Skip to Content

12. அன்னை இலக்கியம் - தெய்வீக ஆனந்தம்

அன்னை இலக்கியம்

தெய்வீக ஆனந்தம்

இல. சுந்தரி

ஸ்ரீ அன்னையின் திருமுன் அமர்ந்து கண்ணை மூடியிருந்தாள் உமா. ‘கிரேஸ் மதர்’ என்று அன்பர்கள் குறிப்பிடும் அந்தத் திருமுகமே அகத்திலும் தெரிந்தது. மனம் இலேசாகி ஓர் உன்னத உணர்வு உற்பத்தியானது. அதைப் பேரானந்தமாக அவளால் உணர முடிந்தது. அந்த முகத்தில் தோன்றும் கனிவு, அந்தப் பார்வையில் தெரியும் மெல்லிய சிரிப்பு, எவ்வளவு அழகு. இந்த அழகும், சிரிப்பும் தூய்மை ஒன்றில்தான் பிறக்க முடியும்.

இந்த ஸ்ரீ அன்னையின் திருவுருவப்படம் அவளுக்குக் கிடைத்ததை நினைக்கிறாள். அவள் தந்தைக்கு இவ்வூருக்கு மாற்றல் உத்தரவு வரும்முன் பழையவூரில் ஒரு பள்ளியில் தற்காலிகமாக இசைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தாள்.

தெய்வீகப்பற்றாலும், தன்னினிய குரல் வளத்தாலும் அனைவரையும் மெய்ம்மறக்கச் செய்து விடுவாள். இவள் இனிய குரலும், இனிய குணமும் மாணவிகளை இவள்பால் ஈர்த்ததில் வியப்பில்லை. வகுப்பு நேரங்கள் தவிர மாணவிகள் இவளையே வளைய வருவதும் பாடல் கற்றுக் கொள்வதுமாயிருந்தனர். “உமா வேலைக்கு வந்ததிலிருந்து பிள்ளைகளுக்குப் படிப்பில் கவனமேயில்லை” என்று இவள் சிநேகித ஆசிரியை இவளைக் கேலி செய்வாள்.

அந்நிலையில்தான் வசந்தி என்ற மாணவி தன் வீட்டில் நடைபெறும் தியானத்திற்கு அழைத்தாள்.

ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் பற்றியும் தியானமையம் பற்றியும் கூறி, அங்கு ஸ்ரீ அன்னைக்கு அவள் இசையைச் சமர்ப்பித்தல் பெரும் பேறு என்று வசந்தி கூறினாள். ஆவலுடன் உமாவும் சென்று தியானக் கூடலில் கலந்து கொண்டாள். ஒரு சகோதரி தானியற்றிய ஸ்ரீ அன்னை பாடலை உமாவிடம் கொடுக்க அதை உமா அங்கு இறை வணக்கமாகப் பாடினாள். பிறகு சாவித்ரி படித்தல் அன்பர் அனுபவம் கூறல், சிறப்புச் சொற்பொழிவு, தியானம் மலர்ப்பிரசாதம் வழங்கல் என்று யாவும் சிறப்பாக முடிந்தன. அன்றைய கூடலுக்குப் பிறகு ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் பற்றி அறிய ஆவல் கொண்டு வசந்தியிடம் கேட்டாள். வசந்தி தன் தந்தையிடம் சொல்லி நிறைய புத்தகங்கள் உமாவிற்கு வாங்கிக் கொடுத்தாள்.

இசைப்பயிற்சி நேரம் தவிர மற்ற நேரங்களில் வீண் பேச்சு ஏதுமின்றி எல்லாப் புத்தகங்களையும் படித்தாள். அந்நிலையில் இவள் தந்தைக்கு இங்கு மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. எனவே, எல்லோருடனும் அன்புடன் விடை பெற்றாள் உமா. அவரவர்களும் இவளுக்கு ஏதேதோ பொருட்களை அன்புடன் அளித்தனர். வசந்தி தன் பிரிய ஆசிரியருக்கு இந்த ‘கிரேஸ்மதர்’ லேமினேஷனைப் பாதுகாப்பாக அளித்தாள். தியான கூடத்தில் பார்த்த அந்த மதரின் சிரித்த பார்வையை இவள் எண்ணி எண்ணி மகிழ்வாள். அதே மதர் படம் கிடைத்ததும் ஸ்ரீ அன்னை தன் அன்பை ஏற்று தன்னிடமே வந்து விட்டதாக உணர்ந்து பூரித்தாள்.

புதியவூரில், இப்புதிய வீட்டில் ஓரறையில் அன்னையை எழுந்தருளச் செய்து அமைதியும், தூய்மையும் காத்து அழகிய மலர்களைச் சமர்ப்பித்து தன் பணிகளைத் தொடங்கப் பழகியிருந்தாள். புறத்தில் எத்தனை வேலைகள் இருப்பினும் அன்னை அறையில் அடிக்கடி வந்து தஞ்சம் புகுவது வழக்கம்.

இந்த அறையில் வந்தமர்ந்து சிறிது நேரம் கண்ணை மூடியிருந்தாலும் போதும், அந்த அற்புத முகம் அகத்தில் மலர்ந்து ஆனந்தம் தரும். அன்னையே இந்த அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் நானெப்படி நன்றி சொல்வேன் என்று எண்ணுவாள். இந்த அன்னையின் கண்கள் உயர்ந்த ஆனந்தத்தைப் பொழிவதைப் பலமுறை உணர்ந்திருக்கிறாள். இதன் விளைவு இவளைக் காண நேர்பவர்களுக்குத் துன்பம் விலகி நல்லது நடக்கிறது. இவளிடம் எதைப் பெற்றாலும் ராசியாக இருக்கிறது என்கிறார்கள். மனம் அமைதியற்ற நேரத்தில் இவள் வந்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறார்கள். சிறிது நேரம் இவளுடன் பேசினாலும் மனம் சந்தோஷமாகிறது என்கிறார்கள். இதன் மகிமை மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். இவளுக்குப் புரிகிறது. இவள் அனுபவிக்கும் அன்னை இன்பம் இப்படிப் பரவி மகிழ்வூட்டுகிறது என்று இதைப்பற்றி எவரிடமும் எதுவும் சொல்வதில்லை. ஆனால் அன்னையே! இப்படிக் கருணை பொழியும் உமக்கு நானெப்படி நன்றி கூறுவேன். எங்களை மகிழ்வூட்டும் தங்களை நான் எப்படி மகிழ்வூட்டுவேன் என்று சதா எண்ணிய வண்ணமிருந்தாள். அப்போது அன்றைய பதிவுத் தபாலில் இவள் மாணவி வசந்தி உமாவிற்கு ‘வெள்ளை ரோஜாக்கள்’ என்ற நூலை அன்புடன் அனுப்பியிருந்தாள்.

பொறுமையுடன் பார்சலைப் பிரித்து, கண்ணில் ஒற்றிக்கொண்டு புத்தகத்தைப் பிரித்தவுடன் ஒரு செய்தி கண்ணில்பட்டது. “இறைவனின் பேரானந்தத்தால் நிறைந்திரு, என்னை மகிழ்ச்சிப்படுத்த அதுவே மிகச் சிறந்த வழி’’ என்றிருந்தது.

தான் ஸ்ரீ அன்னையிடம் கேட்ட கேள்விக்கு உடனே அன்னை பதிலளித்த விதத்தை எண்ணி எண்ணி கண்ணீர் மல்கினாள்.

தனக்கு அடிக்கடி நேரும் இந்த ஆனந்தம் பேரானந்தம் என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். புறக்காரணம் (பணம், புகழ், பதவி, அணிமணிகள்) என்று எது பற்றியுமில்லாமல் திடீர்திடீரென ஓர் ஆனந்தம் உள் நிகழ்வதை அனுபவித்த-துண்டு. அதுபற்றி மேலும் தெளிவு கொள்ள விரும்பி, அன்னையைப் பிரார்த்தித்து, மேலும் அந்தப் புத்தகத்தின் வேறொரு பக்கத்தைப் பிரிக்க, “உள்நோக்கம் ஏதுமின்றி சுயம்புவாக நம்முள் எழக்கூடிய ஒரே உணர்ச்சிப் பெருக்கு பேரன்பாகும். அந்த அன்பிற்குப் பேரன்பைத் தவிர எந்தக் காரணமும் இருக்க வேண்டியதில்லை’’ என்ற செய்தி கண்ணில்படுகிறது. சொல்லொணா நன்றியுணர்வு சுரந்தது.

இந்த ஆனந்தம் உள்ளெழுவது எப்போதும் நிலைத்திருக்கத் தான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிய போது ‘புஷ்பாஞ்சலி’ என்ற நூலில் படித்த கருத்து நினைவில் எழுந்தது. மலர்கள் இருக்கும் திறனை அதிகப்படுத்தும் தன்மையுடையனவாகவும், இல்லாத அம்சத்தை உற்பத்தி செய்யும் சிருஷ்டி கர்த்தாவாகவும் செயல்படும் என்ற குறிப்புடன் ஓரட்டவணையில், சில மலர்களும் அவை தரும் பலன்களும் குறிப்பிடப்பட்டிருந்ததில் திராட்சை என்ற கனியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அது பெற்றுத்தரும் பயனாக ‘தெய்வீக ஆனந்தம்’ குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுக்கு வர தெளிவு பெற்றாள்.

‘நீ எதை விரும்புகிறாயோ அதை ஆண்டவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்ற கருத்தும் இங்குப் புலப்பட திராட்சை வாங்கி வரலாம் என வெளியே புறப்பட்டாள்.

கடை வீதிக்குப் போகும் முன்பே, அங்கு வழியில் ஒரு மரத்தடியில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ஒரு கூடையில் திராட்சை பழத்துடன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். பழங்கள் புதியதாக இருந்தன. அங்கேயே வாங்கிவிடலாம் என்றெண்ணி கூடையருகே சென்று நின்றாள்.

பழக்காரப் பெண்மணியோ இவள் வந்ததைக் கவனியாமல், வியாபார சிந்தனையே இல்லாமல் ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தாள். உமா பொறுமையுடன் ஸ்ரீ அன்னையின் திருமுகத்தை எண்ணியபடி நின்றிருந்தாள்.

எதிர்ப்பக்கக் கடையிலிருந்து ஒரு சிறுவன் தெருவைக் கடந்து வந்து “மங்காத்தா தூங்குறியா? யாவாரத்தைக் கவனி. அம்மா எம்மாந்நேரமா நிக்குது?’’ என்று கூறிச் சென்றான்.

திடீரென உறக்கம் விழித்தது போல் சிந்தனை கலைந்த மங்காத்தா உமாவை நிமிர்ந்து பார்த்து, ‘வா தாயி. ரொம்ப நேரமா நிக்குறியா? ஒரு பேச்சு கூப்பிடக்கூடாதா? ஏதோ ரோசனை, கவல. ஒண்ணும் மனசுல வைக்காத தாயி’ என்று தன் கவனக் குறைவுக்குப் பணிவாக மன்னிப்புக் கேட்பது போல் பேசினாள்.

“அதனால பரவாயில்லைங்க. உங்களுக்கு என்ன கவலையோ? எதுவாக இருந்தாலும் பொறுப்பைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள். அவர் உங்கள் கவலையைப் போக்கிவிடுவார். எல்லாம் சரியாகிவிடும்’’ என்று அந்த வேதனைக்குரியவளுக்கு இதம் கூறினாள் உமா.

“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் கூறுவது (வழங்குவது)” என்று வள்ளுவர் தெரியாமலா கூறியிருக்கிறார்.

உமாவின் இன்சொல் மங்காத்தாவின் மனப்புண்ணை ஆற்றியது. காலையிலிருந்து ஒடிந்து போன உள்ளம் நிமிர்ந்தது. இவளிடம் மனம் விட்டுப் பேசவும் தோன்றியது.

“தாயி ஒன்னெயப் பாத்தா நல்ல சனமா தோணுது. அதனால எம்மனசு சங்கடத்த ஒங்கிட்ட சொல்லிடறேன் தாயி. தப்பா நெனக்கலன்னா எனக்கு ஒரு வழி சொல்லு தாயி” என்று ஆறுதல் வேண்டிப் பேசினாள்.

“அதனாலென்ன சொல்லுங்க எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்” என்றாள் உமா அன்புடன்.

“நாங்க மூணு பேரு பக்கத்து கிராமத்திலேந்து இங்கிட்டு வந்து பழயாவாரம் செய்யுறோந்தாயி. மொத்தயாவாரி (வியாபாரி) கிட்ட மூணு பேரும் ஒண்ணாத்தாம் பழம் வாங்குகிறோம். நா கொஞ்சம் தரும நாயம் (தர்மம், நியாயம்) பாக்குறதால அதிக லாபம் சம்பாரிக்கப் பிரியப்படாம கொறஞ்ச வெலைக்கு வித்துப் போடுவேன். சனங்க எங்கிட்ட வாங்கிடறாங்க. எங்கூட வர சரோசாவும், தில்லியும் எம்மேல ரொம்பக் கோபப்படுகிறாங்க. என்னாலதாம் அவங்க யாவாரம் கெடுறதா என்னய ஏசிப் பேசுறாங்க. நாங்கொஞ்சம் பயந்த கொணமா இருக்குறதால என்னெ அடக்குறாங்க. நாந் தெருவுல வியாபாரம் செஞ்சா அவங்களுக்கு நஷ்டம் வருதாம். அதனால நா இந்த மரத்தடியவுட்டு நகரப்படாதுன்னு மெரட்டிட்டுப் போயிருக்காங்க அவுங்களுக்கு ஆளுபடையிருக்கு. எனக்கு யாருமில்லை தாயி. அதான் கவலையில குந்தியிருந்ததுலே நீ வந்ததையே கவனிக்காம போயிட்டேன். நா என்ன செய்யுறது? சொல்லுதாயி ஒரு வழி சொல்லு” என்று சோகமாய்ப் பேசினாள்.

“நீங்க என்னை நம்பி அன்பா சொன்னதால் நானும் உங்களுக்கு ஒன்று சொல்லலாமென்றால் சொல்கிறேன்” என்று அவள் உத்தரவை எதிர்பார்த்தாள் உமா.

“சொல்லுதாயி கோயில்ல இருக்கற ஆத்தா கணக்கா வந்து பரிஞ்சு பேசுற ஒம்பேச்சை கேக்காம போவேனா. நீங்கள்ளாம் படிச்சவங்க. நல்லது கெட்டது புரியும். எனக்கென்ன தாயி தெரியுது, சும்மா குந்தி வெசனப்படுறேன்” என்று கூறினாள்.

“எனக்கொரு பெரியம்மா இருக்காங்க. அவங்க எல்லாக் கஷ்டங்களும் தீர அழகா வழி சொல்வாங்க. அவங்க சொல்கிறத கேட்கும்போது புரியாது. ஆனால் அதன்படி நடந்தால் நிச்சயம் துன்பம் போய்விடுகிறது. அதை நான் பலமுறை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அவங்க சொல்லியிருக்கும் அறிவுரைப்படி ஒரு வழி சொல்கிறேன். செய்து பார்த்தால் உங்கள் துன்பம் தீரும். நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்” என்றாள்.

“சரி தாயி சொல்லு. அதும்படியே நடந்துக்கிறேன். எனக்கு வம்பு சண்டையெல்லாம் புடிக்காது. எப்பவும் சண்டையன்னா ஒதுங்கி விட்டுக் கொடுத்துடுவேன். அவுங்க ஏசினதுதான் மனசு நோவுது” என்றாள் மங்காத்தா.

“உங்க நல்ல குணத்திற்கு நான் சொல்லும்வழி நிச்சயம் பலிக்கும். நமக்கு யாருடனாவது ஏதாவது பிரச்சனை வந்தால் அவங்க மேல தப்பு காண்பதற்குப் பதிலா நம்மிடம் அதற்குக் காரணம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வரவேண்டும். அடுத்தது பிரச்சனையை நம்ப பக்கமா பாக்காம அவங்க பக்க நியாயத்தைப் பார்க்க வேண்டும். உங்க சிநேகிதிகள் கூடுதல் லாபம் எதிர்பார்க்கிறாங்க. நீங்க கொறச்ச லாபம் பார்க்கிறீங்க. உங்க எண்ணம் நல்லதுதான். ஆனால் அவங்களைப் பொறுத்தவரை அவங்களுக்கு அது இடைஞ்சலா இருந்திருக்கு. இதை உங்க மனம் ஏத்துக்கிட்டா இந்தப் பிரச்சனையும் இதனால் வந்த வருத்தமும் சுத்தமா நீங்கி விடும். சோதனை செய்து பாருங்க என்று பொறுமையாக கூறினாள் உமா. சரி மா, நீ சொன்னதை நா அப்படியே ஏத்துக்கிடறேன். நா கொறைச்ச விலைக்கு கொடுக்கறதால அவங்க யாவாரம் கெட்டுப் போவுதுன்னு புரிஞ்சிக்கிறேன். அவங்களுக்கு எம்மேல கோபம் வர்றது நாயந்தான்னு ஏத்துக்கிறேன்” என்றாள் மங்காத்தா.

“ரொம்ப மகிழ்ச்சி நான் இப்போ திராட்சை வாங்க கடைவீதிக்கு வந்தேன் வழியில் உங்க கூடையைப் பார்த்ததும் கடைக்குப் போகாமல் இங்கேயே நின்று விட்டேன். திராட்சை கிலோ என்ன விலை? எனக்கு ஒரு கிலோ கொடுங்கள்”.

“ஒரு கிலோ நாப்பது ரூவாம்மா” என்று கூறி நிதானமாக ஒரு கிலோ பழத்தை எடையிட்டு பணிவுடன் கொடுத்தாள் மங்காத்தா.

பெற்றுக்கொண்ட உமா, ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்தாள். பெற்றுக் கொண்ட மங்காத்தா “நில்லு தாயி, இதுதான் மொதல்யாவாரம் மீதி பணம் மாத்திக்கிட்டு வந்திடறேன்” என்று எதிர்புற சாலையோரக் கடைக்குப் போகப் புறப்பட்டவளை “நீங்கள் எங்கும் போய் மாற்ற வேண்டாம். இது எங்கவூர்ல ஐம்பது ரூபாய்தான். நீங்க குறைவாய் கேட்டிருக்கீங்க. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நான் போய் வரேம்மா” என்று புன்சிரிப்புடன் விடை பெற்றாள் உமா.

இப்படி அன்புடன் அதிகப்பணமும் கொடுத்து விடை-பெ ற்றுப் போகும் வாடிக்கையாளர் ஒருவரையும் அவள் இதுவரை பார்த்ததேயில்லை.

“மவராசி! நல்லாயிருக்கணும்” என்று கூறிய வண்ணம் ரூபாய் நோட்டைக் கூடையைச் சுற்றி திருஷ்டி கழித்துத் தன் சுருக்குப்பையில் வைத்துக் கொண்டாள்.

உடனே ஒரு புதிய கார் அருகில் வந்து நின்றது. காரிலிருந்து டிரைவர் இறங்கி என்ன பழம் இருக்கிறது என்று விசாரித்துவிட்டு, காருக்குள் இருக்கும் தன் முதலாளியிடம் போய், “ஐயா! திராட்சை இருக்கய்யா வெல கேக்கட்டுங்களா?” என்றான்.

கண்ணாடிக் கதவைச் சுழற்றி முழவதும் திறந்து பழத்தைப் பார்த்தவர், “நல்லாவேயிருக்கு வாங்கிவிடு” என்றார்.

டிரைவர் இவளிடம் வந்து விலை விசாரித்தான் “கிலோ நாப்பது ரூவாதான் ஐயா” என்றாள் மங்காத்தா “அம்மாடி இம்மாம் வெல சொல்லுறையே கொறச்சுக் குடு” என்று பேரம் பேசினான்.

இவன் பேசுவதைக் கேட்டு முதலாளி வண்டியை விட்டு இறங்கி வந்தார்.“என்ன முருகா அநியாயமா விலை கேட்கிறாய்? அவங்களே குறைத்துத்தான் சொல்றாங்க, நம்மவூர்ல இது அறுபது ரூபாய். சரிம்மா நீ நாலு கிலோ கொடு” என்றார்.

மரியாதையுடன் பழத்தை எடையிட்டுக் கொடுத்தாள். இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைக் கொடுத்து, “பழம் நல்லாவேயிருக்கு வச்சுக்கங்க” என்று அன்புடன் கொடுத்துவிட்டுக் காரில் ஏறினார்.

மங்காத்தாவுக்கு வியப்புத் தாளவில்லை. அந்தப் பொம்பளப் புள்ள வந்த நேரம் இம்மாஞ்சுருக்கா வித்திடுச்சு. கேட்டதைவிட கூடவே கொடுத்தாரு என்று என்றுமில்லா மகிழ்ச்சி பொங்க உமாவின் சாந்தமான முகத்தை நினைக்கிறாள்.

அந்தப்புள்ள சொன்ன வாக்கு பலிச்சிடிச்சு. அவங்க வீடு எங்கேன்னு கூட கேட்டு வைக்கலையே. தெய்வம் கணக்கா வந்தில்ல நல்ல வாக்கு சொல்லிப் போச்சு. மவராசி கையால அதிகமா கொடுத்துது. அதும்படியே மீதியும் வித்திடிச்சு. இத்தினி சுருக்கா யாவாரம் முடிச்சு ஊரு போய்ச் சேந்திருக்கமா? அந்தப் புள்ளய மறுபடி பாக்கணும். அதும் பெரியம்மாவாமே. அவுங்களையும் பாத்து நடந்ததைச் சொல்ல ரொம்ப ஆவலாத்-தானி ருக்கு. எங்க பாக்க, எப்படிச் சொல்ல என்று தனக்குத்தானே பேசியவாறு வெற்றுக் கூடையுடன் வீடு திரும்பினாள் மங்காத்தா.

நீண்ட நேரம் கடந்து வியாபாரம் முடித்துவிட்டு வந்த தில்லியும், சரோசாவும், “மங்காத்தா பாவம்! கூடையோடு குந்தியிருக்கும்” என்று பரிதாப உணர்வுடன் அவளைத் தேடி வந்து ஏமாற்றம் அடைந்தனர். “எங்கே போயிருப்பாள்? இங்கேதானே இருக்கச் சொன்னோம்?’’ என்று வியப்படைந்து எதிர்புற சாலையோரக் கடையில் சென்று விசாரித்தனர்.

“அந்தம்மா கூடையைக் காலி பண்ணி சீக்கிரமா காலையிலேயே போயிடிச்சு” என்றான் கடையாள்.

மிகுந்த வியப்புடன் ஊர் திரும்பினர் இருவரும். மறுநாள், “அவளே தெருவுக்குப் போகட்டும், இந்த மரத்தடி ராசியான இடம் போலிருக்கு. நாம இங்க குந்தி விப்போம். அவ போவட்டும்” என்று இருவரும் முடிவு செய்து மங்காத்தாவை தெரு வியாபாரத்திற்கு அனுமதித்தனர்.

மங்காத்தாவுக்கு ஏகமகிழ்ச்சி. வியாபாரமாவது! இலாபமாவது! இப்போ அந்தப் பெண்ணைப் பார்த்து அவள் வாக்குப் பலித்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்த வேண்டும். அதோடு மட்டுமின்றி அந்தப் பெண்ணின் பெரியம்மாவைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும். இனிமேல் ஏதாவது துன்பம் என்றாலும் அவர்களிடம் பேசத் தனக்கு உரிமை வேண்டும் என்று ஆர்வப்பட்டாள் மங்காத்தா.

முதன் முதலில் உமாவிற்கு நன்றி சொன்ன பிறகுதான் பழத்தை விற்க ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எந்தத் தெருவில் எந்த வீட்டில் தேடுவது என்று தெரியாமல், கூடையைத் தலையில் வைத்துக் கொண்டு கூவி விற்காமல் வீட்டைத் தேடிக்கொண்டே முதல் தெருவைத் தாண்டி இரண்டாம் தெருவில் புகுந்து சில வீடுகள் கடந்து விட்டாள். அந்தப் பெண் எந்த வீட்டிலாவது கண்ணில்பட மாட்டாளா என்று மனம் தேடிய வண்ணமிருந்தது.

வீடுவீடாய்ப் பார்த்துக் கொண்டே கூவி விற்காமல் வந்து கொண்டிருந்த இவளை மாடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த உமா பார்த்து விட்டாள்.

“பழக்காரம்மா” என்று மங்காத்தாவின் காதில் விழும்படி சற்றுகுரலை உயர்த்தி அழைத்தாள் உமா. அப்பாடா! இந்தக் குரலுக்குரியவரைத்தானே அவள் காண ஏங்கினாள். மனம் மலர்ந்தது. தெருவோரம் கூடையை இறக்கி குரல் வந்த திசையில் பார்வையை உயர்த்தினாள். உமா மலர்ச்சியாகப் படிகளில் இறங்கி வந்தாள். மங்காத்தாவும் நன்றியும், மகிழ்ச்சியுமாக அவளைப் பார்த்தாள். உமா கீழே வந்து கேட்டைத் திறந்தாள். கூடையுடன் உள்ளே நுழைந்தாள் மங்காத்தா.

“அம்மாடி! இதான் ஒங்கவூடா? ஒன்னய பாக்கத்தான் தாயி கூவி விக்காம தேடிக்கிணே வாறேன்” என்றாள்.

“என்னைப் பார்க்கவா?” என்றாள் உமா. “ஆமாந்தாயி எத்தினி பிரியமா பேசின. நீ எங்க இருக்கன்னு விசாரிக்கத் தோணல நேத்து. நீ அப்பால போன வொடனையே ஒரு பெரிய மனுஷன் காருல வந்து அம்மாம் பழத்தையும் வாங்கிக்கினாரு. நாப்பது ரூவா வெலதான் பேசினேன். அவுரே ஐம்பது ரூபா வெலக்கி வைச்சுக்கன்னு கொடுத்துட்டுப் போனாரு என்ன அதிசயம் நேத்து. அம்மாம் வெலக்கி, அம்மாஞ்சுருக்கா வித்ததேயில்லதாயி. அதான் அதை உங்கிட்ட சொல்லி, ஒங்க பெரியம்மா புத்தி சொல்லுவாங்கன்னியே அவங்களையும் பாத்து போகணும்னுதாந்தாயி கூவி விக்காம நேர தேடிக்கிட்டு வாறேன்” என்று தன்னாவல் நிறைவேறியதை மகிழ்வுடன் கள்ளம் இல்லாது கூறினாள் மங்காத்தா.

இவள் உள்ளத்தின் தூய்மை நன்றியுணர்வு அன்னையைல்லவா தரிசிக்கச் செய்கிறது. உமாவுக்கும் மகிழ்ச்சி.

அப்போது உள்ளிருந்து வெளியே வந்த உமாவின் அம்மா, “உமா! யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்ட வண்ணம் வந்தாள்.

“இவங்கதான் ஒங்க பெரியம்மாவா?” என்று இவள் அம்மாவை மரியாதையுடன் பார்த்தவண்ணம் கேட்டாள் மங்காத்தா.

  உமாவின் அம்மா அதைக்கேட்டு, “பெரியம்மாவா?” என்றார் வியப்புடன். ஏனெனில் உமாவின் அம்மாவிற்குச் சகோதரிகள் யாருமிலர். உமா குறும்பாய்ச் சிரித்தாள்.

“உள்ள வாங்க. இவங்க எங்க பெரியம்மா இல்லை. இவங்க என்னைப் பெற்ற அம்மா. பெரியம்மா உள்ள இருக்காங்க” என்றாள்.

“உமா பொய் சொல்ல மாட்டாளே! உள்ளே பெரியம்மா எங்க இருக்காங்க?” என்று உமாவின் அம்மா வியப்படைந்தாள்.

மங்காத்தா கூடையை கவனமாக ஓரிடத்தில் வைத்துவிட்டு உமாவைத் தொடர்ந்தாள்.

உள்ளே நுழைந்ததும் இடப்பக்க அறையில் தொங்கிய திரையை மென்மையாக விலக்கினாள் உமா.

உள்ளே ஒரே நறுமணம் சூழ்ந்து இனிமையுடன் வரவேற்றது. உமா குழல் விளக்கை எரிய வைத்தாள். பளீரென்ற ஒளியில் அறையின் நடுவே டேபிள் வைத்து அழகிய பூவேலைப்பாடுடன் துணி விரித்து அதன்மீது ஒரு படம் இருந்தது தெரிந்தது. அந்தப் படத்திலிருந்தவர் ‘கிராப்’ தலையுடன் மேலை நாட்டு முறையில் உடை தரித்திருந்தார். கண்ணால் சிரித்துக் கொண்டு தன்னை யார் பார்த்தாலும் அவர்களைக் கனிவுடன் பார்ப்பது போலிருந்தது. பக்கத்தில் பாவாடையின் தங்கச்சரிகையுடன் இரண்டு பாத மலர்கள் கொண்ட படமும் இருந்தது. முன்னே தட்டுகளில் அழகழகான பூக்கள் வைக்கப்பட்டிருந்தன.

“இவங்களை யார்னு நினைக்கிறது?” என்று குழம்பிய வண்ணம் நின்றாள் மங்காத்தா. இவங்க (உமாவின்) அம்மா புடவை கட்டியிருக்காங்க, இவங்க சட்டை போட்டிருக்காங்க என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

“என்ன பார்க்கிறீங்க?” என்றாள் உமா சிரித்த வண்ணம்.

“இவங்களா உங்க பெரியம்மா?” என்று வியப்புடன் கேட்டாள் மங்காத்தா.

“ஓ! சட்டை போட்டிருக்காங்களேன்னு, கிராப் தலையுடன் இருக்காங்களேன்னு பாக்கிறீங்களா?” என்றாள் உமா அவள் குழப்பமறிந்து.

ஆமாம் என்பது போல் தலையசைத்தாள் மங்காத்தா.

“இவங்கள உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” என்றாள் உமா.

“ரொம்பப் புடிச்சிருக்குத் தாயி. எம்மாம் அழகாச் சிரிக்கிறாங்க. என்னையே பாக்குற மாதிரி வேறயில்லயிருக்கு?” என்று மகிழ்ந்து வியந்தாள்.

“இவங்கள நான் ஏன் பெரியம்மா என்று சொன்னேன் தெரியுமா? எனக்கு மட்டுமில்ல, எங்க அம்மாவுக்கும், உங்களுக்கும் எல்லோருக்குமே இவங்கதான் அம்மா. அதனாலதான் பெரிய அம்மா என்று சொன்னேன்” என்று புன்னகையுடன் கூறினாள் உமா.

மங்காத்தாவுக்குச் சிறிது புரிவது போலவும், குழப்பமாகவும் இருந்தது. “நம்பவூரு கருணாம்பிகை (அவ்வூர்க் கோயிலுள்ள அம்பாள் பெயர்)யைத்தான் எல்லாருக்கும் அம்மான்னு சொல்லுவாங்க. இவங்களும் அவங்களைப் போல சாமியா” என்றாள் மங்காத்தா.

“அவங்களைப் போல இல்ல. அவங்கதான். அங்க (கோவிலில்) அப்படியிருக்காங்க. இங்க இப்படி இருக்காங்க. எப்படி நெனச்சாலும் அப்படியும் இருப்பாங்க” என்றாள் உமா.

“அப்டீன்னா கும்பிடற தெய்வம்னு சொல்றியா தாயி?” என்றாள் மங்காத்தா.

“அப்படி நினைத்தாலும் தவறில்லை. தெய்வம் மனித வடிவில் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றாள் உமா.

“ஆமாமாம். சொல்லுவாங்க ராமரு, கிருஷ்ணரு இவங்கெல்லாம் அப்படித்தானே வந்தாங்க” என்று ஆதாரபூர்வமாய் நம்பிக்கை தெரிவித்தாள் மங்காத்தா.

“தெய்வம் சொல்வது பலிக்கும்தானே?” என்றால் உமா.

“ஆமாம். தெய்வவாக்கு பொய்க்காதும்பாங்க” என்றாள் மங்காத்தா.

“இவங்க சொன்னது நேற்று பலித்ததா உங்களுக்கு?” என்று உமா கூற.

“ஆமாந்தாயி. இவங்க சொல்வாங்கன்னு ஒரு புத்திமதி சொன்னீங்களே. அத மனசார நான் ஏத்துக்கிட்டதும் அப்படியே பலிச்சிடுச்சு. அந்த சந்தோஷந்தானே ஒங்களத் தேடி வந்தேன்” என்றாள் உற்சாகமாக மங்காத்தா.

“சில சில சாமிய கும்பிடறவங்க அதுக்கு அடையாளமா, மஞ்சள்துணி, சிவப்புத்துணி கட்டுவாங்க. இவங்கள ஏத்துக்கிட்டவங்க இவங்க சொல்லியிருக்கிற புத்திமதியை ஏத்து நடந்து அவங்கள புரிஞ்சிப்பாங்க” என்று அவளுக்கு விளங்குவது போல் சொன்னாள் உமா.

“என்ன மாதிரி சனங்களுக்கெல்லாம் கும்பிடறத்துக்கு நேரம் ஏது? இப்படி புரிஞ்சு நடந்தாலே கும்பிடற மாதிரியின்னா எந்நேரமும் கும்பிடற மாதிரி ஆவுதில்ல. நல்ல வழிதான் சொன்ன தாயி. ஒங்க வழியா வந்து எனக்கு வாக்கு சொன்ன தெய்வத்தை நா மறக்க மாட்டேன் தாயி. அப்பப்ப வந்து பாத்து போக மட்டும் என்னெ வெலக்கிடாத தாயி (விலக்கிவிடாதே)” என்று உணர்வு பொங்கக் கூறி ஒரு குலை திராட்சையை ஸ்ரீ அன்னையின் முன் வைத்து பயபக்தியுடன் வணங்கிச் சென்றாள் மங்காத்தா.

“போய் வாங்கம்மா. விரும்பும் போதெல்லாம் நீங்க இங்கு வரலாம்” என்று அன்புடன் விடை கொடுத்த உமாவை அவள் அம்மா வியப்புடன் பார்த்து, “இவங்களை உனக்கு எப்படித் தெரியும், என்ன சொல்லிவிட்டுப் போறாங்க?” என்று கேட்கிறார்.

அதுவாம்மா. நம்ம கிரேஸ் மதர் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளே ஒரே பேரானந்தமாய் இருக்கும். அதனால் அன்னைக்கு எப்படி நன்றி சொல்வது என்று எண்ணிய போது, அன்னையின் நூல் ஒன்றில் ஒரு செய்தி கண்ணில்பட்டது.

“இறைவனின் பேரானந்தத்தில் திளைத்திரு. என்னை மகிழ்ச்சிப்படுத்த அதுவே சிறந்த வழி” என்றிருந்தது. இறைவனின் பேரானந்தம் எது என்று அறிய மேலும் அந்த நூலைப் பார்த்ததில் “உள்நோக்கம் ஏதுமில்லாது சுயம்புவாக (தானே) எழும் உணர்ச்சிப் பெருக்கு பேரன்பாகும். அந்த அன்புக்கு வேறெந்தக் காரணமும் இருக்க வேண்டியதில்லை” என்றிருந்தது. அப்படிப்பட்ட அன்பு, ஆனந்தம் திடீர் திடீரென எழுவதை உணர்ந்தேன். அதுவே நிலை பெற என்ன செய்யலாம் என்றெண்ணிய போது, ‘புஷ்பாஞ்சலி’ என்ற நூலில் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தும் கருவியாக பூக்கள் செயல்படும் என்று குறிப்பிட்டு சில மலர்களும் அவை பெற்றுத்தரும் திறன்களும் என்ற அட்டவணையில் திராட்சையும் அதன் திறன் தெய்வீக ஆனந்தம் என்றும் படித்த கருத்து நினைவுக்கு வந்தது. எனவே திராட்சை வாங்கி அன்னைக்குச் சமர்பிக்க எண்ணிப் போனேன். இவர்களிடம் பழம் வாங்கப் போன போது இவர்கள் பிரச்சனையைக் கூறினார்கள். அதற்கு அன்னை முறையில் உள்ள தீர்வைச் சொன்னேன். அது பலித்ததால் நன்றியுடன் வந்து பார்த்துப் போகிறார்கள் என்று உமா கூற, “ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தாயாக” அவள் அம்மா அவளைப் பார்த்தார் எனக் கூறவும் வேண்டுமோ!

(முற்றும்)

***********

ஜீவிய மணி

அவமரியாதையைப் புரிந்து மனம் உவந்து

ஏற்பவருக்குரியது மரியாதை.

**********



book | by Dr. Radut