Skip to Content

01. பகவான் மற்றும் அன்னையினுடைய வாழ்வில் உள்ள சில சுவாரசியமான அனுபவங்கள்

பகவான் மற்றும் அன்னையினுடைய வாழ்வில் உள்ள சில சுவாரசியமான அனுபவங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

  1. தியானின் மனைவி அல்மா தியான் தன் உடம்பை விட்டு வெளிவந்து இம்மாதிரி மேலும் 12 தடவைகள் தொடர்ந்து பல சூட்சும சரீரங்களை விட்டு வெளிவந்ததை அன்னை கவனித்தார்.
  2. பின்பு இன்னொரு தடவை ஆரஞ்சுப் பழம் போன்ற ஒரு பெரிய பழத்திலிருந்து அந்தப் பழத்தை நறுக்காமலேயே அதனுடைய சாற்றினைச் சூட்சும முறையில் மேடம் தியான் அவர்கள் உறிஞ்சி எடுத்ததையும் அன்னை கவனித்தார்.
  3. லெம்சன் நகருக்கு அருகில் இருந்த மலைப்பகுதியில் பைன் மரங்களுக்குப் பதிலாக குளிர் பிரதேசத்தைச் சேர்ந்த Fir மரக்கன்றுகளைத் தவறுதலாக நட்ட பொழுது பனி தேவதை அந்தப் பாலைவனப் பகுதிக்குப் பனிக்கட்டிகளைக் கொண்டு வந்ததாக (பனிப் பொழிய வைத்ததாக) அன்னை தெரிவித்தார்.
  4. தியான் வீட்டு மாடியில் அவருடன் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு மின்னல், அன்னையை நேரடியாகத் தாக்குவதைப் போல கீழிறங்கியது. ஆனால் கடைசி நிமிடத்தில் தியான் அந்த மின்னலைத் திசை திருப்பி அன்னையின் உயிரைக் காப்பாற்றினார்.
  5. அல்ஜீரியாவிலிருந்து அன்னை பிரான்சுக்குத் திரும்பிய பொழுது அவர் சென்ற கப்பலில் சைனாவிற்கு மதப் பிரச்சாரம் செய்ய போய்க் கொண்டிருந்த ஒரு பாதிரியாரைப் பார்த்தார். அவரிடம் கிருத்துவ மதம் உதயமாவதற்கு முன்னேயே சீனர்கள் இறைவனை அடைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து- விட்டார்கள் என்று தெரிவித்தார்.
  6. பகவானைச் சந்தித்த பிறகு தன்னுடைய கவனம் மற்றும் எனர்ஜி என்று எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்துவதைவிட இவற்றையெல்லாம் பரவச் செய்வதன் மூலம்தான் தனக்கு ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும் என்று அறிந்தார்.
  7. அன்னைக்குக் குந்தளினி அனுபவம் கிடைத்தது. அவருடைய முதுகுத் தண்டின் கீழ்பாகத்திலிருந்து ஒளிக்கதிர்கள் தூண் போன்ற வடிவில் மேல் எழுந்து அன்னையின் தலைக்கு மேலே வட்ட நிலாப் போல விரிந்து பரவியதாம். பின்னர் அந்த ஒளி இன்னும் மேலெழுந்து சூரியன் அளவுக்குப் பெரிதாகி, அதிலிருந்து பூமியின் மேல் மழை போல் ஒளி கொட்டியதாம்.
  8. ஆங்கில அரசாங்கம் புதுவையிலிருந்து பகவானை வெளியேற்றும்படி பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எழுதிய பொழுது அந்நேரம் பிரெஞ்சு அரசாங்க அதிகாரியாக செயல்பட்ட அன்னையின் சகோதரர் Matteo என்பவர் கைக்கு அக்கடிதம் சென்றதாம். அன்னை அவர் சகோதரருடன் தொடர்பு கொண்டு அந்தக் கடிதத்தைப் பரிசீலனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவரும் பழைய பேப்பர்களோடு அக்கடிதத்தைச் சேர்த்துவிட்டார்.
  9. பாரீஸில் இருந்த பொழுது தனக்குக் கிடைத்த அனுபவம் பற்றி பகவானுக்குக் கடிதம் எழுதினார். அதாவது முதலில் பூமியோடும், பிறகு பிரபஞ்சத்தோடும், பிறகு பரம்பொருளோடும் தனக்கு ஐக்கியம் கிடைத்ததாக எழுதினார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அனுபவம் அன்னையினுடைய பிஸிக்கல் ஜீவியம் இறை ஜீவியத்தோடு ஒன்றுபடுவதைக் காட்டுகிறது என்றும், இந்த அனுபவத்தில் பூமி ஒரு ஆன்மீகச் சின்னமாக வந்திருக்கிறது என்றும் பதில் எழுதினார்.
  10. ஜப்பானில் அன்னை நான்கு வருடம் தங்கி டோக்கியோ மற்றும் கியோட்டோ நகரங்களைப் பார்வையிட்டார். மேலும் ஜப்பானில் மக்கள் அழகை ஒரு லட்சியமாகக் கொண்டுள்ளார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார். ஜப்பானில் அமைதி மற்றும் நிம்மதியான சூழல் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் இறை ஜீவியத்தின் சாந்நித்யத்தை உணர்வதால் வரக்கூடிய எல்லையற்ற உணர்வு அங்கு அவருக்குத் தென்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  11. நானும் என் கொள்கைகளும் என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் தான் எந்தத் தேசத்திற்கும், சமூகத்திற்கும் மற்றும் இனத்திற்கும் சொந்தம் இல்லை என்றும், மாறாக இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  12. 1920இல் அன்னை புதுவைக்குத் திரும்பிய பொழுது பகவான், அன்னை திரும்பி வருவதற்காகவே தன்னுடைய யோக சாதனை காத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
  13. அன்னையின் கணவர் ரிச்சர்டு அன்னையுடன் கருத்து வேறுபாட்டை வளர்த்துக் கொண்டு, பகவானுக்குப் பதிலாக தன்னைத்தான் அன்னை அவருடைய ஆன்மீக சாதனையில் கூட்டாளியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அன்னை தன் முடிவில் உறுதியாக இருந்த பொழுது ரிச்சர்டு அன்னையை விட்டு விலகி, அவருடைய ஆன்மீக முயற்சிகளைத் தானே தனியாக தொடர்ந்து கொண்டார்.
  14. 1955ஆம் ஆண்டு ஆசிரமத்திற்கு வந்த நேரு, சாஸ்திரி, இந்திரா மற்றும் காமராஜர் ஆகியவர்களை அன்னை சந்தித்துப் பேசினார். பின் நாட்களில் சாஸ்திரி, மற்றும் இந்திரா இருவருமே நாட்டின் பிரதம மந்திரிகளானார்கள். காமராஜர் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் குழுவின் தலைவரானார்.
  15. ரஷ்ய நாட்டு ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீரர்கள் ஆசிரம பள்ளிக்கு வந்த பொழுது முறையான உடற்பயிற்சி மற்றும் மனவுறுதியால் மட்டுமே அவர்களுடைய விளையாட்டுகளில் இத்தகைய நேர்த்தியைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். அவர்கள் ஆன்மீகப் பண்புகளை விளையாட்டில் கடைப்பிடித்- திருந்தார்கள் என்றால், விளைவுகள் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
  16. தன்னுடைய தியானமும், பிரார்த்தனையும் என்ற தலைப்பில் எழுதிய பிரார்த்தனைகளைப் பற்றி அன்னை ஆசிரம விளையாட்டு மைதானத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். ஆனால் நாளடைவில் எல்லோரும் அதில் கலந்து கொள்ள ஆரம்பித்ததால் ஒரு கட்டத்தில் அது பொதுப்படையாகிவிட்டது.
  17. தன்னுடைய சீடர்களாக ஏற்றுக் கொண்ட இடத்தில் அவர்க- ளோடு தனக்கு ஒரு ஆன்மீக பந்தம் இருப்பதோடு மட்டுமின்றி அவர்கள் இடத்தில் தன்னுடைய அம்சம் ஒன்று குடியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
  18. அன்னை அவருடைய உடம்பில் சத்தியஜீவிய சக்தி இறங்கிய பொழுது தன்னுடைய உடம்பின் செல்களிலேயே ஒரு சுதந்தரத்தை உணர்ந்ததாகவும், சத்தியஜீவியத்தின் ஸ்பரிசத்தைச் செல்கள் உணர்ந்ததாலேயே அந்த சுதந்தர அனுபவம் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
  19. அன்னை தன்னிடமிருந்த இரண்டு பூனைகளிடம் சில ஆன்மீக முயற்சிகளை மேற்கொண்டு, அதன் விளைவாக அவையிரண்டும் மானிடப் பிறவி எடுத்து ஆசிரமவாசிகளாகவே வந்தன. இவர்கள் ஆசிரம டைனிங் ஹாலில் நிறைய பாலும், வெண்ணெயும் வாங்கிச் சாப்பிட்டதை டைனிங் ரூம் நிர்வாகிகள் அன்னையின் கவனத்திற்குக் கொண்டு வந்த பொழுது, போன ஜென்மத்தில் அவர்கள் பூனைகளாக இருந்ததால் அவர்களுக்கு இப்படி ஒரு பால் மோகம் இருப்பதாகவும், அவர்கள் விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.
  20. அன்னை ஒரு காய்கறித் தோட்டம் வைத்திருந்தார். அத்தோட்டத்திற்கு அவர் செல்லும்பொழுதெல்லாம் சில காய்கறிகள், "எங்களைப் பறித்துக் கொள்ளுங்கள்'' என்று கேட்குமாம். மற்றும் சில, "எங்களைப் பறிக்காதீர்கள், நாங்கள் இன்னமும் தயாராகவில்லை'' என்று தெரிவிக்குமாம்.
  21. அன்னை அவருடைய அனுபவத்தில் ரோஜாமலர்களுக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறதென்றும், அவை மற்ற மலர்களோடு சேர்ந்து இருக்க விரும்புவதில்லை என்றும் கண்டறிந்துள்ளார். ஒரு சமயம் சில ரோஜா மலர்களை மற்ற மலர்களோடு சேர்த்து வைத்த பொழுது ஒரு ரோஜா அன்னையின் விரலை முள்ளால் குத்தியதாம்.
  22. அன்னை உலகத்தின் பொக்கிஷத்தைச் சூட்சும நிலையில் உள்ள ஒரு குகையில் கண்டாராம். ஆனால் அந்தக் குகையின் வாசலில் ஒரு பெரிய கருநாகம் காவல் காத்துக் கொண்டிருந்ததாம். அந்தக் கருநாகம் அன்னை உள்ளே நுழைய வேண்டும் என்றால், உலகத்து மக்களுடைய காம உணர்வுகளின் மேல் ஒரு கட்டுப்பாடு இருந்தது என்றால் நுழையலாம் என்றதாம். அத்தகைய கட்டுப்பாடு அந்த நேரம் அன்னைக்கு இல்லை என்பதால் பின்வாங்க நேரிட்டதாம்.
  23. புதுவைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள கோயில்களில் குடியிருக்கும் கரிய நிறம் கொண்ட காளி தேவதை ஒன்று அன்னையோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள விரும்பியது. அதாவது அன்னை அக்காளியினுடைய குடியிருப்பைத் தொந்தரவுபடுத்தாமல் இருந்தால் அதற்குப் பலியாக கிடைக்கும் கோழிகளில் பாதி கோழிகளை அன்னைக்குக் கொடுக்க முன்வந்ததாம். அன்னை தன்னுடைய பதிலாக, அக்காளியைத் தான் தொந்தரவு செய்யப் போவதில்லை என்றும், கோழிகளில் பங்கும் வேண்டாமென்றும் சொன்னார்.
  24. அன்னையின் அறைக்கு வந்த ஒரு ஆசிரமவாசி குடிக்கத் தண்ணீர் கேட்டார். அன்னை தனக்கு வைத்திருந்த குடிநீர் டம்ளரை வழங்கிய பொழுது அந்தப் பெண் ஆசிரமவாசி, "இந்தியர்கள் அடுத்தவர்கள் குடித்த தண்ணீரைத் தாங்கள் குடிப்பதில்லை'' என்று சொல்லி மறுத்தாராம். அதைக் கேட்ட அன்னை வியப்பில் ஆழ்ந்து போனார்.
  25. ஆசிரமப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க விட்ட அன்னை அன்பர்கள் பல பேர் விடுமுறை நாட்களில் பிள்ளைகளைத் திரும்ப ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்- டாம் என்று அன்னை சொல்லியும் கேட்காமல் பிள்ளைகளை அழைத்துச் செல்வதுண்டு. இவ்விஷயத்தில் ஒரு தகப்பனார் மிகவும் பிடிவாதம் செய்த பொழுது அன்னைக்கே கோபம் வந்து, "எங்கே உங்கள் குழந்தைகள்? இனிமேல் அவர்கள் என் குழந்தைகள்'' என்றாராம். அதன் பிறகுதான் அன்பர் அடங்கி, அன்னையை அவர் இஷ்டம்போல் குழந்தைகளை நடத்த அனுமதித்தாராம்.
  26. அன்னையைக் காண வந்த அன்பர் ஒருவர் அன்னையினுடைய மகா சரஸ்வதி, மகாலட்சுமி, போன்ற நான்கு அம்சங்களையும் காண விரும்பினாராம். அவர் விருப்பத்திற்கு இணங்கி, அன்னை தனது நான்கு அம்சங்களையும் வெளிப்படுத்தி காட்சி அளித்த பொழுது அன்பர் அளவு கடந்து மகிழ்ந்து போனாராம்.
  27. சத் பிரேமுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது சரஸ்வதி வீணை வாசிப்பது மற்றும் கிருஷ்ண பகவான் புல்லாங்குழல் வாசிப்பது என்று இந்துக்கள் நம்புவதைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினாராம். உடனே சரஸ்வதியும், கிருஷ்ண பகவானும் அன்னையிடம் நேரடியாக வந்து தாங்கள் வீணை வாசிப்பதும், புல்லாங்குழல் வாசிப்பதும் உண்மைதான் என்று சொல்அ ன்னையிடம், இது பற்றிக் கேலி செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்களாம்.
  28. ஆரோவில் நகரத்திற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த பிரெஞ்சு வரைகலை நிபுணர் Roget மாவீரன் அலெக்சாண்டருடைய மறுபிறப்பு என்று அன்னை குறிப்பிட்டுள்ளார்.
  29. ஆரோவில் இருக்கும்வரை 3ஆம் உலகப் போர் நிகழ வாய்ப்பில்லை என்று அன்னை கருத்துத் தெரிவித்துள்ளார்.
  30. ஆரோவில்லைத் தோற்றுவித்ததற்காக அன்னைக்கு நோபல் பரிசு வழங்க முன்வந்தார்கள் ஆனால், அவரோ, பகவானுடைய ஆன்மீகப் பணிகளைத் தொடர்வதற்காகத் தான் ஒரு கருவியாக செயல்பட்டதாகவும், அந்த அளவில் அவருடைய உடம்பிற்கு எந்த அங்கீகாரமும் தேவையில்லை என்றும் மறுத்தார்.
  31. அன்னையினுடைய கருத்துப்படி பார்த்தால் தன்னிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் இறைவனுக்கு அளிப்பவர்கள்தாம் அர்த்தமுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லாம் அர்த்தம் இல்லாதவர்கள் என்றாகிறது.
  32. அன்னை ஆசிரமத்தில் இருந்த ஒரு சீனியர் சாதகரை இரவு நேரங்களில் தன்னுடைய மெய்க்காப்பாளராக வைத்துக் கொண்டார். பயம் இல்லாத அஞ்சா நெஞ்சம் கொண்டவராக அவர் விளங்கியதால் அந்தச் சாதகரால் அத்தகைய ஒரு சேவையை அன்னைக்குச் செய்ய முடிந்தது.
  33. அன்னையினுடைய அஜெண்டாவை எழுதிய சத்பிரேம் அவர்கள் தனக்கு எந்தவிதமான ஆன்மீக அனுபவமும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவார். ஆனால் அன்னையோ ஆன்மீக ஞானத்திற்கு மிகச்சிறந்த வகையில் எழுத்து வடிவம் கொடுத்த அனுபவம் அஜெண்டா எழுதியதன் மூலம் அவருக்குக் கிடைத்ததாக அவரிடம் நினைவுபடுத்துவார்.
  34. திரு. கர்மயோகி அவர்கள் தம்முடைய பிறந்த நாள் அன்று ஒரு சமயம் அன்னையைத் தரிசித்த பொழுது அன்னை, பகவான் அவர்கள் எழுதிய Invitation என்ற தலைப்பு கொண்ட கவிதையின் பிரதியைக் கொடுத்தாராம். அந்தக் கவிதையில் சில வரிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

    யார் என்னுடன் மலை ஏறுவார்கள்?
    யார் என்னுடன் நடந்து வருவார்கள்?
    என்னோடு இருக்க விரும்புகிறவர்கள்
    ஆபத்தை நாடுபவராக இருக்க வேண்டும்.

    இந்தக் கவிதையை படித்த பொழுது பூரணயோகம் மிகவும் கடினமானது என்று அன்னை தமக்கு உணர்த்துவதாக கர்மயோகி அவர்கள் புரிந்து கொண்டார்.

  35. பகவான் இருந்தவரையிலும் திருவுருமாற்றத்தின் பாரத்தை அவர் தாங்கிக் கொண்டார் என்றும், தாம் சிரமப்படாமல் அவர் செய்த வேலைகளின் பலன்களைப் பெற்றுக் கொண்டதாகவும், அவர் மறைந்த பின்புதான் சத்தியஜீவியத்தை இறக்குவதற்கு உண்டான வேலையின் பாரத்தையே தாம் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

முற்றும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பணம், பயம், பெண் மனிதனைப் பிடித்து ஆட்டுவதுண்டு. இவற்றின் அளவுகடந்த சக்தியால் மனிதன் ஆடவில்லை. மனிதனுக்கு இவற்றின் மீதுள்ள அளவு கடந்த கவர்ச்சியால் அவன் பீடிக்கப்படுகிறான்.
 
ஆட்டுவது பாசம், பெண்ணல்ல.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிருஷ்டி, ஆனந்தத்தைச் சிருஷ்டிஆனந்தமாக்குவதைப் போல், அன்னை ஜீவியம் சிருஷ்டி ஆனந்தத்தைப் பரிணாம வளர்ச்சியடையும் ஆன்மாவின் சிருஷ்டிஆனந்தமாக்குகிறது. பரமாத்மாவின் ஸ்பர்சத்தைப் பெற்றதால் இது முடிகிறது.
 
பரமாத்மாவின் ஸ்பர்சம் வாழ்வில், சிருஷ்டி ஆனந்தத்தை உற்பத்தி செய்யும்.
 
 
 
******



book | by Dr. Radut