Skip to Content

10. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே !

ஸ்ரீ அரவிந்தாய நமஹ !

எங்கள் அன்பு தெய்வம் ஸ்ரீ அன்னை அவர்களுக்கும், ஸ்ரீ பகவான் அவர்களுக்கும் எனது கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கெல்லாம் ஸ்ரீ அன்னை அவர்களையும், ஸ்ரீ பகவான் அவர்களையும் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் ஆசீர்வாதத்தால் இக்கடிதத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

எங்களுக்கு ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவர்களினால் கிடைத்த அருள், பலன் ஏராளம். எங்களுக்கு ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் அருளால் பெண் குழந்தை பிறந்தது. அவள் பெயர் மிர்ரா (எ) யோகதர்ஷினி. இப்போது வயது 4 ஆகிறது. LKG படித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் பள்ளிக்குச் செல்லும்போதும், வெளியே எங்கு சென்றாலும், "மதர் போய்ட்டு வரேன்'' என்று சொல்லிவிட்டுத் தான் கிளம்புவாள். புதிய பொருள் எது வாங்கினாலும், புது ஆடை உடுத்தினாலும் மதர் கிட்ட காட்டி, "நல்லா இருக்கா மதர்?'' என்று கேட்பாள். அவளாக மதருக்கு அழகாக பூ அடுக்குவாள். இன்னும் ஏராளம். எல்லாம் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரின் அருள்தான். கடந்த மாதம் 20-10-10 அன்று யோகதர்ஷினிக்கு காய்ச்சலாக இருந்தது. மதரிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு டாக்டரிடம் சென்றோம். இரண்டு நாளில் காய்ச்சல் சரியானது. மீண்டும் மறுவாரம் 27-10-10 அன்று காய்ச்சல் நெருப்பாக இருந்தது. எங்கள் குழந்தை காய்ச்சல், உடம்புவலி, வயிற்றுவலியால் மிகுந்த வேதனை அடைந்தாள். இரண்டு நாட்கள் கழித்து காய்ச்சல் குறைந்தது. வயிற்றுவலி விடவில்லை. மதரிடம் பிரார்த்தனை செய்தோம். வயிற்றுவலிக்கு scan செய்து பார்த்ததில், "கல்லீரல் வீக்கமாக உள்ளது. அதனை சுற்றி நீர் கோர்த்து உள்ளது. டெங்கு காய்ச்சல் போல் உள்ளது'' எனவும், "இரத்தத்தில் உள்ள அணுக்கள் மிகக்குறைவாக உள்ளது'' என்றும் மருத்துவர் கூறினார். "நீங்கள் தாமதிக்காமல் உடனே வேறு மருத்துவமனைக்குச் சென்று குழந்தைக்கு treatment எடுக்கவும்'' என்று சொன்னார். நாங்கள் scan ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு எங்கள் தியான மையத்திற்குச் சென்று ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவர்களிடம் நானும், என் கணவரும் அழுது, "மதர், நீங்கள்தான் நம் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்தோம். தியான மைய பொறுப்பாளர் அவர்கள், "கவலைப்பட வேண்டாம். ஒன்றும் செய்யாது. மதர்ஐ கூப்பிட்டுக் கொண்டே இருங்கள்'' என்று கூறி, Blessing Packet கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, யோகதர்ஷினியை மதுரையிலுள்ள மீனாட்சி மிசின் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு சென்றவுடன் (ICU) அவசர சிகிச்சை பிரிவில் வைத்து முதல் treatment செய்தனர். அங்கிருந்த மருத்துவர், "உங்கள் குழந்தை மிகவும் கிரிட்டிக்கல்ஆக இருக்கிறாள். இது டெங்கு காய்ச்சல், இரத்தத்தில் அணுக்கள் மிக மிகக்குறைவாக உள்ளது. 1,00,000 முதல் 3,00,000 வரை இருக்க வேண்டும். 31,000தான் உள்ளது'' என்று கூறினார். "இரத்தம் ஏற்ற வேண்டும்'' என்றும், "அது ஏற்றினாலும் உடம்பில் இரத்த கசிவு ஏற்படக்கூடாது'' எனவும் கூறினார். மிகவும் கஷ்டமாக இருந்தது. நாங்கள், டாக்டர் எங்களிடம் கூறியதை மதர்கிட்ட சமர்ப்பணம் செய்து கொண்டே இருந்தோம். பின்னர் யோகதர்ஷினியை General Wardக்கு மாற்றினார்கள். அங்கு சென்ற உடன் யோகதர்ஷினியை அட்மிட் செய்த bedக்கு அருகில் அதே டெங்கு காய்ச்சல் உள்ள ஒரு பையனை அட்மிட் செய்திருந்தனர். அவனுடைய பெற்றோர் எங்களைப் பார்த்து, "கவலைப்படாதீர்கள். எங்கள் பையனுக்கு இரத்தத்தில் அணு மிக மிகக்குறைவாக இருந்தது. அவன் இப்போது நன்றாகிவிட்டான். அதுபோல் உங்கள் குழந்தையும் நன்றாகிவிடுவாள்'' என்று மிகுந்த மனநிறைவான ஆறுதல் அளித்தார்கள். அவர்கள் கூறியது மனதுக்கு நிம்மதி தந்தது. அவர்கள் காரைக்குடியில் இருந்து வந்தவர்கள். அவர்களுடைய பையில் ஸ்ரீமதர் சிம்பலும், ஸ்ரீ பகவான் சிம்பலும் இருந்ததை கண்டு மனம் சந்தோஷத்தில் மதரும், பகவானும் நம்முடன், நம் குழந்தை உடன்தான் அருகிலே இருக்கின்றனர் என்று ஆனந்தம் அடைந்தோம். எங்கள் குழந்தைக்கு இரத்தம் ஏற்றினார்கள். நான் மனதுக்குள், "மதர், இது உங்களுடைய இரத்தம். நீங்கள்தான் என் குழந்தைக்கு இரத்தம் கொடுத்திருக்கிறீர்கள்'' என்று சமர்ப்பணம் செய்தேன். மதர், ஸ்ரீபகவான் அவர்களுடைய அருள் வெள்ளத்தால் இரண்டு நாட்களில் அணுக்கள் 90,000 வரை கூடிவிட்டது. வயிற்றுவலி குறைந்தது. "எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் குழந்தை ஆபத்து கட்டத்தைத் தாண்டி normal ஆகிவிட்டாள்'' என்று டாக்டர் எங்களிடம் கூறினார். உடனே மருத்துவமனையில் இருந்து discharge செய்தனர். நேராக நாங்கள் அனைவரும் யோகதர்ஷினியை அழைத்துக் கொண்டு திண்டுக்கல்லில் "மதர் மிர்ரா மந்திர்'' தியான மையத்திற்குச் சென்று ஸ்ரீஅன்னையிடம், ஸ்ரீ பகவான் அவர்களிடம் கோடான கோடி நமஸ்காரம் செய்து நன்றியைத் தெரிவித்தோம். இப்போது ஸ்ரீ மதர், ஸ்ரீ பகவான் அவர்களின் ஆசீர்வாதத்தால் நன்றாக இருக்கிறாள். வீட்டில் அமர்ந்து மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருக்கும்போது மற்ற குழந்தைகள் (எங்கள் உறவினரின் பிள்ளைகள்) எல்லாம் சினிமா பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். உடனே யோகதர்ஷினி, "சினிமா பாட்டு வேண்டாம். மதர் பாட்டு "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." பாட்டு பாடு" என்று சொன்னாள். உடனே எல்லா குழந்தைகளும் அந்தப் பாட்டு பாடும்போது நடுவிலே அமர்ந்திருந்து என் குழந்தை ஸ்ரீ மதர் ஸ்ரீ பகவான் அவர்களை நோக்கி கையை தூக்கிக் கொண்டு அமர்ந்திருந்தபடி உடலை நகர்த்திச் சென்றாள். மற்ற குழந்தைகள் எல்லாம், "என்ன யோகதர்ஷினி, எங்கே போகிறாய்?" என கேட்டவுடன், "மதர் படத்தை எடுத்துக் கொடுங்கள்'' என்று கேட்டு, படத்தை முத்தம் கொடுத்து வணங்கினாள். இதை நினைக்கும்போது மனம், உடல் புல்லரித்துபோகிறது. எப்போதும் எங்களுடன், எங்கள் குழந்தையுடன், உற்றார், உறவினருடன் எங்கள் அன்பு தெய்வம் ஸ்ரீ அன்னை ஸ்ரீ பகவான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று கூறி இக்கடிதத்தைச் சமர்ப்பிக்கிறேன்.

-- M. ராதிகா, திண்டுக்கல்.

********



book | by Dr. Radut