Skip to Content

11.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - அப்படியானால் நாம் ஷேக்ஸ்பியர், ஐன்ஸ்டீன் போலாகலாம் என்று பொருளன்று, இல்லையா?

அண்ணன் - ஷேக்ஸ்பியர் உலகுக்குச் செய்ததை அருள் நமக்குச் செய்யும். நம் வாழ்வைப் பொருத்தவரை அது போன்ற உயர்வு அருளால் நமக்குக் கிடைக்கும்.

தம்பி - இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பிரித்துச் சொன்னால் நல்லது.

அண்ணன் - தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்குத் தான் உண்டு.

தம்பி - ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவருடைய பிரார்த்தனை ஜனாதிபதி மட்டும் அவருக்குச் செய்யக் கூடியதைச் செய்யும். அவருடைய வாழ்வில் ஜனாதிபதியின் அதிகாரம் போல் அருள் செயல்படும். அது அவரே ஜனாதிபதியாவது அன்று. அவர் வாழ்வில் ஜனாதிபதி செயல்படுவது போன்றது. அப்படியா?

அண்ணன் - ஷேக்ஸ்பியர் பாத்திரங்களை அமரராக்கினார். நம் கற்பனையை அருள் அமரராக்குகிறது. அதனால் பலிக்கிறது. பாத்திரங்கள் அமரத்துவம் அடைவது போல் நம் கற்பனை அமரத்துவம் அடைகிறது.

தம்பி - இது முக்கிய வித்தியாசம். நாம் இப்படிச் சொன்னால், தாமே ஷேக்ஸ்பியராகலாம் எனப் புரிந்து கொள்வார்கள்.

அண்ணன் - அங்கும் ஓர் உண்மையிருக்கிறது. ஷேக்ஸ்பியர் பாத்திரங்கள் அமரராக்கியது போல் அருள் நம் கற்பனைத் திட்டத்தை அமுலாக்குவது, திட்டம் அமரத்துவம் பெறுவதாகும்.

தம்பி -அருளை நான் இதுவரை இப்படிப் புரிந்து கொள்ளவில்லை.

அண்ணன் - எல்லாத் துறைகளிலும், எல்லா அன்பர்கட்கும், எல்லா விஷயங்களிலும், அருள் வழங்குவது அமரத்துவம். நம் நிலை தாழ்ந்திருப்பதாலும், சூழ்நிலை பொய்யால் நிறைந்திருப்பதாலும், ஒரு சமயம் மட்டும் நமக்குப் பலன் வருகிறது. நமக்குப் பலன் மட்டும் முக்கியம் என்பதால் அதனுள் பொதிந்துள்ள ஆன்மீகச் சூட்சுமத்தை நாம் அறிய முற்படுவதில்லை.

தம்பி - அன்னை எனில் அமரத்துவம், ஆனந்தம் என்றாகிறது. ஆனால் அது பொய் சொல்லாதவருக்கு மட்டும் என்கிறீர்களே.

அண்ணன் - பொய்யிடம் அருள் வாராது. பிரார்த்தனைக்குரிய பலன் மட்டும் அப்பொழுது கிடைக்கும்

தம்பி - நாமெல்லாம் பொய்யே சொல்ல மாட்டேன் என்று பொய் சொல்பவர்கள்.

அண்ணன் - பிரார்த்தனையை மெய்யாகச் செய்வதால் தான் பலிக்கிறது. பிரார்த்தனை முடிந்தால் பழைய பழக்கம் வருகிறது. கற்பனை (imagination) என்பது பெருந்திறன். இறைவனுடைய கற்பனையால் காலம் எழுந்தது. மனிதனுடைய கற்பனையால் எதிர்காலம் எழுகிறது. கற்பனையின் திறன் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. நாம், வழக்கில், கற்பனைக் கோட்டை (fantasy) என்பதைக் கற்பனை என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். எதிர்காலத்தில் நடக்க இருப்பதை உருவகப்படுத்தும் திறன் கற்பனை என்கிறார் பகவான். கற்பனை, கற்பனைக் கோட்டையாக இல்லாவிட்டால், எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

தம்பி - நமது கற்பனை பலிக்க நாம் நம் திறமையை நம்புகிறோம்.

அண்ணன் - நமது திறமையை நம்புவதைவிட அன்னையை நம்பினால், அவர் அருளை நம்பினால் பலன் அதிகம். அது, முன் சொன்னது போல், இருவகையாக நடக்கிறது.

1. நம் திறமைக்கு வெற்றி, தோல்வியுண்டு. அருளுக்கு வெற்றி மட்டும் உண்டு.

2. கற்பனை உண்மையாக மட்டும் இருந்தால், அக்காரணத்தால், மனிதனின் சிறு செயல், தெய்வத்தின் பெரிய செயலாக மாறுகிறது (Finite into infinite). கற்பனையைப் பூர்த்தி செய்த அருள் அத்துடன் நிற்பதில்லை (Mother begins where man ends). தொடர்ந்து முன்னேற்றம் எழும். அது முடிவற்றது.

தம்பி - மனித செயலைத் தெய்வச் செயலாக மாற்றும் உபாயம் என்றே இதைக் கூறலாம். கற்பனைக்கு பகவான் சிருஷ்டித் திறனளிக்கிறார். கற்பனை உண்மையாக இருந்தால், இயற்கை (becoming) செயல்படுவதற்குப் பதிலாக (Being in the becoming) அதனுள் உள்ள சைத்தியப் புருஷன் (ஆன்மா)செயல்படுகிறான். வாழ்வு, யோகமாக மாறுகிறது எனலாம்.

அண்ணன் - அதுவும் சரியாகப்படுகிறது. இந்தியத் தத்துவ மரபு, யோக மரபின் சிறப்பை பகவான் குறிப்பிடும் பொழுது இறைவனின் இவ்விரு நிலைகளைக் (Being, Becoming) குறிப்பிடுகிறார். விஞ்ஞானி ஒன்றை மட்டும் கருதுவதால் விஞ்ஞானம் வழி தவறுகிறது எனவும் கூறுகிறார்.

தம்பி - குடும்பம் நடத்தும் அன்பர், இடைவிடாது அன்னை அவன் வாழ்வில் செயல்பட நிதானம், பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதன் மூலம் (Being) இறைவனின் முதல் நிலையை பகவான் வாழ்வில் கொண்டு வருகிறார்.

அண்ணன் - நடைமுறையைக் கருதும் குடும்பஸ்தன் படபடப்பாக இருக்கிறான். படபடப்பு வேண்டாம் என்பவன் துறவியாகிறான். படபடப்பு இல்லாவிட்டால் குடும்பம் நடத்துவது யோக வாழ்வு என்கிறார் பகவான். இறைவனை வாழ்வில் செயல்பட வைப்பது யோக வாழ்வாகும்.

தம்பி - அதற்கு பகவான் விதிக்கும் நிபந்தனை கசக்கிறது. எதிரியை நண்பனாகவும், வெறுப்பை விருப்பமாகவும், நம்மை அழிக்க வருபவனை ஆக்க புருஷனாகவும் கருத வேண்டும் என்பது கசப்பான நிபந்தனை.

அண்ணன் - அதுவே Life Divineஇல் முதல் அத்தியாயம். அதுவே முடிவான ஞானம். துறவி தேடுவது ஆத்ம ஞானம். பூரணயோகி நாடுவது முடிவான ஞானம். ஆத்ம ஞானம் மோட்சம் தரும். முடிவான ஞானம் வாழ்வில் பூரணம் தரும்.

தம்பி - மனிதன் குறையுடையவன். மனிதன் அன்பனானால், நிறைவுடையவனாகிறான். தன்னை நம்பி வாழும் மனிதன் அன்னையை நம்பி வாழ்ந்தால் நிறைவு பெறுகிறான்.

தொடரும்...

****

 



book | by Dr. Radut