Skip to Content

07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

10. ஸ்ரீ அரவிந்தரின் பரிபூரண யோகம்

சாக்ரடீஸ், ஷேக்ஸ்பியர், நியூட்டன், ஐன்ஸ்டீன், பெர்னார்ட்ஷா போன்ற பெருமக்களை "மேதைகள்' என்று உலகம் போற்றுகிறது. இந்த மேதைகளின் சிந்தனைகளும், கருத்துகளும் மனித அறிவு உச்ச நிலையை எட்டி இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. விஞ்ஞானம், இலக்கியம் போன்ற துறைகளில் மட்டுமன்று, தத்துவத் துறையிலும் அத்தகைய மேதைகள் தோன்றியுள்ளனர். அவர்களுடைய கருத்துகள் புரட்சிகரமானவையாக விளங்குகின்றன. அவர்கள் அறிவில் எவ்வளவுதான் மேம்பட்டு விளங்கினாலும், அறிவின் எல்லைக்கு உட்பட்டவர்களே. அறிவின் எல்லையைக் கடந்து செல்ல வேண்டுமானால், எண்ணங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். உலக வாழ்க்கையில் பற்றுள்ளவர்கள் இதனைச் சாதிக்க முடியும்.

இறைவனை நாடித் தியானத்தில் ஈடுபடுபவன் தபஸ்வி. அவன் மனத்தைக் கட்டுப்படுத்தி, அங்கிருக்கும் எண்ணங்களை விலக்கிவிடுகிறான். குறைந்தபட்சமாக 20 அல்லது 25 ஆண்டுகள் இடைவிடாது முயன்றால், எண்ணங்களை அழித்துச் சித்தி அடையலாம். எண்ணங்கள் அழியும்போது மௌனம் குடிகொள்கிறது.

அது அகண்ட மௌனமாகித் தபஸ்வியிடம் நிரந்தரமாகத் தங்கும்போது அவனை நாம் "முனிவன்' என்று அழைக்கிறோம். அகண்ட மௌனத்தினால் வெளிப்படும் சக்தி அளப்பரியதாகும். அவதாரப் புருஷனான கிருஷ்ணனுக்கு வரம் கொடுக்கும் அளவுக்குத் தவ வலிமை பெற்றிருந்தார் துர்வாச முனிவர். "கிருஷ்ணனுடைய உடல் எவராலும் காயப்படுத்த முடியாது விளங்கும்' என்பதுதான் அவர் அளித்த வரம்.

புலன்களின் உதவியின்றிப் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை மனத்தில் காட்சியாகக் காண்பவர்களை "ரிஷி" என்று அழைக்கிறோம். அவர்கள் அவ்வாறு காணும் காட்சியை "ஞான திருஷ்டி" என்பர். நிகழ்காலத்தில் மட்டும் அல்லாமல் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் அமைந்த - அமையும் - நிகழ்ச்சிகளை அகக் காட்சிகளாகக் காணக்கூடிய பக்குவம் பெற்றவர்களை "முக்காலமும் உணர்ந்தவர்கள்" என்று சொல்கிறோம். புலன்களையும், எண்ணங்களையும் கடந்தது போல அகக் காட்சிகளையும் கடந்து, இறைவனோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவர்களை, "ஞானிகள்' என்று அழைக்கின்றோம். அவர்கள் மொழிகின்ற சொற்கள் எல்லாம் ஞானத்தை வழங்குகின்ற அருட்சொற்களாகும். அவர்களை ‘யோகிகள்’ என்று அழைக்கின்றோம். "யோகம்' என்ற சொல்லுக்கு ‘ஒன்றாக இணைதல்’ என்று பொருள். இறைவனோடு ஒன்றாக இணைதலை ‘யோகம்’ என்ற சொல் குறிப்பாக உணர்த்துகிறது.

"யோகம்" என்பது பல வகைப்படும். ஞான யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், ஹட யோகம், தந்திர யோகம் என்பன அவற்றுள் சில. பிறப்பு, இறப்பு, துக்கம், பொய், நோய், அறியாமை ஆகியவற்றால் பிணைக்கப்பட்ட ஆன்மா, அவற்றிலிருந்து விடுதலையடைய விரும்புகின்றது. அந்த விடுதலையை அடைவதற்குக் கருவிகளாக விளங்குபவை மேற்கூறிய யோகங்கள். ஆன்ம விடுதலைக்காகச் செய்யும் முயற்சியை ‘யோக சாதனை’ என்று கூறுகிறோம்.

மனம், உணர்ச்சிகளின் உறைவிடமான உடல், உயிர் (பிராணன்) ஆகிய மூன்றும் ஆன்மாவின் முக்கியக் கருவிகளாகும். ஆனாலும் அவையே ஆன்மாவைப் பிணித்துக் கட்டியுள்ள கட்டுகளாகவும் இருக்கின்றன. அவற்றில் எந்தக் கட்டை அறுத்தாலும், ஆன்மா மற்ற கட்டுகளை அறுத்துக்கொண்டு விடுதலை அடைந்துவிடும். தூய்மை, அகங்காரமின்மை, தியானம் ஆகிய இம்மூன்றும் எந்தக் கட்டாக இருந்தாலும், அதனைத் தளர்த்தி அறுத்துவிடும் திறன் பெற்றவை.

மனத்தைத் தூய்மைப்படுத்தி, மௌனத்தை அடைபவன் ஞானி. மௌனத்தால் மனமானது மெல்ல மெல்ல ஆன்மப் பிரகாசத்தில் ஒன்றாகக் கலந்துவிடுகிறது. தியானம் சித்திக்கும்போது மனமானது ஆன்மாவில் அழுந்திக் கரைந்துபோகின்றது. "மனம்" என்னும் கட்டு அற, ஆன்மாவானது மோட்சம் அடைகின்றது. இது ஞான யோகம்.

உணர்ச்சியைத் தூய்மைப்படுத்தி, அதனை இறைவன்பால் செலுத்துகின்றவன் பக்தன். மனைவி, மக்கள், மண், மனை, பொருள் ஆகியவற்றின் மீதுள்ள பற்றைத் துறந்து இறைவன் மீது பற்று வைக்கும்போது உணர்ச்சிகள் தூய்மை அடைகின்றன. இறைவன் மீது பற்றுப் பெருகப் பெருக, உணர்ச்சிகள் ஆன்மாவைப் பிணைக்கும் சக்தியை முற்றுமாக இழக்கின்றன. அதனால் ஆன்மாவானது பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை அடைந்து மோட்சத்தைப் பெற்றுவிடுகிறது. இது பக்தி யோகம்.

பல வகையான யோகாசனங்கள் மூலமாக உடலைத் தூய்மைப்படுத்துகின்றவன் ஹட யோகி. தூய்மைப்படுத்தப்பட்ட உடல், உன்னதமான பொலிவைப் பெறுகின்றது. நரை, திரை, மூப்பு என்பவை ஹட யோகியை நெருங்குவதில்லை. மூலாதாரத்தில் முடங்கிக் கிடக்கும் குண்டலினிச் சக்தியை எழுப்பி, "உடல்" என்னும் கட்டை அறுக்கின்றான் அவன். ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையில் (சஹஸ்ரதளம்) விளங்கும் ஆன்மாவை அறிகின்றான். அவன் விரும்புகின்றபோது உடலை உதறித் தள்ளிவிட்டு ஆன்மாவோடு இரண்டறக் கலந்து மோட்சம் அடைகின்றான்.

பிறப்பு, இறப்புகளில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவதுதான் மேற்கூறிய யோகங்களின் குறிக்கோளாகும். இதற்குத் திறவுகோலாக ஏதாவது ஒரு கருவி தேவை. அந்தக் கருவி மனமாகவோ, உணர்ச்சியாகவோ, உடலாகவோ இருக்கலாம்.

"இறைவனுடைய நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே ஆன்மாக்கள் உடலில் புகுந்து பல பல உயிர்களாக விளங்குகின்றன. உடலை உதறித் தள்ளுவதற்காக ஆன்மாக்கள் உடலில் பிரவேசிப்பதில்லை. ஆன்மா தன்னுடைய இயல்பான குணங்களோடு விளங்கவும், உடலால் கட்டுப்படாமலும், அதே சமயத்தில் அவ்வுடலில் சகல திவ்ய குணங்களை வெளிப்படுத்தவும்தான் அது உடலில் புகுந்துள்ளது. இதை உணராமல் ‘மோட்சமே குறிக்கோள்’ எனக் கொண்டு, பூத உடலை உதறிவிட்டுச் செல்வது இறைவன் உலகைப் படைத்த நோக்கத்துக்கு மாறானது'' என்று ஸ்ரீ அரவிந்தர் சுட்டிக்காட்டுகிறார்.

ஞானி உடலை "அழியும் பொருள்" என்று கூறிப் புறக்கணிக்கின்றான். பக்தனையும், பக்தி யோகத்தையும் கேலிசெய்கின்ற ஞானியரும் உண்டு. சமாதி நிலையில் உள்ளபோது ஆன்மாவோடு கலந்து கரையத் தெரிந்த ஞானிக்கு, சமாதியிலிருந்து வெளிப்பட்டவுடன் ஆன்மாவோடு ஒன்றி இருக்க முடிவதில்லை. அதற்குக் காரணம், ஞானியின் உணர்ச்சிகளும், உடலும் ஒரு சாதாரண மனிதனிடத்தில் எப்படித் தூய்மையற்று விளங்குகின்றனவோ, அதே போல் தூய்மையற்று இருப்பதுதான். இதற்கு உதாரணமாகத் துர்வாசரையே சொல்லலாம். சமாதி நிலையில் இருந்து சாதாரண நிலைக்கு அவர் திரும்பி வந்த நேரங்களில், தம்மை உபசரிக்கவில்லை என்பதற்காக எத்தனை பேரைச் சபித்திருக்கிறார்? அவர், ஒரு மூன்றாம் தர மனிதனைவிட மோசமாக மூர்க்கம் அடைந்த நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டு.

இத்தகைய ஞானியைப் போலத்தான் பக்தனும், ஹட யோகியும் இருக்கின்றனர். பக்தனிடத்தில் மனமும் உடலும், ஹட யோகியிடத்தில் மனமும், உணர்ச்சிகளும் தூய்மை அடையாமல் இருப்பதால், சமாதியில் இருந்து வெளிப்பட்ட பின்பு இவ்வுடல் ஒரு பெருந்தடையாக இருந்து ஆன்ம அனுபவத்தைத் துய்க்க முடியாமல் செய்துவிடுகிறது. ஆகவே, அவர்கள் உடலில் தங்கி இருக்க விரும்பினாலும், அது நடைமுறையில் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.

ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய யோகத்தை "பூரண யோகம்" என்று குறிப்பிடுகின்றார். யோகத்தில் ஆன்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு அதன் கருவிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சாதாரண மனிதனிடத்தில் எப்படி ஆன்மாவும், மற்ற கருவிகளும் இணை பிரியாமல் இருக்கின்றனவோ, அப்படியே யோகியிடமும் அவை இணை பிரியாமல் இருக்க வேண்டும். அவற்றின் உறவுகள்தாம் மாறுகின்றன; இணைப்பு மாறுவது இல்லை. ஆம், பூரண யோகியிடத்தில் அவற்றின் உறவு முறைகள் மட்டும்தான் மாறுகின்றன. அவனிடத்தில் ஆன்மாவுக்கும், ஆன்மாவின் கருவிகளுக்கும் எந்தவித முரண்பாடும் கிடையாது. அந்தக் கருவிகளும் ஆன்மாவைப் போல் தூய்மை அடைந்து, ஒளி பெற்று, ஆன்மாவுக்கு அனுசரணையாக விளங்குகின்றன. பூரண யோகிக்கு ஆன்மாவும் ஒரு கருவியே தவிர, முடிந்த முடிவன்று.

பூரண யோகியின் நோக்கம் ஆன்ம விடுதலையன்று. மனம், உணர்வு, உடல் ஆகிய இம்மூன்றையும் தூய்மைப்படுத்துதல் பூரண யோகத்தின் முதல் கட்டமாகும். மனத்திலிருந்து அறியாமையை நீக்க வேண்டும்; உணர்ச்சிகளை இன்ப, துன்ப நுகர்ச்சிகளிலிருந்து விடுவிக்க வேண்டும்; தமோ குணத்தை நீக்க வேண்டும்.

ஞான, பக்தி, ஹட யோகங்களால் ஒரு சேரக் கிடைக்கும் ஆரம்ப பலனானது, இங்கு முதற்கட்ட அனுபவமாக அமைகிறது.

ஆன்மா தன் சுயரூபத்தை உணர வேண்டுமானால், அது "அகங்காரம்" என்னும் கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். அகங்காரம் முற்றும் நீங்கிய பிறகு ஆன்மா தன் இயல்பான நிலையை அடைகின்றது. இது பூரண யோகத்தின் இரண்டாவது கட்டமாகும். ஆன்மா தூய்மை அடைந்த தன் கருவிகளோடு கூடி நின்று இறைவனின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றும் வகையில் இவ்வுலகத்திலிருந்து செயல்படுகின்றது. இவ்வுடலையோ, இவ்வுலகத்தையோ உதறித் தள்ளிவிட்டு அது இறைவனை அடைய விரும்புவதில்லை.

மற்ற ஆன்மாக்களும் இந்தப் பக்குவத்தை அடைய வேண்டும் என்பது பூரண யோகத்தின் முக்கிய குறிக்கோள். ஆகவே, பக்குவம் அடைந்த ஓர் ஆன்மா, மற்ற ஆன்மாக்களும் பக்குவம் அடைவதற்காக, இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் தன்னை ஒரு பாலமாக அமைத்துக்கொண்டு செயல்படுகின்றது. இது பூரண யோகத்தின் முதற் கட்டமாகும்.

சாதாரண மனிதன் தன்னை உடலாகக் காண்கின்றான்; மற்றவர்களையும் உடல்களாகவே பார்க்கின்றான். ஆனால் பூரண யோகி தன்னை ஆன்மாவாகக் காண்கின்றான். மற்றவர்களையும் அவன் ஆன்மாக்களாகக் காண்கின்றான். அவன் இறைவனின் கருவியாக இருந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆன்ம விளக்கத்திற்குத் தொண்டு செய்கின்றான். இவ்வுலகம் பொய்ம்மையிலிருந்து விடுபடவும், இங்கே சத்தியத்தின் ஆட்சி நிலைக்கவும் அவன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கின்றான்.

மகான் ஸ்ரீ அரவிந்தர் நமக்குத் தந்துள்ள பரிபூரண யோகத்தின் அடிப்படைக் கருத்துகள் இவை.

தொடரும்....

*******book | by Dr. Radut