Skip to Content

08. உடன்பாடுகளும் முரண்பாடுகளும்

உடன்பாடுகளும் முரண்பாடுகளும்

N. அசோகன்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எந்தப் பிரச்சினையும் வருவதை விரும்புவதில்லை. பிரச்சினைகளே இல்லாத சீரான, அமைதியான, வெற்றிகரமான வாழ்க்கையைத்தான் நாம் வாழ விரும்புகிறோம். ஆனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொழுது அதிலொரு பயனும் இருக்கிறது. பிரச்சினைகளை வெற்றிகரமாகச் சமாளித்து, அவற்றை முறியடிக்கும் பொழுது நம்முடைய திறமையும், செயலாற்றும் திறனும் வளர்கின்றன. குளிர்ப் பிரதேசமான ஐரோப்பாவில் வாழும் ஐரோப்பியர்கள் குளிர்கால சிரமங்களை வெற்றிகரமாகச் சமாளிக்கக் கற்றுக் கொண்டுள்ளனர். குளிர் காலத்தில் அவர்களால் பயிர் செய்ய முடியாது என்ற காரணத்தால் குளிர் காலத்திற்கு வேண்டிய உணவுத் தேவையை கோடை காலத்திலேயே தயார் செய்துகொள்ளக் கற்றுக் கொண்டுள்ளனர். ஆகவே குளிர் காலம் என்ற சிரமத்தின் பலனாக ஐரோப்பிய விவசாயிகளின் உற்பத்தித் திறன் அபாரமாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியா போன்ற வெப்பமயமான நாடுகளில் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம் என்ற வாய்ப்பிருக்கிறது. குளிர் காலத்திற்காகப் பயப்பட வேண்டியதில்லை. இதன் காரணமாக நம் நாட்டு விவசாயிகள் மந்தமாகிவிட்டனர். இதனால் ஐரோப்பிய விவசாயிகளுடன் ஒப்பிடும் பொழுது நம் நாட்டு விவசாயிகளின் உற்பத்தித் திறன் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகிறது.

அமெரிக்கா புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது வெறும் வனாந்திரமாகத்தான் இருந்தது. அங்குக் குடியேறிய ஐரோப்பியர்கள் பிழைக்க வேண்டும் என்றால் காட்டைத் திருத்தி விளை நிலமாக்கி, பயிர் செய்து, பிழைத்தால்தான் உண்டு என்ற நெருக்கடியில் இருந்தார்கள். காட்டுப் பகுதியில் வசிப்பதில் வரும் சிரமங்களையும், ஆபத்துகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முயற்சி செய்த பொழுது அவர்கள் மிகுந்த திறமைசாலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், தைரியசாலிகளாகவும் மாறினார்கள். இதன் விளைவாக அவர்கள் சாதனை உயர்ந்து, வருமானமும் உயர்ந்து, அமெரிக்கா இன்று உலகிலேயே பெரிய பணக்கார நாடாகத் திகழ்கிறது. அன்றிருந்த சிரமமான சூழ்நிலை இன்றில்லை. இருந்தாலும் அன்று வளர்த்துக் கொண்ட கடின உழைப்பு, திறமையான செயல்பாடு, மற்றும் தைரியமான மனநிலை ஆகிய நல்ல குணவிசேஷங்களை இன்றுவரை அவர்கள் விடாமல் வைத்திருக்கிறார்கள். இதே ரீதியில் பார்த்தால் இரண்டாம் உலகப்போரில் படுசேதமடைந்த ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும் மீண்டும் நாட்டைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவர ஒரு பெரிய முயற்சி எடுத்தார்கள். அமெரிக்காவின் நிதியுதவியும் கிடைத்தது. இருந்தாலும் இவர்கள் எடுத்த முயற்சி பெரியது. அந்தப் பெருமுயற்சியின் விளைவாக இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் இருந்ததைவிட இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் வந்த பொருளாதார நிலை பல மடங்கு அதிகமாக உயர்ந்துவிட்டது என்ற அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. வசதியான, சிரமமில்லாத வாழ்க்கை ஒரு மனிதனின் திறமையையும், செயலாற்றலையும் குறைக்கிறது என்பதைப் பணம் படைத்த நிறையத் தொழிலதிபர்கள் உணர்ந்துவிட்டனர். இதனால்தான் பெரும் பணக்கார தொழிலதிபர்கள்கூட தங்கள் பிள்ளைகளிடம் நேரடியாகப் பெரிய பொறுப்புகளைத் தராமல், சாதாரண மக்களைப் போல் கீழ்நிலையில் ஆரம்பித்து, எல்லா சாதாரணத் தொழிலாளர்களையும் போல சிரமப்பட்டு, திறமைகளை வளர்த்துக் கொண்டு பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, தகப்பனார் வளர்த்துள்ள நிறுவனங்களில் அவருக்கு அடுத்தபடியாக முக்கிய நிர்வாகஸ்தராக பொறுப்பேற்றுக் கொள்ளும்படி செய்கிறார்கள். செட்டிநாட்டுப் பெரும் தொழிலதிபர்கள் தம் பிள்ளைகளுக்குத் தாமே பயிற்சித் தராமல் அடுத்தவரிடம் தொழில் கற்றுக் கொள்ள அனுப்புவதுண்டு. அவர்களும் இப்பிள்ளைகளை வெறும் ஆளாக ஏற்றுக் கொண்டு ஒரு பத்து வருட கால அளவில் படிப்படியாக 1/8 ஆள், 1/4 ஆள், 1/2 ஆள், 3/4 ஆள், இறுதியாக முழு ஆள் என்றும் தேர்ச்சி பெற வைத்துத் திருப்பி அனுப்புவதுண்டு. உலகிலேயே பெரிய பணக்காரர் என்று பில் கேட்ஸ் அவர்கள் பெயர் வாங்கியுள்ளார். அவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர்கள் என்றும், இந்திய ரூபாய் கணக்குப்படி 2,25,000 கோடி ரூபாய் என்றும் மதிப்பிட்டுள்ளார்கள். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் எவரும் இன்னும் 20 வயதைக்கூட எட்டவில்லை. ஆனால் அவரோ இப்பொழுதே என்னுடைய இரண்டு மகன்களுக்கும் சரி, மகளுக்கும் சரி, 300 மில்லியன் டாலர்கள்தான் inheritanceஆகக் கொடுப்பேன். அதற்கு மேல் கொடுத்தால் அவர்கள் சோம்பேறிகளாகிக் கெட்டுவிடுவார்கள் என்று அறிவிப்புச் செய்துவிட்டார். இதுவே நம்மை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தும். எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவருடைய பிள்ளைகளும் தம்முடைய தந்தையாரின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார்கள் என்றால், அது நம்மை மேலும் வியப்பிற்குள் ஆழ்த்தும்.

நெருக்கடிகளால் மக்கள் அவதிக்குள்ளாகும் பொழுது, இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்காக வாழ்க்கையில் முன்னேறும் வழிகளைத் தேடுகிறார்கள். ஏற்கனவே அவர்களுடைய வாழ்க்கை மிகவும் சௌகரியமாகவும், வசதியாகவும் இருந்தது என்றால், வாழ்க்கையில் மேலும் முன்னேறக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் அவர்கள் கண்ணில் அவை படாது. இருக்கின்ற சூழ்நிலை படுஅவஸ்தையாக இருந்தால்தான் சூழ்நிலையில் இருக்கின்ற பிற வாய்ப்புகள் சிறப்பானவைகளாகவும், அவசியமானவைகளாகவும் தெரியும். வசதி படைத்த குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகளைவிட ஏழ்மை நிறைந்த குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகள்தான் பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்புப் போன்ற சந்தர்ப்பங்களைச் சிறந்த வாய்ப்புகளாகப் பாராட்டிக் கொள்வார்கள். ஆனால் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் நமக்குப் படிப்பு வராவிட்டாலும் பெற்றோருடைய பெரும் செல்வம் நமக்குப் பின்னால் பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைப்பதால் ஏழைப் பிள்ளைகளைப் போல அதே அளவிற்குப் படிப்பை இவர்கள் போற்றுவதில்லை.

தமிழ்நாட்டில் தற்பொழுது forwardஆகவுள்ள ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாகவே மிகவும் வறுமையை அனுபவித்தவர்கள். ஆங்கில அரசாங்கம் சிவில் சர்வீஸைத் தொடங்கிய பொழுது நாம் நன்றாகப் படித்தால் இந்தச் சிவில் சர்வீஸில் சேர்ந்து ஒரு நிலையான வருமானத்தைப் பார்க்க முடியும் என்றிந்தக் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் உணர்ந்தார்கள். அதனால் இந்தக் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் மட்டும் படிப்பில் அவ்வளவு அக்கரைக் காட்டினார்கள். விவசாயம் மற்றும் வியாபார பின்னணியைக் கொண்ட மற்ற கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் அந்த வியாபாரமும், விவசாயமும் துணைக்கு இருந்ததால் சிவில் சர்வீஸிலோ மற்றும் படிப்பிலோ அதே ஆர்வத்தைக் காட்டவில்லை. ஆங்கில அரசாங்கமும் போய் காங்கிரஸ் ஆட்சியும் போய், 1967ஆம் ஆண்டு முதல் திராவிடக் கழகங்களின் ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, மற்ற கம்யூனிட்டிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் ரிசர்வேஷன் பாலிஸி அதிகரித்ததால் மீண்டும் இதே forward கம்யூனிட்டி நெருக்கடிக்கு உள்ளாகியது. அரசாங்க வேலை கிடைப்பது மிகவும் சிரமம் என்ற பொழுது வேறு எப்படிப் பிழைக்கலாம் என்று வழி தேடிய இக்கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் software துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு information technology course எல்லாம் படித்து, வெளிநாட்டிற்கு எல்லாம் சென்று, இப்பொழுது மாதந்தோறும் பல இலட்சங்கள் எல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது வாழ்க்கை நெருக்கடி கொடுக்கக் கொடுக்க இக்கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகச் சமாளிக்கும் பொழுது அவர்களுடைய பொருளாதார நிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. சமூகம் ஒரு தேக்க நிலையிலிருந்தால் புதுப்புது வாய்ப்புகள் உருவாவதற்கு வழியில்லை. ஆனால் சமூகம் எந்நேரமும் மாறிக் கொண்டும், வளர்ச்சி அடைந்து கொண்டும், மேல்நோக்கிப் போய்க் கொண்டும் இருப்பதால் தொடர்ந்து புதுப்புது வாய்ப்புகள் உருவாகியவண்ணம் உள்ளன.

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு விழிப்புணர்வு, தைரியம் மற்றும் ஆபத்துகளை சமாளிக்கக்கூடிய மனோதிடம் என்றிவையெல்லாம் தேவைப்படுகின்றன. ஆங்கிலேயர் நம்மை ஆண்ட பொழுது உயர்கல்வி வேண்டுமென்றால் இங்கிலாந்திற்குச் சென்று படிக்கலாம் என்ற ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் அதே சமயத்தில் கடல்கடந்து வெளிநாடு போகக் கூடாதென்று இந்தியக் கலாச்சாரத்தில் ஒரு தடையுமிருந்தது. ஆகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் இந்தத் தடையை மீறத் துணிந்தவர்களால்தான் இது முடியும் என்றாகிவிட்டது. காந்திஜி மற்றும் நேருஜி, பகவான் ஸ்ரீ அரவிந்தர் போன்ற இவர்கள் எல்லாம் இந்தத் தடையை ஒரு பொருட்டாக மதிக்காமல்தான் இங்கிலாந்து சென்று உயர்கல்வி பெற்றுத் திரும்பி வந்தார்கள். இதற்குப் பயந்து பின்வாங்கியிருந்தார்கள் என்றால், அந்த உயர்கல்வி அவர்களுக்குக் கிடைத்திருக்காது. இந்தியர்கள் பொதுவாகவே செக்யூரிட்டியை மிகவும் தேடுகிறார்கள். அரசாங்கப் பணியில் இந்தியர்கள் தேடும் இந்தப் பாதுகாப்பான வேலையும், ரெகுலர் வருமானமும் நிறையவே கிடைப்பதால் அன்றிலிருந்து இன்றுவரை அரசாங்க உத்தியோகத்திற்கு இந்திய மக்களிடையே ஒரு தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. பெண் பார்க்கும் படலத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முதன்மைக் கொடுக்கப்படுகிறது. ஆகவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுயத் தொழிலில் நல்ல வருமானம் இருக்கிறதென்று தெரிந்தாலும் தைரியமாக இருக்கின்ற salaried employmentஐ விட்டுவிட்டு சுயத் தொழிலுக்கு வருபவரே குறைவு.

தொழில் முனைபவர்களை ஊக்குவிப்பதற்காக கருத்தரங்குகளும், செமினார்களும் நிறையவே நடக்கின்றன. அந்தக் கருத்தரங்குகளில் பேசுகிறவர்களும் சொற்பொழிவாற்றுபவர்களும் உயர் தொழில் செய்வதில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்று விவரமாக எடுத்துச் சொன்னாலும் பயிற்சிக்கு வருபவர்களை ஊக்குவிப்பது அவ்வளவு கடினமாக இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்.

நம்முடைய சமூக சூழ்நிலையில் புது வாய்ப்பு உருவாவதை தெரிந்து கொள்ளவே நமக்கு ஒரு விழிப்புணர்வு தேவை. வாய்ப்பு தானாக வரும் வரை காத்திருக்கப் பல பேருக்குப் பொறுமையில்லை. அப்படிப் பொறுமையில்லை என்றால் முன்னேறுவதற்கான வாய்ப்பு வேண்டுமென்று தீவிரமாக உள்ளே ஒரு ஆர்வத்தை வரவழைத்தோம் என்றால் அதற்கு ரெஸ்பான்ஸாக சமூகத்தில் ஒரு புதிய வாய்ப்பு உருவாகலாம். Pride & Prejudice நாவலிலேயே இதற்கு நல்ல நிரூபணம் இருக்கிறது. திருமதி. பென்னட் அவர்கள் தனது மகள்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், சிறந்த வரன்கள் அவர்களைத் தேடி வர வேண்டும் என்று மிகவும் பிரியப்படுகிறார். அவருடைய ஆர்வத்திற்குக் கிடைக்கின்ற ரெஸ்பான்ஸ் போல பிங்கிலியும், டார்ஸியும் இவர் இருக்கும் ஊருக்கு வந்து இவருடைய பெண்களின் மேல் நாட்டம் கொள்வதை நாம் பார்க்கிறோம். ஐரோப்பாவில் முடியாட்சியும், பிரபுக்களின் ஆட்சியும் பரவியிருந்த காலத்தில் முன்னேறுவதற்குத் தேவையான சுதந்திரமோ, வாய்ப்புகளோ இல்லாமல் ஏழைகளான பொதுமக்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு ஒரு இடமும், சூழ்நிலையும் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆசைக் கனவுகள் வீண்போகவில்லை. அமெரிக்கா என்ற புது உலகம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குச் சென்றால் மன்னராதிக்கமோ, பிரபுக்களின் கட்டுப்பாடோ எதுவுமில்லாமல் சுதந்திரமாகச் செயல்படலாம், விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்று தெரிந்ததும், ஏராளமான பொதுமக்கள் உடனே ஐரோப்பாவை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்குச் சென்று குடியேறினார்கள். ஆகவே இங்கே நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் சுதந்திரம் வேண்டும், முன்னேற வாய்ப்பு வேண்டும் என்று ஏழை ஐரோப்பியப் பொதுமக்கள் தீவிரமாக ஆசைப்பட்டதால்தான் அவர்களுடைய ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமெரிக்கா என்ற ஒரு புது தேசம் என்ற ரூபத்தில் புதிய வாய்ப்பு அவர்கள் வாழ்க்கையில் உருவாகியது என்பதுதான்.

சிரமங்களும், வாய்ப்புகளும் அவற்றிற்கிடையே ஒரு விநோதமான தொடர்பை வைத்துக் கொண்டுள்ளன. ஒரு சிரமத்தை நாம் வெற்றிகரமாகச் சமாளித்தோம் என்றால் அதுவே நமக்கு ஒரு பெரிய வாய்ப்பாக மாறிவிடும். அதே சமயத்தில் வந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அதுவே நமக்குப் பெரிய பிரச்சினையாக மாறிவிடும். Inefficientஆகச் செயல்படும் ஒரு வியாபார நிறுவனத்திற்குத் திடீரென்று மிகவும் efficientஆக செயல்படக்கூடிய போட்டிக் கம்பெனி ஒன்று மார்க்கெட்டில் வந்தால் அது ஒரு பெரிய நெருக்கடியாகவும், சிரமமாகவும் தெரியலாம். ஆனால் அந்த நெருக்கடியை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய inefficiencyயிலிருந்து விடுபட்டு தன்னையும் ஒரு efficient கம்பெனியாக மாற்றிக் கொண்டது என்றால், முன்னைவிட அதிக இலாபமும் கிடைக்கும், வளர்ச்சியும் கிடைக்கும். கணவருடைய வருமானத்தையே பெரியதாக நம்பிக் கொண்டு வீட்டோடு இருக்கும் ஒரு படித்த பெண்மணியை எடுத்துக் கொள்வோம். கணவர் ஒரு விபத்தில் அடிப்பட்டுக் கால்கள் செயலிழந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு வந்துவிட்டதாகவும், அவர் உடம்பு குணமாகி மீண்டும் வேலைக்குப் போய் வருமானம் பார்ப்பதற்குக் குறைந்தபட்சம் 2 வருடங்கள் ஆகும் என்ற நிலைமை வந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த இரண்டு வருடத்திற்கு வருமானத்திற்கு வழியில்லை என்பது ஒரு குடும்பத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி. இதுநாள்வரை சமையலறையே கதியாக இருந்த அந்தப் பெண்மணி சம்பாதிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறாள். அவரும் வெளியில் சென்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, ஒரு வருமானத்தைப் பார்க்க ஆரம்பித்து, இரண்டு வருடம் கழித்து கணவரும் மீண்டும் வேலைக்குப் போகும் அளவிற்கு உடம்பு தேறும் பொழுது மனைவியே 7,000 அல்லது 8,000 ரூபாய் சம்பாதிக்கும் இடத்திற்கு வந்துவிடுவாள். இப்பொழுது கணவர் மீண்டும் பணியில் சேரும் பொழுது அவருடைய பழைய சம்பளம் ரூபாய் 20,000 மற்றும் மனைவியின் சம்பளம் ஒரு 7,000 என்று குடும்பத்தின் மொத்த வருமானம் முன்பைவிட ரூபாய் 7,000 உயருகிறது. அதாவது வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டோடு இருந்த பெண்மணியைக் கணவருக்கு வந்த விபத்து என்ற நெருக்கடி அவரைச் சம்பாதிக்கின்ற ஒரு பெண்மணியாக மாற்றுகிறது. இந்த விபத்தே வராமலிருந்திருந்தால் அவர் தொடர்ந்து வீட்டோடே இருந்திருப்பார். விபத்து ரூபத்தில் வந்த நெருக்கடி 2 வருடம் கழித்து இருவரையும் சம்பாதிக்க வைத்து, குடும்பத்தின் மொத்த வருமானத்தை உயர்த்துகிறது.

இப்படி நெருக்கடி வாய்ப்பாக மாறுகிறது என்பது எப்படி உண்மையோ அம்மாதிரியே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படாத வாய்ப்புகளும், பிரச்சினைகளாக மாறுவதுண்டு. உதாரணமாக ஒரு கம்பெனி தன்னுடைய விரிவாக்கத்திற்கு நிறைய வங்கிக் கடன் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கடன் தொகையை முறையாக விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தியிருந்தால் அது கம்பெனியின் வருமானத்தை உயர்த்தியிருக்கும். ஆனால் அந்தக் கம்பெனி அப்படிச் செய்யாமல் கிடைத்த கடன் தொகையை வீண்செலவு செய்திருந்தால், அது இறுதியில் கம்பெனிக்கு ஒரு பெரிய கடன் பாராமாகத்தான் முடியும். அதாவது வாய்ப்பை, வாய்ப்பாகப் பயன்படுத்தியிருந்தால் அது கம்பெனியை உயர்த்தியிருக்கும். ஆனால் வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தும் பொழுது ஒரு பெரிய வருமானத்தைக் கொண்டு வராமல், அது ஒரு பெரிய கடன் பாரத்தைத்தான் கொண்டுவரும்.

இப்பொழுது நாமெல்லாம் அன்னை பக்தர்கள் என்ற முறையில் பார்த்தால், நம் வாழ்க்கையில் சாதாரணமாகப் பார்க்கவே முடியாத அரிய, பெரிய வாய்ப்புகளை எல்லாம் அன்னை நம் வாழ்க்கையில் சதா உண்டுபண்ணிக் கொண்டேயிருக்கிறார். அவற்றையெல்லாம் நாம் முறையாகப் பயன்படுத்திக் கொண்டோம் என்றால், நம் வாழ்க்கை கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துவிடும். அதே சமயத்தில் அன்னை அருளின் பாதுகாப்பும் நம் வாழ்க்கையிலிருக்கிறது. அதனால் எந்தச் சிரமமும், நெருக்கடியும் நம்மை ஒன்றும் செய்யாது. வெற்றி, சாதனை, சந்தோஷம், மனநிறைவு என்று பாஸிட்டிவ் அம்சங்கள் மட்டும் நிரம்பிய வாழ்க்கையாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

முற்றும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆணுக்கு இடைவிடாத நினைவு பெண்.
பெண்ணுக்கு இடைவிடாத நினைவு
தான் பெற்ற பிள்ளை.
 
 
*******
 
ஜீவிய மணி
 
பெற்றதைப் பிறருக்கு அளிப்பது
பிரபஞ்சம் செய்யும் யோகம்.
 
 
******



book | by Dr. Radut