Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/29. அழிக்கும் நிலையாமை அழியாத நிலைமையை உருவாக்கவல்லது.

நிலையான நிலையாமை.

  • நிலையான பிரம்மம் நிலையில்லாத சிருஷ்டியை நாடியது.
  • சிருஷ்டி நிலையினிழிந்த நிலையாமை
  • சிருஷ்டியில் நிலையாமை என்பது பிரம்மம், பிரபஞ்சமாகி, பிரபஞ்சம் உலகமாகி, மீண்டும் பரிணாமத்தால் உலகம் பிரபஞ்சம் வழி பிரம்மத்தை அடையும் சலனமான போக்கு.
  • நிலையாமை நிலையாக இருக்க அடிப்படையான நிலை தேவை.
  • அந்நிலை ஒளியின் வேகத்தில் மாறும் பிரபஞ்ச சலனம்.
  • மனித உடல் குழவிப் பருவத்தினின்று வளர்ந்து மாறுகிறது.
  • காலையிலிருந்து மாலைவரை உணவு, நடை, சிந்தனை, செயல் என்ற இடைவிடாத மாற்றமுண்டு.
  • வயதிற்குரிய மாற்றமும், வாழ்க்கைக்குரிய மாற்றமும், அன்றாட செயலின் அயராத மாற்றமாக நிலையாக நிகழ்வது மனித வாழ்வு.
  • பூமி தன்னைத்தானே சுற்றி வருவதும், சூரியனைச் சுற்றி வருவதும், பிரபஞ்ச சலனமும், அணுவுள் உள்ள அனந்தமான சலனமும் மனித வாழ்வின் நிலையான தன்மைக்கு அடிப்படை.
  • மனித வாழ்வு செயலாலானது.
  • உடலால் வாழும் மனிதன் நாகரிகத்தால் வளர்ந்து உயிரால் வாழ்கிறான்.
  • அதனின்றும் உயர்ந்து மனத்தாலும், ஆத்மாவாலும், வளரும் ஆத்மாவான சைத்திய புருஷனாலும் வாழ்கிறான்.
  • எந்த நிலையில் வாழ்ந்தாலும், அவனுக்கு அந்த நிலையில் நிலையாமையும், நிலையும் உண்டு.
  • உடலால் வாழ்ந்தவன் ஆதி மனிதன்.
  • அவன் உடலுக்கு உணர்வுண்டு.
  • தன்னைத்தானே பாதுகாக்கும் திறன் அவன் உடலின் வாழ்விற்கேயுண்டு.
  • நமக்கு இன்று அது இல்லை.
  • நாம் அத்திறனை நாகரிகத்தாலும், மனவளர்ச்சியாலும் இழந்து விட்டோம்.
  • உடலுணர்வை உடலின் உணர்வாக இழந்ததை மனத்தின் உணர்வாக மீண்டும் பெறுவது மனிதன் சத்திய ஜீவனாவது.
  • நாலு, ஐந்து ஆயிரமாண்டாக நாகரிகம் என நாம் அறிவது உடல் வளர்ந்து உயிராகி உயிர் வளர்ந்து மனமாகி, மனம் வளர்ந்து ஆத்மாவாகி, ஆத்ம வளர்ச்சி சைத்திய புருஷனாகும் பாதை.
  • யோகம் தத்துவமாகி, தத்துவம் நிதர்சனமான திருஷ்டியாகும் பொழுது மேற்சொன்ன அத்தனை மாற்றங்களும், ஒரே சமயத்தில் உள்ளும் புறமும் இன்று நம்மில் நடப்பது தெரியும்.
  • யோகம் சமர்ப்பணத்தால் நடப்பது.
  • பக்தியும் ஆர்வமும் சமர்ப்பணத்தை எழுப்பும்
  • சமர்ப்பணம் சரணாகதியில் பூர்த்தியாகும்
  • சமர்ப்பணமற்ற வாழ்வு உச்சகட்டத்தில் மனத்தின் வாழ்வாகவும், தாழ்ந்த நிலையில் உடல் வாழ்வாகவும் அமையும்.
  • ஒவ்வொரு செயலும் அதன் சிறு உருவம்.
  • அதனுள் உடலிலாரம்பித்து சைத்திய புருஷன்வரை உள்ள அனைத்தும் உண்டு.
  • நேரம் காலத்தால், செயலில் வெளிப்படுவது வாழ்வு.
  • காலம் இடத்தில் வெளிப்படுவதைத் தத்துவம் இயற்கை எனக் கூறும்.
  • ஆத்மா இயற்கை வழி வளர்ந்து சைத்திய புருஷனாவது சிருஷ்டி முடியும் பரிணாமம்.
  • பரிணாமத்தை இயற்கையில் காண்பது யோகம்.
  • பரிணாமத்தை வாழ்வின் செயலில் அறிவது யோக வாழ்வு.
  • அதை அறிய உதவுவது புறம் அகமாகி, கீழ் மேலாவது.
  • அது வாழ்வில் யோக மாற்றம்.
  • அதனால் யுகம் க்ஷணமாகும்.
  • அம்மாற்றம் தரும் அனுபவம் ஆனந்தம்.
  • ஆனந்தம் ஜடத்தில் வெளிப்பட்டால் நிரந்தரமாகும்.
  • ஜடத்தில் வெளிப்பட்டு ஆனந்தம் நிலையாக மாறுவதால் ஜடம் ஆனந்தமய ஜீவனாகும்.
  • அன்பன் சமர்ப்பணத்தால் சாதகனாகும்பொழுது அர்ப்பணிக்கப் பட்ட செயல் உடலில் நன்றியாக வெளிப்படுவது உடல் புல்லரிப்பது.
  • சரணாகதி பூர்த்தியாவதும், திருவுள்ளம் நிறைவேறட்டும் என்பதும், உடல் புல்லரிப்பதும் மூன்று வகைப்படும் ஒரே செயலாவதால் அவற்றை

திருமூர்த்திகள் என

நான் குறிப்பிடுவது வழக்கம்.

*********

ஜீவிய மணி

ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் பாலம் பக்தி.

*********



book | by Dr. Radut