Skip to Content

2. Cosy சுகம்

Cosy சுகம்

1968இல் கடலூரில் நான் குடிபோன வீடு எனக்குச் சொந்தமான வீடு. அதன் படத்தினடியே அன்னை Cosy என எழுதினார். அவர் கையெழுத்தை சிறு பளிங்குக் கல்லில் அப்படியே எழுதி வீட்டில் பதித்தேன். சுகம், சௌக்கியம், சந்தோஷம், சௌகரியம் ஆகியவற்றைக் குறிப்பது Cosy. 1968 முதல் 1976 வரை அவ்வீட்டிலிருந்தேன். ஒரு நாள் என் நண்பர் ஒருவருடைய 4 சகோதரிகள் சிரித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தனர். என் மனைவி, "எந்தப் பிரச்சினையிருந்தாலும் நாம் அனைவரும் சிரிக்கக் கற்றுக் கொண்டோம்'' என்றார். அவர்களில் ஒருவர் தவிர மற்றவர்க்குத் திருமணமாகவில்லை அன்று. அந்த 8 ஆண்டுகளும் ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை, கோர்ட்டிற்குப் போகவில்லை, பற்றாக்குறைப் பிரச்சினையில்லை. எந்த நேரமும் அன்பர்கள் வந்தபடியிருப்பார்கள். 1971இல் கார் வாங்கினேன். ஒன்று மூன்றாயிற்று. ஜீப் வந்தது. லாரி வந்தது. என்னை அணுகி 200 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்தவர் 1000 ஏக்கர் வாங்கச் சொல்லி வற்புறுத்தினார். அன்னையுடனிருந்தவர், பகவானுடன் இருந்த அத்தனைச் சாதகர்களும் செவ்வாய், வியாழனன்று வீட்டிற்கு வந்தனர். கவர்னர் வந்தார். ஆசிரமம், ஆரோவில் வரும் அத்தனை முக்கியஸ்தர்களும் தவறாமல் அந்த வீட்டிற்கு வந்தனர். அந்த வருஷங்களில் ஏராளமான பிரச்சினைகள், மனம் புண்படும் செயல்கள், சொற்கள், இல்லாத உரிமையைக் கேட்டு வம்பு செய்பவர்கள் என ஆயிரம் பிரச்சினைகள் வந்து தீர்ந்தன. இந்த ஆண்டு அன்னை அன்பர்களைப் பற்றிக் கூறியுள்ளதை - அன்பர்கட்குப் பிரச்சினையேயில்லை - மனதில் கொண்டு இந்த 8 ஆண்டு நிகழ்ச்சிகளை மனதில் மீண்டும் கொண்டு வந்து சிந்தனை செய்தேன். நான் விவரமான ஆராய்ச்சி செய்ததின் முடிவுகள் இரண்டு.

  • அந்த வீடு உள்பட, நிலம் உள்பட நான் கேட்காமல் அன்னை கொடுத்தவை.
    Cosy என்ற சொல்லின் லக்ஷணத்திற்குரிய வாழ்வு அது.
  • அந்த வீட்டில் நான் அனுபவித்த அத்தனை பிரச்சினைகளும் நானே வலியப் போய் ஏற்றுக் கொண்டு அனுபவித்தது.

உதாரணமாக விலை கொடுத்து வாங்கிய வீட்டுக்குக் கிரயப் பத்திரம் எழுதாததால் வீட்டைக் காலி செய்ய வீட்டுக்காரர் பொய்க் கேஸ் போட்டுத் தோற்றார். அன்னை அருளை மட்டும் தருகிறார். இருள் கலப்பில்லாவிட்டால் ருசியில்லையென அன்பன் இருளை நாடிப் போய் அனுபவிக்கிறான்.

*****



book | by Dr. Radut