Skip to Content

06. குரு வந்தனம்

குரு வந்தனம்

ஞான குருவே!

பாலைவனத்திலும் பொங்கித் ததும்பும்
கருணைமிக்க நீரூற்றின் அருள் மணமாய்
எங்கள் எல்லோர் வாழ்விலும் நீங்கள் நுழைந்தீர்கள்!

அருகில் நெருங்கி,
அதிலிருந்து மூழ்கிக் கலந்து கரைந்து போக
நாள்தொறும் அன்பின் நெகிழ்ச்சியோடு
அழைப்பு விடுத்தீர்கள்!

தர்க்க அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டவற்றையும்
அறிவியல் சூத்திரம்போல் உறுதியாய்ச் சொல்லும்
ஞானத்தின் விஸ்வரூபமாய் பரந்து விரிந்து
எங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டீர்கள்!

புதியதோர் எல்லையிலாத உலகிலிருந்து
எங்கள் வாழ்வை மலரச் செய்கிறீர்கள்!

கடை விரித்தார் கொள்வாரிலையென
அருகிலிருந்து தனிமைக்குச் சென்றாலும்
கண்ணின் பாவையாய்,
என்றென்றும் உங்கள் கண்ணின் பாவையாய்
எங்களை நிறுத்தி வைத்தீர்கள்!

என்னை ஏன் வழிபட வேண்டும்
நீ நானாகலாம் என்ற அன்னையின் வாக்கிற்கேற்ப
எங்களை உங்கள் உயரத்திற்கு ஏற அழைத்தாலும்
வழுக்குமரத்தில் ஏறிச் சறுக்கி விழும்
மனித சுபாவத்தின் குழந்தைகளாய் வாழ்கின்றோம்.

வாழ்க்கையின் பயணத்தில்
ஒவ்வொரு நாளிலும் நிமிடத்திலும் நொடியிலும்
எங்களைவிட்டு ஆடாது அகலாது பிரியாமல் நின்று
எங்களுடனே கலந்து வழி நடத்தினாலும்
அடங்காமல் பிரிந்து சுதந்திரமாகப் பறக்க முற்பட்டுச்
சிறகொடிந்து நின்றாலும்
பரிவுடன் மீண்டும் மீண்டும்
தூக்கிவிட அயராது பாடுபடும் அருந்தவக் கருணையே!

இந்நன்னாளில்!

எங்களை உண்மையற்றதிலிருந்து உண்மைக்கு வழி நடத்துங்கள்!

இருளிலிருந்து ஒளியை நோக்கி எங்கள் கைபிடித்துக் கூட்டிச் செல்லுங்கள்!

இறப்பிலிருந்து இறவாமைக்கு வழி காட்டுங்கள்!

நீங்கள் பல்லாண்டு இவ்வையகம் வாழும்வரை
என்றும் நிலையாய் வாழ வேண்டுமென்பதே
அன்னை அன்பர்கள் அனைவரின்
ஒருமித்த ஒட்டுமொத்த ஆசையும் விருப்பமும்கூட!

எங்கள் ஆசையும் விருப்பமும்
உறுதியாய் என்றும் நிலைத்து நின்று
நடந்திட வேண்டி
அன்னையின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து
அவரின் பிரதிநிதியான உங்கள் திருவடிகளில் பணிகிறோம்!

R. மகேஸ்வரி

******



book | by Dr. Radut