Skip to Content

Savitri

P.13.The world unknowing, for the world she stood

தன்னையறியாத உலகத்தின் சார்பாக அவள் வாழ்ந்தாள்

இப்பக்கத்திலுள்ள சில கருத்துகள்:

  • கடந்தவற்றை அறிதல் அவசியம்.
  • பழைய பாக்கி தீருதல் தேவை.
  • ஆன்மாவின் கடனைக் காலத்தில் செலுத்த வேண்டும்.
  • ஆன்மபலம் தவிர மற்றதை அறியாதவள்.
  • தனிமையில் ஆன்மா தவம் செய்கிறது.

பிரம்மாண்டமான வெற்றிகள் தங்கள் வருகையைப் பறை அறைவிப்பதில்லை என அன்னை கூறியுள்ளார்.

தியாகம் உண்மையும், பெருமையும் உடையதானால் உலகம் ஏற்றுப் போற்றும். அந்நிலையையும் தியாகம் கடக்குமானால், மனிதன் உயர்ந்து தெய்வமாகிறான். தெய்வ நிலையில் தியாகம் எவர் கண்ணிலும் படாது. படக்கூடாது.

  • ரோடு போட்டால் அதை உலகம் அறியும். ரோட்டைத் தாங்கும் பூமியை நாமறிவதில்லை.
  • தலைவனை உலகம் ஏற்கும். போற்றும், மகுடம் வைக்கும். அவனைப் பெற்றெடுத்த தாயை அறிய முயலாது. அவன் உலகுக்குச் சேவை செய்ய தங்களைத் தியாகம் செய்த குடும்பத்தை அறியாது. 
  • பேர் உத்சவங்களில் உலகமே கலந்துகொள்ளும். அவற்றை நடத்திய ஆயிரம் சிப்பந்திகள் இருப்பதையே எவருமறியார்.
  • புத்தகம் பிரபலமானால் ஆசிரியர் விருது பெறுகிறார். புத்தகத்தை அச்சிட்டு வழங்கியவரும், உலகெங்கும் எடுத்துச் சென்று விற்பவருமான வியாபாரியையும் நாமறிவதில்லை.

எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம். நாம் காண்பது அவர் முகம். முகமே மனிதன் எனக்கொள்கிறோம். ஆயிரம் உறுப்புகள் அரை வினாடி தவறாமல் செயல்பட்டு மனிதனாக இயங்கவைப்பதை அறியவோ, நினைக்கவோ, நம்மால் முடிவதில்லை.

ஆற்றில் 10 அடி தண்ணீர் ஓட பூமிக்கடியில் 100 அடி நீர் ஊற வேண்டும். கரையின் இருபுறமுள்ள ஆயிரம் ஏரி, குளம், கிணறுகள் நிரம்ப வேண்டும். ஒரு துளி வெள்ளம் பெருக ஓராயிரம் துளிகள் தங்களை மறைத்துச் சேவை செய்ய வேண்டும்.

இன்று மனிதன் ஒரு நாள் தன் கடமையைச் செய்ய, கடந்த அவன் வாழ்வு அடிப்படையாக அமைகிறது. எதிர்கால வாழ்வுக்கு அடிப்படையை இன்று அமைக்கிறது. சூழலில் நடப்பவை அனைத்தும் உறுதுணையாக நிற்கின்றன. ஒருவன் வாய்திறந்து பேச ஓராயிரம் ஆத்மாக்கள் மௌனமான இசைவு தரவேண்டும். பழைய பாக்கி தீர வேண்டும். காலம் தன் கடமையைச் செய்ய மனிதனை மௌனமாக வற்புறுத்தும். காலத்தைக் கடக்க மனிதனால் நினைக்க முடியாது.

பெற்றோர் பையனைப் பள்ளியில் சேர்க்கலாம். ஆசிரியர் பாடம் சொல்லித் தரலாம். அச்சகம் புத்தகத்தை அச்சிட்டுத் தரலாம். ஆனால் பரீட்சையில் பையன் தானே எழுத வேண்டும் என்பதுபோல உடலோடு உடலாக ஊர் வாழும், உணர்வோடு உணர்வாக உற்றார் உறையலாம். அறிவை அநேகம் பேர் ஏற்கலாம், ஆதரிக்கலாம். ஆனால்,

ஆன்மா அதன் கடமையைத் தனித்தே ஆற்ற வேண்டும். 

உலகத்திற்காகப் பிறந்த சாவித்திரியை உலகம் அறியவில்லை. உலகத்திற்காக வாழ்ந்தபொழுதும் உலகம் அறியவில்லை. உலக இருளை அழித்து ஒளியாக்கியபொழுதும் உலகம் சாவித்திரியை அறியவில்லை. இது அன்னையின் பூவுலக வாழ்வு.

அன்னை நம்மிடம் வாழ்ந்தார். உலகப் போர்களை வென்றார். அடுத்துவரும் உலகப் போரைத் தடுத்தார். மனிதனின் சிறுமையை ஏற்றுப் பெருமையாக மாற்றினார் என உலகம் அறியவில்லை. இனியும் அறியுமா எனத் தெரியவில்லை.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

நியாயமாகவும், நேர்மையாகவுமிருக்கும் பொழுது நமக்குத் தீங்கிழைத்தால், கோபம் பீறிட்டெழுகிறது. நேர்மையின் தோற்றமிருந்து, உண்மையில் நேர்மையில்லாவிட்டால் அடுத்தவர் தீங்கிழைக்க முடிகிறது. அதனால் உணர்வு புரட்சி செய்கிறது.

 

********

Comments

Savitri Para 20  -  Line

Savitri
 
Para 20  -  Line 2       - ஒüயாக்கியபொழுதும்        -   ஒளியாக்கியபொழுதும்

 

motnirbook | by Dr. Radut