Skip to Content

08. கார் கம்பெனியில் நிகழ்ந்த அற்புதம்

கார் கம்பெனியில் நிகழ்ந்த அற்புதம்

N. அசோகன்

1972ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கின்ற ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் கம்பெனிகளில் மூன்றாவது இடத்தில் இருந்த கிரைஸ்லர் கார் கம்பெனி 1700 மில்லியன் (1700 கோடி ரூபாய்) டாலர்கள் கடன் வாங்கி இருந்தது. உலகத்திலேயே தொழில் ரீதியாக இந்தக் கடன்தான் அந்த ஆண்டில் அதிகபட்சமாக இருந்தது. ஏறக்குறைய 400 வங்கிகளிலிருந்து கடன் வாங்கி இருந்தார்கள். வங்கியில் அவர்களுடைய சேமிப்பு 10 லட்சம் டாலர்கள் மட்டும்தான் இருந்தது. ஆனால் அவர்களுடைய தினசரி சராசரி செலவுகளோ 8 கோடி டாலர்கள் அளவுக்கு இருந்தது. ஆட்டோமொபைல் தொழிலில் இருந்த வல்லுநர்கள், பங்கு மார்க்கெட் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகைகள் என எல்லோருமே கம்பெனியை இழுத்து மூடுவது தவிர்க்க முடியாதது என்று கூறிவிட்டார்கள். ஓர் இடத்திலிருந்து கூட நம்பிக்கையூட்டும்படியான குரல் எழவில்லை. இந்நேரத்தில் ஐயகோக்கா (Iacocca) என்பவர் இக்கம்பெனியின் தலைமைப் பதவியை ஏற்றார். அவருக்கு அக்கம்பெனி வழங்க முன்வந்த ஆண்டுச் சம்பளம் 10 லட்சம் டாலராகும். இருந்தாலும் இக்கம்பெனி பற்றிய முழு உண்மை தெரிந்திருந்தால் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கமாட்டேன் என்று அந்நேரம் அவர் பேசினார்.

ஊழியர்கள் வேலை செய்யவில்லை. கம்பெனியின் நிதி நிலைமைக்குப் பொறுப்பேற்று இருந்த அதிகாரியால் (Chief Financial Officer) அங்கு இருந்த நிதி நிலைமையைப்பற்றி எதுவுமே பேச முடியவில்லை. வேலை நடக்குமிடத்தில் கொலை, கற்பழிப்பு, சூதாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில் சேர்மனாக வந்த ஐயகோக்கா சவாலை ஏற்றுக் கொண்டு கம்பெனி சிரமத்திலிருந்து மீளும் வரையிலும் மிகக் குறைந்த சம்பளம் வாங்கப்போவதாக அறிவித்தார். ஒத்துழைக்காத, பிடிவாதம் செய்த வங்கிகளைக் காத்திருக்கச் சொன்னார். எதிர்ப்புத் தெரிவித்த ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தார். கம்பெனியில் இருந்த 35 துணைத் தலைவர்களில் (Vice-President) 34 பேரை பதவி நீக்கம் செய்தார். புதிய மாடல் கார் ஒன்றை உருவாக்கினார். ஆட்டோமொபைல் துறையில் அந்நேரம் எந்தக் கம்பெனியும் வழங்க முன்வாராத, "பணத்தைத் திருப்பித் தரும் கேரன்டி”யை (money back guarantee) வழங்கினார். தாமே டி.வி. விளம்பரங்களில் தோன்றி அக்காரை விற்க முயன்றார். இம்முயற்சிகளின் பலனாக மூன்றே ஆண்டுகளில் கம்பெனிக்கு இருந்த கடன்போன்று இரட்டிப்புத் தொகையைச் சம்பாதித்துக் காட்டினார். அமெரிக்க அரசாங்கம் வழங்கியிருந்த பத்து ஆண்டு "கேரன்டி"யை மூன்றே ஆண்டுகளில் விடுவித்தார். இவற்றிற்கெல்லாம் பரிசாக அவருக்கு ஊதியமாகவும், போனஸாகவும், பங்குகளாகவும் 2 கோடி டாலர் அளவிற்கு வருமானம் கிடைத்தது.

நம்பிக்கையற்றுப்போன ஒரு சூழ்நிலையைப் பொறுப்புணர்வோடு ஏற்றுக்கொள்வது, ஓர் ஆன்மீகச் செயல்பாடாகும். தைரியம், தியாக மனப்பான்மை, மனோதிடம், இவையெல்லாம் ஆன்மீகக் குணங்களாகும். எந்த நிறுவனத்தில் இக்குணங்கள் வெளிப்படுகின்றனவோ அந்த நிறுவனத்தின் ஆன்மா இத்தகைய குணங்களைப் பாராட்டி, எது சில ஆண்டுகளுக்குமுன் முடியாதுஎன்று தெரிந்ததோ அதை முடித்துக் கொடுக்கிறது. ஐயகோக்கா ஆன்மாவின் சக்தியை இயற்பொருள் ரீதியாக (physical level) வெளிப்படச் செய்தார்.

  • பழைய முறைகளை நம்பாமலிருப்பது.
  • கண்ணுக்குத் தெரியாத நம் அறிவைத் தாண்டிய விஷயங்களைப் பூரணமாக நம்புவது.
  • இதுவரையில் நம்மிடமில்லாத ஓர் உள்மன அமைதியைக் கொண்டு வருவது.
  • மேற்கண்ட இவை மூன்றும் ஆன்மாவின் சக்தியைச் செயல்பட வைக்கும் வழிமுறைகளில் சிலவாகும்.

இந்தியாவைத் தொழில்மயமாக்கும் ஆரம்ப நாள்களில் சில குறிப்பிட்ட துறைகளில் அரசாங்கமே முழு முதலையும் கொடுக்க முன் வந்தபோதுகூட அலுமினியம் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற திட்டங்களை மேற்கொள்ள எந்த ஒரு தொழிலதிபரையுமே ஊக்குவிக்க முடியாத நிலையில் நம் நாட்டு அரசாங்கம் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நூறு கோடி முதலீட்டில் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து மார்க்கெட்டில் வந்த சரிவினால் ஏற்பட்ட சூழ்நிலை, முதலீட்டாளர்களுக்கு எதிராகப் போய்விட்டது. நிலைமை இன்னும் சில காலம் நீடித்தால் இந்த நூறு கோடி ரூபாய் முதலீடும் கரைந்து போய்விடக்கூடிய அபாயம் ஏற்பட்டது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் நூறு பேரளவில் இருந்த அதிகாரிகளுக்கும் வேலை பறிபோகக்கூடிய ஆபத்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில் அக்கம்பெனியின் உரிமையாளர் தம்முடைய வெளிச் செயல்பாடுகளில் ஓர் அமைதியை வெளிப்படுத்தினார். இந்த ஆன்மீக அமைதிக்கு வாழ்க்கை நல்ல விதமாகப் பதிலளித்தது. மார்க்கெட்டும் மீண்டும் சாதகமாக மாறியது. இப்பொழுது இந்த உரக் கம்பெனி இந்தியத் தொழில் துறையில் ஒரு சிகரமாக விளங்குகிறது.

எவர்களுக்கெல்லாம் பரிசுத்தமான மற்றும் எளிமையான ஆன்மீக நம்பிக்கை இருக்கிறதோ, அவர்கள் எல்லோரும் ஆன்மாவின் சக்தியை வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் செயல்பட வைக்கலாம்.

வாழ்க்கை என்பது வெற்றியும், தோல்வியும் நிறைந்த ஒரு சூழலாகும். இத்தகைய சூழலில் தவறாமல் வெற்றி பெறும் வலிமை ஆன்மாவிற்கு மட்டுமுண்டு. அத்தகைய ஆன்மீக சக்தியைச் செயல்பட வைப்பது உண்மையும் நம்பிக்கையுமாகும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பூரணம் மேல்மனதில்லை. விட்டுக் கொடுத்து சுமுகம் பெறுவதே அதற்குள்ளது.

*****



book | by Dr. Radut