத் தெரியும்.

    • காரியத்தில் பற்றுஎன்பது பலனில் பற்று, செய்வதில் பற்று, பொறுப்பில் பற்றுஎனப் பல நிலைகள் உண்டு. பலனில் பற்றற்றிருப்பது நிஷ்காம்ய கர்மம். செய்வதில் பற்றில்லாம- லிருப்பது அன்னை கோட்பாட்டை ஏற்று காரியம் செய்வதாகும். பொறுப்பில் பற்றில்லாமலிருப்பது அன்னைமீது நம்பிக்கை கொள்வதாகும். பொறுப்பு நம்முடையது என்ற வரையில் நம்பிக்கை நம் மீதுள்ளது - தன்னம்பிக்கை - எனப் பெயர். சமர்ப்பணம் பூரணமாகி சரணாகதியானால், பொறுப்பு அன்னையுடையது, நம்முடையதன்று என்றாகும். அது உயர்ந்த யோக நிலை. அந்நிலையில் நாம் எதையும் ஆரம்பிப்பதில்லை. அன்னை உத்தரவு கொடுத்தால் ஆரம்பிக்கலாம். அன்னை ஆரம்பிக்கச் சொல்லியதை நாம் ஆரம்பித்தால், நடத்துவது அவர்கள் பொறுப்பு. அது நம்மை அன்பனாக்கும், யோகத் தகுதியுள்ள அன்பனாக்கும். அவர் யோகத்தை ஆரம்பித்தால் பலிக்கும்.
    • பார்வைக்கு அப்படிப்பட்ட அன்பர் பொறுப்பற்றவராகத் தோன்றும்.

      பொறுப்பே உருவானவரை உலகம் பொறுப்பற்றவராக நினைக்கும்.

      பொய்யே சொல்லியறியாதவன், பொய்யே சொல்ல முடியாதவரை இந்த உலகம் பொய்யன்எனக் கூறும்.

      தன் உடமை, உரிமை, உயிர், மானம், மரியாதையைக் குடும்பத்திற்காக, ஊருக்காக, கொள்கைக்காக, நாட்டுக்காகத் தியாகம் செய்தவனை சுயநலமிஎன உலகம் கூறும்.

      எந்தக் குடும்பத்திற்காகத் தியாகம் செய்தானோ அதே குடும்பம் அவனை அடக்க, அழிக்க முழுமுயற்சி செய்யும்.

    • 10 பேர் சேர்ந்த செய்து காரியம் கெட்டுப்போனால் அவற்றுள் அன்பர் ஒருவரானால் அன்பர் காரியம் கெட்டுப்போனதிற்கு தம் பங்கை உணர்ந்து மனம் மாறினால் கெட்ட காரியம் கூடிவரும். 10 பேரும் மாறாமல் காரியம் எப்படிச் சரிவரும் என்பது கேள்வி.

      பொறுப்பற்றவராகத் தோன்றும் அன்பர் அனைவர் பொறுப்பையும் ஏற்றவர். அவர் மாறுவது அனைவரும் மாறுவதற்குச் சரி, சமம். மற்றவர் அனைவரும் காலத்தில் உள்ளனர். அன்பர் அன்னை காலத்தில் - மூன்றாம் நிலைக் காலத்தில் - உள்ளவர் என்பதால் அவரால் அனைவர் சார்பாகவும் மாற முடியும்.

    • Pride and Prejudiceஇல் லிடியா ஓடிப்போனாள். அவள் ஓடிப் போகும் இடத்திற்கு அனுப்பியது தாயார். அதைத் தடுக்க வேண்டும்என்று எலிசபெத் தகப்பனாரிடம் கூறியதை அவர் அதை ஏற்க மறுத்தார். ஜேன் திருமணத்தைத் தடுத்தது காரலின், டார்சி. ஜேன் காரலினை நம்புகிறாள். அந்த நம்பிக்கை அவளை பாதிக்கும், ஜேன் திருமணம் தடையாகி விட்டது. லிடியா ஓடிப் போய்விட்டாள். விக்காம் உடன் ஓடியிருக்கிறாள். இனி யார் இந்தக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்வார்கள். குடும்பமே நாசமாய் விட்டது. பென்னட் மாறப் போகிறாரா? அவர் மனைவி ஆர்ப்பாட்டத்தை விடுவாளா? லிடியா தவற்றை இந்த ஜென்மத்தில் உணரப் போகிறாளா? விக்காமை என்ன செய்ய முடியும்? இவர்கள் எல்லாம்மாறி வீட்டுநிலை மாறவேண்டும். இது யார் கையில் உள்ளது? நடக்கின்ற கதையா?

      எலிசபெத் டார்சி கடிதத்தைப் படித்து விஷயமறிந்து, மனம் மாறி, வெட்கித் தலை குனிந்தாள். அவள் மனமாற்றம் பெரியது, பிரம்மாண்டமானது. தகப்பனார் செய்த தவற்றை உணர அது உதவியது. ஜேன் மனம் மாறியது. தாயார் நிலை, லிடியா, விக்காம் நிலை மாறவில்லை. எல்லாப் பிரச்சினைகளும் ஒருவர் மனமாற்றத்தால் நிகழ்ந்தன.

      • அத்துடன் டார்சி எலிசபெத்தை லேடி காதரீனை மீறி மணந்தாள்.
      • மனமாற்றம் மாநிலத்தை மாற்றும்.
      • ஒருவர் அனைவருடைய குறையையும் நிறையாக மாற்றலாம்.
  4. தனக்கே அகத்துள் பலனடையாதவன் புறத்தில் பிறருக்கு உதவிசெய்ய முன்வருவது வழக்கம். மகா புருஷர்கள் மற்ற ஆத்மா மீது கருணை கொள்வது தங்கள் நிறைந்த அகவெளியின் செறிவை அடுத்தவர்க்கு அகவெளிப்பாடாக அளிக்க முன்வருவதாகும்.

    உதவாக்கரை உதவி செய்ய முன்வருவான்.

    • கையில் பிறருக்குக் கொடுக்க எதுவும் இல்லாதபொழுது தாராள மனப்பான்மை எழுவது சகஜம். அப்படி எழுவது உண்மையான உணர்ச்சி.

      அவருக்கு சொத்து வந்தபின் அந்ததாராள மனப்பான்மை மறைவதும் சகஜம்.

    • கொடுக்கப் பிரியப்படுபவருக்கு வசதி வந்து தாராளமாக உதவ ஆரம்பித்தவுடன் கிடைக்கும் முதல்அனுபவம், கொடுக்க முடிவதில்லை, பெறுபவர் அனுமதிப்பதில்லை, கொடுப்பதால் பிரச்சினைகள் எழுகின்றனஎன அறிந்து கொடுப்பதைச் சிரமப்பட்டு நிறுத்துவார்கள். அதை நிறுத்த முடியாமல் கொடுத்தவர் பெறும் பெரிய அனுபவம் தொந்திரவு உதவி பெற்றவரால் மட்டுமே வருகிறதுஎன்பது. அது தெரிந்தும் கொடுப்பதை நிறுத்த முடியாதவரை உறவினரும் நண்பர்களும் சேர்ந்து அழிப்பது தவறாத அனுபவம்.
    • கொடுப்பதை நன்றியுடன் பெற்றுக் கொண்டால் பெறுபவரும், கொடுப்பவரும் மலர்போல மலர்வார்கள். அந்த அனுபவம் யாருக்காவது இருந்தால் நானறியப் பிரியப்படுவேன்.

      ஸ்ரீ அரவிந்தம் அர்ப்பணத்தின் அடிப்படையைக் கொண்டது. யோகப் பலனை கொடுப்பது பாக்கியம், பெறுவதும் பாக்கியம், பெறுபவர் பலன் பெறுமாறு கொடுக்க முடிவது யோகப் பக்குவம்.

    • உள்ளபடி பலருக்கும் உதவத் துடிப்பவர்கள், வேலை பெற்றுத்தர, அட்மிஷன்பெற, சர்க்கார் ஆபீஸ் உதவி பெற்றுத்தர ஆசைப்படுபவர்கள் ஏராளம்.
      • அவர்கள் பலதரத்தினர்.
      • செல்வாக்கிருந்து உதவுபவர்கள். இவர்கள் குறைவு.
      • செல்வாக்கில்லாமல் உதவத் துடிப்பவர்கள் பலர்.
        அவர்கட்குச் செல்வாக்குவந்தால் துடிப்பு குறையும்.
    • மகா புருஷர்கள் தீட்சை தருவதுண்டு. அது ஒரு சாங்கியம். பெரிய சாங்கியம். அன்னையும், பகவானும் தரிசனத்தால் தீட்சை அளித்தனர்.

      அவர்கள் திருவுருவப்படம் பெறுவதே தீட்சை.
      கனவில் குரு வந்து தீட்சை தருவதுண்டு.

    • அகம் நிறைந்தால் பிறர் அகம் நிறைய அனுக்கிரஹம் தீட்சை.
    • எதுவும் முடியாதவன், எந்த செல்வாக்குமில்லாதவன், எல்லா செல்வாக்குகளும் இருப்பதைப்போல் பேசுவது, எல்லோருக்கும் உதவ முன்வருவது வெறும்பேச்சு.
      • ஆன்மீகச் செறிவு ஆத்மநிறைவு.
      • ஆத்மா நிறைந்தால், நிறைந்து செறிந்தபின் அடுத்த ஆத்மாவுக்கு அது பயன்படும்.
        அப்பயன்பெற ஆன்மீகச் சட்டங்கள், காலம், இடம், முறை, தகுதியுண்டு.
      • எல்லாத் தகுதிகளும் எல்லோருக்கும் இருப்பதுபோல் ஆன்மீக தீட்சையளிப்பது அன்னை தரிசனம்.

தொடரும்.....

*******



book | by Dr. Radut