Skip to Content

08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

என். அசோகன்

  1. பிள்ளைகளை முறையாக வழிநடத்தி அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. ஆனால் பிள்ளைகள், முறையை விட தங்களுக்கு எது பிடிக்குமோ அதைத்தான் நாடுகிறார்கள். பெற்றோர்கள் வலியுறுத்தும் முறையும் பிள்ளைகள் தேடும் சந்தோஷமும் ஒத்து வாராத பொழுது தகராறு எழுகிறது. தம் பேச்சைப் பிள்ளை கேட்காத பொழுது பெற்றவர்களே பிள்ளை விஷயத்தில் நெகட்டிவ்ஆக மாறுவதும் உண்டு.

    இத்தகைய சூழ்நிலைகளில் எது சரி என்று சொல்வது கடினம். இரண்டு பக்கங்களிலும் உண்மையும் இருக்கிறது, தவறும் இருக்கிறது. சுமுகத்தைக் கருதினால் பெற்றவர்கள் சரி என்று படுகிறது. சுதந்திரத்தைக் கருதினால் பிள்ளைகள் சரி என்று படுகிறது. இந்த இரண்டு எதிர்முனைகளுக்கு நடுவே தான் உண்மை இருக்கிறது.

  2. குடும்பகௌரவம், ஜாதிப்பற்று போன்ற விஷயங்கள் பெற்றோர்களை பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வைக்கின்றன. காதலில் ஈடுபட்டு கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் பிள்ளைகள் குடும்பகௌரவத்தை பாதிப்பதாக பெற்றோர் நினைப்பதால் அப்படிப்பட்ட பிள்ளைகளோடு விரோதம் பாராட்டுவதும் உண்டு. விரோதம் வாழ்நாள் முழுக்க நீடிப்பதும் உண்டு.
  3. பல இந்திய குடும்பங்களில் ஆண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் கவனம் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பெண் பிள்ளைகளின் திருமணச்செலவை பெற்றோர் ஒரு பாரமாக நினைப்பது இதற்கு ஒரு காரணமாக அமையலாம்.
  4. ஒரு குடும்பத்தில் தாயார் முதன்மையாக இருக்கிறார் என்றால், ஒன்று தகப்பனார் அவருடைய வேலையில் மூழ்கியவராக இருக்க வேண்டும் அல்லது சரியான வேலை மற்றும் வருமானம் இல்லாமல் பொறுப்பற்றவராக இருக்க வேண்டும்.
  5. இக்காலத்தில் வயதில் பெரியவர்களுக்குச் செலுத்தும் மரியாதை என்பது மிகவும் மேலோட்டமாகிவிட்டது. வாழ்க்கை சீராகவும், நிதானமாகவும் போய்க்கொண்டிருந்த நாட்களில் தாத்தா, பாட்டி போன்றவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது.

    ஆனால், இப்பொழுது வாழ்க்கைப் பாணியின் வேகம் அதிகரித்து விட்டது. கூட்டுக் குடும்பம் போய் அவரவர் தனித்து வாழ்கின்றனர். வேகம் அதிகரித்துள்ள அளவிற்கு மரியாதையும் மேலோட்டமாகி விட்டதில் ஆச்சர்யம் இல்லை.

  6. பண்பு நிறைந்த குடும்பங்களில் பணம் மற்றும் சொத்து விஷயமாகத் தகராறு எழுவதில்லை. இப்படி ஒரு குடும்பத்தில் தகராறு எழுகிறது என்றால், அக்குடும்பம் பண்பு குறைவான குடும்பம்என்று அர்த்தம் ஆகும்.
  7. விருந்தாளிகள் வந்திருக்கும்பொழுது வீட்டிலுள்ள அனைவரும் பக்குவமாக நடந்து கொள்வது பண்பின் எடுத்துக்காட்டாக அமையாது. விருந்தாளிகள் இல்லாத நேரத்தில் வீட்டிலுள்ளவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே பண்பின் உண்மையான எடுத்துக்காட்டாகும்.
  8. வாழ்க்கை நிதானமாக ஓடிக்கொண்டிருந்த நாட்களில் விருந்தாளிகள் சொல்லாமல் வருவதுண்டு. நெடுநாட்கள் தங்கிவிட்டு அவர்கள் இஷ்டப்பட்ட நாட்களில் திரும்பிப் போவதும் உண்டு. ஆனால் இப்பொழுது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. இதன் விளைவாக விருந்தோம்பலும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுதெல்லாம் விருந்தாளிகள் முன்கூட்டியே வருவதாக தெரிவிக்க வேண்டியுள்ளது. ஓரிரு நாட்களுக்குமேல் தங்க முடியாமல் திரும்பவும் வேண்டியுள்ளது.
  9. மனைவியிடம் சொல்லாமல் வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து வரும் இந்திய ஆண்கள் பலபேர் இருப்பது அவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் இருப்பதைக் காட்டுகிறது. மேலைநாட்டு ஆண்கள் அந்த சுதந்திரத்தை எப்பொழுதோ இழந்துவிட்டார்கள்.
  10. கணவனும் மனைவியும் இருவரும் மனம் ஒத்து மகிழ்ச்சிகரமாக குடும்பம் நடத்துவது அரிது. பெரும்பாலான தம்பதிகள் ஒருவர் மேல் ஒருவர் குறை சொல்லிக்கொண்டும், அட்ஜஸ்மெண்ட் பண்ணிக்கொண்டும் தான் குடும்பம் நடத்துகிறார்கள்.
  11. தம்பதியரிடையே சமநிலை நிலவ வேண்டும்என்று பேச்சு இருந்தாலும், உண்மையில் பார்த்தால் யாரேனும் ஒருவர் ஆதிக்கம் செலுத்திக்கொண்டும், அடுத்தவர் பணிந்துகொண்டும் இருப்பர்.
  12. திருமணத்தின்மூலம் பெண்கள் முக்கியமாக நாடுவது ஆதரவும் பாதுகாப்பும்தான். அன்பு பரிமாற்றம் என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான்.

    உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு உடலுறவு இன்பம்தான் முக்கியமாக திருமணத்தில் அவர்கள் தேடுவது. நன்றாக வளர்ந்துள்ள உணர்வு மையத்தைக் கொண்டவர்கள் தான் உடலுறவையும் தாண்டி அன்பு பரிமாற்றத்தை முக்கியமாகக் கருதுவார்கள்.

  13. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தம்முடைய திருமணம் மட்டும் விசேஷமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் விரைவிலேயே பொய்யாகிவிடுகின்றன. இருந்தாலும் தம்முடைய பெற்றோருடைய திருமணம் எப்படி இருக்கிறது என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு இளைய தலைமுறையும் தம்முடைய திருமணத்தைப்பற்றி கனவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
  14. திருமணப் பேச்சுவார்த்தை நடக்கும்பொழுதும், ஆணும் பெண்ணும் பழகும் பொழுதும், திருமணம் கூடிவரும் வரையிலும் இரு பக்கத்தாரும் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். அதன் பிறகுதான் சுயரூபமே வெளிவருகிறது. முன்பிருந்த போலித்தனம் போய் சுயரூபம் வெளிவரும் பொழுது சம்மந்தப்பட்டவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி வருகிறது.
  15. இந்திய கணவன்மார்கள் பலபேர் தம்முடைய வரவு, செலவு விவரங்களை மனைவிமார்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள். இப்படி ரகசியமாக வைத்திருக்கும் பொழுது மனைவி தன் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்படியில்லாமல் இந்த விஷயங்களையெல்லாம் மனைவிமார்களிடம் பகிர்ந்து கொண்டால், மனைவிமேல் இருக்கும் கன்ட்ரோல் போய்விடும் என்று அஞ்சுகிறார்கள்.
  16. இந்தியாவில் நடக்கின்ற திருமணங்கள் பெரும்பாலும் பணத்தையும் சமூகஅந்தஸ்தையும் மையமாக வைத்துதான் நடக்கின்றன. திருமணத்தின்மூலம் இரு உள்ளங்கள் இணைவது என்பது மிகவும் அபூர்வமாகும்.
  17. தம்பதியரிடையே தகராறு எழுவதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம். அடிக்கடி தகராறு நிகழ்கிறதென்றால், விழிப்புணர்வு குறைவாக உள்ளவர்கள் சண்டைமூலம் ஒரு தீவிரத்தை நாடுகிறார்கள்என்று அர்த்தமாகும்.
  18. பெண்களுக்குத் தாய்மைஎன்பது உடல் அளவிலும், மனரீதியாகவும் ஒரு நிறைவைத் தருகிறது. ஆண்களுக்கு, தமக்குப் பிள்ளைகள் பிறப்பதன் மூலம் அவருடைய சந்ததி தொடர்கிறது என்றாகிறது.
  19. பெண்ணுரிமையைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் இந்தியப் பெண்கள் தலைமையும் மனோதிடமும் உள்ள கணவன்மார்கள் கிடைத்தால் சந்தோஷமாகப் பணிந்து போவார்கள்.
  20. கணவன்மார்களை ஆதிக்கம் செய்யும் மனைவிமார்கள் தம்முடைய சொந்த பலத்தால் இப்படி ஆதிக்கம் செலுத்துவதில்லை. தம் மேல் உள்ள பிரியத்தால் அவர்கள் கட்டுண்டு இருக்கும்பொழுது அப்பிரியத்தை பலகீனமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

தொடரும்.....

*****



book | by Dr. Radut