Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

எரிச்சல் முழுமையாக இல்லாவிட்டால் தெளிவு முழுமையாக இருக்கும்.

அறிவு இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும். அந்நிலையில் செயல்படும் அவசியமில்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்க முடியாது. அவசியமிருந்தால் செயல்படும் சக்தியிருக்காது. தெம்பில்லாத பொழுது செயல்படும் நிர்ப்பந்தமிருந்தால், எரிச்சல் குபுகுபு எனக் கொந்தளித்து எழும். செயல்படுவது உடல், அதற்குரிய சக்தியைத் தருவது இதயம். தெளிவாக இதயம் செயல்பட அனுமதிப்பது விஷயத்தைப் புரிந்து கொள்ளும் அறிவு. ஆபீஸ் காரியதரிசியாகப் பிரியப்படுபவனுக்கு 80 ஓட்டுகள் தேவைப்படுமானால் அவனுக்குள்ள நண்பர் குழாமே 8 பேர்கள் என்று தெரிந்தும் தேர்தலில் நிற்க விரும்புகிறான். ஒருவர் அவனை நியமிக்க வேண்டும், மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். அதற்கே நண்பர்கள் தானே முன்வரவில்லை என்பது வேட்பாளருக்குத் தெரிகிறது. இவனுக்கு யார் ஓட்டுப் போடுவார்கள். ஏன் அப்படிச் செய்வார்கள் எனப் பலரும் பேசுவதைக் கேட்கிறான். எந்தப் பிரதம மந்திரி எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நின்றவன் ஒருவன். அவன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான் என நாம் தெரிந்து கொள்ள முடியுமா? சஞ்சீவ ரெட்டியை ஜனாதிபதியாக நியமித்தவர் இந்திரா காந்தி. அவரே ரெட்டியை எதிர்த்து வேலை செய்தார். ரெட்டி அந்த எலெக்க்ஷனில் தோற்றார். அடுத்த எலெக்க்ஷனில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எலெக்க்ஷன் என்பது பொதுவாழ்வின் ஆழ்ந்த அம்சம். நம் நாட்டிற்கு ஆங்கிலேயன் வரும்வரை, 1800 வரை அது புதியது. நான் சொல்லும் நபர் எலெக்க்ஷன் முடிவில் 4 ஓட்டுகள் பெற்றார். நகர காங்கிரஸ் தலைவர் எலெக்க்ஷனில் நிற்க முயன்று முனிசிபல் தேர்தலில் நின்றார். அவர் தனக்கே ஓட்டுப் போட்டார். எண்ணிக்கை முடிந்தபின் அவர் பெற்ற ஒட்டு 1. அவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும், மனைவியும் உண்டு. எலெக்க்ஷனில் தன் நிலையை அறியவே முடியாதவர் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டார். 4 ஓட்டுகள் வாங்கியவரை வழியில் நிறுத்தி “எலெக்க்ஷன் என்ன ஆயிற்று” எனக் கேட்டால் அவருக்குப் பதில் எழாது. கோபம் வரும். கோபம் அடங்காது. அடங்காத கோபம் எரிச்சலாகக் குமுறும். சமூகம், ஊர், நண்பர், வீடு, உற்றார், உறவினர் இதை வெளியிட அனுமதிக்க மாட்டார்கள். எரிச்சல் வந்து குமுறியவர்க்கு எரிச்சல் அடங்காது. அது செல்லாது எனத் தெரியும். சமூகம் மனிதனை உருவாக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று. முழுமையாக எரிச்சலில்லாத நிலையைக் கூறுவது Agenda. அவன் 90 ஒட்டுகள் பெற்று ஜெயித்திருந்தாலும், “எலெக்க்ஷன் என்ன ஆயிற்று?” எனக் கேட்டால் “என்னைப் பாராட்டாமல் கேள்வி கேட்கிறான்” என்று நெஞ்சு பதறும். அதனால் எரிச்சல் வரும். எரிச்சலே எழாமலிருக்க, ஒன்று அவன் செய்ய எதுவுமிருக்கக் கூடாது அல்லது அவன் சுபாவத்தில் சாந்தப் புருஷனாக இருக்க வேண்டும். அவனுக்குரியது தலைப்பு. பிறரைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நம் மனம் அமைதியுற்றிருக்க வேண்டும். நாம் எதிராளியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்மீது நமக்கு அக்கறை கூடாது. “அக்கறையற்றவர் அறிவு பெறுவார்” எனக் கூறலாம். அவதார புருஷர்கட்குக் குறையுண்டு. விவேகானந்தருக்கும் கோபம் வரும். பரமஹம்சரும் பங்கிம் சந்திரர்மீது எரிந்து விழுந்தார். அவதார புருஷர்களின் குறை மனிதனுடைய குறையை எதிரொலிப்பது. மனிதனுக்குள்ள எல்லாக் குறைகளையும் ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்காமல் அவதாரம் ஜனிக்க முடியாது. அவதாரம் ஆண்டவன் உலகில் பிறப்பது. உலகம் என்பது மனித குலம். மனித குலம் நிறையை எட்ட முயல்வதால் அது தன் குறையினின்று ஆரம்பிக்கிறது. மனித குலத்தை உய்விக்க வந்த அவதாரம் மனித குலத்தைப் பிரதிபலிப்பது அவசியமாதலால் குலத்தின் குறை குணத்தின் சிகரமான அவதாரத்தில் இருக்க வேண்டும். எரிச்சல் (reaction ) மனித சுபாவத்தின் மையம். “நான் எரிச்சல் படப்போவதில்லை” என்ற முடிவு செய்தவுடன் அம்முடிவு எரிச்சலின் மூலத்தைத் தொட்டுக் கிளறி மேலே கொண்டு வரும். எரிச்சல் எரிச்சலாக வரும்!

*********



book | by Dr. Radut