Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/16) ஒருவருடைய விஸ்வாசம் அகத்திலுள்ள அன்னைக்குரிய பக்தியாக மாற வேண்டும். அது சைத்திய புருஷனிலிருந்து எழும்.

  • விஸ்வாசம் பக்தியானால் சைத்திய புருஷன் எழும்.
  • உழைப்பு சேவையானால் தொண்டன் தலைவனாவான்.
  • உழைப்பால் பெறும் செல்வம் அறிவால் பெறுவதாக மாறினால் பழக்கம் பண்பாகும்.
  • நாகரிகத்திற்குரிய விருந்தாளி நட்பிட்குரியவரானால் விருந்து உறவாகும்.
  • அறிவுரை கூறும் ஆசிரியர் ஆன்ம விளக்கம் தந்தால் ஆசிரியர் குருவாக மாறுவார்.
  • கட்சித் தலைவர் பதவி ஏற்றால் பிரதமராவார்.
  • மாற்றாம் தாயின் பாசம் தாயன்பானால் தாயின் நிலையுயர்ந்து தெய்வமாவாள்.
  • நதிக்கரையில் ரிஷி சந்தியாவந்தனம் செய்தால், பலரும் குளிக்கும் ஆறு, பாவங்களைக் கழுவி தீர்த்தமாகும்.
  • கட்சியைக் கட்சிக்காக ஆதரித்துப் பேசாமல் நாட்டின் நலனை எடுத்து உரைக்கும் அரசியல்வாதி மூத்த தலைமுறைக்கு உரியவராவார் (statesman).
  • நண்பன் கூறும் அறிவுரை நல்லது மட்டும் செய்தால் நண்பன் வேதாந்தியாவான்.
  • நண்பன் கூறும் அறிவுரை ஆன்ம விளக்கமானால் நண்பன் குருவாகிவிடுவான்.
  • நிலத்தைக் குத்தகைக்குப் பயிரிடுபவன் நிலத்தை பூமாதேவியாகத் தொழுதால் குத்தகைக்காரன் நிலத்திற்குச் சொந்தக்காரனாவான்.
  • கல்லூரிப் பேராசிரியர் காவிய நயத்தை உணர்ந்து போற்றினால் கவியாவார்.
  • மேடைப் பிரசங்கி கேட்பவர் உணர்ச்சிவயப்படப் பேசினால் நாட்டுக்குத் தலைவராவார்.
  • உலகமே எதிர்க்கும்பொழுது உள்ளதைக் கைவிட மறுத்தால் வெறும் மனிதன் உத்தமனாவான்.
  • தனக்கு உரிமையற்ற பொருள் தன் பொறுப்பில் நீண்ட நாளிருந்தாலும் அதன் மீது ஆசைப்பட முடியாதவனுக்கு அவனுக்கு உரிமையில்லாத பெரும் பொருள் தேடி வரும்.
  • வந்த வியாதியைத் தெய்வீக நம்பிக்கையால் குணப்படுத்தினால் மனிதன் சன்னியாசியாவான்.
  • உருவிய வில்வ பத்ரம் பொற்காசாக மாறினால் கோயிலைக் கட்டியவர் யோகியாவார்.
  • ஜபம் பலித்தால் ஜபிப்பவர் முனிவராவார்.
  • வைத்தியர் கை பட்டால் மருந்தில்லாமல் வியாதி குணமானால் வைத்தியர் ரிஷியாவார்.
  • மகான் சமாதியில் மௌனம் தேடி வந்தால் ஆத்மா யோகத்தை நாடுகிறது எனப் பொருள்.
  • தன்னை மறந்து தூங்கும் வெங்கட்ட ரமணனை எழுப்ப முடியவில்லை என்று கண்டவர், அவர் தூக்கம் சமாதிக்கு முன்னறிவிப்பு என்று கண்டனர். வெங்கட்ட ரமணன் ரமண மகரிஷியானார்.
  • தானே வந்த பெருஞ்செல்வத்தைக் கிருஷ்ணமூர்த்தி ஏற்கவில்லை என்பதால் பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி World Teacher ஜகத் குருவானார்.
  • யோகம் சுதந்தரம் பெற்றதால் அரசியல் தலைவரான ஸ்ரீ அரவிந்தகோஷ் பகவான் ஸ்ரீ அரவிந்தரானார்.
  • பெண்ணின் மனம் கற்பை நாடினால், அவள் அடி திருவடியாகும்.
  • உன் மனத்தை நீ கூறாமல் ஒருவர் அறிந்தால், அவர் நண்பரிலிருந்து மகானாகிவிடுவார்.
  • இலட்சியம் ஆன்மீக இலட்சியமானால் தசையாலான உடல் கற்பூரமாகும்.
  • வக்கீல் வழக்கில் நியாயத்தை எடுத்து கட்சிக்காரனுக்குக் கூறி, அவன் ஏற்றுக் கொண்டால் வக்கீல் ஜட்ஜாக மாறுவார்.
  • சிறுவன் ஆன்மா விளங்க பெரியவரிடம் பேசினால் சிறுவன் தகப்பன் சுவாமியாவான்.
  • சண்டை போடும் வீட்டிற்கு வந்த விருந்தால், பூசல் போய் சுமுகம் எழுந்தால் விருந்தாக வந்தவர் ஆன்மீகச் சூழலுக்குரியவராகிறார்.

******

II/17) சைத்திய புருஷன் வாழ்வில் சாரத்தைச் சேர்ப்பது படிக்காத நகரவாசி நகர வாழ்வை அறிய முற்படுதல் போன்றது.

  • தலையில்லாதவன் தலைநகரை அறிவது போல் ஆன்மா சாரத்தைச் சேர்க்கிறது.
  • கணக்குப்பிள்ளை எஸ்டேட்டில் வளரும்பொழுது எஸ்டேட் வேலைகளை அறிந்து, பிறகு தானே எஸ்டேட் முதலாளியாகிறான்.
  • சமூகம் பெரியது. அதன் அனுபவம் கணக்கிலடங்காதது. சமூகம் பெற்ற அனுபவங்களின் சாரம் சர்க்காராக மாறுகிறது.
  • வக்கீல் குமாஸ்தா சட்டத்தின் சாரத்தை அனுபவிப்பது தாழ்ந்தது உயர்ந்ததின் சாரம் பெறுவது.
  • இலட்சக்கணக்கான மனிதர்கள் பெற்ற அனுபவ சாரம் ரிஷியின் தவத்தில் அவரைச் சூட்சுமமாக வந்தடைகிறது.
  • பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர், பாடப் புத்தகம் எழுதுவது அங்ஙனமே.
  • 10ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை விஞ்ஞானிகளானவரில் பெரும் பகுதி பாதிரிமார்கள். பாதிரிமார்கள் உலக வாழ்க்கையின் நுணுக்கம், சாரம், ஆழத்தை ஆன்மீகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். அதனால் வாழ்வுக்கு அடுத்த கட்ட மனம் செயல்படுகிறது. விஞ்ஞானம் பிறக்கிறது. உலகம் சூரியனைச் சுற்றி வருவதைக் கண்ட கோபர்நிகஸ் பாதிரியார். படிப்பே அன்று சர்ச்சிலிருந்தது.
  • இந்தியாவில் எழுந்த 64 சாஸ்த்திரங்களையும் எழுதியவர்கள் ரிஷிகள்.
  • சூன்யத்தைக் கண்டவர் பாஸ்கராச்சாரியார்.
  • வாழ்வின் சாரம், பண்பு, நாகரிகம்.
  • மனிதன் கண்ணால் காண்பது (Observation) பல்லாயிரம். கண் பார்த்து மனம் அறிகிறது. அது ஞானமாகி, விஞ்ஞானமாகிறது.
  • வாழ்வின் சாரம் உயர்ந்த நிலையில் பண்பு, தாழ்ந்த நிலையில் விஞ்ஞானம்.
  • எவர் எந்த வேலையைச் செய்தாலும் அதன் சாரம் உயர்ந்த நிலையிலும், தாழ்ந்த நிலையிலும் சேகரமாகும்.
  • ரிஷி பத்தினிக்கு ரிஷியின் ஆன்மீகப் பலனில் பாதி என்பது உலக வழக்கு.
  • சிஷ்யன் சிறப்பானவனானால் ரிஷியின் அனுபவத்தின் உயர்ந்த அம்சம் அவனை நாடும்.
  • அரிஸ்டாட்டில் பிளேட்டோவின் மாணவர்; பிளேட்டோ சாக்கிரடீஸ் மாணவர்.
  • இன்று உலகம் அரிஸ்டாட்டிலை அவர் குருவைவிட அதிகமாக அறியும்.
  • A.N. Whiteheadஒயிட்ஹெட்டின் மாணவன் ரஸ்ஸல். உலகம் ரஸ்ஸலை அறியும். ஒயிட்ஹெட்டைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.
  • சைத்திய புருஷன் ஆன்மா பரிணாம வளர்ச்சி பெறுவதால் எழுவது.
  • கிருஷ்ணாவதாரத்தின் முன் உலகம் ஆன்மாவை அறியும்.
  • அதற்கு முன் தவம், ஞானம், கர்மம் உண்டு; பக்தியில்லை.
  • கிருஷ்ணாவதாரம் தெய்வீக ஆன்மா. அது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியால் எழுந்தது.
  • பக்தி கிருஷ்ணாவதாரத்திற்குப் பின் எழுந்தது.
  • வேதநாயகம் பிள்ளை, "வேதம் ஓதும்போது கேட்பவரோ, ஓதுபவரோ விழிநீர் பெருக்குவதில்லை. திருவாசகம் உள்ளத்தை உருக்குகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்றார். வேதம் தருவது ஞானம். திருவாசகம் எழுப்புவது பக்தியின் உருக்கம்.

******

II/18) குடும்பம் மனிதனைத் தயார் செய்வது போலவும், பல்கலைக்கழகம் மாணவனைத் தயார் செய்வது போலவும், யோகம் சாதகனை உருவாக்குகிறது.

  • யோகம் மனிதனுக்குக் குடும்பமும், கல்லூரியுமாகும்.
  • உணவு தெம்பு தரும், அறிவு தராது.
  • படிப்பு அறிவு தரும், பண்பு தராது.
  • தெம்பு தருவது அன்பான வளர்ப்பு.
  • வலிமை தருவது உள்ளம் அமைதியாக அன்பில் உறைவது.
  • இவையனைத்தும் மனித சுபாவத்தின் பகுதிகள்.
  • இவை சேர்ந்து மனிதனாகாது.
  • மனிதத் தன்மை ஒருவனை மனிதனாக்கும்.
  • எல்லா மருந்திற்கும் அது குரு மருந்து போல.
  • மனிதத் தன்மையை வளர்ப்பு தரலாம், எளிதல்ல.
  • அது பிறப்போடு முன் ஜன்ம வரப்பிரசாதம்.
  • மனிதன் வாழப் பிறந்தவன்.
  • வளமாக வாழ முயல்பவன்.
  • வளமாக வாழ்வதுடன் நலமாகவும் வாழ விரும்புகிறான்.
  • வளமாகவும், நலமாகவும் வாழ்பவன் எனக்கு இனி என்ன தேவை என்பான்.
  • மனித மனம் தெய்வத்தை நினைப்பதில்லை.
  • மனித மனம் மனிதரையே பாசமாக நாடும்.
  • தெய்வத்தை நாடுவதே உயர்ந்த மனிதனுக்கு உன்னத இலட்சியம் என பகவான் கூறுகிறார்.
  • தெய்வத்தை நாடுவது எனில் என்ன?
  • உலகம் இயங்குகிறது எனக் காண்கிறோம்.
  • ஊரார் உலகை நடத்துவதாக அறிகிறோம்.
  • புயல் எழுந்து வீசினால், அவ்வெண்ணம் மாறுகிறது.
  • ஊரைக் கடந்த சக்தி உலகை இயக்குவதாக அறிகிறோம்.
  • யோகத்தை மேற்கொண்டவர் இறைவன் உலகை இயக்குவதைக் காண்பர்.
  • இயற்கையைக் கடந்த இறைவனை அடைவது மோட்சம்.
  • மோட்சத்தைத் தவிர்த்து, இறைவனை உலகில் காண்பது யோகம்.
  • சிறு குழந்தை, இளம் வயதினர், பசுமையான செடி, கொடிகளில் கவிஞன் இறைவனைக் காண்கிறான்.
  • புலியின் வன்முறையிலும், பூகம்பத்தின் அழிவிலும், இறைவனைக் காண முடியாது.
  • ஆக்கலும், அழிதலும், அவனே என்பது யோகம்.
  • குடும்பமோ, கல்லூரியோ மனிதனை அதற்குத் தயார் செய்ய முடியாது.

    யோகம் தயார் செய்யும்.

  • அகந்தை கரைந்து, இயற்கையின் ஆன்மாவைக் காண்பது யோகம்.
  • பாதாளமும், பரமாத்மாவும் இணைந்து உயர்ந்து பிரம்மத்தை அடைவது யோகம்.
  • சைத்திய புருஷன் வெளிவருவது யோகம் பலிப்பது.
  • உலகம் உய்ய, உள்ளொளி பெருக, உன்னதம் மலர மனம் ஒளியால் நிரம்பி, இதயம் உணர்வால் பொங்குவது யோகம் பலிக்கும் அறிகுறி.

தொடரும்....

******

ஜீவிய மணி
 
நேரில் காண்பவை நினைவுக்குரியவை.
 
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அசைவு உடலின் செயல் போல், எண்ணம், மனதின் செயல்.
 
 
*****



book | by Dr. Radut