Skip to Content

09. பகுதியான அறிவு முழுமை பெற ஞானமாவது

பகுதியான அறிவு முழுமை பெற ஞானமாவது

கர்மயோகி

பிரச்சினையென எழும்பொழுது அது பல பகுதிகளின் தொகுப்பாகும். ஒரு வீடு கஷ்ட நிலைமையிலிருந்தால் பணம் பற்றாக்குறையாகும், வேலை செய்ய விருப்பமில்லாமலிருக்கும், வீடு அசுத்தமானதாகும், தவறான பலனை நாடும் மனப்பான்மையிருக்கும், விரயம் செய்வார்கள், எந்த ஒழுங்குமிருக்காதுஎன பல கோணத்தில் பல பகுதிகளாகப் பிரச்சினை சேர்ந்திருப்பது வழக்கம். இந்தக் குடும்பம் வசதியாக மாறும் வழிகளைப் பல வகைகளாகக் கூறலாம். கீழ்க்கண்டது அவற்றுள் ஒன்று. குடும்பத்தில் ஒருவர் பிரச்சினைக்குத் தாம் எப்படிக் காரணம் என சிந்தித்து புரிந்து கொண்டால், புரியும் அளவுக்குப் பிரச்சினை குறையும், விலகும். பிரச்சினைக்கு 7 பகுதிகளிலிருந்தால், அவர் தம் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு பகுதியாகப் புரிந்துகொள்ள முயன்றால், அப்பகுதி வலுவிழந்து விலகும். 7 பகுதிகளும் அப்படி விலகியபின்னும் மேலும் செய்யக்கூடியதுண்டு.

  • முழுமை பகுதிகளின் தொகுப்பைவிடப் பெரியதுஎன்பது ஒரு சட்டம். ஒவ்வொரு பகுதி புரியும்பொழுது பிரச்சினைகள் வழி விட ஆரம்பிக்கும். அல்லது ஓரளவு தீர்வு தரும். 7 பகுதிகளும் விலகுவது நிலைமையை அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு உயர்த்தும்.
  • தீர்வுகாண முனைபவர் தம் கோணத்தில் பிரச்சினையை புரிந்து கொண்டால் அவை விலகி, குடும்பத்தை அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு அழைத்துப் போய் வசதியளிக்கும்.

Pride and Prejudiceஇல் Mr.பென்னட், Mrs.பென்னட், ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி, லிடியா, பிங்லி, டார்சி, காலின்ஸ், ஷார்லோட், லேடி காதரீன், ஆன், சர் லூகாஸ், லேடி லூகாஸ் என்பவர் பாத்திரங்கள். மேற்சொன்ன சட்டம் அனைவருக்கும் பொருந்தும். எலிசபெத் நோக்கில் கதையை விமர்சனம் செய்தால் மேற்சொன்ன சட்டத்தை விளக்கலாம். அதேபோல் அத்தனைப் பாத்திரங்கள் நோக்கிலும் கூறினால் கதையில் மூலம், சாரம், பிரெஞ்சுப் புரட்சியின் சிறுஉருவம், சமூகத்தின் பரிணாம மாறுதல், ஆன்மீகஞானோதயம் எழும்.

பென்னட் பெண்களுக்கு, தலைக்கு ஆயிரம் பவுன் சீதனமுண்டு. அதிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 50 பவுன் வருமானம் வரும். திருமண மார்க்கட்டில் பெண் ஆண்டிற்கு 500 பவுன் வருமானமுள்ளவளானால் அவளுக்கு கிராக்கியிருக்கும். இப்பெண்கள் அழகிகள். அழகிற்காக மட்டும் திருமணமாகாது. இந்த விமர்சனத்தை எலிசபெத் கண்ணோட்டத்தில் எழுதுகிறேன். அவளுக்கு தமக்கை ஜேன் மீது பிரியம். தன் திருமணத்தைவிட ஜேனுக்குத் திருமணமாக அவள் நெகிழ்ந்து உருகுகிறாள். உருக்கம் பலன்தரும் வகையாக பிங்லி வருகிறான். ஜேன்மீது ஆசைப்படுகிறான். அனைவரும் திருமணமாகும்என நினைக்கின்றனர். அதே சமயம் விக்காம் வருகிறான். எலிசபெத்திடம் டார்சியைப் பற்றிப் பொய் சொல்கிறான். அவன் கூறும் பொய்யை அவள் நம்பிவிட்டாள். தான் கேட்ட செய்தியைத் தமக்கையிடம் கூறும்பொழுது நெதர்பீல்டிலிருந்து பிங்லி இலண்டன் போவதாகவும், மீண்டும் வரப்போவதில்லைஎனக் கடிதம் வருகிறது. பிங்லி வாய்ப்பு, விக்காம் தடை. எலிசபெத் மனம் விக்காமை நாடுவது ஜேன் பிங்லியை மணக்கத் தடை. இத்தடை உருவாக பல கோணங்களில் பல காரணங்கள் உள்ளன. அவை,

  1. எலிசபெத் விக்காம் பொய்யை நம்புவது.
  2. தாயார் கணவனை அனுப்பி பிங்லியைப் பார்க்கச் சொல்வது. நாமே போனால் காரியம் முடியாது. பென்னட் மனைவியின் பேச்சுக்கு இணங்குவது.
  3. காலின்ஸ் எலிசபெத்தை மணக்க விரும்புவது. தாயார் அதை ஆதரிப்பது.
  4. தாயாருக்கு லிடியா திருமணம் நெஞ்சில் ஆழத்திலிருப்பதால் அது முடியும்வரை எலிசபெத் எண்ணம் நிறைவேறாது.
  5. டார்சி எலிசபெத்தை எவருமறியாமல் விரும்புகிறான். மனச்சாட்சி இடம்தரவில்லை. மனம் அலைச்சல்படுகிறது.
  6. காலின்ஸ் லாங்பார்ன் எஸ்டேட்டிற்கு உரிமையுடையவன். அவன் வீட்டிற்கு வந்தபொழுது தகப்பனாரும் பெண்களும் அவனைக் கேலி செய்கிறார்கள். அவன் அதை அறியவில்லை.
  7. டார்சியின் சித்தி மகள் டார்சியை மணக்க இருப்பது பெருந்தடை.
  8. பிங்லி டார்சிக்குக் கட்டுப்பட்டவன். டார்சியின்தடை விலகாமல் பிங்லி திருமணம் பூர்த்தியாகாது.
  9. டார்சி பிங்லி ஜேனை மணப்பதை எதிர்க்கிறான்.
  10. பிங்லியின் உடன்பிறந்தவரும் எதிர்க்கிறார்கள்.

எலிசபெத் தனி மனுஷியானாலும் மேற்சொன்ன பிரச்சினைகள் பகுதியானாலும், பிரச்சினைகள் அவளைப் பொறுத்தவரை புரியுமானால், விலகும்என்பது சட்டம். நடந்தது என்ன?

எலிசபெத் சித்தி வீட்டில் விக்காமைச் சந்திக்கிறாள். அவன் அழகன், இனிமையாகப் பேசுகிறான், இதமாகப் பழகுகிறான். எந்தச் சிறுவிஷயத்தை எடுத்துப்பேசினாலும் அலங்காரமாக, அணியார- மாகப் பேசுகிறான். அவன் பேசுவதை நாளெல்லாம் கேட்கலாம். சத்தியத்தின் உருவமாகத் தென்படுகிறான். டார்சியுடன் சிறு வயதிலிருந்து பழகியவன். அவன் ஆர்வமாக எலிசபெத்திடம் வருகிறான். டார்சியைப் பற்றிப் பொய்யும் புனைசுருட்டும் கூறுகிறான். எலிசபெத் நம்புகிறாள். அவள் மனம் நிறைகிறது. வீட்டுக்கு வருகிறாள். ஜேனிடம் தான் டார்சியைப்பற்றி அறிந்தவற்றைக் கூறிக்கொண்டிருக்கும்பொழுது கரோலின்கடிதம் வருகிறது. அவர்கள் அனைவரும் இலண்டன் போகின்றனர். இனி வரமாட்டார்கள்என்பது விவரம். எலிசபெத் மனமாரப் பொய்யை ஏற்று மகிழ ஆரம்பித்தவுடன் ஜேன் திருமண வாய்ப்பு நிரந்தரமாக அழிகிறது. எலிசபெத் பதைக்கிறாள், படபடக்கிறாள். தானே காரணம் என அறியமாட்டாள்.

டார்சியும், காரலினும் சதித் திட்டமிட்டனர். எலிசபெத்திற்கு அது தெரிகிறது. ஜேனுக்குத் தெரியவில்லை. பிங்லி வந்தவுடன் Mrs.பென்னட், "போ, போ, போய்ப் பார். அறிமுகம் செய்துகொள்'' எனக் கணவனை அனுப்புகிறார். ஜேனுக்கு அழைப்பு வந்தவுடன், "குதிரைமேல் போ, மழை வருகிறது. நனைந்து ஜுரம் வந்தால் 1 வாரம் அங்கேயே இரு. பிங்லியை விடாதே, பிடித்துக்கொள்'' என மகளுக்குக் கூறுகிறார். நாமே போனால் கூடி வாராது. அவசரப்பட்டால் தள்ளிப்போகும்என தாயார் அறியார். தகப்பனாருக்கு எலிசபெத் திருமணம் முக்கியம். தாயாருக்கு லிடியா திருமணம் முக்கியம். முக்கியமானவர் மனம் சாதிக்கும். ஜேன் திருமணம் நடைபெற இத்தனையும் கடந்துவர வேண்டும்என எவருக்கும் தெரியவில்லை. காலின்ஸ் வந்தவுடன் தாயார் எலிசபெத்தை, "அவர் சொல்வதைக் கேள். மணமுடிக்க ஒத்துக்கொள். எஸ்டேட் கிடைக்கும்'' என்கிறார். இவர் நினைவு நடக்காது. உள்ளதையும் அழிக்கும்எனத் தாயாருக்குத் தெரியாது. காலின்ஸ் ஷார்லோட்டை மணக்கிறார். ஷார்லோட் தன் இடத்திற்கு எலிசபெத்தை அழைக்கிறார். மனமில்லாமல் எலிசபெத் போகிறாள். அங்கு டார்சியைச் சந்திக்கிறாள். அவன் நெஞ்சு காதலால் வெடிக்கிறது. ஆர்வமாக வந்து, "நீ எவ்வளவு மட்டமானவளானாலும் என் மனம் கட்டுப்பாட்டிலில்லை, அவசியம் என்னை மணக்க வேண்டும்'' என உருக்கமாகப் பேசும்பொழுது இவள் குடும்பத்தை மட்டமாக, அநாகரீகமான சொற்களால் குறைத்துப் பேசுகிறான். எலிசபெத் அவன் ஜேனைப் பாழாக்கியவன், விக்காமின் பரம எதிரிஎன்று கூறி, "உன்னைப் போன்ற மனிதனை எந்த நாளிலும் மணக்க நான் சம்மதிக்கமாட்டேன்'' என்கிறாள். நீண்ட விவரமான காரசாரமான கடிதம் எழுதுகிறான். அதில், . ஜேனுக்கு பிங்லி மீது ஆசையில்லை.

  • உனது தாயார் மட்டுமரியாதையற்ற வாயாடி.
  • உன் தங்கைகள் வெட்கம் கெட்ட பெண்கள்.
  • நீயும் ஜேனும் அழகாகப் பழகுகிறீர்கள்.
  • விக்காம் ஊதாரி, தறுதலை, பொய்யன், £ 3,000 பணம் பெற்றான். என் தங்கை வாழ்வைப் பாழாக்க முயன்றான் என எழுதியிருந்தான்.

பெரும் மனப்போராட்டத்திற்குப்பின் உண்மையை அவள் மனம் ஏற்கிறது. உணர்ச்சி ஏற்கவில்லை. விக்காம் தன்னைவிட்டுப் பணம் வந்த மற்றொரு பெண்ணை பச்சையாக நாடியபொழுதும் அவன் மீது பாசம் குறையவில்லை. வீடு திரும்புகிறாள். விக்காம் சாயம் வெளுக்கிறது. மனம் அவனை விட்டு அகல்கிறது. நெஞ்சம் மாறவில்லை. பெம்பர்லிக்கு அழைப்பு வருகிறது. பெம்பர்லியில் டார்சி உன்னதமானவன், விக்காம் தறுதலைஎனக் கேள்விப்படுகிறாள். டார்சி அன்பொழுகப் பழகுகிறான். அவனை ஏற்க மனம் துடிக்கிறது. லிடியா ஓடிப்போகிறாள். பெண் ஓடிப்போனால் அதற்குப்பின் மற்ற பெண்கட்கு என்னவழி? மனம் உடைகிறாள். இவளை ஏற்க வந்த டார்சி அசம்பாவிதத்தை அறிந்து ஸ்தம்பித்துப் போகிறான். அவளைக் கண்டுபிடித்து, அவனுக்குப் பணம்கொடுத்து மிரட்டி திருமணம் செய்து வைக்கிறான். மணமக்கள் வீடு திரும்புகின்றனர். வெட்கமேயில்லை. மீண்டும் பச்சையான பொய்யைக் கூறும்பொழுது எலிசபெத் தடுத்து பேச்சை நிறுத்துகிறாள்.

  • எலிசபெத் மனம் உண்மையை ஏற்கிறது.
  • ஜேன் இலண்டனுக்குப் போனபொழுது காரலின் சொன்ன பொய்யை அறிந்து மனம் மாறுகிறாள்.
  • தாயார் தானெடுத்த முயற்சியெல்லாம் வீண் போயிற்றுஎன அறிகிறாள்.
  • அவன் மனம் உறுத்தும் திருமணம் நடந்து அந்தத் தடை விலகுகிறது.
  • பொறுப்பற்ற தகப்பனார் தம் தவற்றை உணர்ந்து பொறுப்பை ஏற்கிறார்.
  • மீண்டும் பிங்லி வந்தபொழுது பழைய தவற்றைச் செய்ய மறுக்கிறார்.
  • டார்சி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு பிங்லியிடம் மன்னிப்புக் கேட்கிறான்.
  • எலிசபெத் மனம் விக்காமை விட்டகன்று தாயாரின் அவலத்தையும் தங்கைகளின் ஆர்ப்பாட்டத்தையும் கண்டு உண்மையை ஏற்றுக்கொண்டவுடன், ஜேன் திருமணத்தில் எழுந்த எல்லாத் தடைகளும் விலகி திருமணம் முடிகிறது. லிடியாவின் கேவலத்தை டார்சியிடம் மனம்விட்டுப் பேசியதால் அவள் திருமணமும் முடிகிறது. மனம் வேறு, நெஞ்சு வேறு. மனம் புரிந்துகொண்டதை நெஞ்சு முழுவதும் ஏற்காது. எலிசபெத் டார்சியை ஏற்கத் தயாராகிறாள். அவனுக்காக அபரிமிதமான சொத்துள்ள முறைப்பெண் காத்திருக்கிறாள். லேடி காதரீனுக்கு அந்த நினைவுள்ளவரை எலிசபெத் மணம் நடக்குமா? இல்லாத வதந்தியைக் கேட்டு லேடி காதரீன் வந்து புயலாகக் கொந்தளிக்கிறாள். எலிசபெத்தைத் திட்டுகிறாள். டார்சிக்கு அறிவுறுத்துகிறாள். அதன்மூலம் இதுவரை தயங்கிய டார்சி எலிசபெத் மனம் அறிந்து வந்து அவளை மணக்கிறான். எலிசபெத் செய்ததென்ன?
    • படிப்படியாக அவள் மனம் உண்மையை ஏற்றது. படிப்படியாக ஏற்பட்ட தடைகள் விலகின. முடிவு என்ன?

£ 2,000 சம்பாதிக்கும் பென்னட் பெண்கள் £100 சம்பாதிக்கும் ஆபீசர்களை சிரமப்பட்டுப் பிடிக்க முயலும்பொழுது £ 4,000 பெறும் வரனும் £ 10,000 பெறும் நிலச்சுவான்தாரும் விரும்பி வந்து வேண்டிக் கேட்டு மகிழ்ந்து மணம் முடித்தனர்.

  • 7 அல்லது 8 அல்லது 9 குறைகள் விலகும்பொழுது அவற்றிற்குரிய சிறு நன்மைகள் வருகின்றன.
  • முடிவான 9ஆம் குறையும் 10ஆம் குறையும் விலகும்பொழுது வாய்ப்பு முழுமைபெறுகிறது. உள்ள நிலை உயர்ந்து மலர்கிறது என்ற சட்டம் தன் உண்மையைக் கூறுகிறது.
  • மனம் மாறினால் தடை விலகும்.
  • முழுவதும் மாறினால் பேர் உயர்வு பேரருளாக உதயமாகும்.

*****

 



book | by Dr. Radut