Skip to Content

மனித சுபாவம் III

கர்மயோகி

 

சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்பவர், செய்ததையே திருப்பித் திருப்பிச் செய்பவர் அவற்றை நிறுத்த முயன்றால் அவருக்குப் பத்து மடங்கு முன்னேற்றம் காத்திருக்கும்.

********

செய்ததையே செய்வது எளிது. புதியதாகக் கற்பது சிரமம். எளியதை விட்டு சிரமமானதைக் கற்றால் பலன் பெரிதாகும். ஏன் ஒருவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்? அவருக்கு அது இன்னும் புரியவில்லை என்று பொருள். புரிந்துவிட்டால் சொல்வதை நிறுத்திக் கொள்வார். புரிய அவர் சொல்வதைச் செய்ய வேண்டும். கடமையைச் செய்யாதவர், திரும்பத் திரும்பச் சொல்வார். செய்துவிட்டால் முன்னேற்றம் ஏற்படும். சொல்வதை நிறுத்திக் கொள்வார். முயன்று நிறுத்தினால் செய்ய முடியும். பத்துமடங்கு பலன் கிடைக்கும்.

எங்கெங்கு முடியுமோ அங்கங்கெல்லாம் கத்தரிக்கோல், ஸ்கேல் போன்ற கருவிகளைத் தவறாமல் பயன் படுத்துவது நல்லது.

*******

கத்தரிக்கோலால் வெட்டுவதைப்போல் பேப்பரைக் கையால் கிழிக்க முடியாது. கருவியைப் பயன்படுத்துவது சிறந்த முறை. பலன் பல மடங்குண்டு. பொதுவாக இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்த பின் நம் திறமை பல மடங்கு உயர்வதைக் காணலாம். ஸ்கேலில்லாமல் நேர் கோடு போட முயன்று, பேப்பர் விரயமாகும். 

ஆயில் கேன் இல்லாமல் சைக்கிளுக்கு எண்ணெய் போட்டால் தரையும், வேஷ்டியும் அபிஷேகமாகும். எதையும் அதற்குரிய கருவியிருக்கும் பொழுது அதைப் பயன்படுத்தும் பழக்கம் நல்லது.

உனக்குள்ள பழக்கங்களை அதிகப்படுத்தும் வாயிலாகப் புதிய நல்ல பழக்கங்களை அவ்வப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். வற்புறுத்திச் செய்வது சரியில்லை. உன் திறமையின் அளவை ஒரு நிலை உயர்த்தும்படிச் செயல்பட வேண்டும்.

********

மனப்பாடம் செய்வது ஒரு பழக்கம். கடிகாரம் ரிப்பேர் செய்வது ஒன்று. Punctuality குறித்த நேரத்தில் செயல்படுவது அடுத்தது. நமக்கு இதுபோல் சில நல்ல பழக்கங்களுண்டு. மேலும் ஒரு நல்ல பழக்கத்தைச் சில மாதங்களுக்கு ஒன்றாகச் சேர்ப்பது நல்லது. அது மிகச் சிரமம். என்றாலும் அதிகப் பயன் தரும். புத்தகம் படிக்கிறோம். பேப்பரில் நல்ல செய்தி வருகிறது. ரசிக்கிறோம். ஒரு வருஷத்திற்குப் பின் மறந்து போகும். நினைவிருந்தால் எங்கு படித்தோம் என்று நினைவிருக்காது. அவற்றைக் குறித்து வைப்பது ஒரு நல்ல பழக்கம். இதுபோன்ற நல்ல பழக்கங்கள் பலவற்றை இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதிய நல்ல பழக்கத்தை நாம் சேர்த்துக் கொண்டால், நம் வாழ்வு நிலை உயரும்.

பழக்கத்திற்காகவே, பயனில்லாமல், செய்யும் காரியங்களைக் கண்டு விலக்க வேண்டும்.

******

பக்தியோடு பூஜை செய்ய ஆரம்பித்தவர்கள் கொஞ்சநாள் கழித்து தமக்கு இப்பொழுதெல்லாம் முன்போல் பக்தியில்லை என அறிவதுண்டு. அதன் பின் வெறும் பழக்கமாகப் பூஜை செய்தால், பூஜைக்குப் பலனில்லாதது மட்டுமன்று, தவறான பலன் ஏற்படும். 

சர்வீஸீலிருக்கும்வரை ஆபீஸுக்குப் போனோம். ரிடையர் ஆனபின், ஆபீசுக்கு ஒரு முறை போகலாம், தொடர்ந்து போகக் கூடாது. போனால் மரியாதை போகும். அதை எவரும் செய்ய மாட்டார்கள். ஆனால் பக்தி போன பின் பூஜை செய்வதை நிறுத்த மாட்டார்கள். அதன் பலன் மனதில் வெறுப்பு ஏற்படும். எதையும் நம்பமுடியாமற் போகும். மனநிலையால் சரிந்து கீழே வருவோம். இன்றைய சடங்குகளில் பெரும்பாலும் அத்தகையது. ஒருவர் இறந்தால் அவர் ஆவி சாந்தியடையச் செய்யும் சடங்குகள் சக்தியுள்ளவை. அவசியமானவை. ஆனால் காது குத்துவது அப்படியில்லை. மஞ்சள் நீர் சுபச்சடங்கு, திருமணம் சம்பந்தமான வரிசை, சீர், அலங்காரம் சமூக அந்தஸ்திற்காகவும், மனத்திருப்திக்காகவும் செய்வன. ஆதி நாளில் என்ன பலன் கருதி பெற்றோருக்குப் பாத பூஜை செய்தார்களோ, அது இன்று இல்லை. உபநயனம், பிரம்மோபதேசம் என்பவை பிரம்மத்தை உபதேசம் செய்யும் ஆன்மீகத் திறனுள்ளவர்கள் செய்யக்கூடியது. பெற்றோர் என்பதனால் செய்ய முடியாது. வெறும் பெற்றோர் செய்யும் "பிரம்மோபதேசம்'' எதிரான பலன் தரும். பையன் அளவு கடந்து பொய் சொல்வான். இன்ஜீனியர் மகன் இன்ஜீனியர் படிக்காமல் B.E. பட்டத்தைப் போட்டுக் கொண்டால் ஜெயிலுக்குப் போவான். யாரும் அவனை ஜெயிலுக்கு அனுப்பாவிட்டால், அவன் கட்ட முயலும் முதற் கட்டிடம் அவனைத் திவாலாக்கும். For courtesy sake என்று courtesy இல்லாமல் செயல்பட்டால் நம் வாழ்வை விட்டேcourtesy போகும். இவை எப்படிப்பட்ட பாதகம் விளைவிக்கின்றன என நாம் அறிவதில்லை. அவற்றை எல்லாம் அறவே ஒழிக்க வேண்டும். சடங்குகளை விட்டாலும், சமூகத்தில் இவைபோன்ற (dead habits) பயனற்ற பழக்கங்கள் ஏராளம்.

உன் குணத்தை நீ அறிவாய் என்பதால், அதிலுள்ள குறைகளை வரிசையாக எழுதி, அனைத்தையும் விலக்க முயலுதல் அவசியம்.

***** 

கெட்டிக்கார மாணவன் படிப்பை அலட்சியம் செய்தாலும் பெயிலாக மாட்டான். பணக்காரன் அதிகச் செலவு செய்தால் நஷ்டம் வாராது, என்றாலும் இவை நல்லதல்ல. ஏற்கனவே 43 மார்க் வாங்க ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படித்தவன் படிப்பை அலட்சியம் செய்தால், குடும்பச் செலவுக்குப் போதுமான வருமானமில்லாதவர் ஆடம்பரச் செலவு செய்தால் அது நம்மை சுடச்சுடப் பாதிக்கும். இங்கு நான் குறிப்பிடுவது அது போன்ற குணங்களே, குணக்கேடுகளே.

நாம் நம்மை அறிவதால், எந்தக் குறைகள் நம்மை அதிகமாகப் பாதிக்கும் என்றும் தெரியுமாதலால், அவற்றை விலக்க முழுமுயற்சி எடுக்க வேண்டும்.

பிறருக்கு உதவி செய்வதையே இலட்சியமாகக் கொண்டு, ஒரு முறை பெரு நஷ்டம், அடுத்த முறை கோர்ட் கேஸ், மூன்றாம் முறை அடிதடி வழக்கு என அனுபவித்தவர், பிறருக்கு உதவுவதைத் தவிர்க்க முன் வருதல் அத்தியாவசியம்.

முன் கோபத்தால் முதல் மனைவி தாய் வீட்டிற்குப் போய் விட்டாள். ஆபீஸில் பிரமோஷன் இல்லை. குடியிருக்கும் வீட்டுக்காரர் கெடுபிடி செய்து காலி செய்யச் சொன்னார் எனில் அவருக்கு முன்கோபம் கூடவே கூடாது.

கேட்கும்பொழுது இல்லை என்று சொல்ல முடியாமல் மருமகப் பிள்ளைக்கு ரிடையரான பொழுது வந்த எல்லாத் தொகையையும் கொடுத்துவிட்டு நிரபராதியானவர், பரீட்சை கேள்வித்தாளில் உள்ள கேள்வி எது என்று கேட்ட நண்பரிடம் முகம் சுளிக்கக் கூடாது எனச் சொல்லி கல்லூரியில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு வந்தது என்றவர், யாராவது ஏதாவது கேட்டால், "பிறகு பதில் சொல்கிறேன்'' என்று தம் குணத்தை மாற்றிக் கொள்வது அவசியம்.

கடன் என்று வாங்கினால், திருப்பிக் கொடுத்துப் பழக்கமில்லாதவர், இனி கடன் வாங்குவதில்லை என முடிவு செய்ய வேண்டும். 

எவருக்கும் தம்மைப் பாதிக்கும் குணங்கள் நன்றாகத் தெரியும். அவற்றை விட முடியாது என்று பேச மாட்டார்கள். முயன்றால் பெரும்பாலும் கட்டுப்படும். முழு முயற்சியால் பூரணப் பலன் ஏற்படும். அதை அனைவரும் செய்ய முன்வரவேண்டும்.

நீ செய்வதெல்லாம் ஒரே குழப்பமும், குழறுபடியாகவுமிருந்தால், சிஸ்டத்தைக் கொண்டு வரச்செய்யும் சிறு முயற்சி, பெரும் பலனைத் தரும்.

*******

இதேபோன்ற குணமுள்ள 8 பேருள்ள வீடு எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்ய முடியும். அதுவும் வெளியூர்ப் பிரயாணத்தன்று, ஒரே அமளி, கூச்சல், குழப்பம், சண்டை. இதே வீட்டில் அன்று காலை ஒருவர், யார் யார் எதைச் செய்வது எந்த (order) முறையில் செய்வது என்பதை ஏற்பாடு செய்தால் கூச்சல், அமளி, எரிச்சல் எல்லாம் பெரும்பாலும் இருக்கா. இது சிஸ்டத்திற்குரிய சக்தி. சிறுமுயற்சிக்குப் பெரும்பலனைப் பெற்றுத் தருவது சிஸ்டம் (system).

மறதியுள்ளவரானால், ஒரு பட்டியல் (check list) மறதியின் பலனை அழிக்க வல்லது.

******

மறதியால் விளைந்த பலன்களை நினைத்துப் பார்த்தாலும் நம்ப முடியாது. பர்ஸை வீட்டில் வைத்துவிட்டு வெளியூர் போய் பட்ட அவதியை நினைத்தாலும் மனம் நடுங்கும். வட நாட்டுக்கு உல்லாசப் பிரயாணம் போன சமயத்தில் பஸ் புறப்படும் பொழுது ஒருவரை விட்டு விட்டு அடுத்த ஊர் வந்த பிறகு பிரயாணம் சிம்ம சொப்பனமானது ஒருவருடைய அனுபவம். ஹாஸ்டலுக்குப் போய் சாவியை வீட்டில் வைத்துவிட்டு வந்து, பூட்டை உடைத்துத் திறப்பதே வழக்க மானவருண்டு. வெளிநாட்டில் பாஸ்போர்ட் வைத்த இடம் தெரியாமல் தேடியவர் நிலையை நினைக்கவே பயமாயிருக்கிறது. பெரிய தொகைக்கு அக்ரிமெண்ட் எழுதி கையெழுத்திட்ட பின், முக்கிய நிபந்தனையைச் சேர்க்காதது நினைவு வந்து என்ன பயன்? கோர்ட்டில் கூண்டில் நிற்கும்பொழுது மறதி என்ன செய்யும்? சொத்தையே அழிக்கும்.

Checklist (பட்டியல்) என்பது லாரி டிரைவர், முதற்கொண்டு அனைவரும் பயன்படுத்துவது. இதைப் பயன்படுத்தினால் சாவி மறக்காது, பாஸ்போர்ட் தொலையாது, அக்ரிமெண்ட்டில் நிபந்தனை விட்டுப் போகாது. டூர் போனால் மீண்டும் வந்த பிறகு, தலையை எண்ணும் பழக்கம் ஒருவரை விட்டுவிட்டு வாராது. சிறிய முறை, பெரிய பலன்.

ரிகார்ட், ரிஜிஸ்டர் தற்போதில்லா இடங்களில் ஏற்படுத்தினால், அது பயன்படும், பெரும்பலன் தரும். ஆபத்தான நேரத்தில் அற்புதமான உதவி செய்யும்.

*******

எதையும் படித்துவிட்டுப் போட்டு விடும் வீட்டில், ஒருவருக்கு முக்கியமான ரசீதுகளை ஒரு நோட்டில் வைத்து பெட்டியடியில் வைக்கும் பழக்கம் இருந்தது. நெருங்கிய நண்பரிடம் சொத்து வாங்கி, பணம் கொடுத்து, வாய்மொழியாக 12 வருஷம் அனுபவித்த பின் "நெருங்கிய'' நண்பருக்கு, தாம் பணத்திற்கு ரசீது கொடுக்காதது நினைவு வந்தது. அத்துடன் ஆசையும் வந்தது. பொய்யும் சொல்ல மனம் இசைந்தது. வாங்கிய பணத்தை மறைத்து, சொத்தைத் திரும்பக் கேட்டு, பொய்க் கேசும் போட்டுவிட்டார். நண்பர் கவலைப்படவில்லை. நண்பரின் மனைவிக்கு அஸ்திவாரமே போனது போலாயிற்று. கேஸுக்குப் பதில் நோட்டீஸ் எடுபடாது. திடீரென ஒரு யோசனை தோன்றியது. பெட்டிக்கு அடியில் உள்ள அந்த நோட்டை எடுத்துப் பார்த்தார்கள். வழக்கப்படி நோட்டு தன் சேவையைச் செய்திருந்தது. பத்து வருஷம் முன்பு பணம் பெற்றவுடன் நண்பர் எழுதிய கடிதத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தார். ரசீது இல்லை என்பதால் இக்கடிதம்  முக்கியமானது என நினைத்து ஒருவர் அதை நோட்டில் வைத்திருந்தார். கடிதம் கேஸை ஜெயித்துக் கொடுத்தது.

வேண்டாம் என விலக்கியதை மீண்டும் நாடாதே. இதை ஏற்றால் காரியம் முடிந்தவுடன் மனிதனை மறக்கும் பழக்கம் போய்விடும்.

********

வீராப்புக்கே ஊரில் பேர் போனவர் ஒருவர். வாழ்க்கையிலில்லாத உதவியை ஒருவரிடம் நாடினார். உதவி முடிந்த மறுநாள் இதுவரை இருந்த மரியாதையை மாற்றி வீராப்புக்காரராகப் பேசினார். மூன்று மாதத்தில் நிலைமை மாறி மீண்டும் அவர் உதவி தேவைப்பட்டது. பல்லிளித்துக் கொண்டு உதவியை மீண்டும் நாடினார். விலக்கியதை நாடாத குணமிருந்தால், வேலை முடிந்தவுடன் நண்பரை எட்டி வீசியிருக்க மாட்டார்.

ஒரு காரியத்தை நல்லபடியாக முடித்தவுடன், இக்காரியம் முடிய உதவிய நம்பிக்கை எது என்று கண்டு கொள்ள முயல்வது சரி.

*******

காரியம் கெட்டுப் போனால் எப்படிக் கெட்டது எனச் சிந்திக்கின்றோம். கூடி வந்தால் அதுபோல் சிந்திப்பதில்லை. எவரும் எதிர்பாராததுபோல் கூடிவந்தால், சிந்திப்பதுண்டு.

இந்தச் சிந்தனை மனத்தெளிவைக் கொடுக்கும். "நான் கல்லூரிக்கு 13 நாள்தான் போனேன். இரண்டாண்டு விரயமாயிற்று. மீண்டும் சேர்ந்த பொழுது, பாடபுத்தகம் தவிர மற்ற புத்தகங்களை ஏராளமாகப் படித்தேன். ஆனால் பரிட்சை பாஸாகி விட்டது. பட்டம் கிடைத்தது. என்னையறிந்தவர் எவரும் நான் பாஸ் செய்வேன் என நம்பவில்லை'' என்ற நிலையில் ஒருவர் எப்படிப் பாஸ் செய்தோம் என யோசனை செய்தால், அவருள்ள நிலையில் பல விஷயங்கள் புரியும். அவற்றுள் ஒன்று இவருக்குப் பாஸைப் பெற்றுத் தந்திருக்கும். அது எது என்று விளங்கினால், அது ஞானமாகப் பயன்படும்.

  • நான் படித்த ஏராளமான புத்தகங்கள் பரிட்சையில் மறைமுகமாகப் பலனளித்தன.
  • இதுவரை நான் பரிட்சை எழுதி, தவறியதேயில்லை. அதனால் பாஸ் செய்தேன்.
  • நான் மேற்கொண்ட எக்காரியமும் பழுதானதில்லை, அதனால் இது நடந்தது.
  • மாணவருலகத்திற்குச் செய்த சேவை பலன் தந்தது.
  • நாட்டு விடுதலைக்காகச் செய்த தியாகம் பலன் கொடுத்தது.
  • பாஸ் செய்வேன் எனத் தாயாருக்குக் கொடுத்த வாக்கு, காப்பாற்றியது.
  • குடும்பத்தின் மீதுள்ள கடமையுணர்வு பாஸை வரவழைத்தது.

போன்றவை அவர் மனதில் தோன்றின. முடிவாக அவருக்கு உண்மையை உணர்த்தியது ஒன்று. கல்லூரியிலிருக்கும் பொழுது வகுப்பில் கேட்டதை மனதில் பதியவைக்கும் பழக்கம் அவருக்குண்டு. எப்படியும் பாஸாக வேண்டும் என்ற எண்ணம் வகுப்பறையில் கூர்மையான கவனத்தை அளித்தது. கடமையுணர்ச்சி, எதிலும் தவறாத பாங்கு, கூர்மையான கவனத்தின் மூலம் பாஸைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்று விளங்கியது. இதன் மூலம் மாணவர் தம்மையறிய முடிகிறது. தன்னை அறிவது நிகரில்லாத ஞானம்.

சிறிய மனிதர் மீது அதிகாரம் செலுத்துவதையும், பெருமைக்கு உரியவருக்குச் சுதந்திரம் அளிப்பதையும் சட்டமாகக் கொள். அதையும் மனத்தால் செய்தால் பலன் அதிகம்.

**********

சிறிய புத்தியுள்ளவர் சிறிய மனிதர். நல்ல குணமுள்ளவர் பெரியவர்கள். வயதால், பணத்தால் கருதுவதைவிட, குணத்தால் மனிதரைச் சிறியவர், பெரியவர் எனப் பிரிக்க வேண்டும். சிறியவர் மீது அதிகாரம் செலுத்தாவிட்டால் காரியம் கெட்டுவிடும். நல்ல குணமுள்ளவர்க்குச் சுதந்திரம் கொடுத்தால் அவர்கள் மலர்ந்து பெரிய உதவியைச் செய்வார்கள்.

நண்பன் என்பதால் எதையும் கேட்பவனுக்கு இடம் கொடுத்தால் காரியம் கெடும். குமாஸ்தாவானாலும் உதவி கேட்க முடியாதவரெனில் அவருக்குச் சுதந்திரமும் அதிகாரமும் கொடுத்தால், மானேஜர் சேவையைச் செய்வார். இதை மனத்தளவில் செய்தால் பலன் அதிகம்.

எந்த வகையிலாவது ஒருவருக்கு முக்கியத்துவமிருந்தால் அவருடன் பழகும் பொழுது யோசனை செய்து பேச வேண்டும்.

*******

இளைஞர்கள் இருவர். சேவா உணர்ச்சியுடன் தங்கள் தாய் ஸ்தாபனத்திற்குச் சேவை செய்யும் முயற்சியில் இறங்கினார்கள். ஏராளமான பேருள்ள பெரிய ஸ்தாபனத்தில் ஆயிரம் போட்டியிருப்பதை இவர்கள் முக்கியமாகக் கருதவில்லை. யாருக்கு உதவி செய்யப் போனார்களோ, அவர்கள் உதவியைப் பெற்றுக் கொண்டதுடன், இளைஞர்கள் திறமையைக் கண்டு பொறாமைப்பட்டு. வம்பு வளர்த்து, பொய்க் கேஸ் போட்டார்கள். இளைஞர்கள் பிரமித்தனர். ஆனால் அறிவு வரவில்லை. ஸ்தாபனத் தலைமையிலுள்ளவர்கள் அனைவரும் சிறிய புத்திக்காரர்கள் என அறியாமல், அவர்களில் ஒரு முக்கியஸ்தரை அணுகி, மத்தியஸ்தம் செய்யும்படிக் கேட்டார்கள். அவர் தவறாகப் பேசினார். இளைஞர்கள் விலகிவிட்டனர். உதவி செய்யாவிட்டாலும், அவருக்குத் தம் சொல்லை ஏற்கவில்லை எனக் கோபம் வந்தது. எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்து 10 வருஷம் உயிரையே எடுத்தார்.  

முக்கியமானவர் என்றால் நியாயமாக இருப்பார் என எதிர்பார்க்கிறோம். எதிராக மாறும் சின்னபுத்தியுடையவரானால், அவரால் பெரிய உபத்திரவம் செய்ய முடியும்.

பிறர் நமக்குக் கடமைப்பட்டவர் என நினைக்கும் பொழுது, சற்று நிதானித்து அது எந்த அளவு உண்மை எனச் சிந்திக்க வேண்டும். சில சமயங்களில் அவருக்குக் கடமைப்பட்டவராகவுமிருப்போம்.

*******

இன்ஜீனீயருக்குத் தம் பெயரைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஏராளமான பீஸ் பெற்றது தாங்கவில்லை. பீஸ் பெருந்தொகை எனக் கேள்விப்பட்டுப் பொங்கி எழுந்தார். நேரடியாகத் தம்மை ஏமாற்றியவரைக் கண்டு பீஸைக் கொடுக்கும்படிக் கேட்க வேண்டும் என்று கொந்தளித்து எழுந்து, அவரைச் சந்தித்தார்.

"என் பெயரைச் சொல்லி  thermal stationஅனல் மின் நிலையத்தில் எவ்வளவு பீஸ் பெற்றீர்கள்'' எனக் கோபாவேசமாகக் கேட்டார்.

நண்பருக்கு அதிர்ச்சியாயிற்று. இவர் ஆங்கிலேயர். இவர் என்ன இன்ஜீனியர் எனவும் அவருக்குத் தெரியாது. சேவையை மேற்கொண்டு இங்கிலாந்தை விட்டு வந்தவருக்கு மிஞ்சியது பட்டினிதான். இவரை யாரோ கிளப்பிவிட்டிருக்கிறார்கள் எனவும் புரிந்தது. தமக்கெழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நண்பர் கேட்டார். "மின் நிலையத்திற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என நினைவிருக்கிறதா? உங்களை வரும்படி அழைத்தது நானா, என் நண்பனா, அவர் தகப்பனாரா?'' இன்ஜீனியருக்குச் சற்று சுயநினைவு வந்தது. "நீங்கள் யாரும் அழைக்கவில்லை''.

நண்பர் : "பின் எப்படி வந்தீர்கள்?''

இன்ஜீனியர் : "நானே வருவதாகக் கேட்டேன்''.  

நண்பர் : "மின்நிலையச் சூப்ரின்டெண்டண்ட் உங்கள் உதவியைக் கேட்டாரா?''

இன்ஜீனியர் : "இல்லை''

நண்பர்: "நீங்கள் சூப்ரின்டெண்டண்ட்டுடன் பேசும்பொழுது நாங்கள் வேறிடம் போனது நினைவிருக்கிறதா?''

இன்ஜீனியர் : "ஆம்''

நண்பர்: "எப்படி நம் வீட்டிற்கு நீங்கள் வந்தீர்கள் எனத் தெரியுமா?''

இன்ஜீனியர் : "உடல் நலம் குன்றியபொழுது வந்தேன்'' என்றார்.

சேவையை ஏற்றுக் கொண்டு நாடுவிட்டு நாடு வந்தவருக்கு மஞ்சள் காமாலை வந்த நேரம் இவருடைய ஸ்தாபனம் ஆதரவு தர முன் வரவில்லை. ஆதரவு தேடி வந்த இடத்தில் நண்பர் இவருக்கு மருத்துவம் அளித்து 1 மாதம் வைத்திருந்தார். பிறகு போக இடம் இல்லை. நண்பரும் அவருடன் வேறிருவரும் அவர்கள் தொழில் சம்பந்தமாக ஒரு சர்க்கார் நிறுவனத்தின் தலைவரைச் சந்திக்கப் போனபொழுது "நானும் வரட்டுமா? என இன்ஜீனியர் கேட்டதை எவரும் ஏற்கமாட்டார்கள். கேட்டபின் மறுப்பதெப்படி என அழைத்துப் போனதில், இன்ஜீனியருக்கு நண்பர் கடமைப்பட்டதான நினைவு வந்தது. கடமைப்பட்டவர் நண்பரில்லை, இன்ஜீனியரே. போனவர்கள் சேவை செய்யப்போனார்கள், பீஸ் பெறப்  போகவில்லை.

உன்னுடைய பெரிய பலஹீனத்தை உன் வலிமையாக நீ நினைக்கலாம்.

******

பணமுள்ளவர், பணத்தைப் பலம் என நினைப்பார். எழுத்தாளர், எழுத்தைத் தம் சொத்து என்பார். அதுபோல் பல இடங்களில் நாம் பலம் என நினைப்பது நமக்கு வலுவைக் குறைப்பதாக இருக்கும்.  

அதை அறியாமல் நம் "பலத்தை'' வலியுறுத்தியபடி இருப்போம். காரியம் தொடர்ந்து கெடும். இதை அறிய முடிவதில்லை.

சம்பந்தம் செய்யும்பொழுது செல்வம் பொதுவாகப் பலம். வரும் வரன் நமக்குப் பிடித்திருந்தாலும், அவர்கள் செல்வநிலை தாழ்ந்திருந்தால், செல்வமுள்ள இடத்தில் சம்பந்தம் செய்ய மறுப்பார்கள்.

ஒரு பாங்கில் போய்க் கடன் கேட்டால், என் அண்ணன் MLA என்பது பலம் என நினைக்கலாம். ஏஜண்ட்  தம்பிக்குப் பணம் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளப் பிரியப்படாதவராக இருக்கலாம்.

M.A. I Class இல் பாஸ் செய்தது குமாஸ்தா வேலைக்கு உறுதுணையாக இருக்கும் என நினைப்பது தவறில்லை. நீ விண்ணப்பிக்கும் ஸ்தாபனத்தலைவருக்குப் படிப்பு குறைவானால் உன் M.A. யும், I Class  உம் உனக்கு எதிரி.

எந்த இடத்தில் எதற்கு வலுவுண்டு, எந்த அளவுக்குண்டு என்பதை இடம், பொருள் ஏவலைப் பொருத்து நிர்ணயிக்க வேண்டும்.

ஒருவருடைய குறை உன் உணர்ச்சியை கிளறுகிறது எனில் அக்குறை உன்னிடமிருக்கும்.

*********

நம் குறையை நாம் காண மறுப்போம். அது நமக்கு உறுத்தலாக இருக்கும். நாம் அதை அறிவதில்லை. பிறரிடம் அதைக் கண்டால், நம் குறை நமக்கு "நினைவு வரும்''. நினைவு வருவதையும் நாம் அறிவதில்லை. அதைக் கண்டாலே பிடிக்காது.

லஞ்சத்தை அளவு கடந்து கண்டிப்பவர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் என்றாலும், மனத்தால் அதை விரும்பி, சந்தர்ப்பத்தால் அதை நாடாதவர்களாக இருப்பார்கள். குறையில்லாதவர்கள் கண்டிக்க மாட்டார்கள். கண்டித்தால் அதில் தீவிரம் இருக்காது. தீவிரம் இருந்தால் அது "உள்ளே'' யிருக்கும்.  

மற்றவர் கழுத்தை அறுத்து, தன் சிறு சௌகரியத்தைப் பூர்த்தி செய்யும் மனநிலை உள்ளவர், அதை விட்டுவிட்டால், அளவுகடந்து முன்னேறலாம்.

********

தமக்கு வேண்டியவருக்கு வேலை கொடுக்க வேண்டி 20 வருஷமாக வேலை செய்தவர் 7 பிள்ளையுடையவர் என்பதையும் பொருட்படுத்தாமல், அவரை டிஸ்மிஸ் செய்துவிடக் கூடியவருடைய மனநிலை இது. தான் பெறுவது சிறு சௌகரியம். பிறர் பெறுவது பேரிடி. இம்மனநிலை உள்ளவரால் - heinous crime- பஞ்சமா பாதகத்தையும் செய்யமுடியும். இவர் இச்சௌகரியத்தைப் பயன் படுத்தாவிட்டால் மனிதனாவார். அதனால் பெறும் பலன் அதிகம்.

கல்லூரி கட்டப் போகிறேன், பெருமை வேண்டும், என, நிலம் வாங்கப் போனவருக்கு, அங்கு ஏற்கனவே குடியிருந்தவர் தடை. பணம் கொடுக்கிறேன், இடத்தைக் காலிசெய் என்கிறார். அவர்களால் காலி செய்ய முடியவில்லை. ஆள் பலம் எல்லா இடத்தையும் காலி செய்தது. கல்லூரி ஏற்பட்டது. பெருமை வந்தது. எதிரி பதவிக்கு வந்தான். கல்லூரியைக் கொடு. பணத்தையும் தர வேண்டாம் என நீயே எழுதிக் கொடு என்றான். குடியிருந்தவருக்கு ஏற்பட்ட நிலை கல்லூரிச் சொந்தக்காரருக்கு ஏற்படும் என அவர் நினைக்கவில்லை. வாழ்க்கை கை மேல் பலன் தரும்.

உனக்கேயுரிய தாழ்ந்த இடத்தைத் தேடி நீ மீண்டும் போனாலும் அங்குப் பிரபலமாக இருக்கலாம் எனில், மீண்டும் உயர்ந்த இடத்திற்கே வந்தால் வானளாவ உயரலாம் என்பதை நீ அறிய வேண்டும்.

******

நல்ல வாய்ப்பு வந்தபின், அதற்குத் தகுந்தாற்போல் உயர்ந்த பழக்க வழக்கங்களை மனிதன் மேற் கொள்கிறான். ஆனால் தன் தாழ்ந்த சுபாவத்தால் உயர்ந்த பழக்கங்களை வெளிப்படுத்தச் சொல்வது சிரமம். கொஞ்ச நாளைக்கு முயன்று செய்வான். பிறகு பழைய தாழ்ந்த நிலைக்குப் போகப் பிரியப்படுவான். போனால், உயர்ந்த நிலையிலிருந்து கீழே வந்ததால், இங்கு பிரபலமாக இருப்பான். அதுவே அவனுக்குத் திருப்தி தருகிறது.

குப்பை மேட்டில் பட்டினியாக இருந்தவருக்கு ஆபீசர் வருமானமும், அதற்குரிய அந்தஸ்தும் வந்தது. சில ஆண்டு உயர்ந்ததையும், வருமானத்தையும் அனுபவித்தவர் மீண்டும் குப்பை மேட்டை நாடினார். அங்குப் பிரமாதமான வரவேற்பு. வந்த புதிய அந்தஸ்திற்குத் தக்கவாறு தம் மனநிலையையும், பழக்கத்தையும் மாற்றிக் கொண்டால், மேலும் உயர்வு காத்திருப்பதை அவர் அறியார்.

எந்த உயர்வையும் முயன்று பெறுவதைவிட, தாழ்ந்தநிலையில் தன் சுபாவத்திற்கேற்ப, ("சல்லீசாக'') "இயற்கை'' யாக வாழ மனிதன் பிரியப்படுகிறான்.

உயர்வுக்குரிய முயற்சி மனிதனுக்கு ரஸிப்பதில்லை. தாழ்விலுள்ள சௌகரியம் சுவையாக இருக்கிறது.

எலியைக் குழந்தையாக்கி, தெய்வங்களை மணக்கச் சொன்னால், மீண்டும் எலியாக மாறி எலியை மணப்பதையே விரும்புவதை ரிஷிக்கு உணர்த்திய கதை மனித சுபாவத்தின் "சுவை''யை உறுதிப் படுத்துகிறது.

ஆதரவு அளித்தவருக்கு நன்றியும் சொல்ல முடியாதவர், மீண்டும் ஆதரவு கேட்பவராக இருந்தால், அவர் தம் போக்கை முறையாக மாற்றினால், பெரிய உயர்வுண்டு.

*********

தொழில் ஆரம்பித்தார். சிறு தொழில் என ஆரம்பித்தது மேலும் மேலும் சிறிய தொழிலாயிற்று. தொட்டனவெல்லாம் கரியாயின.5 வருஷம் ஓடியது. தொழிலை மூடுவதா, ஓடுவதா? நடத்துவதா?  

நடத்துவதென்றால் எப்படி என்ற நிலையில் ஒருவர் வந்தார். நிலையை மாற்ற எளிய முறையைச் சொன்னார். நிலைமை இரண்டு நாளில் மாறியது. எதுவும் கூடி வந்தது. இதுவரை இருந்த மாதிரியில்லை. ஒரு நாள் திடீரென பாக்டரி முன் ஒரு கார் வந்து நின்றது. கார்கள் இந்த பாக்டரிக்கு வருவதில்லை. அதிலிருந்து ஒருவன் வந்து முதலாளியைக் கூப்பிட்டான். காரில் ஒரு சாமியார் இருந்தார். சாமியார் முதலாளியைப் பார்த்து, "ஐந்து வருஷமாக எல்லாம் அழிந்தது. இனி பொற்காலம் நூறுமடங்கு உயரலாம்'' என்றார்.

மாறிய நிலைக்குரிய பேச்சும், செயலும் எழுந்தன, மாற வழி சொன்னவர் உடனிருக்கிறார். அவருக்கு "நன்றி'' என ஒரு வார்த்தை சொல்ல முதலாளிக்கோ, அவர் தம்பிக்கோ தோன்றவில்லை. ஒரு வேளை மீண்டும் தொந்தரவு வந்தால் கேட்பார்கள் போலிருக்கிறது!

இந்த முதலாளி "நன்றி'' சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். நன்றியை உணர வேண்டும். நன்றியை உணராதது விலங்கு வகையைச் சேர்ந்தது என அறிய வேண்டும். மனிதனாக மாற ஆசைப்பட வேண்டும். இனி மறக்காமல் நேரம் வந்தால் நன்றியுணர்வு வெளிப்பட வேண்டும். அப்படி மாறினால் sky is the limit வானளாவ உயரலாம்.

அன்பு, ஆதரவு, ஆசி, பலன் ஓரிடத்திலிருந்து வந்தால், பயன்பெற்றவர் அதற்குரிய நன்றியை வேறொருவர்க்குச் செலுத்துவதுண்டு. வந்ததை இழக்கும் முறை இது. உரியவர்க்கு, உடையதை அளித்தல் அவசியம்.

******

ஏழை அரசியல்வாதியின் மீது பாசமுள்ள வசதியற்ற நண்பர் ஒருவர். நண்பருக்கு வேண்டிய செல்வர் ஒருவர். அரசியல்வாதி பட்டினி கிடப்பதைக் கண்டு எந்த நண்பரும் உதவ முன்வரவில்லை. இந்தச் செல்வரையும் அரசியல்வாதி அறிவார். அவர் எப்பொழுதுமே உதவியதில்லை. வசதியற்ற நண்பர் மாதம் ரூ.180/- சம்பளம்  பெறுபவர்.ரூ.500/- ஐத் தேடிப்பிடித்து அரசியல்வாதிக்கு நன்றிப் பெருக்குடன் அளித்தார். அரசியல்வாதி பணத்தைப் பெற்றுக் கொண்டு பணம் செல்வரிடமிருந்து வந்தது எனத் தவறாகப் புரிந்துகொண்டு ''உங்கள் செல்வ நண்பருக்கு என் நன்றியைத் தெரிவியுங்கள்" என்றார். கொடுத்தவர் திடுக்கிட்டார். கொஞ்சநஞ்சம் உதவியும் அரசியல்வாதி வாழ்வில் அன்றே அஸ்தமித்து விட்டது. நன்றியில்லாதது குறை.நன்றியைச் சம்பந்தமில்லாதவருக்குச் செலுத்த நினைப்பது குற்றம்.

எரிச்சல் வந்தால், அதை இழந்து முன்னேற வாய்ப்புண்டு என்று அறிய வேண்டும். அதேபோல் முன்னேற உள்ள வாய்ப்பை அறிந்து முழுவதும் பயன்படுத்த வேண்டும்.

*******

வலிமை குன்றியவன் ஒரு காரியத்தில் ஈடுபட்டுத் தோல்வியுற்றால் மனமுடைந்து மூலையில் உட்கார்ந்துவிடுவான். அல்லது அழுவான். மேற்கொண்டு செய்வதை அவனால் அறிய முடியாது. அதற்கடுத்த உயர்ந்த நிலையிலுள்ளவனுக்கு எரிச்சல் வரும். எரிச்சல் வந்தால், இயலாமை எனப் பொருள். வந்த தோல்வியை ஏற்க முடியவில்லை. வெற்றியைப் பெற முடியவில்லை என்ற நிலையிலுள்ளவனுக்கு எரிச்சல் வரும். இதற்கடுத்த நிலையிலுள்ளவன் தோல்வி ஏற்பட்டவுடன் நிதானமாகத் தோல்விக்குரிய காரணத்தை ஆய்ந்து, களைய முற்படுவான். எரிச்சல் வந்தால், இவனால் அடுத்த கட்டத்திற்குப் போகமுடியும் எனப் பொருள். நிதானமாக எரிச்சலை அடக்கி, சிந்தனை செய்தால் பலன் உண்டு.

தோல்வியில் முன்னேறும் வாய்ப்பிது. தோல்வியற்ற நிலையிலும், வெற்றியிலும் முன்னேறும் வாய்ப்புகள் ஏராளம். அவற்றை அறிந்து பயன்படுத்த வேண்டும். சில உதாரணங்கள்.

  • தோல்வியை எதிர்பார்த்தபோது, தோல்வி வரவில்லை எனில், முயன்றால் பெருவெற்றியுண்டு எனப் பொருள்.
  • தோற்ற பின்னும் மரியாதை குறையவில்லை எனில், நமக்குக் கண்ணுக்குத் தெரியாத பலம் இருக்கிறது, நாம் அதைப் பயன்படுத்த வேண்டும் எனப் பொருள்.
  • திவாலானவர்க்கு வலிய கடன் கொடுக்க முன் வந்தால், நாணயமும் திறமையும் அபரிமிதமாக இருக்கின்றன, அவற்றை முன்னுக்கு வைத்தால் பெரும் பலனுண்டு என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  • எதிரி திறமையை மெச்சினான் எனில், திறமை அதிகம், நாம் வாழுமிடம் பணிவான இடம் என அறிய வேண்டும்.பணிவான இடத்தில் அபரிமிதமான திறமை அளவு கடந்த பலனைத் தரும்.

பொதுவாக அனைவரும் பாராட்டுவது உனக்குக் கசப்பாக இருந்தால், அது வாழ்க்கை வளம் பெறும் வாயிலாகும்.

*******

எல்லோரும் ஆர்வமாக வீடு கட்டுகிறார்கள். நல்ல வருமானமிருந்தும் வீடு கட்ட நினைத்தால் ஊதாரிக்குக் கசப்பாக இருக்கும். கசப்பாக இருப்பது தன் ஊதாரித்தனத்தால். வீண் செலவு செய்பவனுக்குக் கடமைகளைச் செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கள், தம்மை மாற்ற விரும்பினால், சாதாரண மனிதரை விட அதிக முன்னேற்றம் பெறுவர். (Tour) பிரயாணம் செய்ய அனைவரும் பிரியப்படுவார்கள். ஒருவருக்குப் பிரயாணம் என்றாலே கசப்பு எனில் சிறு வயதில் பிரயாணச் சம்பந்தமான (complex) விஷயத்தில் மனம் நொந்து போயிருக்கும். அதனால் இன்று அது பிடிக்கவில்லை. தம் மனத்தைச் சோதனை செய்தால், கசப்பு நீங்கும். அத்துடன் தடை விலகும். அளவு கடந்த தெம்பு உற்பத்தியாகும். இதுவே பொது விதி, விலக்கான உயர்வும் உண்டு. தாழ்வும் உண்டு. அனைவரும் விரும்புவதை ஒருவர் வெறுத்தால், அந்த இடத்தில் அவர் மனத்தில் தடையிருக்கும். அதை விலக்கினால் வாழ்வு மலரும்.

அன்றாட வாழ்வில் அவசியமானது உனக்கு வெறுப்பாகவும், கசப்பாகவுமிருந்தால், அங்கு உன் வாழ்வின் இரகஸ்யமிருக்கும். அதனுள் ஒரு சிக்கலிருக்கும் (complex). அதை ஆராய்வது நல்லது.

*******

உலகம் போற்றுபவரை நீ வெறுத்தால், உலகம் போற்றும் பண்பு உனக்குக் கசந்தால், அவற்றையும் பரிசோதனை செய்வது நல்லது.

********

மேற்சொன்ன கூற்றுகளுக்கு எடுத்துக்காட்டாக இலட்சியப் புருஷர்களிருந்திருக்கிறார்கள். அவர்கள் நிலையை விதிவிலக்காகக் கொண்டு, இங்குக் கருத வேண்டியதில்லை. பரமஹம்ஸருக்குத் தங்கம் உடலைக் கூசும்படிச் செய்தது. புத்தர் மனைவியை விட்டகன்றார். அசோகர் வெற்றியை உதறித் தள்ளினார். மகாத்மா பதவியை வெறுத்தார். நாம் அன்றாட வாழ்வைக் கருதுவதால் விலக்கானவற்றை இங்குச் சேர்த்து குழப்பத்தை உற்பத்தி செய்ய வேண்டாம்.

வெற்றி, பணம், காதல், பிரியம், அழகு, உடை, பிரயாணம், நல்ல உணவு, வசதி, புகழ் அனைவரையும் கவருவன. மகாத்மாவை அனைவரும் போற்றுவர். இனிமையான பழக்கம் எவரையும் கவரும். இவற்றை வெறுப்பவருண்டு. உத்தமரையும், உத்தமகுணங்களையும் ஒதுக்குபவருண்டு. வாழ்வில் நடந்த நிகழ்ச்சியால் அனைவருக்கும் பிரியமானது ஒருவருக்கு கசந்து போயிருக்கும். ராஜாஜிக்கு எலக்க்ஷன் என்றால் அலர்ஜி. அவர் ஆரம்ப நாட்களில் தேர்தலில் நின்று தோற்றுப் போயிருக்கிறார். அதனால் 70ஆம் ஆண்டிலும் எலக்க்ஷனை ஒதுக்கினார். பேச்சுத் திறமையுள்ளவருக்கு ஒரு பேச்சுப்போட்டியில் நன்றாகப் பேசியும் பரிசு தவறியிருக்கும். அதிலிருந்து பேசுவதே கசப்பாகியிருக்கும். தாயாரை விரும்பாத குழந்தையில்லை. சிறுவயதில் தாயார், சூடு போட்ட குழந்தைக்குத் தாய் என்ற சொல்லே விஷமாக இருக்கும். சிறந்த பாடகியை, உயர்ந்த நடிகனை, உத்தமமான தலைவரை, அற்புதமான பழக்கத்தை இதுபோன்ற நிகழ்ச்சியால் ஒருவர் வெறுக்க நேரிட்டிருக்கும்.

இன்று அந்த வெறுப்பைச் சோதனை செய்தால் உண்மை விளங்கும். உணர்ச்சியும், எண்ணமும் அதன் பின் உருண்டு திரண்டு ஒளிந்திருக்கும். காரணம் விளங்கினால், ஒளிந்துள்ள சக்தி வெளி வரும். புனர் ஜன்மம் வரும்.

I.C.S.இல் 8வது (rank) வந்த தம் தகப்பனாரை, விலக்கி 9வது வந்தவருக்கு உத்தியோகம் கொடுத்து, தகப்பனாரை விட்டுவிட்டிருந்தால், அத்துடன் தகப்பனாருக்கு I.C.S என்றால் கசப்பாகி விட்டிருக்கும். நாட்டில் 8 பேருக்கு அந்த நாளில் கிடைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்து பிறகு ஏமாற்றப்பட்டால் அது விரக்தியளிக்கும். அடுத்த தலைமுறையின் உணர்வையும் அது பாதிக்கும். இது ஒரு சிக்கல் மனப்பான்மை (complex) ஆகி நம் சக்தி முழுவதையும் ஆட்கொள்ளும். காரணம் புரிந்தால் பெருவெள்ளம் போல் புத்துயிர் எழும்.

***********

ஜீவிய மணி

 

தீமை என்பது ஆனந்தத்தை உற்பத்தி செய்யும் ஆரம்ப நிலை.

*******

Comments

மனித சுபாவம் III Para 11  - 

மனித சுபாவம் III

 
Para 11  -  Line 2     - யலுதல்                                 -   முயலுதல் 
Para 36  -  Line 2     - அüப்பதையும்                       -   அளிப்பதையும்
Para 39  -  Line 1     - முக்கியத்துவமிருந் தால்   -   முக்கியத்துவமிருந்தால்
Para 43 -  Line 3      - கொந்தüத்து                          -   கொந்தளித்து 
Para 54 -  Line 2      -  ன்                                          -   முன்
Para 54 -  Line 3      -  அüத்து                                  -   அளித்து
Para 58 -  Line 2      -  தாழ்ந்திருந் தால்                -   தாழ்ந்திருந்தால்
Para 59  -  Line 1      - ஙகஆ                                    -   MLA
Para 59  -  Line 2      - ஙகஆ                                    -   MLA
Para 64  -  Line 1      - வாங்காதவர் கள்                -   வாங்காதவர்கள்
Para 79  -  Line 3      - வெüப்பட                              -  வெளிப்பட
Para 84  -  Line 5      - நிலையிலுள்ள வனுக்கு    -  நிலையிலுள்ளவனுக்கு
Para 86  -  Line 1      - யன்றால்                               -  முயன்றால்
Para 96  -  Line 5      - எலக்ஷன்                              -  எலக்க்ஷன்
Para 96  -  Line 6      - எலக்ஷனை                          -  எலக்க்ஷனை
Para 98  -  Line 2      - ஒüந்திருக்கும்                      -  ஒளிந்திருக்கும்

 

motnir



book | by Dr. Radut