Skip to Content

02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

எதைச் செய்வது, செய்வது என்றால் என்ன?

  • நாமனைவரும் எதையோ ஒன்றைத் தீவிரமாக, இடைவிடாது, பூரண ஆர்வத்துடன் உஷாராகச் செய்துகொண்டிருக்கிறோம். அது இல்லாதவரில்லை. சோம்பேறி, உதவாக்கரையும் அப்படிச் செய்கிறான். அதற்குரிய மையம் "நாம்', நம் ஆசை, அபிலாஷை, நம் இன்றைய இலட்சியம், நம் புத்தி இடைவிடாது செயல்படுகிறது.

    நாமுள்ள இடத்தில் அன்னையை வைக்க வேண்டும்.

    • "நாம்” மாறி அன்னையாவது செய்வது. அதை எப்படிச் செய்வது?
    • எளிமையான அளவில் செய்ய அன்னையை நினைத்துச் செய்வது.
    • பூரணமாகச் செய்ய சமர்ப்பணம் செய்து காரியத்தைச் செய்வது.
    • வரும் 141 பக்க கருத்துகளும் சமர்ப்பணத்துள் அடங்கும்.
      இங்கு எழுதப்படுபவை சமர்ப்பணம் செய்ய முடியாத பொழுது செய்யக்கூடியவை.
    • சமர்ப்பணம் என்றால் என்ன?
    • எண்ணம், உணர்வு, செயல் என மனதில் எழுந்து, ஆர்வம் பெற்று, செய்கிறோம்.
    • படிக்க புத்தகம் எடுப்பதன்முன் செய்யும் சமர்ப்பணம், கை செய்யும் சமர்ப்பணம் (physical consecration).
    • படிக்க ஆர்வம் வருமுன் சமர்ப்பணம் செய்தால், அது உயிரால் செய்யும் சமர்ப்பணம் (vital consecration).
    • நினைவு எழுமுன் செய்வது மனம் செய்யும் சமர்ப்பணம் (mental consecration).
    • நினைவுக்கு, (1) நினைவு, (2) சூட்சுமஎண்ணம் subtle thought என்ற இருநிலைகள் உண்டு. சூட்சுமஎண்ணம் சமர்ப்பணமாவது பெரியது. காரியம் உடனே நடக்கும், நடப்பது பூரணமாக இருக்கும், அளவு கடந்து பெரியதாக இருக்கும்.
    • 10 இலட்ச ரூபாய் ஆர்டர் எதிர்பார்ப்பவனுக்கு உடல் சமர்ப்பணம் physical consecration அதைப் பெற்றுத் தரும். அடுத்த நிலை சமர்ப்பணம் ஆர்டரின் அளவு, தரம், மீண்டும்மீண்டும் வருவது (capacity to recur) அதிகமாகும். முடிவான நிலை சமர்ப்பணம் தினமும் 10 இலட்ச ஆர்டர் நிரந்தரமாக, சாதகமாக, சௌகரியமாக வரும், வந்தபடியிருக்கும்.

      நம் பழைய வாழ்வை நினைவுகூர்ந்து, அதை அன்னை வாழ்வாக்க வேண்டும்.

      அன்னை வாழ்வென்றால் என்ன?

      கெட்டது போய், நல்லது வரவேண்டும், அதுவே அன்னைவாழ்வு.

      அல்பம், சொல்பம் போய், அழகும், பெருந்தன்மையும் வேண்டும்.

      சிறியது, குறை, சரியில்லாதது, மனத்தில் எண்ணமாகவும் எழக்கூடாது.

      "தாய்பாஷை'' மறந்து பண்புள்ளதமிழ் பேசவேண்டும். நாம் மாறியதற்கு அடையாளம் இந்த நல்லனவெல்லாம் பிள்ளைகளில் தெரிய வேண்டும். பிள்ளைகள் குறை, நம் குறை.

      எதையும் நல்லதாக (positiveஆக), இனிமையாக, இதமாக, பிறர் இனிக்கும் வகையில் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • நல்லெண்ணம் என்பது அதிர்ஷ்டம்.

    மற்றவர்க்கு ஏராளமான நல்லெண்ணத்தை உவந்து அளிப்பது நல்லது. அதனால் உலகத்தின் அபரிமிதமான நல்லெண்ணத்தை அனைவரிடமிருந்து பெறலாம்.

    • இதை நாம் சரியாகச் செய்வதற்கு அடையாளம் அனைவரும் நம்மைக் காண, பேச பிரியப்படவேண்டும்.
    • "உங்களைப் பார்க்கவேண்டும்என வந்தேன்" என்று கூற வேண்டும்.
    • சம்மந்தமில்லாதவர் அதைச் சொல்வது சிறப்பு.
    • எதிரி கூறுவது முடிவான சிறப்பு.
    • எதிரி என்று இருக்கக்கூடாது.
    • "பெரியாரிடம் கிடைக்காத அன்பு இராஜாஜியிடம் கிடைத்தது" என்று அண்ணாதுரை கூறினார். அதைப்போல் தாயாரிடம் கிடைக்காத அன்பு மாமியாரிடம் கிடைத்ததுஎன மருமகள் கூற வேண்டும்.
    • யார் சரியில்லைஎன்று நாம் கூறினாலும், நாம், நாம் மட்டுமே சரியில்லைஎனப் பொருள்.
    • அனைவரும் நம்மிடம் சரியாக நடப்பது நம் பொறுப்பு. நாம் மட்டுமே பொறுப்பு. எது வருவதானாலும் எல்லோர்க்கும் முதல், எனக்குக் கடைசியில் வரவேண்டும்.

    நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் நம் அகஉணர்வை ஆழமாக, தெளிவாக, அர்த்தபுஷ்டியுடன் பிரதிபலிக்கின்றனர்.

    "உன் நண்பர்களைக் கூறு, நீ யார் எனக் கூறுகிறேன்" என்பது பழமொழி.

    • நாம் எவர் மீது கூறும் குறையும் நம் குறை மட்டுமே.
    • குறை தெரிவது குறையான பார்வை - குறையான ஜீவன்.
    • (Mother First, Mother Last) அன்னையை நினைக்க வேண்டும், அன்னையைமட்டும் நினைக்கவேண்டும். அதை 100% செய்ய முயன்றால், பலன் 10%, 5% இருக்கும், எதிரானவை ஏராளமாக எழும்.
    • நாம் யார்என்பதை ஏற்பது sincerity உண்மை.
    • 100% உண்மை இலட்சியம்.
    • உள்ளே போய்ப்பார், மனிதன் 100% பொய்.
    • எரிச்சல் வருகிறது எனில் உள்ளே பொய்யிருக்கிறது எனப் பொருள்.
    • உண்மைக்கு எரிச்சல் தெரியாது.
    • மனத்தை சோதித்துப்பார். அபிப்பிராயத்தை விட்டுவிடு.
    • ஆத்திரம் வருவதைப்பார். அதன் உண்மையை ஏற்றுக்கொள்.
    • உடலைப்பார். நாம் விலங்காக இருக்கிறோம்.
    • நாம் அறிவுள்ள மிருகம் (intelligent animals) என்கிறார் பகவான்.
    • அபிப்பிராயம் வெளியிடாதே.
    • ஓர் அபிப்பிராயத்தைக் கைவிடு, ஏராளமான சக்தி வெளிப்படும்.
    • நம்மை 100% நல்லவனாகக் கருதி, நம் செயலை ஆராய்ந்து பார்.
    • மீண்டும் நம்மை 100% கெட்டவனாகக் கருதி நம்மை ஆராய்ந்து பார்.

நல்லெண்ணம்

”அன்பான அபரிமிதம்”, "அமிர்தமான அபரிமிதம்”, "அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும்” என்பவை நான் திரண்ட செல்வத்தை அடையும் வகையைப்பற்றி எழுதிய கட்டுரைக்குப் பல சமயங்களில் கொடுத்த தலைப்புகள். அதில் கூறும் 51 முறைகளில் "நல்லெண்ணம்” ஒன்று. ஓர் அன்பர் நல்லெண்ணம் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.

  • ஒருவருக்குச் சிரமம் வந்தால், அதைக் கண்டு சந்தோஷப்படுபவர் உண்டு. அப்படிப்பட்டவர் மட்டுமேயுள்ள ஸ்தாபனங்களுண்டு.
  • ஒருவருக்கு நல்லது நடந்தால், அதைக் கேட்டுப் பாராட்டும் அளவுக்கு உண்மையில் நல்லெண்ணமில்லாதவருண்டு. அப்படிப்பட்டவர் மட்டுமே உள்ள வீடும் உண்டு.

இதுபோன்ற வீட்டில் பிறந்தவர், இதுபோன்ற ஸ்தாபனங்களில் வேலை செய்பவர் இரு வகையினராக இருப்பார்கள். ஒரு வகையினர் அரிது, அடுத்தது பரவலான உண்மை.

  • பண்பான வீட்டில், ஊரில் பிறந்து பண்பற்ற மக்களிடையே வந்தவர். இவர் சூழ்நிலை இவர் மனநிலைக்கு எதிரானது.
  • தம் மனத்திலுள்ளது சூழ்நிலையால் பிரதிபலிப்பது.

எண்ணமே கெட்டது என அன்னை கூறுகிறார். அது யோகத்திற்குரிய விளக்கம். நல்லெண்ணம், கெட்ட எண்ணம் என நாம் அறிவோம். மக்கள் பல வகையினர்.

  • நடக்க முடியாத விஷயத்தில் அனைவர் மீதும் நல்லெண்ணமுள்ளவர்.
  • வேண்டியவர்கட்கு நல்லது நடக்கவேண்டும் என்பவர்.
  • வேண்டாதவராக இருந்தாலும் தமக்கு நஷ்டமில்லாதவரை, பிறருக்கு நல்லது நடக்கவேண்டும் என்பவர்.
  • எவருக்கும் எந்த நல்லதும் நடக்கக் கூடாது என்பவர்.
  • தாம் நஷ்டப்பட்டும் பிறருக்கு நல்லது செய்பவர்.
  • தாம் நஷ்டப்பட்டும் பிறருக்குக் கெடுதல் செய்பவர்.
  • தம் ஆதாயத்திற்காகப் பிறருக்குக் கெடுதல் செய்பவர்.
  • காரணமின்றி நல்லதுமட்டும் செய்ய விரும்புபவர்.
  • காரணமின்றி கெட்டதுமட்டும் நினைப்பவர்.

நான் கூறும் நல்லெண்ணத்திற்கு அதிகபட்சம், குறைந்தபட்சம் உண்டு.

  1. வேண்டியவர், வேண்டாதவர்என்ற பாகுபாடின்றி நினைத்து, நல்லது நடக்க முடியுமானால், அதிகபட்சம் அதிகபட்சமானவர்க்கு நடக்க உணர்வால் விழைவது - அதிகபட்சம்.
  2. வேண்டியவர்கட்கு நமக்கு நடக்க நாம் பிரியப்படுவது நடக்க வேண்டும்என விழைவது - குறைந்தபட்சம்.

நாம் பார்த்தது, கேட்டது, படித்ததில் எவ்வளவு நல்லது உண்டோ அது நாமறிந்த அனைவர்க்கும் நடக்க வேண்டும் என்று நினைப்பவர் ஏராளமான பேருண்டு. அமெரிக்கா செல்பவர்கள் மக்கள் வசதியாக வாழ்வதைக் காண்கிறார்கள். நம் நாட்டில் அந்தநிலை வர வேண்டும் என நினைக்காதவரில்லை. அதை உணர்ச்சிபூர்வமாக விழைவது நல்லது.

குறைந்தபட்சம் எளிமையானது. என் சம்பளம் 10,000 ரூபாய். இதில் எனக்குத் துண்டு விழுந்து, கடன் 70,000 ரூபாய் சேர்ந்துவிட்டது. பாரம் அதிகம். இந்தக் கடன் தீர்ந்து, மாதம் துண்டு விழக்கூடாது, மிச்சமாக வேண்டும் என்பது எளிய நினைவு. வீடு, கார் அவசியமான நாட்கள் இவை. "நான் அவற்றைக் கருதும் நிலையில்லை. என் பிள்ளைகள் 10, 13 வயது. இவர்கள் படிப்புக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை" என்பது பலருடைய நிலைமை. இந்த அன்பருக்கு இந்தச் செலவெல்லாம் செய்யும் வசதிக்கு ஒரு தொகை வருவது உதவி, அதிர்ஷ்டம் எனவும் கூறலாம். அது அவருக்குப் பெரிய தொகையானாலும், பெரிய தொகையாக இருக்காது.

நம் நண்பர்கள், உறவினர் இதுபோன்ற சௌகரியம் பெற விரும்புவது நல்லெண்ணம். நமக்குள்ள தேவை அவர்கட்கும் உள்ளது. அதை அவர்கள் பெற நினைப்பது நல்லெண்ணம். நமக்குரியவர் 50 அல்லது 100 பேரானால், ஒவ்வொருவரும் இதுபோன்ற வசதிபெற ஒருவர் நினைக்கலாம். நினைவு உணர்வானால், நம் எண்ணம் அவர்கள் வாழ்வில் பலிக்கும்.

  • மத்தியதரக் குடும்பங்களில் ஓர் அன்பர் தமக்கே இந்த அளவு வசதி பெற நினைக்கலாம். மனம் நம்பாது, "நடக்குமா?” எனக் கேட்கும்.
  • அனைவரும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் சக்தி வாய்ந்தது. அது நமக்கும் பலிக்கும்.
  • நாம் 50 பேருக்கு இந்த வசதி வேண்டுமென நினைத்தால், அது அதிகமாகப் பலிக்க வேண்டுமானால், சீக்கிரம் பலிக்க வேண்டுமானால் ஒரு முறையுண்டு.
    • தனக்குக் கடைசியில் வரட்டும், மற்றவர்க்கு என்னைவிட முன் வரட்டும் என நினைப்பது பரநலம், சுயநலம் அழியும் வகை. Self giving எனவும் கூறலாம்.

      அனைவருக்கும் முன்னும், தனக்கு முடிவாகவும் வரட்டும் என்ற நினைவு உணர்வானால், அதன் சக்தி பெருகும்.

      அன்னையில் அது பெருகும் பாணி ஆச்சரியமானது.

      அன்பருக்கு எப்பொழுதும் முதலில் வரும் என்பது சட்டம்.

      அன்பருக்கு வருவது அனைவருக்கும் வரும்என்பதும் சட்டம்.

      அன்பருக்கு வராமல் எப்படி அனைவருக்கும் வரமுடியும்?

      அன்பர் தனக்கு முடிவில் வரட்டும்என்றதால், அந்த முடிவு முதலில் இருக்கும் என்பதால், அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஆரம்பத்திலேயே வரும்.

      இது அன்னைசக்தி பரநலஉணர்வு மூலம் செயல்படுவது.

  • இதன் அடிப்படையில் அமைந்துள்ள சூட்சுமஇரகஸ்யம்,
    • (Sincerity) உண்மையான நல்லெண்ணம்.
    • நல்லெண்ணத்திற்கு சக்தியுண்டு. அது (Sincerity).
      உண்மையாலும், பரநலத்தாலும் (Self-giving), அன்னை சக்தியாலும் செயல்படுவதால், பலன் பெரியது, நிச்சயம்.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
துக்கமான சூழ்நிலையில் சந்தோஷமாக இருப்பது மனத்தைப் புண்படுத்தும். துக்கமும், சுகமும் எதிரெதிரான உணர்வுகள், மனிதனுக்குமட்டுமே உரியவை. மனிதச் சூழ்நிலை ஒன்றை அனுமதிக்கும், அடுத்ததை அனுமதிக்காது. சைத்தியப்புருஷனுக்குத் துக்கமில்லை. உடல் உணர்வின் சந்தோஷமும் அதற்கில்லை. துக்கமான சூழ்நிலையில் சைத்தியப்புருஷன் அமைதியாகவும், இனிமையாகவுமிருப்பான். பொருத்தமற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தமாட்டான்.
 
துக்கமும் அமைதியையும் இனிமையையும் கொடுப்பது சைத்தியப்புருஷன்.



book | by Dr. Radut