Skip to Content

04. ஆன்மாவிலிருந்து செயல்பட்டால்

ஆன்மாவிலிருந்து செயல்பட்டால்

என். அசோகன்

ஆன்மாவிலிருந்து செயல்பட வேண்டுமென்றால், அறிவிலிருந்து செயல்படுவதோ, உணர்வின் அடிப்படையில் எழுந்த அபிப்பிராயங்களின் படியோ மற்றும் உடல் ரீதியான பழக்கவழக்கங்களின்படியோ செயல்படக் கூடாது என்பது அவசியமாகிறது. இது அவசியம் என்றாலும், ஆன்மாவைச் செயல்பட வைப்பதற்கு இதுமட்டும் போதாது. உள்ளிருந்து ஓர் எழுச்சி அல்லது வெளியிலிருந்து வரும் நிர்பந்தம் தேவைப்படுகிறது. இரண்டும் இருந்தால் நல்லது. ஏதேனும் ஒன்றிருந்தால் கூட ஆன்மா உடனடியாகச் செயல்பட்டு, விளைவுகளையும் உடனடியாகத் தருகிறது. குறைந்தபட்சம் நாம் விரும்புகின்ற நல்ல பலன்கள் நம்முடைய சூழலுக்குள் நுழைய ஆரம்பித்துவிடுகின்றன.

டாம் கூத் (Tom Gooth) என்ற அமெரிக்கர் உலகெங்கும் பிரயாணம் செய்யும் பழக்கம் கொண்டவராக இருந்தார். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு உதவக்கூடிய பொருளாதாரத் திட்டங்களில் அக்கறை கொண்டவராக இருந்தார். இந்நாடுகளில் பரவலாக இருக்கும் ஏழ்மையை அகற்றுவதற்காக எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தார். சைக்கிள் ரிக்ஷாவில் ஓர் என்ஜினைப் (engine) பொருத்துவதற்குத் தீவிர முயற்சி எடுத்தார். இதன்பொருட்டு கோல்கத்தாவில் நிறைய நாள்கள் தங்கியிருந்தார். ஒரு பக்கம் இந்த ஆர்வம் இருக்க, இன்னொரு பக்கம் ஆன்மீகத்திலும் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். எந்நாட்டிற்குச் சென்றாலும் அங்குள்ள ஆன்மீக முக்கியத்துவம் பொருந்திய இடங்களைப் பார்வையிடுவார். பல்வேறு யோகங்களையும் பயின்று வைத்திருந்தார்.

ஒரு சமயம் மெக்ஸிகோ சென்றிருந்த பொழுது தம்முடைய வாக்ஸ்வேகன் (Volkswagen) காரில் பயணம் செய்தார். ஒரு நாள் மதியம் ஓர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காரை ஓட்டிக் கொண்டு போனபோது தம்முடைய பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருந்த பை வழக்கமான இடத்தில் இல்லை என்பதைக் கண்டார். உடனே வண்டியை நிறுத்தித் தேடினார். தான் சாப்பிட்ட ஓட்டலில் இருந்து பல மைல்கள் அப்பால் வந்துவிட்டிருந்தார். எனவே, மீண்டும் ஓட்டலுக்குப் போக வேண்டியதாயிற்று. வழியில் எங்கெல்லாம் நிறுத்தினாரோ அங்கெல்லாம் மீண்டும் நிறுத்தித் தேடினார். ஆனால் பலனில்லை. அந்நேரம் உண்மையிலேயே எல்லா நம்பிக்கைகளையும் இழந்த நேரம். அவருடைய முயற்சியின் முடிவுக்கு வந்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் தாம் செய்யக்கூடிய எல்லா முயற்சிகளையும் நினைவுபடுத்திப் பார்த்தார். இருந்தாலும் எதன் வழியாகவும் நிவாரணம் கிடைக்கவில்லை. திடீரென்று, "மிகவும் இக்கட்டான நேரம் தான் என்னைக் கூப்பிட உகந்த நேரம்'' என்று ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்து அன்னை கூறியிருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே பத்மாசனமிட்டு சாலையிலேயே அமர்ந்து அன்னையை அழைத்தார். மனத்திலிருந்த பாரம் நீங்கியதை உணர்ந்தார். மீண்டும் வண்டியை எடுக்க நினைத்தார். வண்டியை எடுப்பதற்கு முன்னர் சாலையோரமாக இருந்த புதரின் மேல் தன்னுடைய பை கிடப்பதைக் கண்டார். உள்ளிருந்து ஒரு நன்றியுணர்வு பெருக்கெடுத்ததேயொழிய வேறு எந்தக் கேள்வியும் எழவில்லை. அவருடைய உடம்பே புல்லரித்தது. ஆன்மா தவறுவதேயில்லை. ஏனென்றால் தோல்வி என்பது அது அறியாத ஒன்று. இருந்தாலும் ஆன்மா எப்படி பலனைக் கொண்டு வருகிறது என்பதற்கான விளக்கம் எல்லோரும் வரவேற்கின்ற ஒன்றாகும்.

ஒருவன் திருடிவிட்டால், போலீஸ் எல்லா காவல் நிலையங்களுக்கும் செய்தி அளிப்பதால், திருடனைப் பிடிக்க முடிகிறது. போலீஸ் ஒரு சர்க்கார் ஸ்தாபனம். கிரெடிட் கார்டை நாம் மும்பையிலோ, சிங்கப்பூரிலோ கொடுத்தால், அதை ஏற்று, பொருள்களைக் கடைகள் விற்கின்றன. கிரெடிட் கார்ட் ஒரு வியாபார ஸ்தாபனம்போல் செயல்படுகிறதுஎன்பதை இது காட்டுகிறது. எல்லாம் வல்ல இறைவன் உலகெங்கும் பரவியுள்ள சூட்சும ஆன்மீக ஸ்தாபனம் என்பதாலும், அந்த ஸ்தாபனத்தின் கிளை நம்முள் ஆன்மா என்ற உருவிருப்பதாலும், நாம் எந்த நேரமும் நம் உள்ளுறை ஆபீஸிலிருந்து இறைவன்என்ற ஸ்தாபனத்திற்குச் செய்தி அனுப்பலாம். காணாமற் போன பொருள் எங்கிருந்தாலும், எந்தக் கிளை ஆபீஸ் மூலமாகவும் இறைவன் செயல்படுகிறான் என்பதை நாம் காண்கிறோம். நாம் அறிவால் செயல்படுகிறோம். அதன் பலன் பெரியது. ஆத்மாவால் செயல்படக் கற்றுக் கொண்டால் நம் திறமைக்கு முடிவேயில்லை என்பது ஆன்மீக அனுபவம்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆசையும், அபிப்பிராயமும் சேர்ந்து நோக்கமாகின்றது (attitude). ஆழ்ந்த நோக்கம் (motives) தன்னுள் எண்ணம், உணர்வு, செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டது.
 
ஆசையை ஏற்கும் அபிப்பிராயம் நோக்கம்.

 
*****
 
                                                  ஸ்ரீ அரவிந்த சுடர்      
 
கொடுமை, கடுமை, பொறாமை, துரோகம், வெறுப்பு, அறிவால் ஏற்படும் உணர்வு, தவறான அபிப்பிராயம் ஆகியவை பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்திற்கு அவசியமானவை. யோகமே இதுபோன்ற முயற்சியாகும். பரம்பொருளுக்குத் தேவையற்ற ஒன்றாகும்.
 
மனிதனுக்குத் தேவைப்படும் கடுமையும் வெறுப்பும்
யோகத்திற்கும் தேவை, பரம்பொருளுக்கில்லை.


*****

 



book | by Dr. Radut