Skip to Content

11. அன்னை இலக்கியம் - நல்லெண்ணம்

"அன்னை இலக்கியம்"

நல்லெண்ணம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

"சரி பாலு, நீ புறப்படத் தயாராகிவிடு. வரும் வெள்ளிக்கிழமை இரவே நாம் சென்னை செல்கிறோம். இனி எந்தக் குழப்பமும் வேண்டாம்" என்று உறுதியாய்க் கூறினான் வாசு.

இண்டர்வியூவுக்கு நிறையபேர் வந்திருந்தார்கள். இத்தனை பேரில் தனக்கு வேலை கிடைக்கவேண்டுமே என்று பாலுவுக்குக் கவலை.

வாசுவோ, "அன்னை அனந்தம். இத்தனை பேர்க்கும் வேலை கிடைத்தாலும் வியப்பில்லை" என்று எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தான். பலரும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இண்டர்வியூவை எதிர்கொண்டனர். வாசு நிறைந்த மகிழ்வுடன் இண்டர்வியூ முடித்து வெளியே வருவதை பாலு கண்டான்.

"பாலு, உற்சாகமாயிரு. கேட்கப்படும் கேள்விகளுக்கு மகிழ்வுடன் பதில் சொல். இப்படி "உம்"மென்று முகத்தை வைத்துக் கொள்ளாதே. உனக்கே இந்த வேலை கிடைக்க வேண்டுமென்று நான் அன்னையிடம் பிரார்த்தித்தவண்ணமிருப்பேன்" என்று முதுகில் தட்டி உற்சாகப்படுத்தி உள்ளே அனுப்பினான்.

அன்னையிடம் வந்தபிறகு வாசு மாறியிருப்பது பாலுவுக்கும் சிறிதளவு புரிந்தது. படிக்கும் நாட்களில் தன்னுடன் எல்லாவற்றிற்கும் போட்டியிட்ட அவன் இப்போது விட்டுக்கொடுக்கவே ஆர்வப்படுகிறான்.

பாலு உண்மையிலேயே படிப்பில் கெட்டிக்காரன். நல்ல திறமைசாலி. படிப்பு முடிந்து மூன்றாண்டுக் காலமாக வேலை தேடி கிடைக்காமல், வீட்டுச் சூழலும் நெருக்கும் நிலையில் மனம் தளர்ந்து போயிருந்தான். இருந்தாலும் இன்றைய இண்டர்வியூவை வெகு அழகாகச் செய்திருந்தான். தனக்கே கிடைக்கும் என்று நம்பும் அளவு செய்திருந்தான் வெளியேயிருந்த கும்பலை நினைத்தபோது, ஒருவேளை தனக்குக் கிடைக்காதோ என்றும் எண்ணத் தோன்றியது. வாசுவின் பிரார்த்தனைக்காகவாவது தனக்குக் கிடைத்தால் தேவலை என்றும் நினைத்தான்.

"எப்படி பதிலளித்தாய்? நன்றாகச் செய்தாயல்லவா?" என்று வெளியே வந்த அவனை அன்புடன் வரவேற்றான்.

"நன்றாகவே செய்திருக்கிறேன். இப்போதெல்லாம் திறமைக்கு ஏதடா மதிப்பு? எவனாவது, பெரிய மனிதர் வீட்டுப் பையனுக்கு, வீட்டில் இருந்தபடியே பேசி வேலை வாங்கிவிடுவார்கள். தகுதி, திறமை, இவற்றைப் பத்திரமாய் எடுத்துக்கொண்டு நாம் பைத்தியம்போல் திரும்பிச் செல்வோம்" என்று சலிப்புடன் கூறினான்.

"ஒன்று சொல்லவா பாலு, நம் எண்ணமே எல்லாவற்றையும் உற்பத்திச் செய்கிறது. சலிப்பும் தெய்வ உதவியை விலக்கிவிடும். நல்லதையே நினைத்து சந்தோஷமாக இருந்தால் தடையின்றி நல்லதே நடக்கும். தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ஏன் வேலை கிடைக்கக் கூடாது? முடியும் என்றே நம்புகிறேன்" என்றான் வாசு.

"இப்போதெல்லாம் நீ நிறைய மாறிவிட்டாய் வாசு. படிக்கும் நாட்களில் போட்டி போடுவாய். இன்று என்னையும் இண்டர்வியூவிற்கு அழைத்து வருகிறாய்" என்று பாலு வியப்புடன் கூறினான்.

"இது வெறும்மாற்றம் தான் பாலு. இதற்கே அன்னை செயல்படுவார். திருவுருமாற்றம் நிகழ்ந்தால் உலகமே மாறிவிடும்" என்றான் வாசு.

"அதெல்லாம் எனக்குப் புரியாது".

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, "நீங்களெல்லாம் போகலாம். மாலை 4 மணிக்கு வந்து நோட்டீஸ் போர்டில் "ரிஸல்ட்" பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார் அட்டெண்டர். எல்லோரும் வெளியேறினர். வெளியில் சென்று சாப்பாட்டை முடித்துக்கொண்டு நான்கு மணி வரை வெளியில் காத்திருந்து, 4 மணிக்கு ரிஸல்ட் பார்க்க வாசுவும், பாலுவும் வந்தனர். உள்ளே செல்வதும், வெளியேறுவதுமாய் அனைவரும் போய்விட்டனர். "என்ன ரிஸல்ட்டோ?" என்ற பதற்றம் பாலுவுக்கு. "எது நேர்ந்தாலும் அன்னையின் அருளாக ஏற்கவேண்டும்" என்று மனதைத் தெளிவாக வைத்துக்கொண்டு வாசுவும் வந்தான்.

அத்தனை பேரில் இவர்கள் இருவர் பெயர்கள் மட்டுமே நோட்டீஸ் போர்டில் இருந்ததுடன், இவர்கள் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்ற குறிப்பும் இருந்தது. பாலுவின் முகம் விழுந்து விட்டது. "போடா, இதில் எனக்குக் கிடைக்கும் என்று நிச்சயம் ஒன்றும் இல்லை" என்றான் பாலு.

வாசு அவனை அன்புடன் கடிந்துகொண்டான். "உன்னை இத்தனை வற்புறுத்தி அழைத்து வந்து நம்பிக்கையூட்டியும் நீ ஏன் அவநம்பிக்கையுடன் இருக்கிறாய்? நம்பிக்கையுடனிரு, உனக்கே கிடைக்கும்" என்றான்.

"இத்தனை நம்பிக்கையுள்ள உனக்குக் கிடைக்காமல் எனக்கு எப்படிக் கிடைக்கும்?"

"ஆம், என் நம்பிக்கை எனக்கு வேலை கிடைக்கவேண்டும் என்பதில்லை, உனக்குக் கிடைக்கவேண்டும் என்பதில்தான். எனவே, நம் இரண்டு நம்பிக்கைகளும் சேர்ந்தால் வெற்றிதானே" என்றான்.

"எப்படியடா இப்படிப் பேசுகிறாய்! எனக்குக் கிடைப்பதில் அப்படி என்ன ஆர்வம் உனக்கு? போட்டியில் நீ தோற்று, நான் வெற்றியடைந்த போதெல்லாம் என்னுடன் பேசாமல் பல நாள் இருப்பாயே, இப்பொழுது என்ன எனக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கிறாய்?"

"என் நல்லெண்ணத்தைப் பரிசோதிக்க இதை ஒரு வாய்ப்பாய் ஏற்றிருக்கிறேன். எனவே, இதில் நீ வெற்றி பெற்றால்தான் என் நல்லெண்ணம் உண்மை. ஆனால் அதையும் தாண்டி எனக்கு இன்னொரு பரிசும் உண்டு. அது எனக்கு வேண்டும்" என்றான் வாசு.

"கடைசியில் உனக்கு ஏதோ பரிசு கிடைப்பதற்காகத்தானே எனக்கு வேலை கிடைக்கப் பிரார்த்திக்கிறாய்?"

"ஆமாம், ஆனால் அந்தப் பரிசு நீ நினைப்பதுபோல் பணமோ, ஒரு பொருளோ அன்று. அந்தப் பரிசைக் கண்ணால் பார்க்கவும் முடியாது. உள்ளே உணரத்தான் முடியும்" என்றான்.

"என்னடா இது புதுக்கதை!" என்றான் பாலு.

"புதுக்கதை இல்லையடா, புதிய உண்மை" என்றான் வாசு.

"என்ன நீ, இன்று புதிர்போட்டுப் பேசுகிறாய்!"

"ஆமாம், இது ஒரு புதிர்தான். நம் வேலைக்குப் பிறகுதான் இந்தப் புதிர் அவிழும்" என்றான் வாசு.

"எனக்கு வேலை கிடைத்தால் உனக்குப் பரிசு, உனக்கு வேலை கிடைத்தால் எனக்கு ஏமாற்றம், இது என்னடா நியாயம்?"

"நீ ஏமாறக் கூடாது என்பது தானே என் பிரார்த்தனை. அது நிறைவேறாவிட்டால், எனக்கு வேலை கிடைத்தாலும் அதில் எனக்குச் சந்தோஷமில்லை. உனக்கு இல்லாத வேலையை நானும் ஏற்கப்போவது இல்லை".

இவர்கள் மெல்லப் பேசிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்து இவர்களுக்கு அழைப்பு வந்தது.

"பாலு, வாசு, நீங்கள் இருவருமே எங்கள் பார்வையில் சமமாகத் தேறியுள்ளீர்கள். ஆனால் உங்களில் ஒருவருக்குத்தான் இங்கு வேலை. உங்களில் ஒருவர் மற்றவருக்காக விட்டுக் கொடுத்தாலும் சரி, அல்லது சீட்டுப் போட்டுப் பார்க்கச் சம்மதித்தாலும் சரி" என்றார் தேர்வாளர்.

"சீட்டுப் போடலாம்" என்றான் பாலு அவசரமாக.

"இல்லை சார், இவருக்கே கொடுத்துவிடுங்கள்" என்று மலர்ச்சியாய்க் கூறினான் வாசு.

"நீங்கள் இருவரும் ஓரூர்க்காரர்கள்எனத் தெரிகிறது. நீங்கள் நண்பர்களா?" என்றார் தேர்வாளர்.

"ஆமாம் சார்" என்றான் வாசு.

"பாலு, நீங்கள் என்ன சொல்கிறீர்கள், உங்களுக்கே கொடுத்து விடலாமா?" என்றார் தேர்வாளர்.

பதில் கூறாது நின்றான் பாலு.

"எதற்காக நண்பருக்கு விட்டுக்கொடுக்கிறீர்கள், நண்பர் என்பதற்காகவா, இதைவிடப் பெரிய வேலை வேண்டும் என்பதற்காகவா?" என்றார் தேர்வாளர்.

"பெரிய வேலை வேண்டும் என்பதற்காகவல்ல, பெரிய மனநிலை பெறுவதற்காக" என்றான் வாசு.

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஆமாம் சார், நான் ஒருவரிடம் சேர எனக்கு இந்தச் செயல் (விட்டுக் கொடுப்பது) செய்யவேண்டும். அதற்காகவே நம்பிக்கை இழந்த இவனை ஆர்வமூட்டி அழைத்து வந்தேன்" என்றான் வாசு.

பாலுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"என்ன சொல்கிறீர்கள்? தெளிவாகச் சொல்லுங்கள்" என்றார் தேர்வாளர்.

"அதை நீங்கள் தேர்வு செய்த பிறகு சொன்னால்தான் என் சரியான உளநிலையை நான் உணர முடியும்'' என்றான் வாசு.

"சரி, உங்கள் விட்டுக் கொடுத்தலால் உங்கள் நண்பர் பாலுவுக்கே இந்த வேலையைத் தர முடிவு செய்துவிட்டோம்" என்று கூறியவர் அப்பாயிட்மெண்ட் ஆர்டர் தயாரிக்க அலுவலக ஊழியர்க்கு உத்தரவிட்டார்.

"இப்பொழுது சொல்லுங்கள் இரகசியத்தை" என்று வாசுவை நோக்கித் தேர்வாளர் கூறினார்.

"நான் அன்னை அன்பன். தனக்கு நல்லது வருமுன் அது அடுத்தவர்க்குவர ஆர்வப்பட வேண்டும். அதுவே நல்லெண்ணம். நல்லெண்ணம் உள்ளவர் அன்னையை மேன்மேலும் பெறலாம் என்ற சான்றோர் ஒருவரின் வாக்கைச் சத்தியவாக்காக ஏற்றேன். அதைப் பரிசோதிக்க எண்ணியபோது இந்த வேலை வாய்ப்பு விளம்பரம் கண்டேன். எனக்கு வேலை வேண்டும் என்ற என் மனநிலையை, நண்பனுக்கு முதலில் வேண்டும் என மாற்ற முயற்சி செய்து மனத்தைத் தயாரித்தேன். போட்டி, பொறாமையைத் தவிர்த்து, கணந்தோறும் நல்லெண்ணத்தை வளர்த்தேன். என் நல்லெண்ணம் உண்மையானால் இவனுக்கே இந்த வேலை கிடைக்கும் என நம்பினேன். அப்போதுதான் அன்னை அன்பன் என்ற தகுதியும் எனக்குக் கிடைக்கும்" என்றான்.

தேர்வாளர் வியப்பும் மகிழ்வுமாய் வாசுவை ஏறிட்டதோடு, "உங்கள் தகுதிக்கு (அன்னை அன்பன் என்பதற்கு) உங்களுக்கும் ஒரு வேலையை எங்கள் நிறுவனத்திலேயே ஏற்படுத்தித்தர முடிவு செய்துவிட்டேன்" என்றார்.

ஆனந்த மிகுதியில் வாசு நன்றிக் கண்ணீர் வடிய நின்றான்.

தன் சின்ன புத்திக்கு வெட்கி, நண்பனின் நல்லெண்ணத்திற்கு உருகி, நன்றியுடன் அவன் கையைப் பற்றினான் பாலு.

முற்றும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உடலின் அகந்தையே மிக வலுவானது. அதன் வேர், சிந்தனையிலுள்ளது. பகுத்தறிவாக அகந்தை ஆரம்பிப்பதால் அதன் வேர் சிந்தனையில் இருக்கிறது. பின்னர் பிராணனுக்கும் உடலுக்கும் அகந்தை பரவுகிறது. உடல் இருள் நிறைந்ததாதலால் உடல் எளிதில் சிக்கிக் கொள்கிறது. விலங்கினத்தில் எந்த அளவு மனம் உற்பத்தியாகிறதோ, அந்த அளவுக்கு அகந்தையும் எழும்.
 
அறிவிலுள்ள அகந்தையின் வேர்.



book | by Dr. Radut