Skip to Content

13. அன்னை இலக்கியம்

ரௌடியின் மனம்

(பிப்ரவரி 2001 இதழின் தொடர்ச்சி)

ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, "இந்தப் பத்தாயிரத்தை புருஷோத்தமச் செட்டியாரிடம் கொடுத்துவிட்டு சரக்கு அனுப்பச் சொன்னேன் என்று சொல்லி வா" என்றார்.

எண்ணிப் பார்த்து 500ரூபாய் அதிகமாக இருக்கிறது என்றும் மீண்டும் சரியாக எண்ணிப் பார்த்துக் கொடுக்கும்படியும் சொன்னான்.

‘"நோட்டை எண்ணாமல் கட்டின் கனத்தைப் பார்த்தே எவ்வளவு தொகை என்று சொல்பவன் நான். என் கணக்குத் தவறாது. எண்ண வேண்டாம், கொண்டுபோய்க் கொடு போ"என்றார்.

என்ன இது எனக்குக் கணக்குச் சரியாத் தெரியலையா? மீண்டும் எண்ணிப் பார்த்து 500ரூபாய் அதிகமிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அதை நாயுடுவுக்கு நிரூபிக்க எண்ணினான்.

புருஷோத்தமச் செட்டியார் கடைக்குச் சென்று, செட்டியாரிடம் பணத்தைக் கொடுத்து, "இதில் எம்மாந்தொகை இருக்குதுன்னு எண்ணிப் பார்த்து ஒரு சீட்டில் குறித்து வரச் சொன்னார். அந்தத் தொகைக்குச் சரக்கு அனுப்பி வைக்கச் சொன்னார் நாயுடு" என்று கூறினான்.

"எண்ணிக் கொடுக்கவில்லையா?" என்றார் செட்டியார். "நான் படிப்பறிவில்லாதவன். என்மீதுள்ள நம்பிக்கையில் என்னிடம் கொடுத்துவிட்டார். பத்திரமா வந்து சேர்ந்ததுதான்னு தெரிஞ்சுக்க எழுதி வாங்கிவரச் சொன்னாருங்க' என்று கூறினான்.

செட்டியார் எண்ணிப் பார்த்துவிட்டு ரூ. 10,500 என்று ஒருசீட்டில் குறித்து "இதை நாயுடுவிடம் கொடுத்துவிடு" என்றார். சீட்டைப் பெற்ற கபாலிக்குத் தன் கணக்குச் சரி என்றது மகிழ்ச்சியாயிருந்தது.

சிறிது நேரம் கழித்து நாயுடு செட்டியாருக்கு phone செய்து கபாலி வந்தானா? பணம் வந்ததா? என்று விசாரித்தார்.

கபாலி வந்து பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் கொடுத்ததையும் அதை ஒரு சீட்டில் எழுதி வாங்கிச் சென்றதையும் செட்டியார் சொன்னார்.

கபாலி நல்லவன் என்பதோடு கெட்டிக்காரன் என்பதும் தெரிய வந்தது.

திரும்பி வந்த கபாலியிடம் நாயுடு, "என்ன கபாலி செட்டியாரிடம் பணத்தைக் கொடுத்தாயா? சரக்கு அனுப்புவதாகச் சொன்னாரா" என்று விசாரித்தார்.

"நா சொன்னத நீங்க நம்புல. இந்தாங்க அவுரையே எண்ணிப்பாத்து எழுதித் தரச்சொல்லி வாங்கிவந்தேன்" என்றான். "நல்லது கபாலி நா தவறினாலும் நீ கவனமா இருந்தாச் சரி" என்று பாராட்டினார்.

அன்று சுந்தரம் இவனைத் தன்னிருப்பிடத்திற்கு நண்பன் என்ற முறையில் அழைத்திருந்தான். அன்று கடை விடுமுறை. அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படத் தயாராயிருந்தான். சுந்தரமே வந்து அழைத்துப்போனான். சுந்தரம் சில வேலைகளுக்காக ஒரு பஸ் இறங்கி வேலைகளை முடித்து அடுத்த பஸ் ஏறினார்கள். புறப்படும்போது ஒரு பெண் ஓடி வந்து ஏறினாள் ஏதோ அலுவலகம் முடிந்து வரும் பெண்போலும். தோளில் மாட்டியிருந்த பை வேகமாக நழுவ கைப்பிடி பற்றியிருந்த கம்பியை நழுவவிட நிலைகுலைந்து விழவிருந்தவளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கபாலி சரேலெனச் சென்று விழாமல் பிடித்துக் காப்பாற்றினான். நழுவிய பையையும் பற்றி அவளிடம் கொடுத்துக் கலங்கிப்போன அவளுக்குத் தைரியம் சொல்லும் விதத்தில், "பரவாயில்லை, பயப்படாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. கொஞ்சம் பார்த்து ஏறியிருக்கவேண்டும். சுந்தரம், சுந்தரம் நீ எழுந்து வா, நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்று எவ்வித விகார உணர்வுகளுக்கும் இடமின்றி, முன்னால் சென்றுவிட்டான்.

அவன் செயலும், பேச்சும் அவளை நன்றியால் நனையச் செய்தன. பட்டணத்தில் ஓடும் பஸ்ஸில் ஏறுவது, விழுவது, ஆண்கள் பெண்களைச் சீண்டுவது யாவும் சகஜம். ஒவ்வொரு கூரியவுணர்வுள்ள பெண்களும் நாள்தோறும் மனம் நொந்து போவதும் இதனால்தான். ஆனால் இன்று கபாலியின் செயலில் அப்படிப்பட்ட குறைபாடுகள் ஏதுமில்லை. இயல்பாய் ஒரு நல்ல மனிதன் செய்யக்கூடியதைச் செய்தான். அவன் பார்வையில் கள்ளமில்லை.

"இவரு பெரிய ஹீரோ!" என்று பஸ்ஸில் ஒருவன் அநாகரிகமாகக் கிண்டல் செய்தான். பழய கபாலி மடிந்து விட்டான். இவன் புதியவன். பழய கபாலியாக இருந்திருந்தால் அங்கேயே அவனை அடித்து நொறுக்கியிருப்பான். யார் என்ன சொன்னால் எனக்கென்ன என்னால் இயன்றதைச் செய்தேன் என்று திரும்பிப்பாராமல் அன்னையை மனத்தில் நினைத்தான். அந்த மாறிய சுபாவத்தில் அன்னை செயல்படத் தொடங்கினார்.

இறங்கவேண்டிய இடம் வந்ததும் கபாலியும், சுந்தரமும் இறங்கி நடந்தனர். "கபாலி, காலம் எவ்வளவு பொல்லாதது பார்த்தாயா? நீ எதிர்பாராமல் நடக்க இருந்த விபத்தைத் தைரியமாய்த் தடுத்தாய். வண்டியில் அத்தனை ஆண்களும் வேடிக்கை பார்த்தனர். இதில் கிண்டல் வேறு" என்று சினந்து கூறினான் சுந்தரம்.

"இளைஞன் என்றால் தவறு செய்வான் என்று பொதுவாக எண்ணும்படியிருக்கிறது. பஸ்ஸில் பொழுதுபோகாமல் எத்தனை பேர் வருவார்கள். இதெல்லாம் எனக்குப் புதிதில்லை. விடு, நான் சுத்தமானவன் என்பது என் நெஞ்சுக்குத் தெரியும்" என்றான்.

இவர்கள் பின்னாலேயே அந்தப் பெண்ணும் வந்து கொண்டிருக்கிறாள்.

"என்னங்க" என்றழைத்தாள். இருவரும் திரும்பினர். அவள் இந்த ஸ்டாப்பில்தான் இறங்கியிருக்கிறாள். இவர்களைத் தொடர்ந்தும் வந்திருக்கிறாள்.

"உங்களுக்குத் தாங்ஸ் சொல்லக்கூடத் தோன்றவில்லை. இன்று ஆபீஸில் ஓவர்டைம். வேலையும் சற்றுக் கடுமை. அதனால் களைப்பாகக் குழம்பிப்போயிருந்தேன். மற்றபடி ஓடிவந்து ஏறுவது எனக்குப் பழக்கம்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனையோ ஆண்கள் பெண்களை ரசிப்பதைக் கண்டு மனம் வெறுத்திருக்கிறேன். உங்களுடைய பண்பு என்னை மிகவும் நன்றியுடையவளாக்குகிறது. உங்களை என் பெற்றோர்க்கு அறிமுகப்படுத்த வேண்டும். பக்கத்தில்தான் வீடு" என்றழைத்தாள். "சாதாரணச் செயலை பெரிதாக நினைப்பது உங்கள் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது. இப்போது நாங்கள் அவசரமாகப் போவதால் பிறகு ஒரு நாள் பார்ப்போம்" என்று கைகூப்பி விடைபெற்றான்.

கபாலி முதன் முதலாக ஒரு இளம் பெண்ணின் உள்ளத்தில் அவனேயறியாமல் உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறான். இவன் பொருட்டு நீலா அன்னைமீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை - மலையை நகர்த்தும் நம்பிக்கை மூலம் - அன்னை செயல்பட்டார். சுந்தரம் என்ற நல்ல நண்பன் வாயிலாக அவன் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பத்தைத் தந்து கபாலியின் நல்ல மனத்தை அன்னை வெளிப்படுத்தினார்.

நாட்கள் சென்றன. நாயுடு நல்ல சம்பளம் கொடுக்கத் தொடங்கினார். குறைபாடுகள் நேராமல் கடையைப் பாதுகாக்க வியாபாரம் பெருக வழிவகைகள் அனுபவத்தில் பழகிக் கொண்டான். நேர்மையாலும் உழைப்பாலும் - அன்னைக்கு உவப்பான குணங்களால் - நாயுடுவின் பெருமதிப்பிற்குப் பாத்திரமானான். சுந்தரத்தின் நட்பால் கணக்கு வழக்கெல்லாம் பயின்றான். நாயுடுவுக்குக் கபாலியைக் காணப் பெருமையாயிருந்தது. ஆண் வாரிசில்லாத தனக்கு இத்தனைப் பொறுப்புடனும் நல்லவுள்ளத்துடனும் ஒரு பிள்ளை கிடைத்தது பெரும் பலமாகவிருந்தது.

"என்ன அண்ணே! பெண்பார்க்க வேண்டியதுதானா? மாப்ளகணக்காயில்ல இருக்க" என்றாள் நீலா. கபாலி சிரித்துக் கொண்டான்.

"நீலா என் அக்கா மக என்னை ஏத்துக்கும்னு நீ நம்புறயா?" என்றான்.

"நிச்சயமா நம்புறேன். நீ பழய கபாலியண்ணனாய் இல்லாம இவ்வளவு மாறினபிறகு அதற்குரிய பரிசை அன்னை தராமலிருக்க மாட்டார்" என்றாள். எனக்குப் படிப்பில்லையே தங்கச்சி" என்றான் கபாலி. இதை நம்புறத்துக்கு பதிலா நீ அன்னையை நம்பினா அந்த நம்பிக்கையே உனக்கு உன் அக்கா மகளைத் தரும் என்றாள் உறுதியாக. "எப்படி இத்தனை உறுதியாகச் சொல்லுற?"

அன்னைமீது வைத்த நம்பிக்கையை நான் நம்புகிறேன். அதனால சொல்லுறேன். நமக்குத்தான் படிச்சவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை என்ற வித்யாசமெல்லாம். அன்னையின் அருள் எல்லாவற்றையும் விடப் பெரியது. எதையும் செய்யக்கூடியது என்றாள்.

"என்னமோ நீலா, நீ சொல்றாப்பலதான் நானும் நெனக்கிறேன். அந்த அன்னையோட எடத்துக்குப் போன பிறகு நான் ரொம்பவும் மாறிட்டேன். அதுக்கேத்தாப்போல நாயுடு என்ன ரொம்ப நல்லா நடத்துராரு" என்று பரவசப்பட்டான்.

"இன்னும் போகப்போகப் பாரு அன்னையோட சக்தியை" என்றாள் நீலா.

கபாலி இவ்வளவு மாறிய பிறகு அவன் மல்லிகாவை இழக்கக் கூடாதே என்று அஞ்சலைக்கு ஆசை.

அந்த ஆசையெல்லாம் தம்பி மனசில வளக்காதன்னு சுமதி சொன்ன வார்த்தை தடுத்தது. எதற்கும் ஒருமுறை கபாலியுடன் போய்வர ஆசைப்பட்டாள்.

"கபாலி, நீயுந்தான் நல்லாச் சம்பாரிக்கற. ஒங்கக்காவுக்கு ஒங்கப்பா செய்யாத மரியாதைய நீ செய்தா என் மனக்கொறை தீந்திடும். ஒரு நடை போய்ப் பார்த்து வருவம் வா" என்றாள்.

பூவும், பழமுமாக அக்காவிற்கு, அத்தானுக்கு சேலை வேட்டியுடன் அம்மாவோடு கிளம்பினான். தான் முன்பு சென்றுவந்த விபரம் சொல்லாமல் யார்மூலமோ அறிந்ததாகச் சொல்லிப் புறப்பட்டாள் அஞ்சலை.

"அட! இந்தப் பக்கம்தான் என் நண்பன் சுந்தரத்தின் வீடும் இருக்கிறது" என்றான் கபாலி.

"நீ முன்னால இந்தப் பக்கம் வந்திருக்கியா?" என்றாள் அஞ்சலை.

"ஒரே ஒரு தரம் சுந்தரத்தின் வீட்டிற்கு வந்தேனே இந்த வழிதான்" என்றான் கபாலி.

பஸ்ஸை விட்டிறங்கி இரண்டு தெருக்கள் கடந்து அடையாளமாய் வீட்டைக் கண்டுபிடித்தாள் அஞ்சலை. கபாலிக்கு மிகவும் கூச்சமாயிருந்தது. அத்தான் தன்னை எப்படி மதிப்பாரோ? பழகுவாரோ. அக்கா மக மெத்தப் படிச்ச புள்ள. நம்ம மதிக்குமா என்ற அச்சம். உடனே நீலா சொன்னதை நெனச்சுச் சட்டைப் பையில் இருக்கும் அன்னை படத்தைத் தொட்டுப் பார்த்து மனதிலும் எண்ணத் தொடங்கினான். "எந்த வேண்டாத எண்ணம் வந்தாலும் உடனே அதை அழிச்சு அந்த இடத்தில அன்னைய நெனச்சுக்க, மந்திரம் போட்டமாதிரி நடக்கும்" என்ற நீலாவின் சொல் பலித்தது.

முதலில் அத்தான்தான் வந்தார். "அடட வாங்க அத்தை, கபாலித் தம்பியா" என்று கேட்டு, "வாங்க மச்சான்" என்று அன்பு பொங்க வரவேற்றார். கூச்சமும், அச்சமும் விலகி இயல்பு நிலை ஏற்பட்டது."சுமதி, இங்க வா. யார் வந்திருக்காங்க பாரு" என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தார்.

உள்ளேயிருந்து வந்த சுமதி, "வாம்மா, வா கபாலி" என்று அழைத்தாள். தம்பியைக் கண்டதும் பாசமும், பரிவும் எழுகிறது. கூச்சத்துடன் பேசாதிருக்கும் தம்பியைப் பார்க்கிறாள். வெள்ளைவெளேர் என்று தழைய வேட்டி, முழுக் கைச்சட்டை, அழகாக வாரிவிடப்பட்ட அலையலையான கிராப் தலை. கம்பீரத்துடன் கலந்த அடக்கம். பிரமிப்பாக இருந்தது. இவன் ரௌடியாக அலைவதாக அல்லவா இராஜேசுவரி அக்கா சொல்லிச்சு.

உடனே அஞ்சலைக்கு ஒரு நம்பிக்கை. தன் தம்பியை நேரில் கண்டதும் பாசம் காரணமாகத் தன் பெண்ணை அவனுக்குத் தருவாள் என்ற எண்ணம் எழுந்தது. மனித மனத்தின் இயல்பு இது. நடக்காது என்றபோது கடவுள் அருளை நம்பி அழைப்பார்கள். அருள் செயல்பட்டு நன்மை வரும்போது தன்னால்தான் நன்மை கிடைத்தது என்று நம்புவார்கள். அன்னையால் கபாலி மனம் மாறினான். அவன் மாறிய இடத்தில் அன்னை சக்தி செயல்பட்டு அபரிமிதத்தைத் தரும்போது மனித அகங்காரம் அதை அழிக்கத் தலைப்படுவதை மெய்ப்பிக்கத் தம்பியின் மீதுள்ள பாசத்தாலும், தம்பியின் தோற்றப் பொலிவாலும் பெண் தருவாள் என்றெண்ணினாள். அருளை விலக்கினாள். பாசம் இருந்தாலும் படிப்பில்லாத தம்பிக்கு மகளைக் கட்டிவைக்கச் சுமதிக்கு விருப்பமில்லை. அதே நேரம் படிப்பும், பணமும்தான் பெரிசா? குணத்தால உயர்ந்தவங்க இல்லையா என்ற நீலாவின் ஆறுதல் மொழிகளைக் கபாலி நினைத்துக் கொண்டான். மல்லிகா வந்தால் பார்த்துவிட்டுப் போகலாமே என்ற ஆவல். சொல்வதறியாது தவித்தான்.

எப்படியும் மாலைக்குள் மல்லிகா வருவதற்குமுன் இவர்கள் போய்விடுவார்கள் என்று எண்ணி சமாதானம் அடைந்தாள் சுமதி. அஞ்சலைக்கோ இரண்டுங்கெட்ட நிலை. மல்லிகாவைப் பார்த்து இவன் அன்புகொண்டு, அவள் மறுத்துவிட்டால் இப்போதுதான் திருந்தி நல்ல நிலையில் உள்ள கபாலி ஏமாற்றம் தாங்காமல் பழைய நிலைக்குப் போய்விடக்கூடும் என்று அச்சம். இன்றைக்கு இது போதும் என்றெண்ணினாள். மாப்பிள்ளை கபாலியை விசாரித்துக் கொண்டிருந்தார். சுமதி பலகாரம் கொடுத்தாள். சிறிது நேரத்தில் புறப்பட்டனர். மல்லிகா வந்துவிடட்டும் என்று ஒரு வார்த்தை கூடச் சுமதியோ, மாப்பிள்ளையோ சொல்லவில்லை. புறப்பட்டனர். கபாலிக்கு மல்லிகாவைப் பார்க்கவில்லை என்ற குறை. கேட்டது கிடைக்கும். கிடைக்கவில்லையென்றால் அன்னை நமக்கு நல்லதைத்தான் செய்வார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்னை நமக்கு நல்லதைத்தான் செய்வார். நாம் வேண்டுவது நமக்கு நல்லதா என்று நமக்குத் தெரியாது என்ற நீலாவின் பேச்சை நினைத்து மனக்குறையை மறுத்துவிட்டான்.

தெருக்கோடி திரும்பி அடுத்த தெருவில் சென்றதும் அன்றொரு நாள் பஸ்ஸில் இவன் காப்பாற்றிய பெண் எதிரே வந்து கொண்டிருக்கிறாள். இவனுக்குப் பின்னே சற்றுத் தள்ளி ஏதோ சிந்தனையுடன் அஞ்சலை வந்து கொண்டிருக்கிறாள். இவனைப் பார்த்தவுடன் அந்தப் பெண் ஏகமாக மலர்கிறாள். "நீங்களா? இந்தப் பக்கம் எங்கே? இவ்வளவு தொலைவு வந்துவிட்டு என் கடனைத் திரும்பப் பெறாமல் போகிறீர்கள்" என்கிறாள். "இங்கு ஒரு உறவினர் வீட்டிற்கு" என்று கபாலி முடிக்குமுன் பின்னால் வரும் அஞ்சலையைப் பார்த்து "பாட்டி நீங்களா" என்றாள் வியப்பும் மகிழ்வுமாக.

"மல்லிகா, நீ வர நேரமாகும்னு ஒங்கம்மா சொல்லிச்சு. அதான் பொறப்பட்டோம். இன்னொரு நாள் வர்ரோம். நீ கவனமாப் போ கண்ணு" என்றாள் பாசத்துடன்.

"கண்டிப்பா வாங்க பாட்டி. அவங்களையும் அழைச்சுட்டு வாங்க" என்றாள் கபாலியைப் பார்த்து. "ஆகட்டும் கண்ணு. நீ போ" என்றனுப்பி வைத்தாள். "இவள்தான் மல்லிகாவா? இவள்மீதா நான் ஆசைப்பட்டேன்? இத்தனை அழகும், பண்பும், அறிவும், படிப்பும் உள்ள பெண்ணை நான் ஆசைப்பட்டது தவறு. அவள் தகுதிக்கு ஏற்ப அவளுக்கு மாப்பிள்ளை அமைய வேண்டும்" என்று தன் மனத்தை மாற்றிக் கொண்டான் கபாலி. இந்த அவனுடைய பெருமிதமான எண்ணமே அன்னையின் அருள் செயல்படத் துணையாயிற்று.

மறுநாளே சுமதியும், மாப்பிள்ளையும் பூவும், பழமும், மஞ்சள் குங்குமமும் எடுத்துக்கொண்டு கலகலப்பாக வந்தனர். அஞ்சலைக்கு நம்ப முடியவில்லை. வாய்நிறைய வாங்க வாங்க என்றழைத்தாள்.

மாப்பிள்ளைதான் பேசினார். ‘"எங்க பெண்ணுக்கு கபாலியை மாப்பிள்ளையா சம்பந்தம் பேச வந்தோம்", என்று வெற்றிலைப் பாக்குடன் தட்டை நீட்டினார். அஞ்சலையின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுப் பேச எண்ணினாள். "எம்புள்ளைக்கு பெரிய படிப்பும், உத்யோகமுமில்ல. நல்லாச் சம்பாரிச்சு நாணயமாத்தான் வாழுறான். நாளைக்குத் தம்பிக்குப் படிப்பில்லைங்ற கொற உங்க மனசுல வந்துட்டா அவன் வாழ்வு என்னாகும்?" என்றாள் அஞ்சலை.

"பயப்படாதேயம்மா. நானும் மொதல்ல படிப்பில்லாதவனைக் கட்டிக்கிட மாட்டான்னுதான் தம்பி ஏதாவது நெனச்சு ஏமாந்து போகக்கூடாதுன்னு அவன் மல்லிகாவைப் பாக்கறதத் தடுத்தேன். ஆனா என் மக என்னைப்போலவே பிடிவாதக்காரி. கபாலிதான் ஒரு சமயம் அவளை ஆபத்துல காப்பாத்துச்சாம். அவங்க ரெண்டு பேருக்குமே அப்ப சொந்தம்னு தெரியாது. எம் பொண்ணு என்ன சொல்லுறா தெரியுமா? பெரிய படிப்புப் படிச்சு பேண்ட்டும் ஷர்ட்டும் போட்டு உத்யோகத்தால தன்னை மூடிக்கிட்டு பேப்பர் கொடுக்கும்போது திருட்டுத்தனமா கையைத் தீண்டுற ஆம்பிளைகளைப் பார்த்து வெறுத்துப் போனவங்களுத்குத்தான் மாமனைப் போல நல்ல மனசுக்காரங்க அருமை புரியும். எம் மனசுல நின்னவரு எம் மாமனாவே இருப்பார்னு நா நெனக்கவேயில்லம்மா. அவரைத்தான் நா கல்யாணம் கட்டிப்பேன்னு சொல்லிட்டா. கபாலிக்கு இஷ்டம்னா பேசி முடிச்சிடுவோம்" என்றாள்.

கடை முடித்து இரவு வந்த கபாலி தன் கல்யாண நிச்சயம் அறிந்ததும் நல்லதா சேலை ரவிக்கை வாங்கி வந்தான். "அதுக்குள்ள அக்கா மவளுக்குப் புடவையா?" என்று மகிழ்ந்து கேலி செய்தாள் அஞ்சலை. "இல்லம்மா குப்பையா கெடந்த எம்மனசுல அன்னையை வெச்சு அதைக் கோவிலா மாத்தின என் தங்கைக்கு" என்றான் கபாலி. நன்றியறிதல் அன்னைக்குப் பிடித்ததல்லவா. நீலா பக்திப் பரவசத்தால் கண் பனித்தாள்.  

                                      முற்றும்.

 



book | by Dr. Radut