Skip to Content

11. அன்னை இலக்கியம்

"அன்னை இலக்கியம்"

அடுத்த கட்டத்தில் "Mother Response"

வி. ரமேஷ் குமார்

"வாருங்கள், வாருங்கள்", வாய் நிறைய வரவேற்றார் ராஜன்.

" ‘நாம் பின்பற்ற முடியாததை, பிறரைப் பின்பற்றச் சொல்வது கயமை' என்கிறார் அன்னை. என்றாலும், நான் கொடுத்தப் பட்டியலை வைத்து உடனடியாக அன்னையைத் தரிசித்ததால் கயமையும் எனக்கு சந்தோஷமே'', மனம்விட்டுச் சிரித்தார்.

"ஒன்றுமில்லை, அன்னை உடனே பலித்ததில் பிரமிப்பில் இருக்கிறார் ரவி. அன்னையிடம் மட்டும் இது எப்படி நடக்கிறது? இது பற்றி அன்னை என்ன சொல்லியிருக்கிறார்?" கேட்டார் ஜெகன்.

‘நான் விரும்புவது திருவுருமாற்றம். அதற்கு என் உதவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அது என்றும் உனக்கு உண்டு' என்றவர் அன்னை. அன்னைக்காக மாற வேண்டும் என்று ரவி நினைத்தவுடன் - அவர் சொன்னதுபோல டி.வி. பார்க்காமல், கதை, நாவல், புலனாய்வு பத்திரிக்கை படிக்காமல், .... இனி செய்யமாட்டேன் என்று சொன்னதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சராசரி வாழ்வாக இருந்தால் வேறு ஒரு பொழுதுபோக்கு, நண்பர் அல்லது குடும்பத்தாருடன் அரட்டை, அல்லது கடந்துபோன பழைய நினைவுகளை அசைபோடுவது என்று மாறி இருக்கும்.

ஆனால், அன்னை வாழ்வுக்கு மாற இருந்ததால் உடனடியாக அன்னை அந்த இடத்தை வேலையால் நிரப்பிவிட்டார். காரணம், கடின உழைப்பு ரவியின் சுபாவம். அதனால்தான் சொன்னேன், உன் சுபாவத்தைக் கண்டு, அதை ஒட்டி மாற நினைக்க வேண்டும் என்று. தொடர்ச் சங்கிலியாக நடந்தவைகளை யோசி....

  • வேலை அதிகமானது.
  • எட்டு மணி நேரத்திலேயே சோர்வு என்பது போய் அபரிமிதமான எனர்ஜி வந்தது.
  • வேலைக்கான திறமை அதிகமானது.
  • திறமைக்கான ஊதியம் உயர்ந்தது.
  • சுபிட்சம் வளர்ந்தது.
  • அதனால் வேலையில் ஆர்வமும், விருப்பமும் வந்தது.
  • ஆர்வமும், விருப்பமும் இருந்ததால், அது ஆன்மாவின்வேலை ஆனது.
  • அதனால் அது அன்னையின் கட்டளைகளில் ஒன்றானது.

"அட, இதுதான் நாம் அன்னையை நோக்கி ஓர் அடி வைத்தால், அன்னை பல அடிகள் நம்மை நோக்கி வருகிறார் என்பதா!" ஆச்சரியப்பட்டார் ஜெகன்.

சிரித்தார் ராஜன். "உண்மை தான். என்றாலும், அதில் அன்னை எனக்காகப் பல செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தொக்கி நிற்பது போல உள்ளது. உலகமே அன்னையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது. ஒவ்வோர் அன்பரும் திருவுருமாறப்போவது உறுதி. அன்னை அதை நிச்சயம் செய்வார். என்றாலும், நம் ஆர்வம், நம்பிக்கை, முழுமுயற்சி, ஏற்பை துரிதப்படுத்தும். அதன் மூலம் மாற்றத்தைச் சுருக்கலாம்.

"எப்படிச் சொல்கின்றீர்கள்?", நெற்றியைச் சுருக்கினார் ஜெகன்.

"நம் வயதினருக்கெல்லாம் தெரியும், பொது இடங்கள், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், தொலைபேசி எக்ஸ்சேன்ஜ், போன்ற அரசு அலுவலகங்கள் சில வருடங்களுக்குமுன் எப்படி இருந்தன என்று. மாறவே மாறாது என்று இருந்தது எல்லாம் இன்று மாறி உள்ளன. Cleanliness, orderliness பிரமிக்க வைக்கின்றது. கம்ப்யூட்டர் முதல் இன்டர்நெட் வரை அனைத்தையும், டெக்னாலஜி முதல் spirituality வரை அனைத்தையும், வெட்டவெளிச்சமாக்குகிறது.

ஜட்ஜ்மெண்ட் முதல் FIR வரை அனைத்தும் திறந்த புத்தகங்கள் ஆகின்றன. Quality systems, HR systems, CRM systems இன்று கட்டாயமாகிப் போனது உண்மையின் பல வடிவங்கள். அவ்வளவு ஏன், சில ஆண்டுகளுக்கு முன்வரை sales tax, labour, income tax என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு லெட்ஜரை பராமரித்து, ஒன்றுக்கொன்று பொருந்தாமல் வைத்திருப்போம். கறுப்பு பணம் அதிகம் வைத்திருப்பவன் கெட்டிக்காரன். இன்று.... அனைத்து டிபார்ட்மெண்டுகளும், கோரிலேட் செய்யப்பட்ட பிறகு ஒரே மாதிரியான கணக்கை பராமரிக்கின்றோம். எதற்கு பிரச்சினையென்று ஒழுங்காக பராமரித்து வரியைக் கட்டிவிடுவதோ, சட்டத்திற்கு உட்பட்டு வேறு எதுவும் செய்வதோ நடக்கிறது. பேங்க் பரிமாற்றங்கள் உண்மையின் வளர்ச்சி. சிகரம் வைத்தாற்போல தம் பிரதிநிதியை திரும்பப் பெறும் சட்டமும், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் சமூகம் அன்னை வழிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது. கட்டாயத்தின் பேரில் இன்று நடப்பது சில காலங்களில் சமூகத்தின் சுபாவமாகும்".

"நானெல்லாம் இதைக் கவனிக்கவே இல்லையே!" வெட்கப் பட்டார் ஜெகன்.

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால், எல்லா நதிகளும் கடலை நோக்கி..... என்பது போல எல்லா வாழ்வும் அன்னையை நோக்கி..... என்றாகிறது அல்லவா?" முதன்முறையாக வாயைத் திறந்தார் ரவி.

"ஆமாம், ஆனால் நாம் தான் அதனை எதிர்த்து நீச்சலடித்து, மூச்சு திணறிக்கொண்டு இருக்கின்றோம். உயர்ந்துகொண்டே போகும் மரத்திற்கு வேர்கள் ஆழமாக இருக்க வேண்டும். முன்னேறிக் கொண்டே போகிற பக்தனுக்கு அன்னை அடிப்படை பலமாக இருக்க வேண்டும்", தத்துவார்த்தமாக சொல்லிக் கொண்டே மவுனமானார் ராஜன்.

சூழலே தியானத்தின் இனிமையைத் தந்தது.

*****book | by Dr. Radut