Skip to Content

07.அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்

அன்பர் - நான் செய்யும் தொழில் நல்ல வருமானம் தரக்கூடியது. இதுவரை 8 ஆண்டுகளாகத் தொழில் நன்றாக நடந்தாலும், ஓஹோ என்று விரிவடையவில்லை.அட்வான்ஸ் என எனக்கு Rs.10,000 வரை வந்துள்ளது. பெருந்தொகைகள் என் வழி வந்தன. எதுவும் கைக்கு வரவில்லை. ஒருமுறை பெருந்தொகை வந்தது. கொஞ்ச நாள் கழித்து அதைத் திரும்பத் தரவேண்டிய நிலை வந்ததே தவிர அது பலிக்கவில்லை.

இந்த எட்டு வருஷமாக நான் என் பழைய பழக்கங்களை விட்டு அன்னைக்குரிய சட்டங்களை ஏற்றுச் செயல்பட்டு வருகிறேன். அன்னை ஒருமுறைகூடத் தவறியதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயம் உங்களைக் கேட்க விரும்புகிறேன்.

 • என் பழக்கம், நான் விஷயம் முடியும்வரை எதையும் எவரிடமும் கூறமாட்டேன். அது தவறாது பலிக்கும்.
 • சம்பந்தப்பட்டவர் ஒருவர் விஷயங்களை வெளியில் சொல்வதுண்டு. அப்பொழுதும் கெட்டுப் போவதில்லை. பல சமயம் கெட்டுப் போகிறது. வெளியில் சொல்லாத சமயம் ஒரு முறையும் கெட்டுப் போனதில்லை.

நண்பர் - வெளியில் சொல்லாததால் கூடிவந்தது என்பது சரி.

வெளியில் சொல்லாததால் மட்டும் கூடிவரும் என்று கூறமுடியாது.

வெளியில் சொல்லாத விஷயம் ஏதாவது கெட்டுப் போயிருக்கிறதா என்று யோசனை செய்து பாருங்கள்.

அன்பர் - வெளியில் சொல்லாத விஷயம் கெட்டுப் போயிருக்கிறது என்பதைவிட, கூடிவராமல் போயிருக்கிறது. அதற்கு வேறு காரணங்கள் உள்ளன. வெளியில் சொன்னால் தவறாமல் கெட்டுப் போகிறது.

நண்பர் - முடிவாகக் கூறியது உங்கள் அபிப்பிராயம். எனக்குத் தெரிந்து நீங்கள் வெளியில் கூறியபின் கூடிவந்த காரியம் உண்டு. என் அனுபவமும் அதுவே. வெளியில் சொன்னால் கூடிவாராது என்பதை மறுக்க முடியாது. ஆனால் எந்தக் காரியமும் வெளியில் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. இனி சோதனை செய்வதைவிட நடந்த காரியங்களை யோசித்துப் பார்த்தால் என் அனுபவம்,

 1. வெளியில் சொல்வதால் காரியம் வளர்ந்து நாள் தள்ளிக் கூடிவந்தது.
 2. சொல்வதால் மட்டுமே கெட்டுப் போனவை.
 3. சொல்லியபின் மின்னல் வேகத்தில் இருமடங்காக நடந்தது.
 4. முழு இரகஸ்யம் முழு வெற்றி கொடுத்தது.
 5. முழு இரகஸ்யம் மயிரிழைகூட காரியம் கூடிவரப் பயன்படவில்லை.

இவற்றுள் சட்டங்கள் எவை? அன்னைக்குரியவை எந்த சட்டங்கள், இனி எப்படி நடக்கவேண்டும், இரகஸ்யத்தின் இரகஸ்யம் எது? சட்டங்களை ஆராயுமுன் சில அனுபவங்களை ஆராய்வோம்.

 1. எல்லோரும் பொறாமைப்படக்கூடிய காரியத்தை, பொறாமைக்கேயுரியவர் முன்வந்து செய்து கொடுக்க அன்பர் முனைந்து காரியம் 15 மடங்கு பெருகி ஓரிரு மாதத்தில் முடிய வேண்டியது ஓரிரு வருஷத்தில் முடிந்தது. இது வெளிப்படையாக முதலிலிருந்து பேசப்பட்ட காரியம்.
 2. தன் நிலைக்கு மீறிய செல்வம் - சுமார் 15 மடங்கு பெரிய வருமானம் - பெற முயன்றபொழுது அதை இரகஸ்யமாக வைக்க முடியாது என்றாலும் வெளிப்படையாகப் பேசாதபொழுது காரியம் 1 வருஷம் இழுபறியாக இருந்து எதிர்பார்த்ததில் 1¼ மடங்கு அளவில் விலை 40% கூடிவந்து தொடர்ந்த வெற்றியைக் கொடுத்து 5 ஆண்டுகள் முடிவில் வரவேண்டிய பெரிய வெற்றி வராமற் போய்விட்டது.
 3. சொத்தின் மதிப்பைப்போல் 9 மடங்கு - ஒரு வகையில் 20 மடங்கு - முதல் தேடி வந்தது, வெளியில் சொன்ன ஒரே காரணத்தால் எதிரியால் ரத்து செய்யப்பட்டது. பொய்யான கோள் ரத்து செய்தது.
 4. "இரகஸ்யமாக விளம்பரம் செய்" என்பதுபோல அரசியல் உலகில் சேவை செய்வதை உள்ளூரில் எவரும் அறியாமல் செய்தபொழுது உலக அரங்கில் பெருவெற்றி, முழு வெற்றியாயிற்று. வேலை 5 ஆண்டுகள் நடந்தது.

நான் கூறியவற்றைப் பிறகு ஆராய்வோம். உங்கள் பிரச்சினையைக் கருதுவோம்.

அன்பர் - இதுவரை நான் பெற்ற அட்வான்ஸ்போல் 50 மடங்கு அட்வான்ஸ் கொடுக்க ஒருவர் முன்வந்தார். நான் வெளியில் இதைக் கூறவில்லை. அவர் கூறிய தேதிப்படி அட்வான்ஸ் கொடுக்கமுடியவில்லை.

நண்பர் - உங்களுக்கு இந்த அட்வான்ஸ் வந்து காரியம் முடிவது முக்கியமா அல்லது இரகஸ்யத்தின் தத்துவம் புரிய வேண்டுமா?

அன்பர் - தொழில் முக்கியம். அத்துடன் எனக்கு அன்னை சட்டத்தை அறிந்து பின்பற்றுவது முக்கியம்.

நண்பர் - அன்னை சட்டத்தைப் பின்பற்றி இந்தக் காரியத்தை முடித்து - அட்வான்ஸ் பெற்று - பிறகு இரண்டையும் ஆராய்ச்சி செய்வோம்.

அன்பர் - செயலாலோ, சொல்லாலோ, மனத்தாலோ, எதைச் செய்யச் சொன்னாலும், நான் உளமாரச் செய்கிறேன்.

நண்பர் - இப்படிக் கூறமுடியாது. தரைக்குமேல் 1 அடியில் நடக்கச் சொன்னால் நடக்க முடியுமா? அதுபோல் வேலைக்குத் தேவையான பல நிலைகளிருப்பதால் நான் அவற்றை விளக்கமாகக் கூறுகிறேன். உங்கள் தொழிலில் வரும் பெருந்தொகை - அட்வான்ஸ் - உங்கள் நிலைக்கு, இதுவரை பெற்ற வருமானத்தைக் கருதும்பொழுது பெரியது.

அன்பர் - மிகப் பெரியது. மிகமிகப் பெரியது.

நண்பர் - அன்னையே கொடுத்தாலும், அருள் செயல்பட்டாலும், நம் ஜீவன் பெற்றுக்கொள்ள இடம் கொடுக்கவேண்டும் அல்லவா?

அன்பர் - அப்படி என்னிடம் என்ன தடையிருக்கிறது?

நண்பர் - வந்துள்ளது பெரியது, பாத்திரம் சிறியது.

அன்பர் - அப்படியானால் வந்து வழிந்தோடுமல்லவா? தடையாக இருக்கிறதே.

நண்பர் - வரமாட்டேன் என்கிறது.

அன்பர் - வருகிறேன் என்று அறிவித்து, பிறகு வரமாட்டேன் எனச் சத்தியாக்கிரஹம் செய்கிறது.

நண்பர் - அருளுக்குத் தடை எது எது என்று தெரியுமன்றோ!

அன்பர் - "அன்னை" நூலில் விலக்கப்படவேண்டியது என்று எழுதிய 30 குணங்களைக் கூறுகிறீர்களா?

நண்பர் - அன்னைக்கும் அருளுக்கும் முதல் தடை எது என்று நாம் அனைவரும் அறிவோம்.

அன்பர் - பொய்.

நண்பர் - நீங்கள் பொய் சொல்வதில்லை. உங்களுக்கு முக்கியமானவர் எவராவது பொய் சொல்வாரா?

அன்பர்- என் மனைவி வாய் ஓயாமல் பொய் சொல்வாள். பொய் சரளமாக வரும்.

நண்பர் - ஸ்ரீஅரவிந்தர் மனிதனுடைய குறை என எதைக் கூறுகிறார்?

அன்பர் - சுயநலம்.

நண்பர் - நீங்கள் இதற்கு எந்த அளவு விலக்கு?

அன்பர் - எனக்குப் பரநலம் என நான் கூறவில்லை. நான் மற்றவர்கள் போலிருக்கிறேன்.

நண்பர் - உங்களுக்கு அப்பொழுது மற்றவர்போல்தானே பலிக்கும்?

அன்பர் - சுயநலம் தடை என்கிறீர்களா?

நண்பர் - உங்கள் தொழில் பிறர் வருமானத்தைப் பெருக்குவது. பரநலமான தொழில்.

அன்பர் - அதனால் பலிக்க வேண்டுமே?

நண்பர் - உங்கள் பிரச்சினையை விட்டுவிட்டு சுயநலம் எத்தனை வகை எனப் பார்ப்போம்.

 1. அவசியத்தை முன்னிட்டு சுயநலமாக இருப்பது.
 2. சுயநலம் இயல்பாக இருப்பது.
 3. சுயநலம் சுபாவமாக இருப்பது.
 4. சுயநலம் திறமையாக இருப்பது.
 5. இயல்பு, சுபாவம், திறமை ஆகிய அனைத்தும் சுயநலமாக இருந்து நாம் சுயநலம் என்றறியாத அளவுக்குச் சுயநலமாக இருப்பது.
 6. சுயநலம் சௌகரியமாக இருக்கும்வரை அதுவே நியாயம் என்று கருதுவது.
 7. எல்லோரும் நம்மைச் சுயநலம் என்று கூறுவதை நாம் அறியாத அளவுக்குச் சுயநலமாக இருப்பது.
 8. சுயநலத்தின் சுயம் பிரகாசத்தைப் பொய்யால் வெற்றியாக்கி அதைக் கொண்டாடுவது.
 9. சுயநலத்தை வேறு பெயரிட்டுப் பெருமையாகக் கருதுவது.
 10. அவ்வளவும் பிறருக்கு, எனக்கன்று என்று கூறும் "பரந்தமனம்".

அன்பர் - இதைக் கடந்தும் சுயநலமிருப்பதுண்டா?

நண்பர் - உண்டு, அது வறுமை மனப்பான்மையால் ஏற்பட்டது.

அன்பர் - நாம் அதை தரித்திரம், இராசி என்கிறோம்.

நண்பர் - எந்த அளவில் சுயநலமிருக்கிறது என ஏற்றுக்கொண்டால், அதைப் பரநலமாக்க முயன்றால், தடை விலகி காரியம் முடியும்.

அன்பர் - என் நிலையை நீங்கள் சொல்லுங்கள்.

நண்பர் - நீங்கள் சொல்லலாம், சொல்லாமலிருக்கலாம், என்னைக் கேட்கக் கூடாது.

அன்பர் - 10 நிலைகளைக் கடந்த தரித்திர இராசியா என் நிலை?

நண்பர் - எனக்காகச் சொல்லாமல், அதன் உண்மையை உங்கள் மனம் ஏற்குமா?

அன்பர் - இவ்வுண்மையை ஏற்கவேண்டிய இடத்தில் - ஆழத்தில் - ஏற்றால் பலன் தெரியுமா?

நண்பர் - உங்களுக்கு அருகாமையில் பொய் அதிகமாக இருப்பதால், வழக்கம்போல் மனம் ஏற்றவுடன் பலன் தெரியாது.

அன்பர் - மனம் ஏற்றதைச் செயலில் வெளிப்படுத்த வேண்டுமா?

நண்பர் - "செய்துவிட்டு வருகிறேன்'' என்றால் நான் பொறுத்திருக்கிறேன். இந்த மனமாற்றம் வந்தால் தொழில் கூடிவரும்.

அன்பர் - சொல்லிய அட்வான்ஸ் வருமா?

நண்பர் - நிச்சயம் வரும்.

அன்பர் - இரகஸ்யத்தின் சட்டங்களைக் கூறுவீர்களா?

நண்பர் - இரகஸ்யம் என்பது சூட்சுமப் பாதுகாப்பு. எனவே அது அவசியம். நல்ல காரியம் பொறாமையால் கெட்டுப் போவது அனைவரும் அறிவது. அதுபோக, நல்ல ஆரோக்கியமான உடலும், தொத்து வியாதி வருவதைத் தடுக்க முடிவதில்லை. சுத்தம், உஷார் தேவை. அதுபோல் காரியங்கட்கு சூட்சுமப் பாதுகாப்புத் தேவை. நமக்கு எதிரியாக இல்லாவிட்டாலும் மனிதர்கள் காரியத்திற்கு எதிரியாக இருப்பார்கள்.

அன்பர் - அது என்ன?

நண்பர் - பஸ்ஸில் போகும்பொழுது ஒருவர் பேசுவதை உடனுள்ள 4, 5 பேர் ஆர்வமாகக் கேட்டால், மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புதியதாய் பஸ்ஸில் ஏறியவர் ஒருவர் வீட்டிலும், ஆபீசிலும் ஒதுக்கப்பட்டவரானால் அவர், "பிரபலமான சுமுகம், சந்தோஷத்திற்கு எதிரி''. பேசுபவரை அவர் பார்த்தவுடன் அவரால் மேலே பேசமுடியாது.

அன்பர் - கண் திருஷ்டிப் பட்டுவிட்டது என்பார்கள், அதைக் கூறுகிறீர்களா?

நண்பர் - சூட்சுமம் ஒருவர் கண்ணில் படவேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவர் சுவாரஸ்யமாகப் பேசுகிறார் என்றால், அதற்கெதிரான மனப்பான்மையுள்ளவர் பஸ்ஸில் எங்கிருந்தாலும், அவர் பேச்சுக்குத் தடை எழும்.

அன்பர் - நாம் சந்தோஷமாக இருப்பது பொறுக்கவில்லை என்கிறோம்.

நண்பர் - அன்னை, "சந்தோஷத்திற்கு எதிரான தேவதைகட்கு அது பொறுக்காது. அவை சந்தோஷத்தைக் கெடுத்துவிடும்'' என்கிறார்.

அன்பர் - அப்படியானால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது. உலகில் பலரும் எப்படிச் செயல்படுகின்றனர்?

நண்பர் - இங்குப் பாதுகாப்புத் தேவை. ஒருவருக்கு இரகஸ்யம் பாதுகாப்பு. பதவி, செல்வம் சில சமயங்களில் பாதுகாப்பு தரும். அகந்தையில்லாவிட்டால் பாதுகாப்பு தேவையில்லை. அன்னையின் பாதுகாப்புண்டு. இடம், பொருள், ஏவல் தெரிந்து செயல்படுவது அவசியம். "நாம்" என்ற முனைப்பில்லாவிட்டால் அன்னை அன்பர்கட்கு முழுப் பாதுகாப்புண்டு. எவருக்கும் பொதுவாக நண்பராக "எதிரி" ஒருவரிருப்பார். அவரை நம்புவோம். அவரிடம் மட்டும் சொல்லக் கூடாது என்பது விலக்கில்லாத சட்டம்.

அன்பர் - சோதனை செய்யலாம்.

நண்பர் - சோதனை செய்யலாம். பழைய நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட சட்டங்களை ஊர்ஜிதம் செய்யும்.

 1. அனாவசியமாக எவரிடமும், எதையும் கூறாமலிருப்பது பொதுவாக நல்லது.
 2. விஷயம் வெளியில் போய் எதிரிகளை எட்டினால் அவர்கள் காரியத்தைக் கெடுக்க முனைவார்கள். ஜெயிப்பார்கள்.
 3. மனத்தால் கெட்டவர்கள், நண்பர்கள் உறவினராக இருந்து, நம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தால் அவர்கள் விஷயம் அறிந்தால் நிச்சயமாக அவர்கள் எண்ணம் கெடுக்கும்.
 4. பொதுக்காரியம் தனிமனித குணத்தால் கெடுவது குறைவு.
 5. பெரிய நல்லெண்ணம், கெட்ட எண்ணத்தை மீறிப் பலிக்கும்.
 6. அகந்தையில்லாத அன்பர் அறிவோடு செய்யும் காரியம் எதனாலும் கெட்டுப் போகாது.
 7. கெடுப்பது அகந்தை, வெளியில் போகும் விஷயமில்லை. இங்கு சோதனை விஷப் பரீட்சையாகும், தத்துவம் இதுவே.
 8. நல்லெண்ணமுள்ளவர் அறிந்தால் காரியம் கூடிவரும்.
 9. கெட்ட எண்ணம் உள்ளவரில் முக்கியமானவர் "நாமே''. நம் கெட்ட எண்ணத்தைவிட நமக்கு அதிகக் கெட்ட எண்ணம் வெளியிலிருந்து வாராது.
 10. கெட்ட எண்ணத்தைவிட மோசமானது சுயநலம். அதிலும் அதிக சக்தி வாய்ந்தது நம் சுயநலம்.

அன்பர் - முடிவாக எனக்கு என்ன சொல்கிறீர்கள்?

நண்பர் - அட்வான்ஸ் நான் சொல்லியதைச் செய்தால் வந்துவிடும். மேற்சொன்ன சட்டங்களில் உங்கள் அனுபவத்திற்கு மாறானது உண்டென்றால் அதற்கு விளக்கம் தரமுடியும். அன்னையின் 18 வால்யூம்களில் இது சம்பந்தமானவற்றைப் படித்துவிட்டால் ஐயம் எழாது.

அன்பர் - இனி நான் எப்படிச் செயல்படவேண்டும்?

நான் என்ற முனைப்பு, பெருமை - கர்வம், திமிர் இல்லாமல் அனாவசியமாக எவரிடமும் பேசாமல் காரியங்களைச் செய்தால் இரகஸ்யமிருந்தாலும் இல்லாவிட்டாலும் தொந்தரவு வாராதா?

நண்பர் - அது சரி.

அன்பர் - டென்ஷன்?

நண்பர் - அது மட்டுமே எதையும் கெடுக்கும்.

அன்பர் - வெளியில் தெரிவதால் மட்டும் கெட்டுப்போகும் என்று கூறமுடியாதா?

நண்பர் - அது உண்மையில்லை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரிணாம சக்தியாக அன்னையை அறிந்துகொள்வது அன்னையை அறிவதாகும். அதனால் ஈர்க்கப்படுவது ஆர்வம்தன் முயற்சியை அன்னை சக்திக்குட்படுத்துதல் சமர்ப்பணம்.இதை ஜடத்தின் ஆன்மாவில் அறிவது சரணாகதி.

சக்தியாக அறிவதே அறிவது.     

Comments

07.அன்பரும் - நண்பரும் Para

07.அன்பரும் - நண்பரும்
 
Para 1   -  Line  3  -  தள்.    -  Rs.
Para 8   -  Line 3 & 4 - இரண்டு வரிகளையும் இணைக்கவும்
Para 9   -  Line 3 & 4 - இரண்டு வரிகளையும் இணைக்கவும்
Para 9   -  Line 8  -  சொல்லி யபின்    -   சொல்லியபின்
Para 30  - Line 1  -  "அன்னை'              -   'அன்னை'
Para 31  - Line 2  -  Please move the following to the new paragraph
     அன்பர் -பொய்.
Para 37  -  Lone 1  -  போலி ருக்கிறேன்  -   போலிருக்கிறேன்
Para 38  -  Line 1   -  பலி க்கும்                -   பலிக்கும்
Para 42  -  Line 13 & 14 -  இரண்டு வரிகளையும் இணைக்கவும்
Para 66  -  Line 4  -   "நாம்'      -   "நாம்"
Para 68  -  Line 3 (Point No. 1 )  -  கூறாமலி ருப்பது     -   கூறாமலிருப்பது
Para 68  -  Line 3 (Point No. 9 )  -  வெளியிலி ருந்து     -   வெளியிலிருந்து
Para 72  -  Line 2  -   பேசாமகாரியங்களைச்      -   
பேசாமல் காரியங்களைச்book | by Dr. Radut