Skip to Content

13. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம:

ஸ்ரீ அன்னையே நம:

என் பெயர் தனலட்சுமி. என் கணவர் பெயர் சிவக்குமார். எங்களுக்கு நந்தகுமார் என்ற 2½ வயது பையன் உள்ளான். அவனுக்கு 2 வயதில் டைபாயிடு (typhoid) தடுப்பூசி போட்டதில் ஒத்துக் கொள்ளாமல் வீக்கமாகிவிட்டது. பின், ஸ்கேன் மூலம், அங்கு சீழ் பிடித்துள்ளது தெரியவந்தது. உடனே ஆப்பரேஷன் செய்ய வேண்டுமென்றனர். அப்பொழுது மற்ற தெய்வங்களுடன் அன்னையையும் சேர்த்து பிரார்த்தனை செய்துவந்தோம். ஆப்பரேஷன் செய்தும் முழுகுணம் கிடைக்கவில்லை. தினமும் எங்கள் குழந்தை படும் வேதனையை தாங்க முடியவில்லை. மதுரைக்குச் சென்று காண்பித்ததில் அங்கு இன்னுமொரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றனர். என் கணவரின் தம்பியின் மூலமாகத் திண்டுக்கல் தியான மையம் சென்றோம். அங்கு கிடைத்த வழிகாட்டுதல்படி, முழுமையாக அன்னையை மட்டுமே நினைத்து, "இனி இவன் எங்கள் குழந்தை அன்று, உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவனை ஆப்பரேஷன் இல்லாமல் முழுமையாகக் குணமாக்கிக்கொடுங்கள்" என்று வேண்டியும், இடுப்பிலிருக்கும் சீழை அன்னையே கையால் எடுத்துக் கீழே போடுவது போலவும், அன்னையின் கண்களில் இருந்து வரும் பொன்னொளி அவன் உடம்பில் முழுவதுமாகப் பரவும்படியும் மனதில் தினமும் பிரார்த்தனை செய்தோம். மறுபடியும் மதுரைக்குச் சென்று பார்த்ததில் இடுப்பில் சீழ் இருப்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. வலியும் இல்லை. புண் நன்றாக ஆறிவிட்டது. ஆப்பரேஷன் தேவையில்லை என டாக்டர் கூறினார். அன்னையின் அருளால் பூரண குணம் அடைந்தான்.

மற்றொரு முறை பள்ளிக்குச் சென்றவன் வயிற்று வலியால் அழுது கொண்டு வந்தான். இம்முறையும் டாக்டரிடம் காண்பித்ததில், "குடல், குடல் உள்ளே (intussusception) இறங்கியுள்ளது. அதனால் ஆப்பரேஷன் செய்தால் சரி செய்துவிடலாம்" என்றனர். இப்பொழுது அன்னையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டதால், தியான மையத்திற்குச் சென்று அமைதியாக அமர்ந்து பிரார்த்தித்துவிட்டு, மதுரைக்குச் சென்றோம். காலையில் எடுத்த ஸ்கேனில் இருந்தது, மாலையில் எடுத்த ஸ்கேனில் முழுவதுமாக மாயமாய் மறைந்திருந்தது. இப்படி ஓர் அதிசயத்தை அன்னையையன்றி வேறு யாராலும் நிகழ்த்த முடியாது.

எங்கள் குழந்தை எழுதிப் பழகுவதற்காக ஒரு கறுப்பு நிற பலகை வாங்கியுள்ளோம். அதில் அவனைத் தவிர வேறு யாரும் எழுதுவது இல்லை. எங்கள் பையனே எழுதி, அழித்துக்கொள்வான். அப்படி ஒரு நாள் அவன் எழுதி அழித்த பலகையை என் கணவரின் தம்பி செல்போனில் படம் எடுத்தபொழுது அன்னையின் திருமுகம் அதில் தெரிந்தது. எங்கள் வீட்டிற்கு வந்து அன்னை காட்சி அளித்தார் என்பதை நினைக்கும் பொழுது எங்கள் உடல் சிலிர்க்கிறது.

எங்கள் பையனுக்கு அன்னையின் மீது அளவு கடந்த பற்றுதல் உண்டு. தினமும் எங்களுடன் தியான மையத்திற்கு வந்து அன்னையை தரிசனம் செய்வான். தினமும் காலையும் மாலையும் ஸ்ரீ கர்மயோகி அப்பா அவர்கள் எழுதிய "அன்னைக்கு ஓர் பிரார்த்தனை"யைத் தவறாமல் வாசிப்பான். பகவானும் அன்னையும் உள்ள டாலர் கழுத்தில் அணிந்திருப்பதை தினந்தோறும் குளிக்கும் பொழுது கழுவி சுத்தம் செய்வான். அன்னையின் பிரசாதப்பூ வைத்திருந்த காலியான பிளாஸ்டிக் கவரை வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த விட மாட்டான். "அன்னை தியான மையத்தில் கொடுத்தது, இதை அசுத்தப்படுத்தக் கூடாது" என்பான். வீட்டில் மலர்ந்திருக்கும் பூக்களையும் தியான மையத்தில் கொடுத்த பிரசாதப் பூவையும் அவனே அடுக்கி வைப்பான். அன்னை எங்களை ஆரோக்கியத்திலும், அறிவிலும், செல்வத்திலும் நல்ல நிலையில் வைத்துள்ளதை நினைத்து அவருக்கு தினம் தினம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

- J. சிவக்குமார், தனலட்சுமி, திண்டுக்கல்



book | by Dr. Radut