Skip to Content

10. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

  1. நமக்குச் சமமானவர்களிடம்தான் நமக்குப் போட்டி மனப்பான்மை எழும். நமக்கு மேலுள்ளவர்களோ நமக்குக் கீழுள்ளவர்களோ போட்டி மனப்பான்மையைத் தூண்டுவதில்லை. நமக்கு மேலுள்ளவர்களை நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வதால் நாமவர்களை எதிரிகளாக நினைப்பதில்லை. நமக்குக் கீழுள்ளவர்களை நம்மைவிடக் குறைந்தவர்கள் என்று நினைப்பதால் அவர்களையும் போட்டியாக நினைப்பதில்லை.
  2. உறவினர்களிடையே இருக்கின்ற உறவு, நட்பு மற்றும் பகை என்று மாறி மாறிதான் வரும். நிரந்தர நட்போ அல்லது நிரந்தரப் பகையோ காண்பதரிது.
  3. ஒரே விதமான (personality) பர்சனாலிட்டி, ஒரே விதமான ரசனைகளும் கொண்டவர்களிடையே நட்பு எளிதில் மலரும். நேர்மையானவர்கள் நேர்மையற்றவர்களுடன் நட்பாக இருப்பது அரிது.
  4. அவரவருடைய நட்பு வட்டாரத்திலுள்ளவர்களுடைய மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகளை எதிர்க்காமலும், பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக்கொள்ளாமலும் இருக்கும் வரையிலும், நட்புக் கெடாமலும் இருக்கும்.
  5. நமக்குச் சிரமம் வரும் போது நம்மோடு இருப்பவர்கள்தாம் நமக்கு உண்மையான நண்பர்கள். சிரமகாலத்தில் விலகிச் செல்பவர்கள் வெறும் ஆதாயத்திற்காகப் பழகுபவர்கள்.
  6. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்குபவர்கள் அந்த அளவிற்குச் சமநிலையை இழந்து தாழ்ந்துப் போகிறார்கள். கடனைத் திருப்பிக் கொடுக்கும் பொழுதுதான் அவர்கள் அந்தச் சமநிலையை மீண்டும் பெறுவார்கள். ஆகவே சமநிலையை இழக்க விரும்பாதவர்கள் கடன் வாங்காமல் இருப்பது நல்லது.
  7. ஒருவருடைய வீட்டிற்குச் சாப்பிட அழைத்தால், அழைப்பவர் அடுத்தவரைத் தமக்குச் சமமாகக் கருதுகிறார் என்றர்த்தம். இந்தியச் சமூகத்தில் பொதுவாக நமக்குக் கீழிருப்பவரை யாரும் சாப்பிட அழைப்பதில்லை.
  8. திருமணம் என்றால் பொதுவாக அவரவருடைய சமூகத்திலேயே தான் திருமணச்சம்பந்தம் செய்துகொள்கிறார்கள். தம் சமூகத்தைத் தாண்டி வெளியில் திருமணம் செய்து கொள்பவர் ஒன்று, மரபிற்குக் கட்டுப்படாத இலட்சியவாதியாக இருப்பர், அல்லது அவருடைய சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவராக இருப்பர்.
  9. அடுத்தவர்களுடைய சமூக நிர்பந்தம் தான் பலபேரை பொறுப்பு உள்ளவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், நன்னடத்தை உள்ளவராகவும் வைத்திருக்கிறது. இந்தச் சமூக நிர்பந்தம் இல்லாவிட்டால் பலபேர் பொறுப்பற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் மாறிவிடுவார்கள்.
  10. பழங்காலத்தில் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு, அதிக வேலை செய்தார்கள். இப்பொழுது அதிகச் சம்பளம் வாங்கிக்கொண்டு குறைந்த வேலை செய்கிறார்கள். முன்னால் நிகழ்ந்த தவற்றிற்கு கர்மபலனாக இது வந்துள்ளது.
  11. முன்காலத்தில் சமூகத்தின் மேல்மட்டத்திலுள்ளவர்களுக்கும், கீழ் மட்டத்திலுள்ளவர்கட்கும் இருந்த இடைவெளி ஜனநாயகம், நகர வாழ்க்கை, தொழில்மயம் மற்றும் கல்விவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாகக் குறைந்து வருகிறது. இடைவெளி குறையும் அளவிற்கு முன்பிருந்த அதிகாரமும் குறைந்துள்ளது.
  12. வருமானம், கல்வித் தகுதி, மற்றும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளின்றி எதையும் பார்க்காமல் எல்லோரையும் சமமாக நடத்துவதென்பது பாராட்டிற்குரிய விஷயம் என்றாலும், நடைமுறையில் குடும்பம் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் இதைக் கடைபிடிப்பது சுலபம். குடும்பத்தைத் தாண்டி அதைவிடப் பெரிய வட்டத்திற்குள் கடைபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.
  13. பணபலம், பதவிபலம், வாழ்க்கைச் சாதனைகள் ஆகியவை மனிதனுடைய அகந்தையை வலுப்படுத்துகின்றன. இவைகளை இழக்க நேரிடும்போது காற்றிறங்கிய பலூன்போல மனிதனுடைய அகந்தையும் சுருங்கிவிடுகிறது.
  14. மனிதனுடைய அகம்பாவம் பிரபஞ்சம் அளவிற்குக்கூட விரியும். அதே சமயத்தில் நிலைமை சரியில்லை என்றால் கடுகளவிற்கு சுருங்கவும் முடியும். இத்தகைய ஆற்றல் அதனுடைய வல்லமையை நிரூபிக்கிறது.
  15. இந்த உடம்பினுடைய நியாயமான உரிமையாளரும், எஜமானரும் யாரென்று கேட்டால், அது ஆன்மாவாகும். ஆனால், ஆன்மாவிற்குரிய இடத்தை அகந்தை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. அகந்தையின் இந்த ஆக்ரமிப்பை அகற்றி, ஆன்மாவை அவ்விடத்தில் நிலைநாட்டும் சக்தி சத்தியஜீவியத்திற்குத் தான் உள்ளது.
  16. அகந்தையின் பார்வைக்கு நியாயமற்றதாகவும், தவறாகவும் தெரிகின்ற விஷயங்களெல்லாம் அகந்தையின் பிடியிலிருந்து நாம் விடுபட்டோம் என்றால் தவறாகத் தெரியாது.
  17. அகந்தையின் பிடியிருக்கும்போது நாம் அடுத்தவரை அழித்துதான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் ஆன்மா நம் வாழ்க்கையை நடத்தினால், பரநலத்தைப் பாராட்டுவதன் மூலம் நாமும் முன்னேறலாம் என்று தெரியும்.
  18. நம்முடம்பில் காயம் ஏற்படுவதைப்போல் நாம் படும் அவமானங்களை நம் அகந்தை காயமாக எடுத்துக்கொள்கிறது. உடல் காயம் ஆறுவதைவிட அகந்தைக்கு வரும் காயம் ஆறுவது நாளாகும். மேலும் தனக்குக் காயம் ஏற்படுத்தியவருக்குப் பதில் அவமானம் வழங்கும் வரை அகந்தை ஓயாது. உடல் காயங்கள் மருந்தால் குணமாகும். ஆனால் அகந்தைக்கு வரும் காயங்களை ஆன்மீகச் சாந்திதான் முழுவதும் குணப்படுத்தும்.
  19. தண்ணீர் மேலிருந்து கீழிறங்குவதுபோல ஜீவியமும் மேலிருந்து கீழே இறங்குகிறது. ஜீவிய நிலையில் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் சந்தித்துக் கொண்டார்கள் என்றால் உயர்ந்தவரிடமிருந்து தாழ்ந்தவரை நோக்கி ஜீவியம் போகும். ஆனால் தண்ணீர் இறங்குவது தெரிவது போல இதனுடைய இறக்கம் தெரியாது.
  20. ஒவ்வொரு மனிதனுடைய பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறும், ஒவ்வோர் இடத்தில் நடக்கும் வேலைக்கு ஏற்றவாறும் சூழல் உருவாகும். ஓர் இடத்திற்குப் புதிதாகப் போகிறோம் அல்லது புதிதாகச் சந்திக்கிறோம் என்றால், அந்நேரம் நமக்கு எழும் எண்ணங்களும், உணர்வுகளும் அத்தொடர்பால் உண்டானவைகளாகும்.

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் ஒருநிலைப்படுதல்:
மனத்தின் நம்பிக்கை, உணர்ச்சியின் வேகம், உடலின் நிதானம் ஆகியவை மனம் நிலைப்படுதலை நிர்ணயிக்கும். அலைபாயும் மனமுடையவன் ஓடும் எண்ணங்களில் வாழ்பவன். ஓடும் எண்ணம் நின்று, பயன் கருதி செயல்படுவதை விட்டு,
பகுத்தறிவைத் தீட்டாமலிருந்தால் தான் மனம் தூய்மையடையும். மனம் தூய்மையடைந்தால், தூய்மையான ஆன்மாவுக்கு வழிசெய்து மோட்சத்தைக் கொடுக்கும்.
சமர்ப்பணம் என்பது பிரகிருதியைப் புருஷனுடன் இணைப்பது. மனத்திட்பம் முழுவதும் ஆத்ம சமர்ப்பணத்திற்காகச் செலவிடப்படுதல் சைத்திய புருஷனில் மனம் நிலைப்பதாகும்.
ஒரு கரணத்திற்குரிய புருஷன் வெளிப்பட்டால் தான், தீட்சண்யமாக மனம் நிலைப்படும். பேசும் பொழுது மனம் நிலைப்பட வேண்டுமானாலும், உணர்ச்சி வசப்பட்ட பொழுது அங்கு உணர்வு நிலைப்பட வேண்டுமானாலும், அதற்குரிய புருஷன் வெளிப்பட வேண்டும்.
 
நிலைப்பட்ட மனம் தூய்மையடைந்து மோட்சம் பெறும்.

*****



book | by Dr. Radut