Skip to Content

11. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

G. மகேஷ் குமார்

நான் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்பள்ளியில் தினமும் காலையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி அலுவலக ஊழியர்கள் என அனைவரும் பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆகையால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதும், பார்த்துக்கொள்வதும் எனது பொறுப்பாக இருந்தது.

பிரார்த்தனையின் போது ஒரு ஆசிரியை, விசும்பி அழுது பிரார்த்திப்பதைக் காண நேரிட்டது. மேலும் இது ஒரு வார காலமாகத் தொடர்ந்தது. அவர் staff ரூமில் தனியாக இருந்த போது, வெளியில் பொய்யான சந்தோஷத்துடனும், உள்ளே மிகுந்த மனவருத்தத்துடனும், பிரார்த்தனையின் பொழுது அழுவதையும் நான் கவனித்ததைக் கூறியதும், கண்கலங்க ஆரம்பித்து விட்டார்.

பின் அவர் கூறியவை:

எங்களது குடும்பத்தில் நான்கு பெண்கள். மூத்தவள் நான். எனது தந்தை, கடைசி தங்கை பிறந்த அடுத்த மாதமே இறைவனடி சேர்ந்தார். எங்கள் நால்வரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தது எங்கள் அம்மாதான்.

எங்கள் வீட்டில் அனைவரும் பெண்கள் என்பதால், எங்கள் வீட்டைச்சுற்றி இருந்தவர்கள், எங்கள் வீட்டை “லேடீஸ் கிளப்” என்றுதான் அழைப்பார்கள்.

எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். எனது முதல் சகோதரிக்கும் பெண் குழந்தைதான். கடைசி இரு சகோதரிகளும் எங்கள் வீட்டுக்குப் பிரசவத்திற்காக வந்துள்ளார்கள். அவர்களது கணவரும், புகுந்த வீட்டாரும், “ஆண் குழந்தை பிறந்தால் மட்டும் நீங்கள் இங்கு வரலாம். இல்லையென்றால் தாய் வீட்டாருடன் நீங்கள் இருந்து விடுங்கள்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்.

எனது மனக்கலக்கதிற்குக் காரணம் எங்கள் குடும்பத்தில் ஈரேழு தலைமுறைகளாக உள்ள சாபம் ஆகும். அச்சாபம் என்னவென்றால், எங்கள் வீட்டின் பெண்களின் கணவர்கள் அவர்களை விட்டுச் சென்றுவிடுவார்கள் அல்லது திருமணமாகி சில வருடங்களிலேயே இறந்து விடுவார்கள். எனது கணவரும் என்னை விட்டுவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்.

இதற்கு விமோசனம் வேண்டியும், பரிகாரம் தேடியும், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஜோதிடரிடம் ஓலைச் சுவடி பார்ப்பதற்காகச் சென்றோம். ஓலைச்சுவடி வாயிலாகக் கிடைத்த விஷயம் என்னவென்றால், சாப விமோசனம் பெற, 108 பசுக்களைத் தானம் செய்ய வேண்டும். மேலும் 48 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார் அந்த வயதான ஜோதிடர். இந்தக் கடினமான பரிகாரம் காரணமாகவே நான் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளேன் என்று முடித்தார் அந்த ஆசிரியை.

இதைக் கேட்டபின் நான் அன்னையிடம் பிரார்த்திக்கும் பொழுது அந்த ஆசிரியையின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்தேன். “அன்னையின் அருள்” புத்தகத்தை எனது மேஜை டிராவில் வைத்திருப்பேன். ஓய்வு நேரங்களில் எடுத்துப் படிப்பது எனது வழக்கம். உடல் நலக் குறைவு காரணமாக நான் ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லவில்லை. பிறகு பள்ளிக்கு வந்த போது, எனது மேஜையில் வைத்திருந்த அன்னையின் அருள் புத்தகத்தைக் காணவில்லை. மனம் பதற்றம் அடைந்தது. வழக்கம் போல் தினசரி பிரார்த்தனைக்குச் சென்றேன்.

பிரார்த்தனை முடிந்ததும் அந்த ஆசிரியை என்னிடம் வந்து, ஏன் இவ்வளவு டென்ஷன் ஆக இருக்கிறாய் எனக்கேட்டார். அவரது முகம் தெளிவாகவும் அவர் சந்தோஷத்துடனும் இருப்பதைக் கவனித்தேன். எனது புத்தகம் காணாமற்போனதைச் சொன்னேன். “கவலைப்படாதே, நான்தான் அந்த புத்தகத்தை எடுத்துச் சென்றேன். ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தர் யார் என்பதைப் படித்து அறிந்துகொண்டேன். நீ என்னை அவர்களின் தியான மையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்” என்றார்.

அன்று மாலையே பள்ளி முடிந்ததும் நான் அவர்களை ஸ்ரீ அன்னை அரவிந்தரின் தியான மையத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்குத் தியானம் செய்தபின் அவர் சொன்னது, எனது 40 வருட வாழ்க்கையில் முதன்முறையாக இத்தகைய மன அமைதியை உணர்கிறேன் என்றார்.

பின் தியான மையத்தில் இருந்த நூல்களைப் பார்த்தவர், பரம்பொருள் புத்தகம் பார்த்தவுடன், தனக்கு வேண்டும் என மூன்று பாகங்களையும் வாங்கினார்.

அதன்பின், அவர் 3 மாதமாக பள்ளிக்கு வரவில்லை. பிரசவத்திற்கு வந்த தங்கையைக் கவனித்துக் கொள்ள வேண்டி விடுப்பில் இருந்தார்.

மூன்று மாதம் கழித்து, அந்த ஆசிரியை மிகுந்த மகிழ்ச்சியுடனும், கை நிறைய இனிப்புடனும் வந்தார். தனக்கு அரசாங்க வேலை கிடைத்துவிட்டதாகவும், மேலும் அவரது தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறினார்.

அன்று மாலையே அவர்கள், பகவான் ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீ அன்னையையும் தரிசிப்பதற்காக தியான மையம் வந்தார்கள். தனது Govt. Appointment Letter-ஐயும் ஸ்ரீ அன்னை அரவிந்தர் முன்வைத்து வணங்கினார். பின் அவர் என்னிடம் வந்து, தனக்கு ஏற்பட்ட உன்னதமான அனுபவங்களைப் பகிர்ந் கொண்டார்.

  • நான் இந்தப் “பரம்பொருள்” புத்தகம் வாங்கியதற்கான காரணம் வைத்தீஸ்வரன் கோவில் ஜோதிடர் கூறிய ஒரு விஷயம்தான். அவர் கூறிய முதல் பரிகாரத்தை எங்களால் நிறைவேற்ற முடியாது என்பதால் இரண்டாவதாக அவர் கூறியது, “அந்தப் பரம்பொருளால் மட்டுமே தங்களின் சாபத்தைப் போக்க முடியும்” என்பதுதான்.
  • பரம்பொருள் புத்தகத்தின் முதல் பாகத்தைப் படித்து முடித்தவுடன் எனக்கு அரசாங்க பணி கிடைத்தது. மாதம் வருமானம் ரூ.35,000/- ஆகும். எனது முதல் சகோதரி மீண்டும் கருவுற்றாள் (இவளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டேன்).
  • பரம்பொருள் புத்தகத்தின் மற்ற இரு பாகங்களையும் படித்து முடிக்கும் தருவாயில் எனது கடைசி இரண்டு சகோதரிகளுக்கும் ஆண் குழந்தை பிறந்தது.
  • பிறகு முதல் சகோதரிக்கும் ஆண் குழந்தை பிறந்தது.
  • இவை எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் ஆண் குழந்தைகளின் ஆயுளின் பொருட்டு நாங்கள் மீண்டும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஜோதிடரிடம் சென்றோம்.
  • எங்கள் வீட்டில் நடந்த விசயங்களை ஜோதிடரிடம் சொன்னோம். அவர் எங்களிடம் “இந்தச் சாபம் நீங்க என்ன பரிகாரம் செய்தீர்கள்? என்ன தானம் செய்தீர்கள்? எத்தனை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தீர்கள்?” என்று கேட்டார். நாங்கள் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரை வழிபட்டு வருகிறோம் என்று பதில் சொன்னோம்.
  • இதைக் கேட்ட ஜோதிடர் மிகவும் கோபத்துடன் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரை வழிபடும் தாங்கள் ஏன் இந்த ஜோதிடரைப் பார்க்க வந்தீர்கள். அவர்களை வழிபடும் தங்களுக்கு இங்கு வரவேண்டிய அவசியம் கிடையாது. தங்களின் குடும்பத்தின் நிலைமை இனி முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்றார். நாங்கள் எங்கள் மன சாந்திக்காக வேண்டி இங்கு வந்தோம் என்றோம்.
  • எங்களது வேண்டுகோளுக்கு இணங்க ஜோதிடர் மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து வாசித்தார்.
  • ஓலைச்சுவடியில் இடம்பெற்ற வாக்கியம்:
    பரம்பொருளே இப்புவியில் பிறந்து, தனது தெய்வீக வாழ்க்கையைத் தனது எழுத்தாணியால், அயல்நாட்டு மொழியில் எழுதி வெளிப்படுத்தியது.
    அதை நம் தாய் மொழியில், தமிழ்க் கடவுளின் தந்தையான, இந்த உலகத்தைத் தன் கால் கட்டை விரலில் அடக்கி மற்றொரு காலினைத் தூக்கி நிற்கும் கடவுளின் பெயர் கொண்ட ஒரு கர்மயோகி அதை மொழி பெயர்த்து வெளியிடுவார்.
    பரம்பரையாக வந்த சாபத்தை நீக்கும் தன்மையுடையது பரம்பொருள் புத்தகம் என்று ஜோதிடர் கூறினார். அவருக்கு நான் பரம்பொருள் புத்தகம் படித்த செய்தி தெரியாது. இது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதைக் கேட்ட எங்கள் குடும்பத்தினர் புளகாங்கிதம் அடைந்தனர். இவற்றிற்கெல்லாம் நன்றி சொல்லவே, ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்க வந்தேன் என்றார் அந்த ஆசிரியை. மேலும் புத்தக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அந்த ஆசிரியை 5 செட் பரம்பொருள் புத்தகத்தை வாங்கிச் சென்றார்.

**********

ஜீவிய மணி

எல்லார் வாழ்விலும் உயர்வுண்டு, தாழ்வுண்டு. பிறர் நோக்கில் அவரை அறிவது அன்னைக்குகந்தது. சங்கராச்சாரியார் பெரிய மகான். அவர் கொள்கை அத்வைதம். ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா பின்பற்றுவது. இவர் இந்தியாவைச் சுற்றி வந்து சதஸ் நடத்தி மற்ற மதங்களை ஆச்சர்யமாக வென்று அத்வைதத்தை நிலைநாட்டினார். இது பெரும் இலட்சியம். இவ்வழியிலுள்ள சிறப்புகள் பல. அவற்றுள் ஒன்று பிறர் கோணத்தில் பிரச்சனையை அணுகுவது. பிறரினிக்கப் பழகுவது. சதஸில் எந்தப் பண்டிதனும் எளிமையில் செயல்பட முடியாது. கூடியுள்ளவர் பெரும்பாலும் பண்டிதர்கள். விஷய ஞானமுள்ளவர், சமயோசிதமாகப் பேசுபவர்கள், ஏக சந்த கிராகிகள், தான் இங்குக் கூறும் சொல்லை - வாதத்தை - எல்லாக் கட்டங்களிலும் முன்கூட்டி பல முறை கருதி, யோசனை செய்து, சோதனை செய்தவர். இவர்களிடையே ஒரு சொல் எடுபட அச்சொல் இவர்களின் அறிவைக் கடந்ததாக இருக்க வேண்டும். அத்துடன் எதிரி நம் சொல்லை ஏற்க வேண்டுமானால், அவன் நம் கருத்தில் தன் கருத்தைக் காண வேண்டும். சதஸில் வெல்பவர்கள் இரு வகை: (1) உயர்ந்தவர் இனிமைக்குப் பேர் போனவர், (2) தாழ்ந்தவர் கடுமையான குதர்க்கமுடையவர். “இன்சொலாலன்றி இரு நீர் வியன் உலகம் வன் சொலால் என்றும் மகிழாதே” என்றுணர்ந்த பண்டிதர் பிறந்த ஊர் மக்களிடம் அவ்வினிமை நிறைந்திருக்கும். கேரளாவில் மான் கொம்பு என்ற ஊருக்கு அப்பெயருண்டு.

*********



book | by Dr. Radut