Skip to Content

05. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/82) சக்தி (force) அசைந்தால் அதனின்று பவர் (power) எழுகிறது. ஜீவியம் அசையாத நிலையிலும் திறனைப் பெற்றுள்ளது.

  • அசைவிலும் அசைவற்ற நிலையிலும் சக்தியுள்ள ஜீவியம்.
  • சக்தி என்ற சொல்லை energy, force, power என்ற மூன்றிற்கும் நாம் பயன்படுத்துவதால் தெளிவு படுவதில்லை.
  • Energy என்பது சக்தி. சிறு குழந்தை உட்கார முடியாமல் ஓடுகிறது, ஆடுகிறது. அது உடலின் சக்தி physical energy.
  • உயிரின் சக்தி மற்றவருடன் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறது. பிறருடன் ஆர்வமாகப் பேசுபவர்க்குரியது (vital energy).
  • எதையும் சிந்திப்பவருக்கு mental energy மனம் சக்தி பெற்றுள்ளது.
  • (Spiritual energy) ஆன்மீக சக்தி அமைதி உருவானது.
  • சக்தியில் நான்கு வகை. இவை,
  • டெய்லர் துணியை வெட்டக் கற்றுக்கொள்கிறான். பல முறை முயன்று, அதாவது ஏராளமான சக்தியை செலவு செய்து அந்த சக்தியை ஒரு வேலை செய்யச் சொல்கிறான். சக்தியை முறைப்படுத்தினால் அது திறமை (skill) ஆகிறது.
  • தீபாவளிக்குள் வந்த 17 சட்டைகளையும் தைக்க வேண்டும் என்பதும் திறமை. அதற்கு வெட்டும் திறமை போதாது. இலக்கை எட்ட உறுதி வேண்டும். பெற்ற திறனை காரியம் முடியும் வரை ஒரே நெறியாக வைப்பது திறமையை செயலாற்றும் திறமை (force)யாக மாற்றும்.
  • சட்டை வெட்டத் தெரியும், உறுதியாக வேலை செய்ய முடியும் என்றாலும் தீபாவளிக்குள் எல்லா சட்டைகளையும் தைத்து முடிக்க உடன் வேலை செய்பவர்களை அனுசரித்துப் போகும் திறமை (organisation) தேவை.
  • நமது வழக்கில் எல்லா சக்திகளையும், திறமைகளையும் சக்தி என்பதுண்டு. அதனால் ஏற்படும் குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஜீவன் அசையாதது.
    அது அசைந்து தன்னையறிந்தால் ஜீவியம் ஏற்படுகிறது.
    ஜீவியம் தன் நிலையில் அசையலாம், அசையாமலிருக்கலாம்.
    அசையும்பொழுது அசைவதால் (power) திறன் ஏற்படுகிறது.
    அசையாதபொழுது அசையாததால் (power) திறன் ஏற்படுகிறது.
  • அசைந்தாலும், அசையாவிட்டாலும் ஜீவியத்திற்குத் திறன் (power) உண்டு.
  • பெருங்கலகம் நடக்கும்பொழுது போலீஸ் வந்தால் திறமையாகக் கலகத்தை அடக்குகிறது. போலீஸ் செயல்படும் பொழுது திறமை வெளிப்படுகிறது.
  • போலீஸ் ஸ்டேஷனில் இருந்தாலும் அதற்குத் திறன் - பவர் - உண்டு.
  • செயல்பட்டாலும், செயல்படாவிட்டாலும் போலீஸுக்குப் பவர் உண்டு.
  • 50,000 எடுத்துப் போய் கடையில் பொருள்களை வாங்கினால் பணத்தின் பவரைக் காண்கிறோம்.
  • 50,000 பெட்டியிலிருந்தாலும் அதற்குப் பவருண்டு.
  • கணவன், மனைவி வாழ்வில் அவர்கள் எங்கிருந்தாலும், எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் மனத்தில் இருப்பது கணவனே, மனைவியே.
  • ஒருவர் ஊருக்குப் போய் பிரிந்திருந்தாலும் ஒருவர் மனத்திலிருப்பது மற்றவரே.
  • கோபமாகப் பிரிந்திருந்தாலும் அதுவே உண்மை.
  • வெறுப்பாகப் பிரிந்திருந்தாலும் ஒருவர் மனத்தை அடுத்தவரே ஆக்ரமித்துக் கொண்டிருப்பார்.
  • இது அனைவரும் அறிந்தது.
  • அறியாதவரும் உண்டு. அவர் ஆழ்மனம் நேரம் வரும்பொழுது அதைக் காட்டிவிடும்.
  • மங்கை என்ற மனைவிக்கு குமார் என்பவர் கணவரானால் அவர்கள் பிரிந்திருக்கும்பொழுது மங்கை என்ற சொல் எந்த நேரம் காதில்பட்டாலும் மனைவி நினைவு வரும். இது ஆழ்மன உணர்வு.
  • சக்தி அசையும்பொழுதும், ஜீவியம் அசையும்பொழுதும் சக்திக்கு பவர் உண்டு. ஜீவியத்திற்கு சக்தியுண்டு.
  • பிரம்மம் சிருஷ்டிப்பது அனந்தம், முடிவற்றது. சிருஷ்டிக்காத பொழுதும் அதற்கு அனந்தம் உண்டு.
  • இந்த அடிப்படைத் தத்துவம் ஜீவியத்திற்கும், சக்திக்கும், போலீஸுக்கும், மனத்திற்கும், கணவன்-மனைவிக்கும், அனைத்திற்கும் உண்டு.
  • இது பிரம்ம ஞானம்.
  • உள்ளதும் இல்லாததும் ஒன்றே என்பது பிரம்ம ஞானம்.

******

II/83) தன்னை அறியும் நிலையிலேயே ஜீவியம் பிறக்கிறது. தன்னையறிய வேண்டிய அவசியமில்லாதபொழுதும் சத்தியம் உண்டு.

  • அறிவது ஜீவியம், அறிய வேண்டாதது சத்தியம்.
  • சத்து, சித்து, ஆனந்தம் என்பது சச்சிதானந்தம்.
  • அதை ஜீவன், ஜீவியம், ஆனந்தம் எனக் கூறலாம்.
  • சத் என்பது ஜீவன், சித் என்பது ஜீவியம், முடிவானது ஆனந்தம்.
  • சத் என்பது சத் புருஷன் என்ற ஜீவன், உலகத்திற்கு மூலம், முழு முதற் கடவுள்.
  • சத் தான் யார் என அறியும்பொழுது ஜீவன் ஜீவியமாக மாறுகிறது.
  • சத் தன்னை அறிய வேண்டும் என்ற அவசியமில்லை.
  • தான் யார் என அறிந்தாலும், அறியாவிட்டாலும் சத் சத்தாகவே இருக்கும்.
  • அறிவாளி தான் அறிவாளி என உணரலாம், உணராமலிருக்கலாம்.
  • அவன் அறிவாளி என உணராத பொழுது உலகம் அவன் அறிவைப் பாராட்டும்.
  • அவன் தான் அறிவாளி என உணரும் பொழுது அவனே தன்னைப் பாராட்டிக் கொள்கிறான்.
  • அந்த நிலையில் உலகம் அவன் அறிவைப் பாராட்டாது.
  • சத் அகம், புறமாகப் பிரிந்தால் அகம் ஆன்மாவாகும், புறம் சத்தியமாகும்.
  • தன்னையறியாத நிலை தன்னையறியும் நிலைக்கு முந்தையது.
  • பொதுவாகத் தன்னையறியாத நிலையைக் கண்மூடித்தனம் (unconscious) என்போம்.
  • அது தன்னையறிய வேண்டிய நிலையில் தன்னையறியாதது.
  • அது பொதுவாகக் குறையாக இருக்கும்.
  • குறையை அறியாதது கண்மூடித்தனம் (unconscious).
  • நிறையை அறியாதது அறிய வேண்டிய அவசியமில்லாத உயர்வு.
  • Mr.பென்னட் தன்னால் எதுவும் செய்ய முடியாது என மனைவியை விட்டுவிட்டார்.
  • இது குறையுமில்லை, நிறையுமில்லை, இயலாமை.
  • நேரம் வந்தவுடன் தன் பொறுப்பையும், வலிமையையும் உணர்ந்தார்.
  • 25 ஆண்டுகளாகச் சேர்ந்த குறைகள் அனைத்தும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டன.
  • சத் அகம், புறமாகப் பிரிந்து, அகம் ஆன்மாவாகவும், புறம் சத்தியமாகவுமாகிறது எனில் நாம் - அன்பர் - சத்தியத்தை எட்ட முடியுமா, ஆன்மாவைத் தொட முடியுமா?
  • ஊரில் இலட்சக்கணக்கான மக்களில் தெளிவு உள்ளவர் 100 பேர் இருப்பார்கள்.
  • இவர்கள் திறமைசாலிகளாக, அல்லது அறிவுடையவராக, அல்லது சேவை செய்பவர்களாக இருப்பார்கள்.
  • நாட்டில் ஜனாதிபதியை, பிரதம மந்திரியை, முதல்வரை எளிய மனிதன் பொதுக் கூட்டத்தில் காணலாம்.
  • நேரில் சந்திப்பது அவனுக்கில்லை.
  • சிறப்பானவர் பிரதமரை சந்திக்க முயன்றால் அவர் துறை மூலம் அது பலிக்கும். அப்படி அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டவர், விருந்து சாப்பிட்டவருண்டு.
  • அன்பர்கள் மனிதரில் சிரேஷ்டர் - சிறந்தவர் - என்பதால் முயன்றால், சத்தியத்தை, ஆன்மாவை ஒரு க்ஷணம் தரிசனம் செய்யலாம்.
  • மனிதன் பொய் சொல்லும்பொழுதே தான் மெய்யிலிருந்து வழுவியதாக நினைக்கிறான்.
  • தன் மனத்திலும், வாழ்விலும், உடலிலும் பொய் 90% இருப்பது அவனுக்குத் தெரியாது.
  • மூட நம்பிக்கை பொய் எனத் தெரியாது.
  • ஒருவர் சத்தியத்தைத் தொட விரும்பினால் மகாத்மாவின் சத்திய சோதனையைப் படிப்பது நல்லது. தான் அறிந்தவரை எல்லாப் பொய்களையும் கணித்து, அவற்றை அறவே மனத்திலும், சொல்லிலும், உணர்விலும், செயலிலும் விலக்க வேண்டும்.
  • இது பல ஆண்டு முயற்சி. பலனை உறுதியாகக் கூற முடியாது.
  • அன்பர் மனம் தூய்மையானால் பல மாதங்களில் பலிக்கும்.
  • அது அப்படி பலித்தபின் 3 நாட்கள் அழைப்பில் உட்கார்ந்தால் மனம் சத்தியத்தை நோக்கி குவியும். குவிந்தது உயரும். உயர்ந்து சத்திய ஜோதியை க்ஷணம் தொடும்.
  • சத்தியம் ஒரு ஜோதி - அது பிணக்கொழிந்த சுமுகமுள்ளது.
  • க்ஷணம் சத்தியம் சித்தித்தால் மனம் அதை அறியும்.
  • அதற்கு ஒரு அடையாளம், அதன் பின் கொஞ்ச நாள் வரை வரும். நம்மிடம் வழக்கமான பொய்யைக் கூறுவதைத் தவிர்ப்பார்கள்.

தொடரும்....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சாவியைக் கண்டவர்கள்
பூட்டைக் காணவில்லை.
 

*******



book | by Dr. Radut