Skip to Content

06. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

3. பிரச்சனை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்

கணவனுக்குப் பொறுப்பில்லை; பிள்ளைக்குப் படிப்பு வரவில்லை; வைத்த நகைகளை மீட்கவில்லை; முதலாளியின் முன்கோபம் என்னைப் பெரிதும் பாதிக்கிறது; வாழ்க்கை பிரச்சனையாக ஆரம்பித்து, சிக்கலாக மாறி, வேதனையாகவும், நரகமாகவும் ஆகிவிட்டது; ஏன் பொழுது விடிகிறது என்று கண்ணில் ஜலம் வருகிறது; இன்றைய பொழுது எப்படிப் போகும் என்று கேள்வி எழுகிறது; என்பன போன்று சிலருக்கு வாழ்க்கை அமைந்து விடும். அவர்களுக்குக் கதி மோட்சம் இல்லையா? ஒரு கணம் சிறப்பு வாராதா? அன்னை அவர்களுக்கெல்லாம் ஏதாவது வழி காட்டுவாரா?

பாரத்தை நாம் சுமப்பதற்குப் பதில், அன்னையிடம் கொடுத்துவிட்டால் இனி பாரம் நமக்கில்லை. அன்னை பாரத்தை சுமப்பதுடன், அந்தப் பிரச்சனையையும் தீர்த்து விடுவார். பாரத்தை அன்னையிடம் சேர்ப்பதெப்படி?

நகை பாங்கிலிருப்பது அடிக்கடி நினைவில் உறுத்துகிறது என்றால், நகையை நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பதில், மனதிலிருந்து நகையை (பிரச்சனையை) ஒதுக்கி, விலக்கி, அன்னையை நினைவுகூர வேண்டும். அதன் பலனாக மனம் லேசாகிவிடும். பிரச்சனை தீர்ந்துவிடும்.

ஒரு பிரச்சனை ஒரு நாளைக்கு 40 முறைகள் நினைவில் வந்து கிலேசமடைந்தால் முதல் நாள் அன்னையை 10 முறைகள் நினைக்க முடிகிறது. நாள் செல்லச்செல்ல 10 நாட்கள் கழித்து ஒரு நாளைக்கு அன்னையை 40 முறைகளும் நினைக்க முடிகிறது. அதாவது பிரச்சனையை முழுவதும் அன்னைக்கு மாற்றியாகி விட்டது. அன்று பிரச்சனை முழுவதும் தீரும்.

என்று ஒரு பிரச்சனை மனதில் தோன்றும் ஒவ்வொரு முறையும் அன்னையை நினைவுகூர முடிகிறதோ, அன்று பிரச்சனை தீர்ந்துவிடும்.

4. அன்பர்கள் வழிபாடு

ஒரு முறை அன்னையை எப்படி வழிபடுதல் சிறந்தது என்ற பிரச்சனை பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டபொழுது ஒரு பிரெஞ்சுக்காரர் அன்னையிடம் இதுபற்றி குறிப்பிட்டார். “Why do you want to worship the divine? Why don't you become the divine?” இறைவனாகவே நாம் மாற முடியும் எனும்பொழுது, ஏன் நாம் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை அன்னை வெளியிட்டார். அன்னை நாம் அவரிடம் பிரார்த்திக்காமலேயே அளித்துள்ள தெய்வீக வரப்பிரசாதம் அது: சாதகன் யோகத்தால் இறைவனாக மாறலாம்; அன்னையாகவும் மாறலாம்.

இந்த யோகச் சிகரத்திலிருந்து படிப்படியாக 100 நிலைகளில் உள்ள சித்திகளை அன்னை சாதகனுக்கு அளிக்க விரும்புகிறார். அவற்றுள் கடைசி நிலையில் உள்ளதுகூட மனிதனுக்கு மிகப் பெரியதாகத் தோன்றக்கூடியது. அவையெல்லாம் யோகத்திற்கே தம்மைச் சர்வபரித்தியாகமாக அர்ப்பணித்துக்கொண்ட சாதகர்களைச் சேர்ந்த இலட்சியங்கள்.

ஒரு வருஷமாக மாதம்தோறும் அன்னையின் சூழலில் (atmosphere) திரண்டு தியானம் செய்து வரும் அன்பர்கள் அதைப் பொறுத்தவரை சிறப்பானவர்களே. அவர்கள் யோக இலட்சியத்தைத் தேடும் சாதகர்கள் இல்லை. ஆனால், அன்னை மீதும், பகவான் ஸ்ரீ அரவிந்தரிடமும் தீராத பக்தியும், குறைவில்லாத நம்பிக்கையும் உடையவர்கள். இவர்களுடைய வீடுகளில், அல்லது பூஜை அறையில் அன்னையின் தியான மையச் சூழல் ஓரளவுக்குத் தெரியக்கூடும். அன்னாருக்குப் பயன்படக் கூடியவகையில் அன்னையின் முறைகளில் ஒன்றையோ, சிலவற்றையோ, பல முறைகளையோ எடுத்து விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று கருதி இக்கட்டுரையை எழுதுகிறேன்.

பக்தியும், நம்பிக்கையுமே அன்பர் வழிபாட்டின் அடிப்படை. அவை உயர்ந்தவை, சிறப்பானவை, அதுவே போதுமான அஸ்திவாரம். அவையின்றி வழிபாடில்லை; பலன் இல்லை. அவை இருப்பதே வழிபாடுதான்; அதற்குரிய பலன் தானே உண்டு. இதுவே பொதுவான உண்மை.

பொதுவான உண்மைக்கும் மேலாக, குறிப்பான உண்மை என்றும் ஒன்றுண்டு. புத்திசாலித்தனம் இல்லாமல் படிப்பு வாராது, புத்திசாலித்தனம் உள்ளவனுக்குப் படிப்பு தானே வரும் என்பது பொதுவான உண்மையானால், அதற்கும் மேலாகக் குறிப்பான உண்மையும் உண்டு. முயற்சி, புத்திசாலித்தனத்தைப் பிரகாசிக்கச் செய்யும் என்பதே அந்தக் குறிப்பான உண்மை. புத்திசாலித்தனம் போதுமான அளவிருந்தும் அதன் முழுப்பலனை எல்லோரும் அடைவதில்லை. பலன், முயற்சியின் அளவைப் பொறுத்தது என்பது நாம் அறிந்தது.

அதேபோல் பக்தியும், நம்பிக்கையும் உள்ள அன்பர்கள் தங்கள் சிறப்புக்குரிய முழுப்பலனையும் அடைய உதவும் முறைகள் பல உண்டு. அவற்றை எல்லோரும் அறிவார்கள். அம்முறைகளால் முழுப்பயன் அடைய நாம் செய்யக்கூடியது என்ன என்பதையே இங்கு நான் எடுத்துக்கொள்கிறேன்.

ஈடுபாடும், பக்தியும் உள்ளவர்கள் பலர் பின்வருமாறு சொல்ல நாம் கேள்விப்படுகிறோம்:

“நம்பிக்கைக்கு எல்லாம் குறைவில்லை. நடைமுறையில் மனம் பல வழிகளில் சென்று, கடைசியில் எதுவும் முடியாமற் போகிறது.”

“எனக்கு எப்பொழுதும் அன்னை நினைவு குறைவது இல்லை. இருந்தாலும் தரிசனத்தன்று உள்ள விசேஷம் மற்ற நாட்களில் இருப்பதில்லை.”

“நானும் பல முறைகளைக் கடைப்பிடிக்கத் தீவிரமாக ஆரம்பித்துள்ளேன். எல்லாம் இரண்டு, மூன்று நாட்கள்தாம். பிறகு பழையபடி இறங்கிவிடுகின்றன.”

 “தியான மையத்தில் இருக்கும்போது இருப்பதைப்போல், தினமும் எதிர்பார்த்தால் எப்படி முடியும்?”

“எனக்கு ஏதாவது ஒரு விஷயம் என்றால்தான் தீவிர பக்தி வரும்.”

இப்படிப்பட்ட எண்ணங்கள் இயல்பானவை. எல்லா விஷயங்களைப்போல, பக்திக்கும் ஏற்றம், இறக்கம் உண்டு என்பது உண்மைதான். இருந்தாலும் நமக்குள்ள பக்திக்குரிய முழுப்பலனையும் நாம் பெற வழியுண்டு என்பதை விளக்க நான் சொல்லும் ஒரே உதாரணம் பரீட்சைக்குப் படிக்கும் மாணவனே. கல்லூரியில் படிக்கும் மாணவன் ஆராய்ச்சி நிபுணனாகலாம் (research scholar), சிறந்த சிந்தனையாளனாக (original scholar) மலரலாம். தன் பாடத்தில் புதிய கருத்துகளைக் காணலாம் (can contribute to his subject), மேதையாகவும் வளரலாம். இவையெல்லாம் உயர்ந்த நிலைகள். அவற்றைத் தவிர்த்து பரீட்சை பாஸ் செய்து பட்டம் பெறுவதே குறிக்கோள் என்று கொண்டால் தன் அறிவின் திறனுக்குரிய அதிகபட்ச மார்க்குகள் வாங்குவது எப்படி? என்பதே என் விசாரம். I class வாங்கக்கூடிய மாணவன் வெறும் பாஸ் மட்டும் செய்தால் அது சரியில்லை, II class-ஐ தவறவிட்டாலும் அது முறையில்லை. State First வரக்கூடியவன் I class ஆகவோ, college fi rst ஆகவோ வந்தாலும் சரியில்லை. பாஸ் செய்யக்கூடியவன் பெயிலாவதும் சரியில்லை. அதாவது ஒவ்வொரு மாணவனும் தத்தம் திறமைக்குரிய அதிகபட்ச மார்க்குகளை வாங்க ஒரு முறை உண்டானால், அவன் அந்த முறையால் பயன் அடைய வேண்டும்.

தொடரும்...

*********

ஜீவிய மணி
 
எதிர்பார்ப்பது சிந்தனை.
சிந்தனை அழியாமல் எதிர்பார்ப்பது நிற்காது.
 



book | by Dr. Radut