Skip to Content

07. மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்

மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவு ஆற்றியவர்: திருமதி வசந்தா லக்ஷ்மி நாராயணன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: நவம்பர் 24, 2014

நீதி என்பது வாழ்விலும், இயற்கையிலுமில்லை. இறைவனுக்கு நீதியில்லை, மனிதனுக்குரியது நீதி. வாழ்வு வளம் பெற செயல்படுகிறது. வாழ்வு சக்தியில் செய்வதை இயற்கை சட்டத்தில் செய்கிறது. இறைவன் இரண்டையும் அனுமதிக்கிறான். இறைவன் தேடுவது நீதி, சட்டமில்லை,பெருகி வரும் பேரானந்தம். இறைவனைப் பிரம்மம் எனவும் ஆண்டவன் எனவும் அறிவோம். நிரந்தரமான bliss ஆனந்தத்தில் திளைக்கும். இறைவன் ஆனந்தம் வளரும் ஆனந்தமாகி (static bliss changes into variable delight) அதை எல்லா நிலைகளிலும், எல்லா நேரத்திலும், எல்லா அம்சங்களிலும் — ஜீவன், ஜீவராசி, பொருட்கள், செயல்கள் — ஆனந்தமாக அனுபவிப்பது இறைவனின் இலட்சியம். அதற்காகப் பிரபஞ்சம், பூவுலகம் என மனம், வாழ்வு, ஜடமாக சிருஷ்டித்து, பெரும் ஆனந்தம் மேலும் பெருகும் ஆனந்தமாக அஞ்ஞானத்தை இறைவன் சிருஷ்டித்தான். சிருஷ்டி படிப்படியானது - சத், சித், ஆனந்தம், துரியா, மனம், வாழ்வு, ஜடம். பரிணாமத்தால் ஜடம் உயர்ந்து சத்தாவது ஆனந்தம். அவற்றுள் நிறைந்துள்ள அஞ்ஞானம் ஞானமாவது பெருகி வரும் பேரானந்தம். இறைவன் மனிதனைத் தன் பிரதிபிம்பமாக சிருஷ்டித்தான். இறைவன் பெறும் ஆனந்தம் மனிதனுக்கும் உண்டு.

மனிதன் வாழ்வில் உயர்ந்து முன்னேறுகிறான். குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறான். முன்னேறும் முயற்சிகள் வெற்றி பெறுவதும், தோல்வியுறுவதுமாக மாறிமாறி வருகின்றன. பையனுக்குப் படிப்பு வரவில்லை. பங்காளி என் சொத்தை எடுத்துக் கொண்டான் என்பது போன்ற பிரச்சனைகள் எழுந்தபடியிருக்கின்றன. ஏன் என் பையனுக்குப் படிப்பு வரவில்லை, பங்காளி அநியாயம் செய்கிறான் என்று மனம் குமுறும் பொழுது எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று குரல் எழுகிறது. பையன் வருஷா வருஷம் பாஸானால் 8-வது அல்லது BA-யுடன் முடிப்பான். தகப்பனார் பையன் படிப்பைக் கவனிக்க ஆரம்பித்தால் நாட்டிலுள்ள புது நிலையில் பையன் டாக்டராகி, அமெரிக்கா போகலாம் எனப் புரியும். புரிந்ததைச் செயல்படுத்துவது அளவு கடந்த முன்னேற்றம். மனிதனுக்கு அந்த வாய்ப்பை இறைவன் வாழ்வு மூலம் சொல்வதை மனிதன் பையனுக்குப் படிப்பு வரவில்லை என அறிகிறான். மனம் அமைதியாகி சற்று சிந்தித்தால், சிந்தனை உணர்வானால், உணர்வு உள்ளுணர்வானால், சந்தர்ப்பம் ஆண்டவன் நீதியை விளக்கும் வகையில் செய்தி வரும். இவன் போன்ற பையன் பெற்றோர் முயற்சியால் முன்னுக்கு வந்து மேல்படிப்பு படித்த செய்தி காதில் விழும். காதில் விழுவது கருத்தை எட்டினால் படிப்பு என்ற கடமை மேல்படிப்பு என்ற வாய்ப்பாக மனதில் அன்று மாறி, நாளடைவில் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். பையன் அமெரிக்கப் பட்டம் பெற்றுத் திரும்பியபின் “படிப்பு வரவில்லை என்று கஷ்டப்பட்ட பொழுது காதில் விழுந்த செய்தி என் பையனின் வாழ்வை அடியோடு மாற்றி விட்டது” என நினைவு வரும். மனிதன் தேடும் நீதி அன்றைய சௌகரியம். ஆண்டவன் நீதி அடுத்த கட்டத்தில் இன்று கற்பனை செய்ய முடியாத வசதியைப் பெறச் செய்யும் வழி எனப் புரியும். சட்டம் ஒன்றே. வாழ்வில் பிரச்சனைகளேயில்லை. வாய்ப்புகள் மட்டும் உள்ளன. சிறிய வாய்ப்புகள் சிறு பிரச்சனைகளாகவும், பெரும் வாய்ப்புகள் கடினமான சிக்கலான பிரச்சனைகளாகவும் வருகின்றன. மனித முன்னேற்றம் மனித நோக்கத்தால் நிறைவேறுவது. நோக்கம் இருப்பது போதும் எனில் அதுவே பலிக்கும். முடிந்தவரை முயல்வது சரி என்பது நோக்கமானால், சந்தர்ப்பம் இடம் தரும் அளவு முன்னேறலாம். அகமும் புறமும் அவனுக்கே உரியது. ஆண்டவன் தருவதை நன்றிப் பெருக்கோடு நல்லுணர்வால் பெறுவது மனிதன் தெய்வமாகும் பாதை என அறியலாம்.

32 ஏக்கர் சொத்தில் . பங்குள்ள பங்காளி 22 ஏக்கர் அவனுடையது என எடுத்துக் கொண்டான். இது அநீதி இல்லையா? இதுவேதான் நியாயமா? இது அநியாயம். குடும்பப் பஞ்சாயத்து, ஊர்ப் பஞ்சாயத்து, கோர்ட்டிற்குப் போய் அதிகமாய் அவன் பெற்றுக் கொண்ட நிலத்தை மீட்க எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும். ஆனால் அவன் செய்வது தவறு என மனம் நினைக்கக் கூடாது. ஊர், உலக சட்டப்படி பங்காளி தவறு செய்கிறான். அதை அந்தச் சட்டப்படி மீண்டும் பெற உரிய முயற்சியை நேரத்தில், முறையாக எடுப்பது சரி. அவசியம். ஆனால் மனம் நம் முயற்சியே சரி, முடிவு என நம்புதல் ஆண்டவன் அளிக்கும் நீதிக்குச் சரியில்லை. “ஆண்டவன் நியாயம் எது எனத் தெரியவில்லை. நான் என் கடமையைச் செய்கிறேன்” என்று நம்பி செயல்பட்டவருக்கு 22 ஏக்கருமே சட்டப்படி, நியாயப்படி, ஊரும், உலகமும் ஏற்று, பங்காளியே முன்வந்து தரும் நிலை ஏற்பட்டுவிட்டது. எதிர்பார்த்தது எனக்குரியது மட்டும். என் நம்பிக்கை சட்டத்திலோ, ஊரிலோ, என் முயற்சியிலோ இல்லை. ஆண்டவன் நீதியிலிருந்தது. முடிவு வந்த பிறகும் என்ன நடந்தது, எப்படி நடந்தது, ஏன் நடந்தது, இது என்ன நியாயம் என எனக்குப் புரியவில்லை என அன்பர் கூறியது பல முறை நடந்தவை. இதுபோன்ற பல்வேறு விஷயங்களைக் கண்டு அதன் அம்சங்கள் - காலம், பங்கு, சட்டம், கொடுத்தவர், பெற்ற வழி, மனநிலை - எல்லாம் ஒவ்வொன்றாய்ப் புரிந்தபின் எல்லா அம்சங்களின் முறைகளை முழுமையாகப் பின்பற்றினால் 31/2 வருட கேஸ் 3 வாரத்தில் முடியும். இதற்கு மூல காரணம் வாழ்வில் உண்டு. அதன் பின்னர் நம் சுபாவத்தில் அக்காரணம் தெரியும். சுபாவத்தால் அக்காரணங்களைப் புரிந்து கொண்டால், புரிந்து கொண்டதை தத்துவார்த்தமாகத் தெளிவு பெற்றால் பிரச்சனை வராது. பிரச்சனை வாய்ப்பாகும். வாய்ப்பு பெரிய வாய்ப்பாகும். சொத்தில் எழும் வாய்ப்பு மாறி, உயர்ந்து பதவியாகும். MLA ஒருவர் எலக்க்ஷனுக்கு நின்றவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சந்தர்ப்பவசத்தால் பங்காளியைச் சுபாவத்தில் புரிந்து கொண்ட அன்பருக்கு அந்த இடம் வரும். இதுபோல் MLA ஆனவர் 2 பீரியடிருந்து, அதன்பின் அவர் தம்பி மகன் 2 பீரியடிருந்தார். இவை தற்செயலாக நடந்தவையல்ல. திருவுள்ளத்தால் பூர்த்தி பெற்றது. ஆந்திராவில் MP சீட் கிடைக்காதவர் ஒரிஸ்ஸாவில் சீட் கிடைத்து மத்திய மந்திரியானார். முதலில் சீட்டை மறுத்த தலைவர் அநீதியிழைக்கிறார் என்பது மனித நீதி. அவருடைய அநீதி மூலம் ஆண்டவன் வழங்கும் தெய்வ நீதி பூர்த்தியாகிறது. பெண் பெற்ற பெரிய பட்டம் அந்த நாளில் அவளுக்குத் திருமண வாய்ப்பைக் கொடுக்கிறது என்றால் அது உலகம் வழங்குவது. அது உயர்ந்ததற்கு அடிப்படை எனப் புரிந்தபின் மாநிலத்திலேயே முதன்மையான குடும்பங்களிலிருந்து பெரும் பட்டம் பெற்ற வரன்களை அனுப்புவது இறைவன்.

அநீதியை ‘உயர்ந்த தெய்வ நீதி’யாக
அறியும் உள்ளம் ஆண்டவன் உறையும் இடம்.

உடல் நலம், பிரமோஷன், பண வருமானம், வீடு கட்டுவது, நட்பில் நாணயம், கொடுத்த கடன் வசூலாவது, ஆப்பரேஷன் தடம் மாறுவது, வேலை கிடைப்பது, தலைக்குமேல் வந்த பிரச்சனை, கணவன் கைவிட்ட மனைவி, கணவனை நிராகரித்த பெண்ணை நினைத்து ஏங்கும் புருஷன், தேர்தலில் தோல்வி, 10,000/- ரூபாய்க்கு வாங்கிய மனையை 3 லட்சத்திற்கு விற்கப் போய் 6 இலட்சம் பெற்ற நிகழ்ச்சி போன்றவற்றை எடுத்து ஆராய்ந்தால் அநீதியின் நீதி விளங்கும்.

மனிதன் கண்ணுக்குத் தெரிந்ததை அனுபவிப்பதை மகத்தான வெற்றியாகக் கொண்டு அதை அதிகமாகப் பெற உயிரை விடுகிறான். அவன் வியாபாரியானால் மார்க்கெட் என்ன தர முன்வருகிறது எனக் கவனிக்க மாட்டான். கல்லூரி ஆசிரியரானால் கல்வித்துறை அவன் கண்ணுக்குத் தெரியாது, பிரமோஷன் தெரியும். பாடகரானால் அத்துறை அளிக்க முன்வருவதை அறிய முன்வருபவர்களில்லை. அந்த மாதம் எத்தனை கச்சேரி செய்யலாம் என்பதே நினைவு. வியாபாரிக்கு மார்க்கெட்டும், வேலை செய்பவர்கட்கு அவரவர் துறையும் அளிக்க முன்வருவதையறியாத மக்கள் ஆண்டவன் நீதியைப் பற்றி நினைப்பதில்லை. பாடகருக்குப் பாரத ரத்னம் காத்திருப்பது தெரியாது. கச்சேரி வசூல் மனதிலிருக்கும்.

நடிகருக்கு நாட்டுத் தலைமையின் குரல் கேட்காது. அடுத்த படம் முக்கியமாகும். அம்பானி, M.S. சுப்புலட்சுமி, குரியன், ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், டென்டுல்கர் பெற்றது அவரவர் துறை மூலம் பெற்றது. அதையும் கடந்தது ஆண்டவன் தரும் நீதி. அது வரும்பொழுது கடுமையான சூழலுடன் வரும். அது நமக்குப் புரியாது. அன்னையின் சைத்தியக் கல்வியிலுள்ள 10 சட்டங்களில் ஒன்று ‘நேற்றைவிட இன்று சற்று முன்னேற வேண்டும்’ என்பது. அந்த நோக்கம் உள்ளவர்க்கு ஆண்டவன் தரும் நீதி புரியும். அதை முன்கூட்டி அறிபவருக்கு முன்னேற்றம் எந்த வயதிலும் தொடரும்.

மனிதன் தேடுவது அவன் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டது. சிறியது. எந்த ஆபீசரும், குமாஸ்தாவும் அடுத்த பதவி வேண்டும் என்றே முயல்வாரே தவிர இலாக்கா தலைமைப் பதவி, மந்திரி பதவி, அகில இந்தியப் புகழ் வேண்டும் என நினைப்பதில்லை. நினைத்தால் அதைப் பேராசை என்போம். காண்டேகர் கதைகளை மராட்டியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் அங்கு வேலை செய்த குமாஸ்தா. இன்று ஞான பீடப் பரிசு பெற்றவர் நெடுநாள் அச்சாபீசில் கம்பாசிட்டராக இருந்தவர். 158 பள்ளிகள், கல்லூரிகளுக்கு முதலாளி 26 ஆண்டுகட்கு முன் ரைஸ் மில்லில் வேலை செய்தவர். இவற்றை உலகம் அதிர்ஷ்டம் என்று அறியும். உழைப்பு என விவரிக்கும்.

ஆண்டவன் இவர்கட்கு மட்டும் இந்த அதிர்ஷ்டத்தைத் தரவில்லை. அனைவருக்கும் ஆண்டவன் தருவது இதுவே. பெற்றவர் சிலர். அச்சிலரில் பெரும்பாலோர் புரியாமல், தலைவிதியேயென தாழ்ந்து பெற்று உயர்ந்தவர். ஒரு சிலரே வாய்ப்பை அறிந்து போற்றி ஏற்றவர். அனைவருக்கும் ஆண்டவன் கொடுத்தார் என்பது நம்ப முடியவில்லையெனில், அமெரிக்காவைப் பார்த்தால் உடனே அதன் உண்மை புரியும். நம் நாட்டில் வாழ்வு தரும் வாய்ப்பைக் கோடியில் ஒருவர் பெற்றால், அமெரிக்காவில் அதே வாய்ப்பை அனைவரும் ஏற்பதால் அது கோடீஸ்வர நாடாக இருக்கிறது.

கார் வந்த புதிதில், சுமார் 100 ஆண்டுகள்வரைபணக்காரர்கள் மட்டும் கார் வைத்திருந்தனர். இன்று நிலைமை மாறியது. மனிதன் பிறந்த பொழுது அவன் விலங்கிலிருந்து பிறந்தான். விலங்கினம் முழுவதும் மனிதர்களாகவில்லை. சத்திய ஜீவன் பிறந்தால் அதே போல் மனித குலம் முழுவதும் மாறாது என்று 1920-இல் கூறிய பகவான் 1947-இல் பரிணாமம் பரிணாம வளர்ச்சி பெறுகிறது என்றார். ரேடியோ, கார், போன் சிலருக்கு மட்டுமிருந்த காலம் மாறி அனைவருக்குமாகி விட்டது போல் சத்திய ஜீவியம் வரும்பொழுது ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமாகும் என்ற கருத்துப்படி பகவான் எழுதுகிறார்.

நாம் செயல்படுவதெல்லாம் நம் செயலல்ல. அவை ஆண்டவன் செயல் என்பது கடவுளை நம்புபவர்கள் ஏற்கும் கருத்து. அதை முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள், நாம் நம்புகிறோம். ஆனால் எப்படி என நாம் அறிவதில்லை. அதையே தத்துவ ரீதியாகக் கூறினால் “நம் செயலனைத்தும் இயற்கையின் செயல் எனலாம்” என்று கூறுகிறார்கள். ஆண்டவனைக் கடந்து இயற்கைக்கு வந்தது போல் இயற்கையை வாழ்வு என்பதால் Life-Response என்ற சட்டத்தை நம்மால் ஏற்க முடிகிறது. நான் ஒருவருடன் போனில் பேசினாலும், பஸ் ஏறி சென்னைக்குப் போனாலும் அவை என் செயலல்ல, அவை சமூகம் என்னில் செயல்படுவது என்பது எவருக்கும் தெளிவான செய்தி. பகவான் Spirit ஆத்மா என்பதன் பரம்பரை விளக்கத்தை மாற்றி, எங்கும் நிறை பரம்பொருள் எனக் கூறுகிறார். நாம் நம்மையும், நாம் முனைந்து ஆசைப்பட்டு செய்யும் செயல்களையும் நம் செயலாகக் காண்கிறோம். அதன் விளைவு உலகப் போர், பொருளாதார நெருக்கடி, பூகம்பம், புயல், இந்திய ஏழ்மை. பகவான் உலகப் போரை ஆண்டவன் செயல் என்றும், உலகம் முன்னேறத் தடையாக உள்ள மன நிலைகளையும், செயல்களையும், கட்டுப் பெட்டியான இருண்ட மனப்பான்மைகளையும் உடைத்தெறிய இறைவன் மேற்கொண்டது என்கிறார். அதை 1900-க்குப்பின் உலகம் இன்றுவரை பார்க்கிறது. சோவியத் யூனியனிருந்தால் அதன் இரகசிய திட்டங்கள் காரணமாக WWW எழுந்திருக்க முடியாது.

Web எழுந்தபின் அத்தடைகள் நிலைக்கா. உலகில் ஆத்மா (Spirit) அக்ஷர பிரம்மத்தைக் கண்டது. மனம் என்ற கருவி செயல்பட்டு எட்டிய உயர்வு அது. அதற்கடுத்த நிலையில் ஜீவனுள்ள முழுபிரம்மத்தை மனம் காண முடியாது. அதற்குரிய கருவியாக சத்திய ஜீவியம் பிறக்க வேண்டும். அதை இந்தியா சாதிக்க தன் அரசுரிமை, செல்வம், சத்தியம், நேர்மை, மானம், மரியாதை ஆகியவற்றை இழந்து அடுத்த உயர்ந்த கட்டத்தில் பெற வேண்டும். அதற்கு முதற்படியாக இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். பழைய பரம்பரையில் வந்த ஆயுதம் தாங்கிய போர் அந்த அளவில் தேவையில்லை. ஆனால் அம்முறையை இந்தியா பரிணாமச் சட்டமாக ஏற்க வேண்டும் என்பது பகவான் கொள்கை. பாரதமாக அதை அறிந்தால், பசுமைப் புரட்சியில் வாழ்ந்த விவசாயி உலக உணவுப் பிரச்சனையைத் தீர்த்தது போல், உலகப் பிரச்சனைகளான — பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், சூழல் பாதிப்பு, அணு ஆயுத சேகரிப்பு, ஏழ்மை — அனைத்தையும் க்ஷணத்தில் தீர்க்கலாம் என்பது பகவான் கொள்கையிலிருந்து நாம் புரிந்து கொள்வது. மனிதன் சந்திக்கும் பிரச்சனைகள் அவனுக்கு அநீதியாகும். அவை ஆண்டவன் வழங்கும் “உயர்ந்த நீதி” என நாம் உணர்வது அவசியம். பாகிஸ்தான் பிரிந்தது, நாட்டின் லஞ்ச ஊழல், இந்து-முஸ்லீம் பிரிவினை, பருவ மழை சரிவரப் பெய்யாதது, கல்லூரிகளில் மாணவர் கல்வித் தரம் படு மோசமானது ஒரு புறமிருந்தாலும், போக்குவரத்து, கோடிக்கணக்கான செல்போன், விதவைக்கான பென்ஷன், மக்களுக்கு உடல்நல இன்சூரன்ஸ், கடைத்தெரு வியாபாரம் ஆயிரம் மடங்கு பெருகியது, ரேடியோ, T.V, சமூக முன்னேற்றமான இலக்கியம், பெண் சுதந்திரம், அளவில் பெருகும் கல்வி போன்றவையும் அவற்றிற்குச் சிகரமாக 1947-இல் 30-ஆக இருந்த ஆயுள் பலம் இன்று 60-தைக் கடந்ததும், ஆண்டவன் நீதி தானே செயல்படுவதை அனைவரும் காண உதவுகிறது. சுயநலம் பரநலமானால், லஞ்சம் நேர்மையானால், ஒரு இழை அடிப்படையில் மனம் இருளிலிருந்து ஒளிக்குத் தாவினால் இந்தியா உலகத் தலைமையை அரசியலிலும் ஆன்மீகத்திலும் பெறும். One Man's Perfection can still save the world. ஒருவர் எய்திய ஆன்மீகச் சிறப்பு ஒரு நாட்டின் முழுச் செல்வ வளமாகும் என நாம் உணர்வதைக் காட்டும்.

கடன் பாரம் கடலென விரிந்து கண்ணில் விரல் விட்டுக் குடைகிறது என்பது ஒரு அன்பர் நிலை. உலகத்துச் செல்வமனைத்திற்கும் உரிமை யாரும் பெறும் நேரம் வந்ததை அன்பர் தாங்கொணாத் துயரமாக உணர்கிறார். வீடு கட்டுவது, கார் வாங்குவது, லாரி போக்குவரத்து, வசதியற்றவர் மேற்படிப்பு, எதுவுமற்ற ஏழைகள் எல்லாம் செய்து ஏராளமாகச் சம்பாதிப்பது இன்று நாட்டை சுபீட்சமாக்குகிறது. அவ்வளவும் கடனை அழித்தால் அழிந்து விடும் என அறிய நேரமாகாது. ஏழைகட்கு அதுவும் பெண்கட்கு அவர் நாணயத்தை மட்டும் நம்பி ரூ.20,000/- கடன் பாங்கு கொடுத்ததால் micro credit இன்று உலக ஸ்தாபனமாகி, நாடு சுபீட்சம் பெற்று, செய்தவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்துள்ளது. மொழியென ஒன்று 10000 அல்லது 20000 ஆண்டிற்குமுன் உற்பத்தியாகியில்லாவிட்டால் இன்று உலகம் ஊமையாக, உளறுவாயனாக இருக்கும். மொழி வளம் மன வளம். கடன் மனிதனை சுயநலத்திலிருந்து பரநலத்திற்குப் போகச் செய்த முதல் வாயில். கடன் ஏற்பட்டதால் சாப்பிடப் பயிரிட்டவன், முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் அதை விற்றுப் பணமாக மாற்றி, சமூகத்தில் வாழ்வில் தவறியவன் பிழைக்க வழி செய்தது. இன்று அபரிமிதமான கடன் பெற்றுத் திணருபவர் 10 ஆண்டிற்குமுன் இதில் 10-இல் ஒரு பங்கும் கடன் பெற முடியாதவர். மேலும், சில ஆண்டுகட்குமுன் அவரால் கடனே வாங்கியிருக்க முடியாது. உயிரை எடுக்கும் கடனின் பாசிட்டிவ் பக்கத்தைக் கவனித்தால் கொஞ்ச நாள் - 15 அல்லது 17 வருஷம் முன் - முன்னால் கடனே வாங்க முடியாதவர் ஏராளமான கடன் பெறும் அளவுக்கு நாடும் அவர் வாழ்வும் விரிந்திருப்பதை அறியவில்லை. இது வாழ்வின் சட்டம் பணத்தில் பாசிட்டிவாக கோடீஸ்வரர் உற்பத்தியாகும் மார்க்கெட்டாகவும், நெகட்டிவாக பணவீக்கம் இலட்சம் பர்சென்ட்டாகும் நிலையை உற்பத்தி செய்வதாகவும் மாறுகிறது. மாஸ்கோவில் கோர்பஷாவ் தலைமையில் நாம் நடத்திய பொருளாதார மகாநாட்டில் Drag என்ற பொருளாதார நிபுணர் இதைப் பேசினார். தன் சொந்த நாட்டில் அவரை ஜனாதிபதியாக்க முடிவு செய்தபின் ரிசர்வ் பேங்க் கவர்னராக்கினர். இலட்சம் பர்சென்ட் பண வீக்கம் இக்கொள்கையால் 1% ஆக ஒரு வாரத்தில் மாறியது. இது 1992-இல் கடன் உயிரை எடுப்பதாக அறியும் அன்பர் கடன் பாரத்தை பாரமாகக் கருதாமல் நாட்டின் பெரு வளத்தையும் தன் சொந்தத் திறமை - பணம் ஈட்டும் திறமையும் ஆயிரம் மடங்கு உயர்ந்ததை அறிந்தால் இன்று அவர் எவ்வளவு கடன் பெற்றாரோ அதே அளவு செல்வத்தை அதே காலத்தில் அவரால் ஈட்ட முடியும் என அவர் காண்பார்.

‘24 மணி நேரமும் பாரியாளுடன் பேசப் போதவில்லை’ — அந்நியோந்நியமான மனைவியின் அன்புப் பேச்சை இழக்க வைத்ததால் அவர் தம்பி தன் மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் என எழுதிய தேவன் இந்த உண்மையை உள்ளத்தின் பெருமிதத்தில் கண்டவர். அடுத்த கட்டமும் உண்டு. அவளை நினைத்தபின் அவனியில் நினைக்கவே ஒன்றுமில்லை என்பவர் அவளில் தன்னையே இழந்து நிற்பார். அவர் வேலைகள் தானே அபரிமிதமாகப் பூர்த்தி செய்து கொள்ளும். ஏனெனில் உலகில் பிறந்த மொழி பேச்சாயிற்று. மார்க்கெட் உற்பத்தி செய்த மனம் மக்கட்செல்வமாகியது. மனம் மனத்தின் தூய்மையில் நிலைத்து ஆத்மாவை அடைந்த ஆத்ம ஞானம் உலகில் ஆன்மீக வளமாகும். இது பகவானுடைய கொள்கை. “பொற்பாதமும் காணப் பெற்றால், மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே; என்பது நாயனார் உணர்ந்த ஆன்மீக உன்னதம். பெண்ணின் அன்பையும், மார்க்கெட்டில் செல்வத்தையும், பொது வாழ்வில் (Power) அதிகாரத்தையும் பொங்கி வரும் புளகாங்கிதமாக நெஞ்சம் சிருஷ்டிக்கிறது. அதுவே தெய்வம் வழங்கும் நீதி.

(தொடரும்)

**********



book | by Dr. Radut