Skip to Content

04. அன்னை இலக்கியம் - அன்னையின் முத்திரை

அன்னை இலக்கியம்

அன்னையின் முத்திரை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

சிறிது நேரத்தில் மூன்று காபியை டிரேயில் வைத்து, ஒரு கப்பில் சர்க்கரையில் ஸ்பூன் வைத்து, எடுத்து வந்துவிட்டாள்.

எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி!

"நித்யா, நான் ஷுகர் பேஷண்ட். காபியில் சர்க்கரை போட வேண்டாம் என்று சொல்ல மறந்துவிட்டேன்'' என்றார் விஷாலின் அப்பா.

"பரவாயில்லை அங்கிள். நான் காபியில் சர்க்கரை போடாமல் தனியே கப்பில்தான் வைத்திருக்கிறேன்'' என்றாள்.

இப்போதும் விஷாலின் பெற்றோர் அர்த்தபுஷ்டியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"எல்லாம் சரிதான். ஆனால், நாலு கப் காபி வேண்டும்'' என்றார் விஷாலின் அப்பா.

"நீங்கள் மூவர்தாமே இருக்கிறீர்கள், நாலாவது கப் யாருக்கு?'' என்றாள் வியப்புடன்.

"இந்தக் காபியின் மணம் இங்கு யாரை அழைத்து வருமோ அவருக்கு'' என்றான் விஷால்.

ஒன்றும் புரியாமல் விழித்தாள் நித்யா.

"விகாஸ் இனியும் நீ உள்ளேயிருக்க வேண்டாம், வெளியே வா'' என்றாள் அம்மா.

விஷாலின் சாயலில், சிறிதே வயது கூடிய கம்பீரமான இளைஞன் புன்னகையுடன் வெளியே வந்தான்.

"வா, இப்படி உட்கார். இவனுக்குத்தான் நாலாவது கப்'' என்றான் விஷால்.

விஷாலின் அண்ணாவாக இருக்க வேண்டும். ஆனால் இதுவரை இவனைப் பற்றி விஷால் ஒன்றும் சொல்லியதில்லை.

உள்ளே சென்று மீண்டும் ஒரு கப் காபியுடன் வந்தாள் நித்யா.

"அதை இவனுக்குக் கொடு'' என்றார் அப்பா.

விகாஸ், "தாங்ஸ்'' என்று வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.

"காபி நன்றாயிருக்கிறதா?'' என்றான் விஷால்.

"ஆம்” என்பதுபோல் தலையசைத்தான் விகாஸ்.

"சர்க்கரை போடாத காபி நித்யா கொடுத்தவுடன் இனிக்கிறதா?'' என்றாள் அம்மா.

"அதில் சர்க்கரை போட்டிருக்கிறேன்'' என்றாள் நித்யா.

"அது எப்படி, அவனுக்கு மட்டும் சர்க்கரை போட்டாய்?'' என்றாள் அம்மா.

விகாஸும், நித்யாவும் புன்னகை செய்ய,

"நித்யா, இப்பொழுது நானொரு உண்மையைச் சொல்லப் போகிறேன். உனக்கு விகாஸை பிடித்திருக்கிறதா?'' என்றவுடன் நித்யா மகிழ்ச்சியில் திணறிப்போனாள்.

"நான் கூறிய என் நெருங்கிய அமெரிக்க உறவினர் என் அண்ணா விகாஸ்தான்'' என்றான் விஷால்.

"விகாஸ், உனக்கு நித்யாவைப் பிடித்திருக்கிறதா?'' என்றார் அப்பா.

"என்ன கேள்வியிது? காபியை ருசித்துக் குடிக்கிறானே, தெரியவில்லையா!'' என்று அம்மா கேலி செய்தாள்.

"இனி நிச்சயம் பேச வேண்டியதுதான்'' என்ற அப்பா, "விஷால், நீ போய் நித்யாவின் அம்மாவையும், பாட்டியையும் அழைத்து வா. இவள் தாத்தாவை நானே அழைத்து வருகிறேன்'' என்று விஷாலின் தந்தை கூறியது நித்யாவின் காதில் தேனாய்ப் பாய்ந்தது. எங்கே இவர்களும் தன் தாத்தாவை ஒதுக்கிவிடுவார்களோ என்ற கவலை நீங்கியது.

"பெண் பார்க்க என்று வந்து உன்னை துன்புறுத்தக் கூடாது என்றுதான் இந்த ஏற்பாடு. இதில் உனக்கு வருத்தமில்லையே!'' என்று விஷாலின் அம்மா கனிவாய்க் கேட்டாள்.

தன் மகிழ்ச்சியை புன்சிரிப்பால் வெளியிட்டாள் நித்யா.

மறுநாள் தியான மையம் சென்று அன்னைக்கு நன்றி கூறினாள்.

அன்னைக்காகவே வாழும் பானுவைக் கண்டு, நடந்தவற்றைக் கூறினாள்.

"பார்த்தாயா நித்யா, அன்னை நாம் கேட்பதை, கேட்கத் தெரியாததையெல்லாம் கொடுப்பார். நீ அமெரிக்கப் பயணம் கேட்டாய்; உனக்கு அமெரிக்காவில் வேலை; அங்கு உனக்குப் பொறுப்பேற்க நல்ல கணவர், அன்பான மாமன், மாமி; உன் வீட்டார் ஒதுக்கிய உன் தாத்தாவிற்கு அன்பான அழைப்பு; என்று எத்தனை பரிசுகள்! இதுதான் அன்னையின் முத்திரை'' என்று பானு உருக்கமாய்க் கூறினாள்.

இத்தனைப் பரிசுகளையும் பெற்ற நித்யா, மையத்திற்கு வந்து நன்றியைக் கண்ணீருடன் சமர்ப்பித்தாள். விஷாலும் தன் வேலை, அன்பான அண்ணி, என்ற பரிசுகளைப் பெற்று, அன்னைக்கு நன்றி கூற, அன்னை நினைவைச் சுமந்து அவர்கள் அமெரிக்கா சென்றனர்.

இத்தனை அழகாக யாவற்றையும் நடத்தித் தந்த அன்னைக்குத் தம் நன்றியைச் செலுத்த நித்யாவின் தாயும், பாட்டியும் தினமும் மையம் வந்து, தியான மையச் சேவையில் ஈடுபட்டனர்.

"நீயும், பாட்டியும் தியான மையம் வந்து இவர்கள் அருமையைப் புரிந்து கொண்டால், நம் வீடே ஆனந்தமயமாகும்'' என்ற நித்யாவின் சொற்கள் எத்தனை உண்மை என்பதை அவள் அம்மாவும், பாட்டியும் நினைத்தவண்ணமிருந்தனர்.

கதை முடிந்தது. இனி நாமும் தியான மையம் செல்வோம்.

முற்றும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பலிக்காத பிரார்த்தனைகள் இம்முறையை எட்டுவதில்லை. அல்லது இம்முறையைத் தாண்டி தெய்வத்தை எட்டுவதில்லை.
 
நம் பிரார்த்தனை தெய்வத்தை எட்டுவது அரிது.
 

*****



book | by Dr. Radut