Skip to Content

09. பரீட்சைக்குரிய மனப்பான்மை

பரீட்சைக்குரிய மனப்பான்மை

கர்மயோகி

பரீட்சை படபடப்பைக் கொடுக்கக்கூடியது. எவருக்கும் படபடப்பு வரும் நேரம் மனம் இதமாக, இனிமையாக இருக்க முடியுமா? முடியும் என்பது அனுபவம். தமிழ் மீடியம் பள்ளிகளில் மாணவர்கள் 90% நேரத்தை ஆங்கிலத்தை மனப்பாடம் செய்ய எடுத்துக் கொள்வார்கள். ஆங்கிலம் என்றால் சிம்ம சொப்பனம். மனப்பாடத்தையே படிப்பு எனக் கருதும் பள்ளியொன்றில் மாணவர்கள் கணக்கையும் மனப்பாடம் செய்வார்கள்.

அவர்களிடம் ஆங்கில ஆசிரியர் ஒரு வருஷம், "ஆங்கிலத்தை எழுதக் கற்றுக் கொண்டால் அது சிம்ம சொப்பனமாக இராது'' என்றார். SSLCயில் முதல் மார்க்கு வாங்கும் மாணவனும் ஒரு வரி சொந்தமாக ஆங்கிலம் எழுதாத அப்பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவன் ஆங்கிலம் எழுத முடியுமா? ஒருவாறு ஆங்கிலம் எழுத மாணவர்கள் அரைகுறையாக சம்மதித்தார்கள். ஒரு மாதத்தில் மனத்தில் தெம்பு வந்தது. சில மாதங்களில் ஆங்கிலம் தவறில்லாமல் எழுத மாணவர்கள் பயின்றார்கள். வழக்கமாக பாடம் முடிந்தவுடன் ஆசிரியர் summary எழுதிக் கொடுப்பதும், மாணவர்கள் அதை மனப்பாடம் செய்வதுமான அப்பள்ளியில் முழுப் பரீட்சைக்கு முன் மாணவர்கள் புத்தகத்திலுள்ள எல்லா கதை, கட்டுரைகளுக்கும் வகுப்பிலேயே தாங்களே சொந்தமாக summary எழுதி ஆசிரியர் திருத்திக் கொடுத்துத் திருப்திப்பட்டனர்.

முழுப் பரீட்சை வந்தது. முதல் பரீட்சை ஆங்கிலம். பள்ளியில் எல்லா மாணவர்களும் பரீட்சை ஹாலுக்கு நுழையும்வரை summary படித்தார்கள். இந்த வகுப்பு மாணவர்கள் மாலைக்குரிய பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அதை ஆச்சரியமாகக் கவனித்தனர்.

பாடம் புரிந்தால், படபடப்பு வாராது.

பரீட்சைக்கு செல்லும் மாணவனுக்குரிய பல்வேறுவிதமான பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்கட்கு ஆன்மீக உதவியளிக்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. அவர்கள் பிரச்சினைகள்,

 1. சக்திக்கு மீறிய உழைப்பு பரீட்சைக்குத் தேவைப்படுகிறது.
 2. பரீட்சை என்றால் கசப்பு, வெறுப்பு, பயம்.
 3. மனப்பாடம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், பள்ளியே கட்டாயப்படுத்தும்.
 4. குறுகிய நாட்களில் அதிக வேலை செய்ய வேண்டும்.
 5. T.V., ரேடியோ, டேப்ரெக்கார்ட்க்கு இடையில் பரீட்சைக்குத் தயார் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
 6. வீட்டு மனிதர் பரீட்சைக்குப் படிப்பவனை மறந்து ஆரவாரம் செய்வதும், வேலையிடுவதும் மனத்தை உறுத்தும், படிப்பை நரகமாக்கும்.
 7. படித்தது மறந்து போய் பயம் எழுவது.
 8. மனம் சோர்ந்து, தெம்பில்லாமல், நிதானம் தவறிய வாழ்வு பரீட்சைக்கு முன்னுள்ள மாதங்கள்.
 9. T.V., கிரிக்கெட்டை விட முடியாத மனப்போராட்டம். 

மேற்கண்ட பிரச்சினைகள் நாட்டின் பொதுப் பிரச்சினை. வறுமையால் எழும் சிக்கல்கள். மனிதாபிமானமற்றவர்கள் இளம் உள்ளங்களில் ஏற்படுத்தும் வடுக்கள். ஆரம்ப நாட்களில் ஆசிரியர்களுடைய உதாசீனத்தாலும், தரம் குறைவான பள்ளிகளின் நிலையாலும், வறுமையின் காரணத்தாலும், வீட்டு மனிதர், குறிப்பாக தாயார், தகப்பனார் பாசமற்றிருப்பதாலும், மனம் புழுங்கி பாடத்தின் மீது வெறுப்பு ஏற்படுவதுண்டு. அதனால் மாணவர்கள் அவதிப்படுவதுண்டு. பெற்றோர் பிள்ளை முதல் மார்க் வாங்க பிள்ளைகளைப் பிள்ளைகளாகக் கருதாமல் கசக்கிப் பிழிவதால் கெட்டிக்காரப் பிள்ளைகட்கே மனம் வெறுத்துப் பாடம் என்றால் கசப்பேற்படுகிறது. இவற்றையெல்லாம் விவரமாக ஆராய்ச்சி செய்து, தெளிவாக பரிகாரங்களை எழுத கட்டுரை இடம் தராது. அது ஒரு முழு நூலாகும். கூடியவரை அனைவருக்கும் பெரும் பயன் தரும் அளவில் எழுத முயல்கிறேன்.

பிரச்சினை எதுவானாலும், சுமார் தீ பங்கு உடனடி நிவாரணம் பெற முடியும். அதை முதலில் கூறிவிட்டு மற்றவைகளை பிறகு எழுதுகிறேன்.

பரீட்சைக்கு முன் வரும் நாட்களில் கீழ்க்கண்டவற்றை மனத்தில் தெளிவுப்படுத்திக் கொண்டு -- விவரம் வரும் பக்கங்களில் வருகிறது -- இரவு படுக்கப் போகுமுன் மனம் ஆழ்ந்துணர்ந்து அன்னையை அழைத்துப் பின் தூங்கி எழுந்து, காலையில் எழுந்தவுடன் முதல் எண்ணமாக முன்னாளிரவு பிரார்த்தனை நினைவு வந்தால், அந்நாளில் செய்யப்போகும் காரியங்களை அன்னையிடம் நிதானமாக ஒன்றன்பின் ஒன்றாகக் கூறினால், பரீட்சை வருவதற்கு சில நாட்களுக்கு முன்,

அமைதியில் புனர்ஜென்மம் எடுத்தது

தெரியும். பரீட்சை சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளும் பாதிக்கு மேல், முக்கால் பங்கு குறைந்தது தெரியும். மனம் தெளிவு பெறும் பொழுது, அமைதி அதிகமாவது தெரியும். அப்படித் தெளிவுபட வேண்டிய விவரங்கள்:

 1. சக்திக்கு மீறி உழைப்பது அவசியம்:

  நாமெல்லாம் படிக்கும்பொழுது 3ஆம் வகுப்பில் A, B, C, D சொல்லித் தருவார்கள். தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் SSLC வரும்பொழுது ஆங்கில மீடியத்தில் 3ஆம் வகுப்பு மாணவனின் பரீட்சைப் பேப்பரை படித்துத் தெரிந்து கொள்ளும் அளவு திறமையிருக்காது. அதனால் ஆங்கிலம் கடினம், பரீட்சைக்கு அதிக உழைப்பு தேவை என்ற கருத்துகள் 100 ஆண்டுகளாக உலகம் நம்புவது. இது உண்மையல்ல, அப்பட்டமான பொய். கிளன் டொமான் என்பவர் 50 ஆண்டுகளாகப் பள்ளி நடத்துகிறார். அவர் பள்ளியில் 4 வயதுப் பையன் எந்தப் புத்தகத்தையும் படிக்கிறான். இங்கு அவர் முறைகளை ஓரளவு பின்பற்றும் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு குழந்தை ஜூனியர் என்சைக்குளோபீடியாவை சரளமாகப் படிக்கிறது. நமது பள்ளிகள் கையாளும் முறைகள் பாடத்தைக் கசப்பாக்கிவிட்டது. பாடம் கசப்பானதல்ல. இன்று நான் இப்பள்ளியில் கட்டாயமாக மனப்பாடம் செய்யும் நிலையில் இருக்கிறேன். எனக்கு இத்தத்துவம் எல்லாம் ஏட்டுச் சுரக்காய் என நினைக்கலாம். இந்தத் தெளிவு இக்கட்டுரையைப் படித்த பின் ஏற்படுமானால், மனம் பீதியிலிருந்து பெரும்பாலும் விடுபடும். அது பயத்தை பெரும் அளவு குறைக்கும்.

 2. பரீட்சை கசப்பு, வெறுப்பு:

  இது மனப்பிரமை. உண்மையில் பரீட்சை சினிமா பார்ப்பது போன்ற சந்தோஷமான நிகழ்ச்சி. உலகம் கசப்பாக நினைப்பதால், அந்நினைவு நம்மையும் ஆட்கொள்வதால் நமக்கும் கசப்பு, வெறுப்பு ஏற்படுகிறது. மாணவர்கள் ஒரு சோதனை செய்து பார்க்கலாம். வாராந்திரம் பரீட்சை நடத்தும் பள்ளிகள் உண்டு. காலாண்டு தேர்வுண்டு. இதுபோன்று ஒரு பரீட்சையில் ஒரு பாடத்தை -- கணக்கு, சரித்திரம் -- எடுத்து, பரீட்சை வரும்முன் மனப்பாடம் செய்யாமல், அதைப் புரிந்து கொள்ள முயன்றால், தெரியாததை ஆசிரியர், பெற்றோர், நண்பர் மூலம் தெரிந்து கொள்ள முயன்றால், பெரும் அளவு பாடம் தெளியும். ஓரளவு குறைவாக இருப்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தானறிந்ததைத் தன்னைக் கேட்பவர்கட்கும் சொல்லிக் கொடுக்க முனைந்தால், அப்பாடத்தில் தெரியாத நுணுக்கம் இருக்காது. அதன் பின்,

  • பரீட்சை எப்பொழுது வரும் என மனம் கேட்கும்.
  • சந்தோஷமாகப் பரீட்சையை வரவேற்கும்.
  • கசப்பு இனிப்பாக மாறும்.
  SSLC, Intermediate, B.A. ஆகிய பரீட்சைகளில் ஆங்கிலத்தில் பெயிலான மாணவன் M.A. English Literatureஇல் தகப்பனார் வற்புறுத்தலால் பயந்து கொண்டே சிபார்சுடன் சேர்ந்தான். மேற்சொன்ன முறையைக் கையாண்டு தன் M.A., junior, seniorஇல் உள்ள 120 மாணவர்களிடையே பிரபலமானான். ஆசிரியர்கள் தங்களை சந்தேகம் கேட்கும் மாணவர்களை இவனிடம் அனுப்புவார்கள். இதன் இரகஸ்யம்,

  புரிந்துவிட்டால் பயமிருக்காது.
  பயம் ஏற்படுவது புரியாத காரணத்தால்தான்.

 3. மனப்பாடம்:

  இது நம் நாட்டில் பல பள்ளிகளில் கட்டாயமாக உண்டு. மற்ற இடங்களில் பழக்கமாக உண்டு. மனப்பாடம் செய்வது படிக்கும் முறை என்ற கருத்து உலகில் உலவுகிறது. இது தவறான கருத்து என கல்வி உலகம் அறியும். ஆனால் நடைமுறையில் அதுவே உள்ளது.

  10ஆம் வகுப்பில் விஞ்ஞான ஆசிரியர் மாணவர்கட்கு அன்றாடம் நடத்தும் பாடத்தைப் புரியும்வரை கூறியபின், மாணவர்களே தங்கள் சொல்லால் சொல்லும்படியும், எழுதும்படியும் பயிற்றுவித்தார். முழுப் பரீட்சையில் 4 section பேப்பர்களைத் திருத்திய ஆசிரியர்,

  • இந்த வகுப்பு பேப்பர் கட்டு, மற்ற கட்டுகளைவிட 3 மடங்கு பெரியதாக இருக்கிறது.
  • எந்த மாணவனும், எந்தக் கேள்வியையும் ஒதுக்கவில்லை என்று கூறினார்.
  மனப்பாடம் அறிவை மழுங்கச்செய்யும், புரிந்தால் நினைவு தவறாது.

  கசப்பு மனப்பாடத்தால் வருகிறது.

 4. குறுகிய நாட்களில் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கிறது:

  அன்றைய பாடத்தை அன்றே படித்து மனத்தில் இருத்தியிருந்தால், பரீட்சைக்கு அதிக வேலை செய்ய வேண்டியிருக்காது. பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம் இந்நிர்ப்பந்தத்தைத் தருகிறது. நம் பள்ளிகளில் எழுத்து வேலை குறைவு. முக்கியமான கேள்விக்குப் பதில் தயார் செய்வதே அனைவரும் செய்வது. ஒரு நாள் பாடம் நடந்தவுடன் ஆசிரியர் அங்கு எழுத்து வேலை தருவதில்லை. மாணவனே அப்பாடத்தை மனத்தில் பெற எழுதும் பழக்கமிருந்தால், பரீட்சைக்குத் தயார் செய்வது தீ பாகம் அல்லது 9/10 பாகம் குறையும். சிரமம் இருக்காது. ஒரு முறை கையால் எழுதியது மறக்காது.

 5. பெற்றோருக்கும், வீட்டில் மற்றவர்க்கும் பிள்ளைகள் படிப்பதைவிட T.V. பார்ப்பது முக்கியம், பாட்டு கேட்பது அவசியம்.

  நாட்டில் வறுமையிருப்பதால் பிற நாடுகள் போல ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை வழங்கும் நிலை இங்கில்லை. பண்பில்லாததால், தங்கள் சொந்த சௌகரியத்தை மட்டும் மனம் நாடுவதுண்டு. இந்த நிலையைத் தவிர்க்கப் பிள்ளைகள் பார்க்கில் போய்ப் படிப்பதுண்டு. குடும்பத்திற்கு பண்பும், வசதியும் வரும்வரை இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை. தீர்வில்லை எனில், மனித வாழ்வில் தீர்வில்லை. ஆன்மா அடிப்படையில் வாழும் வாழ்வில் தீர்வுண்டு. மாணவனுக்கு ஆன்ம விழிப்பிருந்தால், அவன் மனம் எச்செயலிலும் பிறர் வசதியை நாடுமானால், அப்பழக்கத்தை மாணவன் மேற்கொண்டால், அவன் படிப்பை T.V., ரேடியோ, டேப்ரிக்கார்ட் இடையூறு செய்யாது. சிறுவர்கள் இந்த உயர்ந்த discipline கட்டுப்பாட்டை மேற்கொள்ளும்படி எதிர்பார்ப்பது சரியில்லை.

  தினமும் மௌனமாக படுக்கப் போகுமுன் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் அடுத்த ஒரு நாளைக்கு T.V. தொந்தரவு இருக்காது.

 6. படிக்கும் மாணவனுக்கு வீட்டார் தொந்தரவு தருவது:

  இதுவும் மேற்சொன்னது போன்ற பிரச்சினை. மாணவன் தனக்குத் தேவை எழும்பொழுது, பிறருக்குத் தொந்தரவாக நடந்தாலொழிய இது இருக்காது. அவன் தன் செயலையும், எண்ணத்தையும் மாற்றிக் கொண்டால், இவனை மற்றவர்கள் தொந்தரவு செய்யமாட்டார்கள்.

 7. படித்தது மறந்து பயம் வருவது:

  மனப்பாடம் செய்தால் மறந்து போவதுண்டு. புரிந்தது மறக்க வழியில்லை. அதனால் பயம் வாராது. எருக்கம்பூவிற்கு ஆன்மீகப் பெயர் தைரியம். எருக்கம்பூவை எடுத்து இறைவனுக்குச் சார்த்தி வணங்கி, மறுநாள் பையில் வைத்துக் கொண்டால் பயம் தைரியமாகத் திருவுரு மாறும்.

 8. சோர்ந்து, தெம்பில்லாத வாழ்வு:

  வாழ்வில் குறிக்கோளில்லாதவர்க்கே சோர்வு எழும். முதல் மார்க் வாங்க வேண்டும், மாணவத் தலைவனாக வேண்டும், பெரிய உத்தியோகத்திற்குப் போக வேண்டும், நல்லவனாக இருக்க வேண்டும், செய்வன திருந்தச் செய்ய வேண்டும், பிறருடன் இனிக்கப் பழக வேண்டும் என்று வாழ்வில் பல இலட்சியங்களுண்டு. இவற்றை மேற்கொள்பவன் என்றும் உற்சாகமாக இருப்பான், தெம்பில்லை என்ற பிரச்சினை இருக்காது. சாமந்தி மலருக்கு life energy எனப் பெயர். இம்மலரை அன்னைக்கு வைத்து வணங்கினால் உடலில் தெம்பு ஊறும். அம்மலரைக் கையில் எடுத்தால், தெம்பு உள்ளே நுழைவதைக் காணலாம்.

 9. T.V., கிரிக்கெட்டை விட முடியாத மனப்போராட்டம்:

  பொதுவாக நன்றாக விளையாடும் மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். நம் நாட்டில் அது விதிவிலக்கு. விளையாடினால் படிக்கமாட்டான், படித்தால் விளையாடமாட்டான். அதற்குப் பல காரணங்களுண்டு. ஒன்று முக்கியமானது. Concentration இருப்பதில்லை. Concentration என்ற மலர் (தாவரப் பெயர்: Euphorbia millii, ஆங்கிலப் பெயர்: Crown of Thorns, சிவப்பு நிறத்தில் பட்டனை போன்ற சிறிய பூ, முட்செடி) ஒன்றுண்டு. இம்மலர் மனத்தை படிப்பில் செலுத்தும்.

படிப்பு, பரீட்சை ஆகியவற்றில் பிரச்சினையில்லை. நெடுநாட்களாக சமூகம் தன் மனப்போக்கால் இவற்றைப் பிரச்சினையாக்கிவிட்டது. இந்த உண்மையை மனம் ஏற்றால் பிரமை மாறி பயம் அழியும். இயற்கையில் பிள்ளைப்பேறு வலியில்லாதது. நடைமுறையில் அது பிரசவ வேதனையாகக் காணப்படுகிறது.

கருவுற்றதிலிருந்து உடலுக்கும், மனத்திற்கும் உரிய பயிற்சி பெறுவோர்க்கு பிரசவம் வலி தருவதில்லை. பரீட்சையை நம் மனப்பான்மை வேதனைக்குரியதாக்கிவிட்டது.

உலகில் பரீட்சை என்பது அழியும் காலம் வந்துவிட்டது. மேல் நாடுகளில் 7, 8 வகுப்பு வரை பரீட்சையில்லை. படிப்புக்குப் பரீட்சை தேவையில்லை என்பதை கிளன் டொமான் பின்பற்றுகிறார். இந்தியாவிலும் அவர் முறையை பின்பற்றும் பள்ளிகளில் பரீட்சையில்லை. நாட்டில் கல்வித் திட்டம் மாறும்வரை பரீட்சை அழியாது.

மாணவன் ஆன்ம விழிப்புப் பெற்றால், அதிலுள்ள சிரமம் பெரும்பாலும் அழியும். இளம் மாணவர்களை ஆன்மீக கட்டுப்பாட்டை மேற்கொள்ளும்படி கேட்க முடியாது. ஆனால் அவர்களை சத்தியத்தை மேற்கொள்ளும்படிக் கேட்கலாம். கல்லூரி மாணவன், பள்ளி மாணவன் சத்தியம் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று முடிவு செய்தால், அவனால் எவருக்கும் தொந்தரவில்லை.

சத்தியம் சத்தியமாக ஜெயிக்கும்.
மாணவன் சத்தியத்தை மேற்கொண்டால் பரீட்சை
சிம்மசொப்பனமாக இருக்காது.

இது உயர்ந்த முறை. அதிகப் பலன் தரும் முறை.
ஒரு மாணவன் சத்தியமே தன் வழி என சத்தியத்தை வழிபட்டால்,

 • அவனது புத்திசாலித்தனம் வளரும்.
 • அதிகமாக விளையாடினால், பாடம் அதிகமாகப் புரியும்.
 • பிறரால் படிப்புக்குத் தொந்தரவு வாராது.
 • இயல்பாக இத்தனை நாளிருந்த சிரமங்கள் நாம் நம்ப முடியாத அளவில் கரைந்து மறையும்.
 • பரீட்சை கடுமையாக இருக்காது. 

அன்னை சத்தியதெய்வம். மாணவன் அன்னையை மனதில் தெய்வமாக ஏற்று பக்தியால் வழிபட்டால், அவனுக்கு வழிபாடு என்று ஒன்று தேவையில்லை.

நினைவே வழிபாடாகும்.
அன்னை வழிபாடு ஆத்ம விழிப்பாகும்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் லோகமாதாவான அன்னையை அரை க்ஷணம் நினைத்துச் செய்தால் அக்காரியம் ஜெயிக்கும். அன்னைக்குரிய அம்சங்களில் மஹேஸ்வரி அம்சம் ஞானத்திற்குரியது. ஞானம் மனத்திற்குரியது. Pure Mind என்று நந்தியாவட்டை மலருக்கு அன்னை பெயரிட்டுள்ளார். இம்மலரை அன்னைக்கு வைத்து வணங்கினால், மனமும், புத்திசாலித்தனமும் வளரும். பிறவியில் உண்டான புத்திசாலித்தனம் வளராது என்ற சட்டம் மாறி அது வளருவது தெரியும். அன்னை யார், ஏன் அவர்கட்கு இச்சக்தியெல்லாம் ஏற்பட்டது என்பது தத்துவம். அவர் அருளைப் பெற்றவர் பெற்றது என்ன என்பது நடைமுறை.

பாஸாக முடியாத மாணவன் அன்னை அருளால் முதல் மார்க் பெற்றான்.

கிராமத்து பையன். SSLCக்கு வந்துவிட்டான். கெட்டிக்காரன். சில பாடங்களில் முதலாகவும், மற்றப் பாடங்களில் அதிக மார்க்கும் பெறுவான். ஆங்கிலம் இதுவரை பாஸ் செய்ததில்லை. பள்ளியில் SSLC வரை பாஸ் போட்டுவிட்டார்கள். SSLCஇல் சர்க்கார் பரீட்சை எழுத வேண்டும். இவனுக்கு ஆங்கிலத்தில் 25 மார்க் வரும். மனப்பாடமும் ஆங்கிலத்தில் வாராது. 5 மைலுக்கு அப்பாலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு வருகிறான். வசதியில்லை. அதனால் டியூஷன் படிக்க இயலாது. டிசம்பரில் ஆங்கிலம் படிக்க ஆசிரியரை நாடினான். அவர் பாடம் சொல்லிக் கொடுக்க இசையவில்லை. பல ஆசிரியர்களை நாடினான். எவரும் அவனை ஏற்கவில்லை. முடிவாக ஒருவரிடம் வந்து அவரும் மறுக்கவே அழுதான். பரிதாபப்பட்டு ஏற்றுக் கொண்டார். குறுகிய நாட்களில் என்ன செய்வது? மாணவன் புத்திசாலி எனப் பார்த்த ஆசிரியர் அவனை ஆங்கிலம் எழுதக் கற்றுக் கொள்ளச் சொன்னார். பையன் மிரண்டுவிட்டான். சமாதானப்படுத்தி அவனை ஏற்றுக் கொள்ளச் சொன்னார். 3 வார்த்தையில் வாக்கியங்களை எழுதக் கற்றுக் கொடுத்து, அதை 4, 6, 10, 15 வார்த்தைகளாக்கினார். அதிகப் பயிற்சியை மாணவன் வரவேற்றான். நாள்தோறும் 6 மணி நேரம், 8 மணி நேரம் என பயிற்சி பெற்றான்.

அவன் பாட புத்தகத்திலுள்ள ஒரு கதையை சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதினான். தவறு ஏற்பட்டால் திருத்திக் கொடுத்தால், அடுத்த முறை தவறு செய்யமாட்டான். அவன் பாட புத்தகங்களிலுள்ள எல்லாக் கதைகளையும் தானே புதியதாய் கற்றுக் கொண்டபடி ஆங்கிலத்தில் தவறில்லாமல் எழுதினான். பாடம் புரிவதால் இனி மனப்பாடமும் வருகிறது.

பிப்ரவரியில் பரீட்சைக்கு முன் பள்ளியில் பரீட்சையுண்டு. இம்மாணவன் அப்பரீட்சையில் சொந்தமாக ஆங்கிலம் எழுதினான். முதல் மார்க் பெற்றான் என்பது அப்பள்ளியின் வரலாறு காணாத ஒன்று.

 • புரிந்தால் பரீட்சைக்குக் கடுமையில்லை.
 • புரிவது மனத்தெம்பையும், நிதானத்தையும் தரும்.
 • புரியாதபொழுது பாஸ் செய்ய முடியாது. புரிந்தால் முதல் மார்க் வரும். 

அன்னையை வழிபடுவோர் அனுபவிப்பவை ஏராளம். இன்று உலகில் உள்ள அவ்வளவு வசதிகளையும் பெற முடியும். உலகிலில்லாத வசதிகளும் வருவதுண்டு.

மனம் பக்தியால் நிரம்பி நம்பிக்கையால் செயல்பட்டால்,
அன்னை அழைத்தவுடன் வருவார்.

குருக்ஷேத்திரத்தில் வழி தவறிப் போன பெண்மணி கதி கலங்கிய நேரம் அன்னையை அழைத்து மீண்டும் தம் மக்களுடன் சேர்ந்தது ஒரு நிகழ்ச்சி. மெக்ஸிகோவில் பணத்தையும், பாஸ்போர்ட்டையும் தொலைத்த அமெரிக்கர் அன்னையை அழைத்து அதைப் பெற்றார்.

கடல் உள்ளே வந்து கட்டிடத்தை அரித்து சுவரை வீழ்த்தியபொழுது அன்னை கடல் தேவதையை அழைத்து அதைத் தடுத்து நிறுத்தினார்.

38 வருடங்களாக வேலை செய்யாதவர் அன்னை பக்தராகி வேலை பெற்றார்.

பாலைவனத்தில் விவசாயம் செய்தவருக்கு அன்னை அருளால் பெரும் நீர் ஊற்று கிடைத்தது.

வானம் பார்த்த பயிரிட்டு ஆண்டுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் சம்பாதித்த விவசாயிகள் மறைமுகமாக அன்னைக்குச் சேவை செய்ததால் வருமானம் 2000 ரூபாயாகவும், இலட்ச ரூபாயாகவும் மாறியது.

உயர்ந்த சரக்கிற்கு டீலர்ஷிப் ஒரு நகரத்திற்கு வேண்டும் என வியாபாரியின் மாமன் முதல் அமைச்சர் மூலம் கம்பனியைக் கேட்ட பொழுது, கம்பனி, கேட்பவர் முதலமைச்சர் என்பதையும் பொருட்படுத்தாமல் மறுத்துவிட்டது. பிரதமர் முதலமைச்சரின் உதவியை நாடியபொழுது முதலமைச்சர் முதலாகக் கேட்டது அந்த டீலர்ஷிப். அதே கம்பனிக்கு சப்ளையராக இருந்த சிறு முதலாளி அன்னை வழிபாட்டை மேற்கொண்ட பொழுது, அதே கம்பனி அவர் கேட்காமல் ஒரு சிறு மாநிலத்திற்கு டீலர்ஷிப் கொடுத்து, பிறகு 5 மாநில டீலர்ஷிப் கொடுத்தது வாழ்வில் ஒரு அதிசயம்.

கெமிஸ்ட்ரி, M.A. படித்தவர் IAS பரீட்சைக்கு சரித்திரம் எடுத்துக் கொண்டார். முயன்று படித்தார். முயற்சி முழு முயற்சியானால் அது முடியும் சமயம் தெய்வம் நாம் அழைக்காமல் செயல்படும். தான் கல்லூரியில் படிக்காத பாடம் என்பதால் அதிக முயற்சி எடுத்தார். பரீட்சைக்குச் சில நாள் முன் அவருக்குத் திடீரென, தாம் நினைக்காமல் 10 கேள்விகள் தோன்றின. இதில் ஏதோ விசேஷமிருப்பதாக நினைத்து அப்பத்து கேள்விகட்கும் அவர் சிறப்பாகப் பதில் தயார் செய்தார். அத்தனையும் பரீட்சையில் வந்துவிட்டன. அகில இந்தியாவில் முதலாகத் தேறினார். இது சூட்சும ஞானம். நம் முயற்சி ஸ்தூல உலகுக்குரியது. Physical world ஜட உலகைச் சார்ந்தது. ஜட உலகில் முயற்சி முடிந்தவுடன், சூட்சும உலகில் எழும். இது ஆன்மீக அனுபவம். மனம் பக்குவமானால், அன்னை நம்மைத் தேடி வருவார் என்ற உண்மைக்கு இது சிறந்த உதாரணம்.

சாதாரணமாக பாஸ் செய்யும் மாணவன் B.Sc. கெமிஸ்ட்ரி பரீட்சைக்கு முதல் நாளிரவு முழுவதும் தூங்காமல் படித்தான். மறுநாள் பரீட்சையில் உட்கார்ந்தவுடன் புத்தகம் எதிரில் "தெரிகிறது''. முதல் கேள்விக்குரிய பதில் "தெரிகிறது''. அதைப் "பார்த்து'' எழுதினான். அடுத்தக் கேள்விக்குரிய பதில் புத்தகத்தில் தெரிகிறது. எல்லாக் கேள்விகளையும் அப்படியே எழுதி I classஇல் பாஸ் செய்தான். இம்மாணவன் பொதுவாக சூட்சுமமானவன். சுமார் 2 மைலுக்கு அப்பால் வருபவர் இவன் கண்ணுக்குத் தெரியும். இரவு கண் விழித்ததால் அவனிடம் உள்ள சூட்சுமம் வெளிவந்து புத்தகமாகக் காட்சியளித்தது.

இம்மாணவன் தன் பிறந்த தினத்தன்று அன்னையைத் தரிசிக்கப் போனபொழுது தன் உடல் கரைந்து ஒளி மயமாகி உலகெங்கும் பரவுவதைக் கண்டான்.

1973ஆம் ஆண்டு November 17ஆம் தேதியில் மாலை 7.30 மணிக்கு கிராமத்திலிருந்த தன் வீட்டை விட்டு படியிறங்கிய பொழுது வானத்தில் கோள ரூபமாக ஜோதியொன்று பிரம்மாண்டமாகத் தெரிந்தது. அடுத்த நிமிஷம் அது சுக்குநூறாக உடைந்து ஒவ்வொரு துளியும் ஒரு மனித இதயத்துள் புகுவதைக் கண்டார். மறுநாள் காலையில் ரேடியோவில் அன்னை சமாதியடைந்தார் எனக் கேட்டார்.

 • அன்னை ஜோதி.
 • அனைவருக்கும் உரிய ஜோதி.
 • அவர் நம்மை நாடி வருகிறார்.
 • நாம் அவரைப் பொருட்படுத்துவதில்லை.
 • அன்னையை ஏற்ற பின் வாழ்வு அமிர்தமாகும். 

கிராமத்தில் மழையில்லாமல் கிணறுகள் வறண்டுவிட்டன. ஆண்கள் வேலைக்குப் போவதற்குப் பதிலாக வெகுதூரம் சென்று தண்ணீர் சுமந்து வருகிறார்கள். இந்த சிரமம் அன்னையின் காதிற்கு வந்தது. அன்னை அதன் காரணத்தை அறிய முற்பட்டார். ஏதோ காரணத்திற்காக அக்கிராமத்தார் அன்னை மீது கோபமாக இருந்தனர். அன்னையின் படத்துடன் ஊரார், ஊரை வலம் வரும்படி அன்னை கூறியதை ஏற்றுச் செய்தனர். பெரு மழை பெய்து வெள்ளம் ஓடியது. மழை நிற்க மீண்டும் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தனர்.

டாக்டர் இனி பிழைக்காது, பிணத்தை எடுத்துப் போகலாம் என்று கூறியதை நம்பாமல் மனைவி ஆஸ்பத்திரியில் பிரார்த்தனை செய்த பின் அவர் உயிர் பிழைத்து அடுத்த வாரம் வீட்டிற்கு வந்து விட்டார்.

பாரிசில் பிறந்து தியானத்தில் ஸ்ரீ அரவிந்தரை சந்தித்து அவரைத் தேடியடைந்து அவருடனேயே தங்கி சரணாகதியை மேற்கொண்ட அன்னை மூன்றாம் போரைத் தடுக்க ஆரோவில்லை நிர்மாணித்துத் தடுத்தார்.

ஸ்ரீ அரவிந்தர் சுதந்திரப் போராட்டத் தலைவர். பொய்க் கேசில் அவரை அலிப்பூர் சிறையில் அடைத்தனர். அவருக்குக் கைதிகளும், வார்டர்களும் நாராயணனாகக் காட்சியளித்தனர்.

1906இல் அரசியலில் புகுந்த ஸ்ரீ அரவிந்தர் 1910இல் அரசியலை விட்டு விலகி யோகத்தை மேற்கொண்டார். இறைவன் அவரைப் பணித்தபடி புதுவைக்கு வந்தார். அவர் மனம் சுதந்திரப் போராட்டத்திலேயே இருந்தது. இறைவன், "நாடு சுதந்திரம் பெற்றாகிவிட்டது. உனக்கு வேறு பணியிருக்கிறது'' என்றார்.

உலகில் மரணம், நோய், துன்பம் உண்டு. இவை அழியும் வகை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அலிப்பூர் ஜெயிலில் ஸ்ரீ அரவிந்தரிருந்தபொழுது சுவாமி விவேகானந்தர் கனவில் தோன்றி, சத்தியஜீவிய உலகை Supramental worldஐக் காட்டினார். அவ்வுலகம் இதுவரை ரிஷிகள் எட்டாத உலகம். ஒரு யோகி அவ்வுலகை எட்டினால், அது நகர்ந்து பூவுலகுக்கு வரும். அது நடக்க 12 யோகிகள் சத்தியஜீவிய சித்தி பெற வேண்டும். 1910இல் இதைக் கேள்வியுற்ற பகவான், 1934இல் இந்த சித்தி பெற்றார். தான் சத்தியஜீவியத்தை அடைந்துவிட்டார். உலகம் அதைப் பெற மேலும் 11 பேர்கள் தேவை. அன்னை தவிர வேறு எவரும் யோகத்தை மேற்கொள்ளாததால் தாம் உடலை விட்டு விலகி, சூட்சும உலகுக்குப் போய் யோகத்தைத் தொடர விரும்பினார்.

அது 1956 February 29ஆம் தேதி பலித்து, சத்தியஜீவிய சக்தி புவியில் இறங்கியது. அதனால் மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டது. அதிலிருந்து 50 ஆண்டுகளாக உலகம் அதற்கு முன் 500 ஆண்டுகளில் பெற்ற அளவுக்கு முன்னேற்றம் பெற்றதாக ஐ.நா. கணக்கெடுத்துள்ளது.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் மகான்களோ, ரிஷிகளோ இல்லை. அவர்கள் அவதாரப் புருஷர்களும் இல்லை. அவதாரம் என்பது இறைவனுடைய அம்சம் மனித உடலைத் தாங்கி, தம் வாழ்வால் உலகுக்கு எடுத்துக்காட்டாக அமைவது. இவர்கள் இருவரும் ஆண்டவனின் பகுதிகள். உலகுக்கு வந்து யோகத்தை மேற்கொண்டவர்கள். அவதாரபுருஷன் யோகம் செய்வதில்லை. இருவர் ஒரே சமயம் அவதரிப்பதில்லை, சேர்ந்து வேலை செய்ததுமில்லை.

உலகில் மரணம் அழிந்து சத்தியஜீவன் Supramental being பிறக்க யோகம் செய்தார்கள். அவர்களது ஒளி பொன்னொளி. பகவான் December 5ஆம் தேதி 1950இல் சமாதியடைந்த பின் அவருடலில் பொன்னொளி அங்கும் இங்குமாக வெளிப்பட்டது. சூட்சுமமானவர்க்கு தியானத்தில் பகவான் பொன்னிறமாகத் தெரிவார்.

பகவானுக்குரிய மலர் செந்தாமரை.
அன்னைக்குரிய மலர் வெண்தாமரை.

பகவானும், அன்னையும் கூறிய கருத்துகளில் சில:

 • வாழ்வு மனிதனுக்குக் கட்டுப்படும்.
 • கர்மம் அழியும்.
 • தோல்வியை நாம் ஏற்காவிட்டால் தோல்வியில்லை.
 • மத வழிபாட்டின் காலம் கடந்துவிட்டது.
 • இனி ஆத்மாவுக்கே உரிய காலம் உதித்துவிட்டது.
 • யோகத்தை மேற்கொண்டால், அவர்கள் ஆயுளை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
 • மனிதனுடன் உலகம் முடியவில்லை. மனிதனுக்கு அடுத்த சத்தியஜீவன் 30,000 ஆண்டுகளில் பிறப்பான். யோகம் அவனை 30 ஆண்டுகளில் அல்லது 300 ஆண்டுகளில் காணும்.
 • மனிதனால் சமாளிக்க முடியாத பிரச்சினை அவனுக்கு வாராது.
 • உலக சரித்திரத்தில் முக்கியமானவை 4 நிகழ்ச்சிகள்:
  1. டிரோஜன் போர்.
  2. ஏசு பிறந்தது.
  3. கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் லீலை செய்தது.
  4. கிருஷ்ண பரமாத்மா குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தது.
 • யோகத்தை மேற்கொண்டவர் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்.
 • உலகில் துன்பம் படைக்கப்படவில்லை.
 • துன்பம் அகந்தைக்கு. அகந்தை அழிந்தால் உலகில் ஆனந்தம் தவிர வேறெதுவுமில்லை.

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நல்லது போல் கெட்டதும்
பரிணாமத்திற்குக் கருவியாகும்.
 

********

 book | by Dr. Radut