Skip to Content

10. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

அன்னையை அறிவது, ஏற்பது என்பதும், பூரணயோகத்தை ஏற்பது என்பதும் பெரும்பாலும் ஒன்றாகக் கருதப்படும். அன்னையைத் தெய்வமாகத் தூரத்திலிருந்து வழிபடலாம், பிரார்த்திக்கலாம், அது எளியநிலை. நெருங்கி வந்து ஈடுபாடு கொள்ளலாம், அது தீவிரமானது. அதுவும் அன்னை நம்மை ஏற்பதாகும். நாம் அவரை ஏற்பதாகாது. அன்னையை ஏற்பது எனில் அவர் கொள்கைகளை முழுவதும் பின்பற்றுவதாகும். அது எளிதன்று. பொதுவாகப் பிரார்த்தனை பலிப்பதே அன்பர்கள் எதிர்பார்ப்பது. அன்னையின் சூழலில் வந்துவிட்டால் 10 பிரார்த்தனையில் 9 தவறாது பலிக்கும். 10வது பலிக்க நம் மனம் தடைசெய்யும் இடத்தில் நாம் மாறுவது அவசியம். 9 பலிப்பது முதல்நிலை. 10உம் பலிப்பது அடுத்தநிலை. இவை தாமாக நடப்பவை. இவற்றைக் கடந்து அன்னையை ஏற்க விழைபவருண்டு. அது பூரணயோகத்தை ஏற்பதாகும். எவரையும் அன்னை அதை மேற்கொள்ளச் சொல்வதில்லை. இதுவரை எவரும் ஏற்றதாக நானறியேன். அப்படி ஒருவர் முனைந்தால், அதற்குப் பல கட்டங்களில் பல அடையாளங்கள் உள. அவற்றைப் பலவாறு கூறலாம், விளக்கலாம். அவற்றை வாழ்க்கை மூலமாகவும், யோகம் மூலமாகவும் கூறலாம். பெரும்பாலும் அவற்றைக் குறிப்பிட்டால் எளிமையாக விளங்கும். சில தலைப்புகளுக்கு சிறு விளக்கம் தேவை. மற்றவற்றிற்கு உதாரணம் தேவை. இவற்றை முழு விளக்கமாக எழுதுவது பகவானின் பெருநூல்களின் சுருக்கமாக எழுதும் கட்டுரை இது. தம்மையறியாமல் அன்னையிடம் நெருங்கி வந்து, யோக அம்சங்களைப் பெற்றவர்கள் இதைப் படிக்கும்பொழுது தாமுள்ள நிலையை அறிய இது உதவும். ஒவ்வோர் அடையாளத்திற்கும் குறைந்தபட்சம், அதிகபட்சம், இடைப்பட்ட 10 அல்லது 20நிலைகள் உள. கூடியவரை இரு முனைகளையும், சில இடங்களில் இடைப்பட்ட ஓரிரு நிலைகளையும் எழுதுகிறேன். மௌனம் அனைவரும் அறிந்தது. எந்த விளக்கமும் தேவையில்லை. பகவான் மௌனத்தின் பின் மௌனம் என்பது முடிவான நிலைக்குரிய மௌனம். வாழ்வின்நிலைகளை சுமார் 10 அல்லது 100ஆகப் பிரிக்கலாம். அவ்வொவ்வொரு நிலைக்குப் பின்னும் மௌனம் உண்டு. அவற்றைக் குறிப்பிட்டால் மட்டும் தெளிவு எழாது, விளக்க வேண்டும், உதாரணம் தர வேண்டும். ஒரு நிலையை எழுதி, விளக்கி, உதாரணம் தர ஒரு பக்கமாகும். அதைப் போல் மௌனத்தைப் பற்றி மட்டும் 10 அல்லது 100 பக்கம் எழுதலாம். அதை நான் இங்கு மேற்கொள்ளவில்லை. அவற்றுள் சில நிலைகள்:

  • எண்ணம் நிற்பது மௌனம்.
  • சிந்தனையறுவது அடுத்தகட்ட பெரியமௌனம்.
  • சிந்திக்கும் கருவி கரைவது அடுத்தது.
  • கற்பனை ஸ்தம்பிப்பது மௌனம் தரும்.
  • உறுதி நிலைப்பது மௌனம்.
  • உறுதி சரணடைவது பெரியது.
  • பாகுபடுத்தும் திறனழிவது மௌனம்.
  • இவை பகுதியான மௌனங்கள். மனம் முழுமையானது.
  • மனம் ஸ்தம்பிப்பது, கரைவது பெரிய கட்ட மௌனங்களைத் தரும்.
  • அதேபோல் உடல் 10 பகுதிகள் உள்ளன. அவற்றின்பின் மௌனம் உண்டு.
  • உட ன்பின் உள்ள மௌனம் பெரியது, பிரபஞ்ச மௌனமாகும்.
  • முடிவானது ஜீவனுடைய மௌனம்.

சுமார் 60க்கு மேற்பட்ட முதற்கட்டங்களை யோகவாயில் எனக் குறிப்பிட்டு எழுதுகிறேன். யோகத்திற்குரியவற்றை முதலிலும், வாழ்க்கைக்குரியவற்றை முடிவிலும் எழுதுகிறேன். இப்பட்டியல் 60உடன் முடியாது, 600உம் ஆகும். சுட்டிக்காட்டும் எழுத்தில் விரிவுரை தவிர்க்கப்படுகிறது.

  1. மௌனம் "அகண்ட மௌனம்பூண்டேன்" என்பது வழக்கு.
  2. பிரபஞ்ச ஜீவியம் (Cosmic Consciousness) அறிவுக்கு எட்டாதது ஜீவியத்திற்குப் புலப்படும் என்கிறார். கடவுளைக் காட்டினால் தான் நம்புவேன் என்பவர்க்கு கடவுளை மனத்திற்கோ, அறிவுக்கோ காட்ட முடியாது. ஜீவியத்திற்கு காட்டலாம்என்கிறார். அந்நிலையில் ஜடம் சக்தியலையாகவும், ஆத்மா சக்தியலையாகவும் ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்கும். அதை எட்டியவர், உலகம் சூரியனைச் சுற்றி வருவதைக் காண்பார்.
  3. அடி மனத்தை அடைவது.

    நாம் மேல்மனத்தினின்று செயல்படுகிறோம். முக்கியமான நேரத்தில் உணர்ச்சி எழுகிறது. இது பாதாளம். அது எழுந்தபின் மனிதன் விலங்காகச் செயல்படுவான். அடிமனம் என்பது பாதாளமும், பரமாத்மாவும் இணையுமிடம். பரமாத்மாவை நாம் காண்பதில்லை. வாழ்வில் உயர்ந்த பண்புகள் பரமாத்மாவின் பிரதிநிதி. அடியிலிருந்து விலங்குணர்வு எழும்பொழுது பண்பால் அதை அடக்கினால் அடிமனம் செயல்படும்.

  4. ஆதியான அறியாமையை இழப்பது.

    நாம் பிரம்மம் என்பதை மறந்து, நாம் உடல், மனம் என நாம் வாழ்வை நடத்துகிறோம். நாம் பிரம்மம் என்பதை மறப்பது ஆதியின் அறியாமை. அது நினைவு கூர்வது அவ்வறியாமையை இழப்பதாகும். 7 அறியாமைகளில் முதலில் நாம் கடக்க வேண்டியது இது.

  5. அடிப்படையான முதல் பூரணயோகசித்தி.

    Synthesis of Yoga வில் "சமர்ப்பணம்" என்ற அத்தியாயத்தில் பகவான் இக்கருத்தைத் தெரிவிக்கிறார். அது 3 பகுதிகள் உடையது.

    1. இறைவனை (அன்னையை) அகத்தில் காண்பது.
    2. புறத்தில் காண்பது.
    3. இவை தவிர அவன் உள்ள உலகில் இறைவனைக் காண்பது.

    பல அன்பர்கள் அன்னையை, பகவானை மனதில் காண்கின்றனர். சிலருக்கு போட்டோவில் அவர்கள் உயிருடனிருப்பது தெரிகிறது. மற்ற சிலருக்கு வானிலும், சுவரிலும் அவர்கள் சூட்சுமஉலகில் தரிசனம் தருகின்றனர். இவை ஆரம்பநிலை. நினைத்தால் தரிசனம் கிடைப்பது இடைப்பட்டநிலை. மூன்று கட்டங்களிலும் பகவானுக்கு அலிப்பூரில் நாராயண தரிசனம் கிடைத்ததைப்போல் நமக்கு ஸ்ரீ அரவிந்ததரிசனம் கிடைப்பது முழுமையான சித்தி. இது முதல் சித்தியின் முழுமையான உருவம்.

  6. அகந்தை சிதைந்து பிரபஞ்சம் வெளிப்படுவது.

    இதுவரை நமக்கு எரிச்சல் மூட்டியவை (reaction) இனி அப்படி இல்லாமலிருப்பது முதல் ஆரம்பம். ஜாதி, ஊர், குடும்பம் குறைவானதானால், அதைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் எழும். அடிதடி, சண்டை எழும். அது மறைவது ஆரம்பம். அதில் உள்ள உண்மையை ஏற்று எரிச்சல்படாவிட்டால், அச்சந்தர்ப்பங்கள் எழும். அவற்றுள் - ஜாதி, ஊர், குடும்பம் - உள்ள உயர்வு வெளிப்படும் சந்தர்ப்பம் வரும். எதையுமே நாமே வைத்துக் கொள்வது (possessive), இரகஸ்யமாக இருப்பது அகந்தையின் கருவி. பிறருடைய பெருமையை மனம் ஏற்று மகிழ்வது, அது வளர நாம் செயல்படுவது, அதை இலட்சியமாகக் கொள்வது அடுத்த அடுத்த கட்டங்கள். நம் வருங்காலத் திட்டங்களில் பலன், பெயர் நமக்கில்லை என வேலை செய்வது அகந்தை சிதைய உதவும். கடமை எனக்கு, பலன் அடுத்தவர்க்கு என்ற இலட்சியம் நல்லது.

    இதுவரை அகந்தையை அழித்து யோகம் செய்ய முயன்றது பௌத்தம். பௌத்த பிக்ஷூக்களிடம் முனைப்பிருக்காது. ஆசியா முழுவதும் பரவியதற்கு அகந்தையழிந்தது முக்கிய காரணம். முனைப்பில்லாதது யோகத்தில் முக்கியம். நாம் அதைப் பெறுவது சிரமம். முனைப்பு வடநாட்டைவிட தென்னாட்டில் அதிகம். அதிக விபரம் தெரிவது முனைப்பை வளர்க்கும். நாம் புதியதாக அறிவதை அகந்தை பெறாமல் மனமோ, அறிவோ பெறும் நோக்கம் நல்லது. வேலையில் உள்ள திறமை வேகம் தரும். அது முனைப்பைக் கூராக்கும். நம் திறமையிலுள்ள நம்பிக்கை தடம் மாறி அன்னைக்கு வருவது சரணாகதிக்கு உதவும். சுறுசுறுப்பானவர்க்கு எந்த நேரமும் ஏதாவது செய்யத் தோன்றும். எதுவும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தால், அஸ்திவாரத்திலிருந்து வேகம் தீவிரமாக எழும்.

    அகந்தையின் முனைப்பு மேலேயும்,
    அறிவின் தீட்சண்யம் அதனடியிலேயும்,
    வேலையில் திறமை வேகத்தை எழுப்புவதையும்,
    சுறுசுறுப்பு இடைவிடாமல் செயல்படுவதும்,
    அகந்தை வளர உதவும், சமர்ப்பணத்திற்கும் சரணாகதிக்கும் தடையாகும்.
    சுயநலம் பரநலமானால்,
    சொந்த அபிப்பிராயம், பிறர் கோணத்தில் காணும் கருத்தானால்,
    கடமை எனக்கு, பலன் பிறர்க்கு எனில்,
    என் பெயர் வெளி வரக்கூடாது எனக் கொண்டால்,
    ஏதாவது செய்ய வேண்டும் என முனையாவிட்டால்,
    காரியம் சக்தியால் நடைபெறுகிறது, நம்மாலில்லை என்ற கருத்து தெளிவானால்,
    நல்லெண்ணம் நம்மை மீறி எழுமானால்,
    அகந்தை வளராது, முனை மழுங்கும்.

  7. தலையிலுள்ள மனத்தின் மையம், தலைக்குமேல் போக வேண்டும்.

    நம் சிந்தனை மனத்திலுள்ளது. மனம் மூளையில் உறைகிறது. மனம் 4 கட்டங்கள் உயர்ந்து தெய்வீக மனமானால் (overmind) அம்மையம் புருவ மையத்திற்கு வரும். அது கிருஷ்ண பரமாத்மாவின் நிலை. இராமாவதாரம் முனிவர் மனத்திற்குரியது. அது இந்த நான்கு கட்டங்களில் முதலானது. மௌனத்தால் நிரம்பியது. பூரணயோகம் மனத்தைக் கடந்து சத்தியஜீவியத்தை நாடுகிறது. தெய்வீக மனத்தின்மீது பொன்மூடியுண்டு. அதைக் கிழித்து மேலே சென்றால் தான் சத்தியஜீவியம். அப்படிச் சென்றால் தலைக்கு மேலுள்ள சகஸ்ரதளம் - ஆயிரம் தாமரைச் சக்கரம் - திறக்கும். குந்தளினி திறந்து சகஸ்ரதளம்வரை வந்தால் சகஸ்ரதளம் மோட்சம் தரும். வேதத்தை அதற்கு மேலிருந்து எழுதினர். ஷேக்ஸ்பியர் போன்ற கவிகள் தலைக்குமேல் சகஸ்ரதளத்திற்குக் கீழிருந்து எழுதினர். எண்ண மையம் தலைக்குமேலே போனால் அன்பர், ஷேக்ஸ்பியர் நிலையை அடைவார். பூரணயோகத்தின் முதற்கட்டமாக (1) எண்ணம் தலைக்குமேல் போகவேண்டும், அல்லது (2) நெஞ்சுக்குப்பின் சென்றடைய வேண்டும் என்கிறார். இந்நிலை முனிவருடைய மௌனம், ரிஷியின் திருஷ்டி, யோகியின் ஞானம், தெய்வ நிலையைக் கடந்தது. அதுவே பூரணயோகத்தில் முதல் நிபந்தனை. அளவுகடந்த மௌனம் அதனடையாளம்.

    • அந்நிலையில் நாம் சிந்திப்பதில்லை.
    • சிந்தனை அற்றுப்போகும்.
    • தேவைப்படும் நேரம் சிந்தனை மேலிருந்து தலையுள் வருவது தெரியும்.
    • இது சூட்சுமமனம்.
    • இது சத்தியஜீவியமில்லை, அதற்குப் போகும் பாதை.
  8. ஜீவ நிஷ்டை - All Inclusive Concentration.

    ஞானயோகம் மனத்திலும், கர்மயோகம் உணர்விலும், பக்தியோகம் இதயத்திலும், ஹடயோகம் உடலும் செயல்படுபவை. எந்த யோகமும் ஒரு கரணத்தால் நடப்பது. பூரணயோகம் எல்லாக் கரணங்களாலும் செய்யப்படுவது. அதற்குரிய மையம் இதயத்தின் பின்னாலுள்ளது. எவரும் தம் குடும்பத்தைக் காப்பாற்றுவார். உடன்பிறந்தவர் 4 பேர் அல்லது 8 பேரானால் அத்தனைக் குடும்பத்தையும் ஒருவரே காப்பாற்றுவது என்பது உலகிலில்லை. பூரணயோகம் அதுபோன்றது. நிஷ்டையை மனத்திலிருந்து நெஞ்சுக்குப்பின்னால் கொண்டு போவது பூரணயோகத்தில் முதல் நிபந்தனை. பலிப்பது கடினம். பலித்தால் நம் சுற்று வட்டாரமே அமைதியாகும். இதனுள் அகமும் புறமும் அடங்கி உள்ளது. அதாவது புறத்தை உட்கொண்ட அகத்தின் மையம் நெஞ்சுக்குப் பின்னுள்ள மையம். நிஷ்டை முதிர்ந்தால் சமாதி நிலையை எய்தலாம். இந்த நிஷ்டை முதிர்ந்தால் சமாதி நிலை விழிப்பில் கிட்டும். சேர, சோழ, பாண்டியர் தமிழ்நாட்டின் ஒரு பகுதியை ஆண்டனர். இன்று இந்திய சர்க்கார் வடநாட்டில் 56 தேசம் எனப் பெயர் பெற்ற அத்தனை இராஜ்ஜியங்களையும் தன்னுட் கொண்டுள்ளது. ஞானயோகம் போன்றவை சோழ இராஜ்யம் போன்று நாட்டின் ஒரு பகுதி. பூரணயோகத்திற்குரிய நிஷ்டை இந்திய சர்க்கார் போன்றது. பூரணயோகமையம் - அகம் - பிரபஞ்சத்தைத் தன்னுட்கொண்டது. யோகம் பலித்தால் பிரபஞ்சத்தை உள்ளே காணலாம். யசோதை, கிருஷ்ணன் வாயில் கண்டது உலகம். இது பிரபஞ்சம். உலகில் எது நடந்தாலும் உள்ளே தெரியும். உள்ளே நடப்பது எதுவானாலும் அது உலகையெட்டும். அதனால் இதைப் பூரணயோகம் என்றார்.

  9. புலனின்றி மனம் நேரடியாகச் செயல்படுவது.

    யோகத்தில் ஆரம்பக் கட்டம் புலனை அவிப்பது. பூரணயோகம் புலனை அழிக்கவோ, அவிக்கவோ சொல்லவில்லை. புலன்களைத் தூய்மைப்படுத்தச் சொல்கிறது. மனம் ஜட உலகில் செயல்பட மூளை என்ற கருவியை ஏற்படுத்தியது என்பது தத்துவம். புலன்கள் மூளையின் கருவிகள். கண்மூடியிருக்கும்பொழுது பார்க்க முடிவது, அடுத்த ஊரில் பேசுவது கேட்பது, அடுத்த தெருவில் சமையல் வாடை தெரிவது ஆகியவை புலனின்றி மனம் நேரடியாகச் செயல்படுவதாகும். புலனைத் தூய்மை செய்தால் கண்ணுக்கு விகாரம் தெரியாது, அழகாகத் தெரியும். உலகில் தீமையில்லை, பாவமில்லை, நோய், துன்பம், மரணமில்லைஎனத் தத்துவத்தை மனம் ஏற்பது ஞானம். தூய்மையான புலன்கள் அவற்றை உணர்வது சித்தி. விகாரமான குழந்தை தூய்மையான கண்ணுக்கு அழகாகத் தெரியும். மனம் நேரடியாகக் குழந்தையின் ஆத்ம வசீகரத்தைக் காண்பதாகும். மனம் சக்தி வாய்ந்தது. நேரடியாகப் புலனைத் தவிர்த்துச் செயல்படும் பொழுது சக்தி வாய்ந்தது. அடுத்த ஊர்க் கூட்டத்தில் பேசுபவர் நம் எண்ணத்தைப் பேச வேண்டும் என நாம் நினைத்தால், மனம் புலனால் சிறைப் படாததால், அதன் எண்ணம் நேரடியாகப் பேச்சாளர் மனதை எட்டி, அவரைப் பேசச் சொல்லும். இவை உயர்ந்த சித்திகள். இத்தலைப்பு முதல் நிலையைக் குறிக்கிறது. விஞ்ஞானம் இத்தத்துவத்தைத் தலைகீழே கூறும். மூளை செயல்படுவதே மனம் என அது கூறுகிறது. அதுவே நாத்திகவாதத்திற்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள மாறுபாடு. முடிவான நிலையில் ஆன்மா ஜடத்தை ஆளும். யோகி நினைப்பது உலகில் எந்த இடத்திலும் செயல்படும், மனிதர்களைச் செயல்பட வைக்கும், பொருள்களை நகர்த்தும், எதையும் செய்யும். புலன்கள் காலத்துள் செயல்படுகின்றன. மனம் கடந்ததில் உள்ளது. வளரும் ஆன்மா மூன்றாம்நிலைக் காலத்திற்குரியது.

  10. பிரம்மம் நாடும் ஆனந்தத்தை நுகர்வது.

    பிரம்மம் ஆனந்த மயமானது. மோட்சத்தில் பிரம்மத்தை அடைந்தவர் பெறுவது பிரம்மானந்தம். என்றும் பிரம்மம் இதைப் பெற்றுள்ளது. இதைவிடப் பெரிய ஆனந்தத்தை நாடி பிரம்மம் உலகை சிருஷ்டித்தது. அது பிரம்மம் தேடும் ஆனந்தம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவதரிக்கும் வரை புவியில் எவரும் அனுபவிக்காத ஆனந்தமிது. இதை அனுபவிக்காத பக்தரில்லை. ஆனால் இது பூரணயோக வாயில்என அவர் அறிய வழியில்லை. இறைவனின் ஸ்பர்சம் இதயத்தைத் தாண்டி உடலைத் தீண்டியபொழுது, உடல் சிலிர்க்கும், புல்லரிக்கும். அதுவே இந்த ஆனந்த ஸ்பர்சம். இந்த ஆனந்தம் முனிவர், தவசி, ரிஷி, யோகி அறியாதது. அன்னையின் சூழலில் இதைத் தாங்கி வருகிறது. அன்னையைப் பிறந்தநாளன்று தரிசித்த பெண்மணி 3 நாள்வரை இதை அனுபவித்தார். அன்னையின் சங்கீதம் கேட்டு உள்ளம் உருகுபவர் இவர். இவருக்கு இது என்ன வாயில்எனத் தெரியாது. தெரிந்தால், பாராட்டினால் - அதற்குரிய குணநலன்களை ஏற்றால், அவருக்கு யோகம் சித்திக்கும். நாம் எழுதும் தமிழ்ச் செய்யுளுக்கும், இளங்கோ அடிகளின் அமர காவியத்திற்கும் உள்ள வித்தியாசம் மோட்சம்தரும் ஆனந்தத்திற்கும், பிரம்மம் நாடும் ஆனந்தத்திற்கும் உண்டு. கல்லூரிப் பேராசிரியருக்கும், நியூட்டன் போன்ற மேதைகட்கும் உள்ள வித்தியாசம் இது. அன்னை இவ்வாயிலை அனைவருக்கும் திறக்கிறார். நாம் அந்த நேரம் அனுபவிக்கிறோம். என்னஎன்ற விபரம் தெரியாமல் அனுபவிக்கிறோம். அத்துடன் மறந்து விடுகிறோம். Pleasure, happiness, joy, bliss, delight. என்று ஆங்கிலத்தில் வரிசைக்கிரமமாக வரும். தமிழில் முதல் மூன்றும் சந்தோஷம் ஆகும். அடுத்த இரண்டும் ஆனந்தமாகும். உடல் பெறுவது முதல்; மனம் பெறுவது அடுத்தது; உள்ளம் பெறுவது மூன்றாவது; ஆத்மா பெறுவது அடுத்தது; வளரும் ஆத்மா பெறுவது முடிவானது.

தொடரும்......

*****

 



book | by Dr. Radut