Skip to Content

09. நிதானம்

நிதானம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

நிதானம் சத்தியத்தின் அஸ்திவாரம். அது முடிவான பலனைக் கொடுப்பதைக் காணவும் ஒரு நிதானம் தேவை. நிதானம் நித்ய தரிசனம். பணம் சிலருக்குப் பரம்பரையாக முக்கிய பண்பாக வருவதுண்டு. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதற்கென்ன செலவாகும், என்ன பலன் வரும், பணத்தைப் போட மனம் இடம் தருமா என நினைப்பார்கள். அப்படிப்பட்டவரிடம் எதைச் சொன்னாலும் முதற்கேள்வி “என்ன விலை” என்பார்கள். பணம் இவர்களது மூலம், மூலஸ்தானம், முக்கியம், உயிர் மூச்சு. அவர்கள் பணத்தைக் கருதுவது போல் பதவியை, ஜாதியை, குடும்பப் பண்பை, படிப்பின் உயர்வைக் கருதுபவருண்டு. இவர்களைப் போல் நாம் நிதானத்தின் மூலம் உலகையறிய முயன்றால் நிதானம் ஜீவனின் அடியில் மழை நீர் பூமிக்கடியில் சேர்வது போல் சேரும். வழிந்தோடும் நீர் விரயம் என நினைக்கலாம். பூமிக்கடியிலிருந்து அது வெப்பத்தைத் தணித்து நம் உடல் வேக்காட்டால் எழும் வியாதிகளால் சிரமப்படுவதைத் தடுக்கும் என நாம் அறிய வேண்டும். நீர் பூமிக்கடியில் சேர்வதைப் போல் நிதானம் ஜீவனுக்கடியில் சேர்ந்தால் மனம் பக்குவம் பெறும். பக்குவம் பவித்திரமானால் மனிதன் சாது (Sage) வாவான். அறிவின் வளர்ச்சி ஆன்ம விழிப்புத் தரும்பொழுது நூறு புத்தகத்தைப் படித்துப் பெறும் ஞானத்தை முதற்புத்தக சாரம் மூலம் அறிவான். ஏராளமான விஷயம், விபரம் குறள் போல சுருங்கினால் எளிய மனிதனுக்கு விளக்கம் தேவை. சாதுவுக்குக் குறள் விளங்கும். குறளும் தேவையின்றி நேரடியாக அந்த ஞானத்தைப் பெறுபவர் சாது. சாது Supreme-ஐ அடையக்கூடியவர். மனம் மூலம் Supreme-க்கு உயர்பவர் சாது. இதய உணர்வால் Supreme-ஐ அடைபவர் மகான் (Saint). சாது, மகான் ஆகியவர்கள் நிதான புருஷர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது சாதுவின் சித்தி. பெரியதானாலும் அது மனம் பெற்ற உயர்வு என்பதால், ஒரு கட்டம் தாண்டி ஆட்டம் காணவல்லது. அது மகானுக்கில்லை, மகா புருஷனுக்குமில்லை. பட்டேல் கோர்ட்டில் வாதிக்கும் பொழுது மனைவி இறந்ததாகத் தந்தி வந்தது. வாங்கிப் படித்து விட்டுப் பையில் போட்டு வாதத்தைத் தொடர்ந்தார். இது சரியா, தப்பா என்பதைவிட இதைச் செய்யத் தேவைப்படும் நிதானம் கிடைத்தற்கரியது. மூர்ச்சை போடும் விஷயம் வந்தும் நிதானத்துடன் செயல்படுபவர் சாதுவாக, மகானாகக் கூடியவர்.

நிதானத்தை நிதானமாக அறிவதே அறிவது. எதற்கும் மறுபுறம் உண்டு. நிதானம் தவறுவதைக் கண்டால் நிதானத்தின் அவசியம் புரியும். இது ஏராளம் என்பது உண்மை. பிறரிடம் காண்பவை பெரிய உதாரணம். நம் அனுபவம் முடிவானது. இருபது வருஷமாக அடிக்கடி வெளியூர் பயணம் செய்த பொழுதும், இன்னும் ரயிலில் போக நேர்ந்தால் இரண்டு மணி முன் நிதானம் தவறுகிறது, டென்ஷன் வருகிறது எனக் கண்டபொழுது பசி பழக்கமாவதால் நிற்பதில்லை என்பது போல் நிதானம் தவறாமலிருப்பது சிலருக்குப் பழக்கத்தால் குறையுமே தவிர அழியாது என்று அறியும்பொழுது, விஷயம் சிறியது எனினும் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிகிறோம். நெருப்பு பழக்கத்தால் சுடாமலிருப்பதில்லை என்பது போல் நிதானம் அடிப்படையில் எளியதல்ல, அடிப்படை பெரியதான அம்சமுடையது எனக் காண்கிறோம். தீய சக்திகள் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள முதற்காரியமாக கரண்டை நிறுத்துவது வழக்கம். வாதம் நடக்கும் பொழுது கோர்ட்டில் எதிரியிடமிருந்து உண்மையை வாங்க முயல்பவர் முதலில் அவன் கோபத்தைக் கிளறி நிதானத்தை இழக்க முயல்வார். நிதானம் போன பின் உளறுவது வழக்கம். அன்பர் ஒருவர்மீது பொறாமையால் கோள் சொல்லி தொந்தரவு கொடுக்க ஆறு ஆண்டுகள் செய்த சதிகள் பலிக்கவில்லை. முதலாளிக்கு நெருக்கடியான நேரம் வந்ததை அன்பரின் எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர். அன்பர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். முதலாளிக்குத் தான் செய்வது சரியில்லை எனத் தெரியும். அன்பர் நிதானமே உருவானவர். உத்தரவை நிதானமாகப் பெற்று வீடு திரும்பினார். முதலாளிக்கு முகம் பேயறைந்தது போலாயிற்று. ஆடி விட்டார், நடுங்கினார். அன்பரை அழைத்துப் பேசினார். அன்பர் சந்தோஷமாக நிதானமாகப் பேசிய பொழுது முதலாளி முகம் சுருங்கி, உடல் குன்றினார். “நம்மில் ஒருவர் வேலையை அடுத்தவர் எடுத்து விட்டார் என ஒருவர் நம்மைக் கண்டு அறிந்தால் உங்கள் வேலையை நான் பறித்தேன் என அவர் நினைப்பாரல்லவா?” என அன்பர் கேட்டார். வேலை நீக்கும் உத்தரவு வாபஸ் செய்யப்பட்டது. சதி செய்த இருவர் ராஜினாமாச் செய்தனர். நிதானம் போரைவிட சக்தி வாய்ந்தது. தானத்தில் சிறந்தது நிதானம்.

விக்கல் பொதுவாக வந்தால் ஆயுள் முடிந்து விட்டது எனப் பொருள். உடலில் தும்மலைக் கட்டுப்படுத்த முடியாது. இருமலைக் கட்டுப்படுத்தலாம். ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தினால் உடலின் சில பழக்கங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பது பழமொழி. அவை சமர்ப்பணத்திற்குக் கட்டுப்படும். எண்பது வயதைக் கடந்தவருக்கு விக்கல் வந்ததால் அனைவரும் அதுவே முடிவு என்றறிந்து அவரை வந்து பார்த்து விட்டுப் போனார்கள். அன்பர் ஒருவர் வந்தார். அவரருகில் நின்று அன்னையை அழைத்தார். அன்றிரவு விக்கல் நின்றது. அவர் அதன்பின் பதினாறு வருஷமிருந்தார். விக்கலைக் கட்டுப்படுத்தும் நிதானம் உடலுக்கில்லை. உடல் அதை முடிவு எனக் கொள்கிறது. உலகம் முடிவு எனக் கொள்வது சமர்ப்பணத்திற்கு முடிவாகாது. அது பலிக்க அன்பருக்கு நிதானம் தேவை.

பொருள் தொலைந்தால் நிதானம் மறையும். நிதானம் மீண்டும் வரும்வரை பொருள் கிடைக்காது. நிதானமிழந்த பலரிடை ஒரு மகான் பெயரைக் கூறினால் குழப்பம் மறைந்து அனைவரும் நிதானம் பெறுவர். அது மகானுடைய பர்சனா- லிட்டியாகும். பொருள்களைப் பதமாகவும் மனிதர்களை இதமாகவும் நடத்துகிறோம். இதம் கனிந்து உயர்வது இங்கிதம். இவை மூன்றும் சேர்ந்தது பக்குவம். பக்குவம் தூய்மையானால் பவித்திரமாகும். இறைவனை மட்டும் நம்பி செயல்படுவது தூய்மை எனப்படும் என்கிறார் அன்னை. சிவனடியார் பிள்ளையைக் கறி சமைக்கச் சொன்னபொழுது அடியார் நிதானத்தை இழக்கவில்லை. சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வழிந்தபொழுது கண்ணப்பன் செய்தது எதுவும் பலன் தரவில்லை என்றபொழுது கதிகலங்கினார். “ஒரு வேளை என் கண்ணைத் தந்தால் உதிரம் வழிவது நிற்குமா?” என நினைத்த பொழுது அடியார் நிதானமிழக்கவில்லை. தன் கண்ணை லிங்கத்தில் பதித்தபின் வழியும் குருதி நின்றது கண்ணப்பனுக்கு ஆனந்தம் தந்தது. அடுத்த கண்ணில் குருதி வழிந்த பொழுது கண்ணப்பனுக்குக் கவலை வரவில்லை. மருந்துதான் தெரியுமே என மகிழ்ந்தார். செயல்பட்டார். இது அடியார் மனநிலை. நிதானத்தைப்பற்றி நினைத்தாலும் பேசினாலும் நிதானம் வரும்.

Life என்ற பத்திரிக்கையின் ஆசிரியருக்குப் பென்சிலின் ஷாக் வந்தபொழுது அவருடலின் செல்கள் சாவதை அவர் உணர்ந்தார். நிதானத்தைக் கைவிடவில்லை. “நான் இறக்க சம்மதிக்க மாட்டேன்” என முடிவு செய்தார். மரணத்துடன் போராடினார். இவர் போராட்டத்தை உடல் சட்டை செய்யவில்லை. கால்கள் உயிரிழந்தன. மரணம் இதயத்தைத் தொட்டவுடன் இதயம் துள்ளி எழுந்து மரணத்தை உதறித் தள்ளியது. போன உயிர் இதயத்தைச் சுற்றி ஓரளவு மீண்டும் வந்தது. தைரியம் வந்து தொடர்ந்து வேகமாகப் போராடி உடல் முழுவதும் மரணம் அழிந்து ஜீவன் வந்தது. அன்னை இதைப் படித்துவிட்டு சத்திய ஜீவியம் இங்குச் செயல்பட்டது என்றார். உயிர் போனபின் போராட தைரியம் அபரிமிதமாக வேண்டும். அந்தத் தைரியத்தின் அஸ்திவாரம் நிதானம். இது போன்றவர் ஆன்மிக ஹீரோ எனப்படுபவர். அன்னை அவர் மன உறுதியைப் பாராட்டினார். பெற்ற தாய் விஷம் வைத்தால் பிள்ளைக்கு நிதானமிருக்குமா? அம்பாலால் புராணி ஆஸ்ரமத்தில் 1923 முதல் 1965 வரை இருந்தவர். இவர் 1918-இல் பகவானைச் சந்தித்து இந்திய விடுதலைக்காக பயங்கரவாதமான போராட்டம் நடத்துவதைப் பற்றிக் கேட்டார். 1904-இல் பகவான் இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் வேண்டுமென்றார். 1906-இல் அரசியலில் பகவான் சேர்ந்தார். 1909-இல் சூட்சும உலகில் இந்தியா சுதந்திரம் பெற்றதை இறைவனிடமிருந்து கேட்டார். பகவானுடைய தம்பி பரீன்குமார் கோஷ் வெடிகுண்டு செய்து வீசி தூக்கு தண்டனை பெற்று பிறகு ஆயுள் தண்டனையாக ஜெயில் வாசம் செய்தவர். புராணிக்கு வெடி குண்டில் நம்பிக்கையுண்டு. பகவான் “பயங்கரவாதம் தேவைப்படாது” என்றார். புராணி “என்னால் தூங்கவே முடியவில்லை” என்றார். இந்தியா போராட்டமின்றி சுதந்திரம் பெறும் என பகவான் கூறிய அன்றிரவு புராணி முதன் முறையாகத் தூங்கினார். நாடு அடிமையாக இருக்கும்பொழுது தேச பக்தனுக்கு நிதானமிருக்காது. தூங்கவும் முடியாது.

நிதானம் எவருக்கும் வரும். நிதானம் எவருக்கும் தவறும். சமர்ப்பணத்தால் அதிக நிதானம் பெறலாம். பூரண யோகத்திற்கு எல்லா முறையும் உதவும். ஏனெனில் அதற்கு எந்த முறையும் தேவையில்லை. பகவான் ஹத, ராஜ யோகங்களை மூன்று நாட்களில் செய்தவர். அதன்பின் அவருக்குச் சத்திய ஜீவியம் போக “குரு’’ காலால் தலையில் எட்டி உதைக்க வேண்டியிருந்தது. பகவான் இது ஒரு சிறு செய்யுளில் வேறொருவர் அனுபவமாக எழுதுகிறார். நான் அதை அவர் நம்மிடம் கூறாததாகக் கொள்கிறேன். அவருக்கு குரு இல்லை. ஆரம்பத்தில் கிருஷ்ணனைக் குருவாகக் கொண்டார். பிறகு குரு இல்லை. அசரீரியின்படி செய்தார். பிறகு அதையும் புறக்கணித்தார். நாம் அவரைப் பின்பற்ற முடியாது. அவர் சொல்லியதைப் பின்பற்றலாம். அவருக்கும் நிதானம் தவறியது. காலை முறித்துக் கொண்டார். நம் போன்றவர்க்கும் நிதானம் வரும். வருவதும் தவறுவதும் வேறு நிலைகளில். பூரண சமர்ப்பணம் பரிபூரண செம்மையாக (Perfection) இல்லாவிட்டாலும், ஒரு நாள் அதாவது இருபத்தி நான்கு மணி செய்ய முடியும். இதைச் சமர்ப்பணத்திற்காக அல்லாமல், நிதானத்திற்காகச் செய்யலாம். அன்று நிதானம் அதிகபட்ச மனநிலையில் உயர்வதையும், குறைந்தபட்சத்தில் தவறுவதையும் காணலாம். எங்கு உஷாராக இருக்க வேண்டும், எங்கு நம் முயற்சி முழுமையாக இருக்க வேண்டும் என்பதை அவை காட்டும். எல்லா நிலைகளிலும் அவ்விரு அம்சங்களைக் கண்டால் எந்த நேரமும் இரு முனைகளிலும் எப்படிச் செயல்பட வேண்டும் எனத் தெரியும். இதற்கு Yogic self awareness யோக சுய விழிப்பு என இதைக் கூறலாம். இந்நிலையில் யோகம் பலன் கருதாமலிருக்கும். வாழ்க்கைப் பலனைக் கருதாவிட்டால் மனத்தில் யோக பலனிருக்கும். எதுவுமே இல்லாத பரவசமும் சிறிது நேரம் இருக்கும். யோகம் நம்மிடமிருந்து யோகத்திற்கும் போகும். யோகம் தானே தன்னைச் செய்து கொள்ளும். அன்னையே நம்முள் யோகம் செய்வது அடுத்த கட்டம். பிரியமான கணவன் ஒரு கட்சியில் சேர்ந்து தலைவரின் கவனத்திற்குப் பாத்திரமானால், அவர் மனைவி உங்கள் மனதில் இனி நானில்லை, உங்கள் தலைவரிருக்கிறார் என்று அறிவாள். மனம் ஒருவருக்கே இடம் தரும். பலருக்கு இடம் தரும் மனம் மனத்தைக் கடந்த நிலையை எட்டியது.

துப்பறியும் சாம்பு கதைகள் ஐம்பது. சாம்புவுக்குப் பதினேழு வருஷ சர்வீஸுக்குப் பின் நாற்பத்தி மூன்று ரூபாய் சம்பளம். அவருக்குத் துப்பறிவது பலித்தவுடன் வேலை போய் விட்டது. பலன் பெற்ற முதலாளி வேலையிலிருந்து எடுத்து விட்டார். இது என்ன சட்டம் - சட்டம் மட்டமானால், மட்டம் தரும் பலன் தண்டனையாகும். இந்தத் தண்டனை தொழில் பரிசு. அப்பரிசு வரும்பொழுது தண்டனை தந்தவர் பரிசு தரும் விழாவை நடத்துவார். மரபு வாழ்வை பேயாகவும், அதன் சிகரமான பெண்ணாகவும், கர்மமாகவும் கண்டது. வாழ்வால் பயன் பெறும் அளவுக்கு அந்நாளில் மனம் வளரவில்லை. கடல் உயிரை எடுக்கும். கப்பலோட்டுபவனுக்குக் கடல் சமுத்திரமாகப் பெரும் பலனைப் பேரளவில் தரும். கத்தி கையை வெட்டும். கத்தியைப் பயன்படுத்தினால் காயம் நமக்கில்லை. நாம் செய்யும் வேலைக்கு. மரபு வாழ்வுக்குப் பணிந்து விலகியது. பூரண யோக சாதகனுக்கு வாழ்வு விரும்பிப் பணியும். வாழ்வு மாயையில்லை. பிரம்மத்தின் ஜீவிய சக்தியான Consciousness ஜீவியம். வாழ்வை அறியும் மனிதனுக்கு வாழ்வு பிரம்ம ஜீவியத்தைக் காட்டும். US-இல் உள்ள மகன் சிகரெட் பிடிக்கிறான். அவனுக்கு சிகரெட் விடுதலை தர தாயார் TV பார்ப்பதைக் கைவிட்டார். மகன் சிகரெட்டை மறந்தான், Obama-வும் சிகரெட்டை விட்டு விட்டார். அன்னை பிரபஞ்ச சக்தி என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

பெரும் தோல்வி நிதானமிழக்கச் செய்யும். பெரும் வெற்றியும் அப்படிச் செய்யும். தோல்வியில் நிதானமிழந்தவன் அதனால் மீண்டும் எழும் வாய்ப்பை இழக்கிறான். வெற்றியால் இழந்த நிதானம் வெற்றியை தோல்வியாக்கும். விதிவிலக்குண்டு. அன்னையின் சாம்ராஜ்யத்தில் அத்தனையும் விதிவிலக்காகும். கடுகளவு நம்பிக்கையுமில்லாத குரு, சிஷ்யன் அதே விஷயத்-தில் மலையளவு சாதித்ததைக் கண்ட நேரம், கடைசி நிமிஷம். அதே கடுகு அன்று குருவுக்கு மலை போலிருந்தது கொசுராக வந்தது. சிஷ்யனின் சந்தோஷம் குறும்பாகி செல்லமாகக் குருவின் தாடையில் தட்டினான். அது பலத்த அடியாக விழுந்தது. 14 ஆண்டுகள் “சிறைவாசம்” அச்செயலால் விடுதலையளித்தது. 99% சாதகமாக முப்பத்தி ஒன்றாம் நாள் நடந்த கேஸ் முப்பத்தி இரண்டாம் நாள் இலஞ்சத்தால் தோற்றபொழுது தோற்றவரால் சிரிக்க முடிந்தது. அச்சிரிப்பு தூக்கத்திலும் பீறிட்டுக் கொண்டு வந்தது. அப்பீல் முடியுமுன் கேஸ் ஜெயித்தது. நிதானம் பெரியது. அன்பருக்கு நிதானத்தை இழப்பது அதனினும் பெரியது. சாவித்ரி எமனை வென்றாள். வென்றவள் காலனை அழித்தாள். சத்தியவான் உயிர் பெற்றுத் திரும்பினான். இறைவன் சாவித்ரிக்கு சுவர்க்கம் தர முன் வந்தான். சாவித்ரி இறைவனை எதிர்த்து மறுத்தாள். தன்னை மறுத்த சாவித்ரியை இறைவன் மறுத்ததற்காகப் பாராட்டி, உலகில் தன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக அவளை அமைத்தார்.

துப்பறியும் சாம்புவில் “இன்ஸ்பெக்டர் கோபாலன்” என்ற கதையில் சாம்புவும் இன்ஸ்பெக்டரும் குற்றவாளியிடம் சிக்கி உயிரிழக்கும் தருவாயில் இன்ஸ்பெக்டர் நிலைகுலையாமல் நிதானமாக இருக்கிறார். கிரிக்கெட் பந்து குற்றவாளியை வீழ்த்துகிறது. நிதானத்தை இழக்காத இன்ஸ்பெக்டர் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சாம்புவின் உயிரையும் வியாபாரியின் உயிரையும் காப்பாற்றிச் சுட வந்தவனைக் கைது செய்கிறார். நிதானம் வெல்லும். இலட்சிய வேலைகள் பெரும் வெற்றி பெற்றபின் அடுத்தகட்ட உயர்வை எட்ட அதில் ஒருவர் விரும்பினார். இலட்சியம் பலித்தது குருவுக்குக் கோபம். இலட்சியம் சிஷ்யனால் பலித்து முழுப்பலனையும் குரு பெற்றார். குருவுக்கு சிஷ்யனை அழிக்க வேகம் வந்தது. சந்தர்ப்பம் எழுந்தது. குரு விஷமான பொய் சொன்னதால் இலட்சியத்தை அடுத்த கட்டம் எடுத்துப்போக விரும்பியவர்க்குக் கொலை செய்யும் ஆத்திரம் பீறிட்டது. மணி இரவு பதினொன்று. அவர் மனைவி அடுத்த கட்டம் போய் சிஷ்யனிடம் “கொலை விழும், ஒன்றா, இரண்டா எனத் தெரியாது. என்னைத் தொட முடியாது. நான் வலுவானவள், தொட்டால் தொடுபவர் மரணமடைவார்” என்றாள். உடனே சிஷ்யர் ஒரு மைலுக்கு அப்பாலுள்ள குருவிடம் போனார்! உங்கள் விஷமம் கொலையில் முடிகிறது. நீங்களே வந்து மன்னிப்பு கேளுங்கள் என்ற பொருள்படும்படி, “வாருங்கள் வெளியே, சொல்வதைக் கேளுங்கள். நான் சொல்வதைக் கோபக்காரனிடம் கூறுங்கள்” என்றார். குரு அடங்கி, சுருங்கி, பணிந்து சொன்னபடி செய்தார். ஆறாம் மாதம் சிஷ்யனுக்கு 14 வருஷ சிறை தண்டனையிலிருந்து விடுதலை கிடைத்தது. கொலை விழுவது க்ஷணத்தில். அந்த நேரம் நிதானம் எப்படி வரும். ஒரு மைல் போய் ஒரு மைல் திரும்பும்வரை கொலை செய்யும் ஆத்திரம் அடங்குமா? ஒருவருடைய நிதானம் அனைவரையும் கட்டுப்படுத்தும். கொலை செய்யும் கோரமும் அடங்கும். நிதானத்தை நாடுபவர் அடுத்தவர்க்குத் தன் விஷயத்தில் சுதந்திரம் தர வேண்டும். அடுத்த வீட்டார் குழந்தையைக் கயிற்றில் கட்டி கிணற்று நீரின் ஆழம் பார்த்த பெண் மனம் மனித சுபாவம். தன் விஷமமான ஆசையைப் பிறர் உயிர் போகும் விஷயத்தில் சுதந்திரமாகப் பரிசோதனை செய்வது இலட்சிய மனித சுபாவம். ஆச்ணடு பணத்தைப் பிரமேயமில்லாமல் கறுப்புப் பணமாக்கி, அதைக் கணக்கில் எழுதியவர், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நண்பர் வேறு என அறிந்து செய்தவர். இவரைஇலட்சியமானவர் என உலகம் போற்றும்.

(தொடரும்)

**********



book | by Dr. Radut