Skip to Content

12. அன்பர் அனுபவம்

எனக்கு அடைக்கலம் அருளிய அன்பரசி

என் பெயர் ஸ்ரீலேகா. என் கணவர் பெயர் M. ராஜேந்திரன். என் தங்கையின் கணவர் மூலம் அன்னையிடம் அறிமுகமானோம். சென்னை தி.நகரில் மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி, பாண்டிச்சேரி மூலம் புதிதாக ஆரம்பித்துள்ள தியானமையத்தில் சர்வீஸ் செய்து கொண்டிருப்பவர். அவ்வகையில் அவருடன் அடிக்கடி பேசும்பொழுது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு பின்பு நாங்களும் பக்தராகி விட்டோம்.

நான் T.V., சினிமா, நாடக மேடை என்ற மூன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது போக சினிமாவில் பின்னணிக் குரலும் (dubbing voice) கொடுக்கிறேன். என் கணவரும் இதே துறையில்தான் பணியாற்றுகிறார். நாடகங்களில் நடிப்பதற்காக புதுவைக்கு பல தடவை சென்றிருக்கிறேன். என்றாலும், ஆசிரமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருந்தேன். என் தங்கையின் கணவர்தான் இவ்வருடம் பிப்ரவரி 21-ஆம் தேதி அன்னையின் பிறந்த நாள் தரிசனத்திற்கு எங்களை வரச் சொல்லி அழைத்துபோனார். அந்நாளே எங்கள் திருமணநாளாகவும் அமைந்து விட்டதால் மிகவும் சந்தோஷப்பட்டுச் சென்றோம். அதுதான் எங்கள் முதல் வருகை என்றாலும் சமாதி, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் வசித்த அறைகள் என்றிவற்றை எல்லாம் பார்த்தபிறகு மிகவும் பரவசமடைந்து ஒரு புதிய உலகத்திற்கே வந்துவிட்டதைப் போலுணர்ந்தோம். அந்நாளை நாங்கள் புதுப்பிறவி எடுத்த நாளாகக் கூடச் சொல்லலாம். அன்று மதியமே மதர் சர்வீஸ் சொஸைட்டிக்கும் சென்றோம். அன்று மாலையே சென்னை திரும்பினோம் என்றாலும் எங்கள் மனதைப் பாண்டியிலேயே விட்டுவிட்டுச் சென்றோம்.

17.3.95 தி.நகரில் தியானமையம் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. அதை ஒட்டி நடந்த தியானத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அன்றிலிருந்து எங்கள் பக்தி மேலும் அதிகமாகி மற்ற தெய்வங்களை எல்லாம் மறந்து அன்னை ஸ்ரீ அரவிந்தர் இருவர் மட்டுமே எங்கள் தெய்வம் என்று சொல்லுமளவிற்கு மாறிவிட்டோம். எங்கள் வீடு சிறியதானதால் தனி பூஜையறை என்று ஒதுக்க முடியவில்லை. படுக்கை அறையிலேயே பாதி இடத்தை ஸ்கிரின் (screen) போட்டுப் பிரித்து, மற்ற தெய்வங்களின் படங்களை எல்லாம் அகற்றிவிட்டு புதிதாக 20" X 24" சைஸில் அன்னை ஸ்ரீ அரவிந்தரின் முழுவுருவ போட்டோக்களை வாங்கி வைத்து வழிபட்டு வருகிறோம். எங்கள் வீட்டிற்குப் போட்டோக்களை கொண்டு வரும் முன் மதர் சர்வீஸ் சொஸைட்டியிலுள்ள பூஜை அறையில் ஒரு வாரம் வைத்திருக்கும் அனுமதியும் பெற்றோம். அப்படி வைக்கப்பட்டு வந்த போட்டோக்கள் என்பதால் அவற்றை மிகவும் விசேஷமாக நினைத்து தினசரி துடைத்துப், புஷ்பாஞ்சலி செய்து போற்றி வருகிறோம்.

என் கணவர் தினசரி தி.நகர் தியானமையத்திற்குப் போக ஆரம்பித்து விட்டார். நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் போய்க் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடக்கும் அரைமணி நேர தியானத்தில் தவறாமல் கலந்து கொள்கிறோம். அங்கு சர்வீஸ் செய்யும் அன்பர்கள் அனைவரிடமும் அறிமுகமாகி விட்டோம். எல்லோரும் அன்பாக எங்களுடன் பழகுகிறார்கள்.

நாங்கள் அன்னையிடம் வந்த பிறகு எங்கள் குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் அன்னையின் அருள் செயல்படத் தொடங்கி விட்டதை உணர்ந்துவிட்டோம். அது சம்பந்தமாக நிகழ்ந்த ஆறு நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தித் தர விரும்புகின்றேன்.

1. முதன் முதலில் ஆசிரமத்திற்கு 21.2.95 அன்று வந்தபொழுது என் புதுச் செருப்பு திருட்டுப் போய்விட்டது. வெய்யில் அதிகமாக இருந்ததால் வேறொருவரின் செருப்பை நான் போட்டுக்கொண்டு வந்து வெளித் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு மற்றவர் வருகைக்காக காத்திருந்தேன். மற்ற அத்தனை பேர் செருப்பும் இருந்தது. என் செருப்பு மட்டும் காணாமல் போய்விட்டது. நான் போட்டுக் கொண்டு வந்த இன்னொருவரின் செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு மதர் பகவான் ரூமை தரிசிக்கச் சென்றேன். திரும்பி வந்து பார்க்கும்போது அந்த இன்னொரு செருப்பும் காணாமல் போய்விட்டது. மற்ற அத்தனை பேர் செருப்பும் இருந்தது. சரி மதர் இன்று என்னை வெறுங்காலில் நடக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். முட்டாள்தனமாக இன்னொருவர் செருப்பை நான் போட்டது எவ்வளவு பெரிய தவறு என்று நினைத்து மதரிடம் நான் மன்னிப்புக் கேட்டுப் பிரார்த்தனை செய்தேன். இது என் முதல் அனுபவம்.

2. May 17-ஆம் தேதி என் மகனுக்கு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தனர். என்னையும், என் கணவரையும் ஒரு டாக்குமெண்டரி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 17-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிவரை 5 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார்கள். 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆதலால் 22-ஆம் தேதி என்று மாற்றி வைத்துவிட்டார்கள். முதல் நாள் என் மகனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஆகையால் படப்பிடிப்பிற்கு என்னை அழைத்துச் செல்ல வரும் காரை 9.00 மணிக்கு அனுப்புங்கள் என்றேன். சரி என்று ஒத்துக்கொண்டார்கள். இரண்டாம் நாள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காலை 7.00 மணிக்கெல்லாம் வண்டி வரும் என்று சொல்லிவிட்டார்கள், எனக்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை. ஏனெனில் என் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரும் ரிக்ஷா 8.40க்குத்தான் வரும். என் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத்தான் நான் படப்பிடிப்பிற்கு கிளம்ப வேண்டும். என் கணவர் 6.30க்கெல்லாம் படப்பிடிப்பிற்குச் சென்று விடுவார். நான் மட்டும் 9மணிக்குத்தான் போக முடியும். டைரக்டர் என்னிடம் கோபித்துக்கொண்டார். "என்னம்மா, உன் கணவருக்கு ஒரு தடவையும், உங்களுக்கு ஒரு தடவையும் என்று 2 தடவைகள் அனுப்ப முடியுமா?" என்று கோபித்துக் கொண்டார். "எப்படி சார் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பாமல் வரமுடியும்" என்றேன். அவர் ஒத்துக் கொள்ளவில்லை. மனவருத்தத்துடன் இருந்தேன். திடீரென்று என் மனதில் ஒரு தைரியம். அன்னை இருக்கும்போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று நேராக ஸ்ரீ அன்னையிடம் சென்று என் நிலைமையை விளக்கிச் சொல்லி "அம்மா என்னைப் படப்பிடிப்பிற்காக அழைத்துச்செல்ல நாளை காலை 7.00 மணிக்கு வண்டி வரும் என்று டைரக்டர் சொல்லிவிட்டார். என் மகனைப் பள்ளிக்கு அனுப்பாமல் நான் படப்பிடிப்பிற்குப் போக முடியாது. ஆதலால் எனக்கு வரும் கார் 9 மணிக்கு வர நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்" என்று பிரார்த்தித்தேன். என்ன ஆச்சரியம்! 18ஆம் தேதி மட்டுமல்ல, அந்த படப்பிடிப்பு முடியும்வரை என்னை அழைத்துச் செல்ல வரும் வண்டி 9.30க்கு தான் வந்தது. 7.00 மணிக்கு ஒரு தடவை வரும், என் கணவரை அழைத்துச் செல்லும். டைரக்டரிடம் இருந்து ஒரு கோபமோ, திட்டோ எனக்குக் கிடைக்கவில்லை. எல்லாம் அன்னையின் அருள்தான்.

3. என் பையனுக்குப் பள்ளியில் ஒரு இந்தி புத்தகம் கொடுத்தார்கள். அவன் பள்ளியில் இந்தி 2nd lanugage. "ஷோபனா" என்ற அந்த புக்கில் அவன் பெயரைக்கூட நான் எழுதவில்லை. பள்ளிக்கு அந்த புக்கை எடுத்துச்சென்ற அவன் அதைத் தொலைத்துவிட்டான். அந்த புக் கிடைப்பது மிகவும் கஷ்டம். அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கணக்கெடுத்து ஆளுக்கு 1 புத்தகம்தான் கொடுத்தார்கள். தொலைந்த அந்த புக்கைப் பள்ளியில் தேடச் சொன்னேன். கிடைக்கவில்லை. H.M இடம் சொல்லிவிட்டு மாடியில் இருந்து இறங்கிவந்து கொண்டு இருந்தேன். மதரிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இறங்கினேன். உடனே ஒரு டீச்சர் வந்து "ஏங்க இந்தி புக் காணோம் என்று சொன்னீர்களே! உள்ளே ஒரு பீரோவில் ஒரு புக் இருக்கிறது. ஸ்கூல் ஆயா எடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் அதில் பேர் இல்லை. அந்த புக்கா என்று பாருங்கள்" என்றார்.

நான் போய்ப் பார்த்தேன். அதே புக்தான். தொலைந்து போய் 1 வாரம் ஆனபிறகு அந்த புக் கிடைத்தது. நிச்சயம் இது அன்னையின் அருள்தான். இதில் சந்தேகமே இல்லை.

4. 25-6-95 அன்று என் பிறந்த நாள். அன்று பாண்டிக்கு வந்து சமாதி தரிசனம் செய்தேன். அப்போது என் பின்கழுத்தில் பயங்கர வலி. கழுத்தை அப்படி இப்படி திருப்ப முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பகவான் ரூமில் நான் தியானம் செய்யும்பொழுது வலி தாங்க முடியவில்லை. தியானத்தில் பகவான் ரூமில் இருக்கும் பகவான் படத்தில் அவருடைய காலில் தலையை வைத்து அழுகிறேன். பகவான் அவருடைய இடது கையால் என் பின் கழுத்தைத் தடவி கொடுத்தார். தியானம் முடிந்து பார்த்தபொழுது என் பின் கழுத்தில் வலியே இல்லை. கழுத்தைத் திருப்பித், திருப்பிப் பார்க்கிறேன். வலியே இல்லை. இது நிச்சயம் ஸ்ரீ அன்னை, பகவான் அருள்தான். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஓர் அன்பரின் உதவியால் அன்று Playground meditation செய்யும் பாக்கியம் கிடைத்தது. எல்லாம் அன்னையின் அருள்தான்.

5. என் வீட்டில் இருக்கும் அன்னை மற்றும் பகவான் படத்தில் மதர் புடவை காற்றில் லேசாக ஆடுவதுப்போல் என் கண்ணுக்குத் தோன்றும். அன்னை அன்பர் பெரிய படங்கள் கொடுத்த நாள் 24.5.1995. என் கண்ணுக்கு இப்படி மதர் புடவை ஆடுவதைப்பற்றி அவர்களிடம் சொன்னேன். அவர் சந்தோஷப்பட்டார். என் கணவருக்கும், எனக்கும் சிறு மனத்தாங்கல் இருந்தது. அதையும் அன்பரிடம் சொன்னேன். அவர் மாம்பலம் தியானமையத்தில் எட்டு மணிநேர தியானம் செய்யச் சொன்னார். செய்தேன். அடுத்த வாரத்தில் இருந்து நல்ல பலன்கள் கிடைத்தன. இப்பொழுது நானும், என் கணவரும், என் குழந்தையும் சந்தோஷமாக இருக்கிறோம். எல்லாம் அன்னையின் அருள்தான்.

6. 30.7.95 அன்று என் மகனுக்குக் கடுமையான காய்ச்சல்.உடம்பு நெருப்பு மாதிரி இருந்தது. நெஞ்சுவலி என்று சொன்னான்.கடந்த நான்கு நாட்களாக இருந்த காய்ச்சல் 30-ஆம் தேதி அன்று அதிகமாகியது. ஆதலால் நான் தியான மையம் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே குழந்தை பக்கத்திலேயே இருந்தேன். தியான மையத்தில் 10 to 10.30 தியான நேரத்தில் நான் வீட்டிலேயே தியானம் செய்தேன். தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் மதரிடம், "மதர் நான் தியானம் செய்து முடிக்கும்வரையில் எனக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. என் குழந்தை பக்கத்தில் நீங்கள்தான் இருக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து தியானம் ஆரம்பித்தேன். தியானம் முடித்து பார்க்கும்போது என் குழந்தை பக்கத்தில் மதர் வெள்ளை ஆடை அணிந்து தலையில் பகவான் சிம்பல் பதிந்த டர்பன் கட்டிக் காலில் சாக்ஸ் அணிந்து காலை நீட்டித் தரையில் அமர்ந்து என் மகனைத் தடவிக்கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். 10 மணிவரை நெருப்பாக கொதித்துக்கொண்டிருந்த என் மகனின் உடம்பு 10.30க்கு ஐஸ் மாதிரி குளிர்ந்துவிட்டது. என் மகன் ஓடி, ஆடி விளையாட ஆரம்பித்து விட்டான். உடனே மதருக்கு நன்றி சொன்னேன். இந்த அனுபவத்தால் என் உடம்பு சிலிர்த்துவிட்டது. இதை நானும் என் கணவரும் தனித்தனியாக அன்னை அன்பரிடம் சொன்னோம். எல்லோரும் சந்தோஷப்பட்டனர்.

7. வால்ட் டிஸ்னி (walt disney) கார்ட்டூன் சீரியல் ஒன்று இன்னும் சில மாதங்களில் T.V.-இல் வெளிவர இருக்கிறது. அதற்கான வாய்ஸ் டெஸ்ட் (voice test) சமீபத்தில் ஒரு ஸ்டுடியோவில் நடந்தது. அது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்பதால் நானும் அந்த தேர்விற்குச் சென்றேன். அங்கு போவதற்கு முன்பு மாம்பலம் தியான மையம் வந்து அன்னை, பகவான் இருவரையும் மனதார வணங்கி காரியபூர்த்திப் பழத்தை (மனோரஞ்சித பழம்) எடுத்து கொண்டு சென்றேன். அங்கு வந்திருந்தவர்களின் பட்டியலில் என் பெயர்தான் முதலில் இருந்தது. என் குரலை முறைப்படி test-உம் செய்தார்கள். மற்றவர்கள் test-உம் நடந்து முடிந்தது. இறுதியில், என் வாய்ஸைத்தான் தேர்வு செய்வார்கள் என்று அந்தக் கமிட்டியில் இருந்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள். இப்படி அவர்கள் எல்லோரும் ஏகமனதாகச் சொன்னது என் மனதிற்கு மிகவும் தெம்பாக இருந்தது. Walt Disney கம்பெனி கடைசியில் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெரிய இன்னும் 6 மாதங்களாகும். இருந்தாலும் சென்னை செலக்ஷன் கமிட்டி ஏகமனதாக என்னையே அக்கம்பெனி தேர்வு செய்யும் என்று சொன்னதையே நான் அன்னையின் அருளால் எனக்குக் கிடைத்த பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.

நானும், என் தங்கையும், என் கணவர், மற்றும் தங்கையின் கணவர் என்றிந்த நாலுபேரும் எங்களை ஆதரிப்பதற்கு யாரும் கிடையாது, எங்களுக்கு நாங்களே துணை என்று தவித்துக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. ஆனால் அன்னையிடம் வந்துவிட்ட பிறகு இந்தத் தனிமை உணர்வு போய்விட்டது. அன்னையின் அரவணைப்பும், ஆசிகளும், இப்பொழுது எங்களோடு பழகுகின்ற அன்பர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு என்றுமே உண்டென்ற நம்பிக்கை வந்துவிட்டது. அன்னையிடம் என்று வந்தோமோ, அன்றே நாங்கள் மலர்ந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கையில் வந்துள்ள மலர்ச்சி நிரந்தரமானது என்று உறுதியாக நம்புகிறோம்.

- ஸ்ரீலேகா

********



book | by Dr. Radut