Skip to Content

04. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

பிரம்மம் சிருஷ்டிக்கப்படவில்லை,
அது சிருஷ்டிக்கவுமில்லை . (P.333.)

பிரம்மத்தை ஆதியும் அந்தமுமில்லாதது என்கிறோம். ஆதி என்றால் மூலம், பிறப்பு. நமக்கெல்லாம் பிறப்புண்டு, இறப்பும் உண்டு. நம்மால் பிறப்பில்லாத ஒன்றை நினைத்துப் பார்க்க முடியாது. காற்றுக்கு, மலைக்கு மூலம் உண்டா எனில் ரிஷிகள் அந்த மூலத்தை விவரித்துள்ளனர். விஞ்ஞானிகளும் அதைக் கூறுகின்றனர். காலம் மூலம் பெற்றது என்பதை ரிஷிகள் விளக்குகின்றனர். பிரம்மத்திற்கு மட்டும் மூலமில்லை. பிரம்மத்தின் ஒரு குணம் தலைப்பில் வருகிறது. சமஸ்கிருதச் சொல் சிருஷ்டி. தச்சன் மேஜை செய்கிறான். நாம் ஒரு சமையல் செய்கிறோம். தச்சன் மேஜையை சிருஷ்டி செய்வது போல சமையலை, ஒரு புத்தகத்தை நாம் சிருஷ்டிக்கிறோம். அதாவது இல்லாததை உற்பத்தி செய்கிறோம். சிருஷ்டி என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு உற்பத்தியெனப் பொருளில்லை. இருப்பதை வெளிப்படுத்துவதுஎனப் பொருள். சுயம், சுயம்பு, தானே உற்பத்தியாகி, தானே இருப்பது என்பது பிரம்மத்திற்குரிய விளக்கம்.

The Life Divineஇல் பிரம்மம் என்ற கருத்து 47 இடங்களில் விளக்கப்படுகிறது. மேலும் 54 இடங்களில் சொல்லாக வருகிறது. அவற்றுள் தலைப்பு ஒன்று.

 • ரிஷிகள் சொல்லும் பிரம்மம் அக்ஷரபிரம்மம்.
  அக்ஷரபிரம்மமும், க்ஷரபிரம்மமும் சேர்ந்த பிரம்மம் உண்டு.
  அக்ஷரபிரம்மத்தில் தீமை, மரணம், வலி, நோயுண்டு.
  இரண்டும் சேர்ந்த முழுமை ஸ்ரீஅரவிந்த பிரம்மம்.
  இதில் மரணம், நோய், வலி, தீமையில்லை.
  இதன் சிருஷ்டி கர்மத்திற்குக் கட்டுப்பட்டதில்லை.
  அதை அற்புதம் என்கிறார் பகவான்.

  அக்ஷர பிரம்மம் காலத்தைக் கடந்தது.
  ஸ்ரீஅரவிந்த பிரம்மம் மூன்றாம் நிலைக் காலத்தைச் சேர்ந்தது.
  அக்ஷர பிரம்ம சிருஷ்டியில் முரண்பாடுண்டு.
  ஸ்ரீஅரவிந்த பிரம்ம சிருஷ்டியில் அவை உடன்பாடாகின்றன.
  இங்கு ஜடமும், ஆன்மாவும் பிரபஞ்சத்திலும், பிரம்மத்திலும் இணைகின்றன.
  ஸ்ரீஅரவிந்த பிரம்மம் 3 நிலைகளில் உள்ளது.
  1. மனிதன் அறியும் அகங்காரம்.
  2. பிரபஞ்சமறியும் ஜீவாத்மா.
  3. கடந்ததில் உறையும் Self பிரம்மம்.
  • அக்ஷர பிரம்மமானாலும், ஸ்ரீஅரவிந்த பிரம்மமானாலும் அவற்றின் சிருஷ்டியில் கற்பக விருக்ஷம், காமதேனு, அட்சயப் பாத்திரம் உண்டு. பிரம்ம தண்டமும் இதற்குண்டு. எடுக்க எடுக்கக் குறையாது.
   எந்தத் தாக்குதலும், எதிர்ப்பும் பிரம்மதண்டம் விழுங்கக்கூடியது.
   அக்ஷரபிரம்மத்திற்கு எதிர்ப்பு எழும், தண்டம் விழுங்கும்.
   ஸ்ரீஅரவிந்த பிரம்மம் எதிர்ப்பே எழாத அளவு வலிமை பெற்றது.

பகவான் புலித் தலையின் மீது இடறி விழுந்து தொடை எலும்பு முறிந்த பொழுது, "நான் அன்னையின் தலை மீதுள்ள தாக்குதலைக் கவனித்திருந்த பொழுது தவறினேன்" என்றார். வேறொரு சமயம் அந்நிகழ்ச்சியை விளக்கும் வாயிலாக, "என்னை எந்த தீய சக்தியும் தாக்காது என நான் நினைத்துவிட்டேன்" என்றார். 1920வாக்கில் பகவான் வீட்டில் கல் ஏராளமாக விழுந்த பொழுது அவர் அறையில் மட்டும் கல் விழவில்லை. நம்மவர் பகவானை ரிஷியாக வணங்குகின்றனர். அவதாரப் புருஷன் என்று நம்புகின்றனர். இறைவனின் ஓர் அம்சம் உலகில் மனிதனாக அவதரிப்பது அவதாரம். அன்னை, "பகவான் இறைவனேயாகும். முழு இறைவனில்லை, இறைவனின் பகுதி" என்கிறார். பகவான் இறைவனின் அம்சமில்லை, இறைவனின் பகுதி. அப்படியிருக்க ஏன் அவருக்கு கால் முறிந்தது எனக் கேள்வி. நாமறிந்தவரை கடவுள்களை நாம் துதித்தால், அவர்கள் மகிழ்ந்தால் வரம் தருவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். துவார பாலகரை ரிஷிகள் சபித்தபொழுது மகாவிஷ்ணு, "சாபத்தை விலக்கும் சக்தி எனக்கில்லை. சீக்கிரம் விடுபட வழி சொல்கிறேன்" என்றார். 1900 வரையும், 1960 வரை இந்திய சர்க்காரை நாம் அறிவோம். 1848இல் கார்ல் மார்க்ஸ் உலகத் தொழிலாளரைப் புரட்சி செய்ய அழைத்தார். 1917இல் சோவியத் சர்க்கார் தொழிலாளி சர்க்காராக ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸ்ட் வசம் போகாமலிருக்க 1900 முதல் அந்நாடுகள் தொழிலாளர் சார்பாக, சட்டம் இயற்றினர். (Welfare state) பொது நல சர்க்கார் ஏற்பட்டு சில வசதிகளை மக்களுக்குச் செய்தனர். அவற்றுள் ஒன்று இலவசக் கல்வி.

பகவான் பிறந்தபிறகு உலகின் இருளை அவர் அழிக்க முற்பட்டார். அதுவரை எந்த தெய்வமும் ஏற்காத பணி அது. உலகின் இருளை பகவான் அழிக்க முற்பட்டதால் உலக சர்க்கார்கள் மக்கள் ஏழ்மை, அறியாமை, நோயைப் போக்க ஓரளவு முன் வந்தனர். 1967 முதல் உலக சர்க்கார்கள் அனைத்தும் சத்தியஜீவிய சக்திக்கு உட்பட்டதாக பகவான் சூட்சும உலகில் அன்னையிடம் கூறினார். இப்பொழுது கல்வி இலவசம். புதுவையில் மருத்துவக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தாங்கள் செலுத்திய பீஸைத் திரும்பப் பெறுகின்றனர். தொழில் செய்ய சர்க்கார் முதல் தருகிறது. ஏராளமாக ரோடு போடப்படுகிறது. விவசாயத்திற்கு இலவசமாகக் கரண்ட் தரப்படுகிறது. 2½ இலட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடனாக வருகிறது. 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் நிலுவையை சர்க்கார் தள்ளிக் கொடுத்தது. ஏது பணம்?

"நானென்ன ரிஸர்வ் பேங்க்கா?" எனக் கேட்ட நாட்களுண்டு.

இப்பொழுது ரிஸர்வ் பேங்க் காலி, மக்களுக்குக் கடன் பட்டுள்ளது. இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்பட்டுள்ளது. அந்தக் கடன் நாட்டு வருமானத்தில் பெரும்பங்கு. உலகிலுள்ள எல்லா அரசுகளும் அப்படிக் கடன்பட்டுள்ளது. சர்க்கார் அக்கடனுக்கு வட்டி தருகிறது. தனிப்பட்டவர் கடன்தொகை திரும்பக் கேட்டால் கொடுக்கிறது. அனைவரும் ஒரே சமயத்தில் கேட்டால் தர முடியாது.

 • சர்க்கார் மக்கள் அன்றாட வாழ்வின் பொறுப்பை ஏற்றால் திருப்பித்தர முடியாத கடனுக்கு ஆளாகிறது.
 • அதைப்போல் உலக மாந்தர் இருளை அழிக்கும் பணியை - இதுவரை தெய்வங்கள் ஏற்காத பணியை - பகவான் ஏற்றதால் தீய சக்திகள் அவரைத் தாக்க முடிந்தது.

ஸ்ரீஅரவிந்த பிரம்மத்தின் அம்சங்கள் சிறப்பானவை, பிரம்மத்தின் அம்சங்களைக் கடந்தவை.

 1. பிரம்மம் அசையாது. ஆனால் அதைப் பிடிக்க முயன்றால் நமக்கு முன் போகும்.
 2. துண்டாட முடியாத பிரம்மம், துண்டுகளாகக் காட்சியளிக்கும்.
 3. அகண்டமும், அணுவும் ஒரே சமயத்தில் இணைந்துறையும்.
 4. மனிதனுக்கு முடியாதனவெல்லாம் பிரம்மத்திற்கு முடியும்.
 5. எந்தக் குணமும் ரூபமற்றது, எல்லாவற்றையும் சிருஷ்டிக்க வல்லது.
 6. சர்வம் பிரம்மம்.
 7. நாமும் பிரம்மம்.
 8. நாம் நம்மை பிரம்மம்என அறிந்தால், நம் வாழ்வு அடிப்படையில் மாறும்.

யோகத்தகுதி பெற்ற அன்பர்கள் பலருண்டு. பகவானும், அன்னையும் சித்தியாகப் பெற்றவை இதுவரை உலகமறியாத பெரும் பேறுகள். அவை அன்பருக்கு ஒருமுறை அனுபவிக்க வரும்.

"பூரண யோக வாயில்கள்" என்ற தலைப்பில் 114 அம்சங்களைக் குறிப்பிட்டு ஒருபக்கக் கட்டுரை 40 எழுதியுள்ளேன். மீதி 74 கட்டுரைகளும் எழுத வேண்டும். இவை எதிர்காலத்தில் மலர்ந்த ஜீவியத்தில் வெளிவரும். ஓர் அன்பருக்கு இந்த 114 அம்சங்களில் ஒன்று பலித்திருந்தால் அவருக்கு யோகத் தகுதியுண்டு. 100க்கு மேற்பட்ட அன்பர்கள் இத்தகுதி பெற்றவர்என்பது என் அனுபவம்.

அவர்களில் ஒருவர் The Life Divineஇல் உள்ள 47+54 இடங்களை (பிரம்மத்தை சுட்டும் இடங்களை) எடுத்துப் பயின்று மனதிலிருத்த முயன்றால், அது பலிப்பது

பிரம்மரிஷியாவதாகும்.

அந்த சித்தியில் பல கட்டங்களுண்டு. மனம், உயிர், உடல் என்ற நிலைகளில் பலிக்கும். ஒவ்வொரு நிலைக்கும் இரு பகுதிகளுண்டு. எனவே 6 கட்ட சித்திகள் எனலாம். ஆத்மாவையும் சேர்த்தால் ஆத்மாவுக்கு இரு பகுதிகளில்லை (ஜீவியம், பொருள்) 7 கட்ட பிரம்ம சித்திகள் என இதைக் கூறலாம்.

 1. சொல்வது புரிவது முதல்நிலை மனமாகும்.
 2. புரிவதை மனம் ஏற்பது இரண்டாம்நிலை சித்தி.
 3. ஜீவியம் ஏற்றதை, பொருள் அனுமதிப்பது அடுத்தநிலை.
 4. பொருள் முழுமையாக ஏற்பது மனத்தில் சித்தி பூர்த்தியாவது.

இதைக் கடந்து உயிர், உடல், ஆத்மாவுக்குரிய சித்தியின் நிலைகள் உள்ளன. ஒருவர் The Life Divineஐப் படித்து மேற்சொன்ன 4 நிலைகளில் பிரம்மத்தை அறிந்து, புரிந்து, ஏற்று, சித்தி பெறுவாரானால், அவர் பிரம்மரிஷி பட்டத்திற்கு உரியவராவார். அப்படிப்பட்ட 6 பேர் ஆசிரமத்திருந்ததாகப் பகவான் கூறியுள்ளார். உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம் என்ற நூலும், மற்றும் பல இடங்களிலும் அன்பர் தெய்வத்திற்குரிய செல்வத்தைப் பேர் அளவில் பெறலாம் என நான் கொஞ்ச நாளாக எழுதி வருகிறேன். அதைப் பெறும் 51 முறைகளையும், அதற்குரிய சட்டங்கள் 42ஐயும் "அமிர்தமான அபரிமிதம்" என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன். வரும் ஆண்டுகளில் சூழல் அனுமதித்தால் அதை "மலர்ந்த ஜீவிய"த்தில் வெளியிடலாம் எனக் கருதுகிறேன். அது வெளி வருவதற்குள் இக்கட்டுரையைப் படிப்பவர்கள் பிரம்மத்தின் பரிசாக, ஸ்ரீஅரவிந்த பிரம்மத்தின் அபரிமிதமான வரமாகத் திரண்ட செல்வம் பெற விருப்பப்படுபவர்கள் இம்முயற்சியை மேற்கொள்ளலாம். பணம் சம்பாதிப்பது தவறு என்ற இலட்சியமுள்ளவர்க்கு இம்முறையோ, எந்த முறையோ உதவாது. பக்தியால் சம்பாதிக்கும் பணம் பவித்திரமானது. அது ஒரு யோகச் சாதனை என ஏற்பவருக்கு பலிக்கும் 51 முறைகளில் இது ஒன்றாகும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிரபஞ்சம் மனிதனாக உருவாகிறது. முதலில் உடலாகவும், பிறகு உணர்வாகவும், மனமாகவும் உருவெடுத்து முடிவில் ஆன்மாவாகிறது. அதையும் தாண்டிய நிலையில் ஆன்மா பிரகிருதியில் வெளிப்பட்டு பரமாத்மாவை அடையும் வழியைக் கோலுகிறது.
 
பிரபஞ்சம் ஜீவாத்மா மூலம் பரமாத்மாவை அடைகிறது.
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கணிதத்தில் (infinity) அனந்தத்தை அறிவது (intellect) அறிவில்லை. பரம்பொருள் சிந்தனைக்குரிய மனத்தைத் (thinking mind) தொடுவதால் ஏற்படுவது அது. அறிவின் பிரகாசம் Life Divineஐப் புரிந்து கொள்ளாது. சிந்திக்கும் மனம் அளவு கடந்து (infinite expansion) விசாலம் அடைந்தால் Life Divine புரியும்.
 
ஆன்மீகத்திற்குரிய அறிவுப்பாணி.

****book | by Dr. Radut