Skip to Content

08. லைப் டிவைன் - கருத்து

The Life Divine - கருத்து

மாயை என்பது அனந்தனான பிரம்மத்தின் ஜீவியம்

சிந்தனைக்குச் சிறப்புண்டு, சிருஷ்டித் திறனில்லை. நாம் ஒரு பெரிய கட்டிடம் கட்ட நினைப்பதால் கட்டிடம் தானே எழாது. பெரிய கட்டிடத்தை கட்டத் தேவையான கல், மண், சிமெண்ட், ஆட்கள், முயற்சி, பணம் உள்ள பொழுது கட்டிடத்தைக் கவினுறக் கட்ட அச்சிந்தனை உதவும். மனித அறிவு செயலைச் சிறப்புறச் செய்யும். செயலைத் தானே செய்யவல்லதன்று. இறைவனின் எண்ணம் இயற்கையின் திறனைத் தன்னுட்கொண்டது. சிந்தனையின் சிறப்பு சிருஷ்டித்திறனையுடையது. மனிதனுக்கில்லாத மகிமை இறைவனின் இதயத்திற்குரியது.

இறைவன் உலகை மாயையால் சிருஷ்டித்தான் என்றால் பிரம்ம சத்தியம் மாயாவாதியின் மனக் கண்ணில் உலகம் மாயை எனத் தெரிந்தது. உலகம் மாயையில்லை. மாயை உலகை சிருஷ்டித்தது. அறிவில் இம்மாற்றம் திருவுருமாற்றம். செயலில் இம்மாற்றம் அதிர்ஷ்டம்.

நாம் காலத்துள்ளிருப்பதால் நாம் காலத்திற்குக் கட்டுப்பட்டுள்ளோம். ஒரு காரியத்தை முடிக்க அதற்குரிய காலம் தேவை. காலம் வரும்வரை நாம் காத்திருக்கிறோம். காலத்துள் உள்ள நாம் காலத்தைக் கடந்து செல்லலாம். கடந்த நிலை முனிவர் பெற்ற தவநிலை. உயர்ந்த நிலை உலகத்திற்குப் புறம்பான நிலை. உலகைப் புறக்கணிக்கும் மனப்பான்மை. உயர்ந்ததும் உலகுக்குரியது என்பதை அறிவது நம்மை உத்தமனாக்கும். உயர்ந்தது உலகத்துள் வர இயலும். வந்தது உடனுறையும். உடனுறையும் பாங்கு உலகை உயர்த்தும் பாங்கு. உலகம் காலத்துள் உள்ளது. ஆனால் காலத்திற்குரியதன்று. உயர்ந்தது உலகைவிட்டுப் போனாலும் உலகத்திற்குரியது. உயர்ந்தது உலகின் உள்ளே வர, வந்து உலகுடன் உடனுறைய, உலகம் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். உயர்த்தப்பட்ட நிலையில் உயர்ந்தது உலகில் செயல்படும். அது நிகழ்த்துவது அற்புதம். காலத்தைக் கணமென சுருக்கும் ஆச்சரியம்.

மனிதன் மனத்தால் வாழ்கிறான். மனம் காலத்தால் செயல்படுகிறது. மனமும் காலமும் அகந்தையால் இயங்குகின்றன. அகந்தையின் அடிப்படை அனந்தமான பொய். அதை நாடி நாம் போய் ரசிக்கும்வரை நாம் காலத்திற்கும், மனத்திற்கும், அகந்தைக்கும் உரியவர். நாம் பொய்யை விட்டகன்று மெய் பேசினால், மெய்யை மனம் நாடினால், காலம் தன்னைக் கடந்து கடந்த நிலையையடையும். மெய் பேசும் வாய், மெய்யை நாடும் மனம் ஆழ்ந்து சென்று ஜீவனில் லயித்தால், லயம் சத்திய வேட்கை கொண்டால், சத்தியத்தை அடைந்தபின் சத்தியம் ருசித்தால், மனம் காலத்தைக் கடந்த நிலையைக் கடந்து காலத்துள் வரும். வந்தது காலத்தை விலக்காது, உயர்த்தும். திருவுருமாற்றி உயர்த்தும். காலமும், கடந்ததும் உடன் உறையும். அது,

  • அகம் புறமாகும் நிலை; புறம் நகர்ந்து அகத்துள் பொதியும் நிலை.
  • யுகம் க்ஷணமாகும் நிலை.
  • அவதி மாறி அற்புதமாகும் ஆச்சரியமான ஆனந்தம்.
  • மனித மாற்றம் திருவுருமாற்றமாகும்.
  • செயல் செயலினின்று மாறி சரணாகதியாகும்.
  • செயலைச் சரணம் செய்யும் மனிதனின் செயல் சரணாகதியன்றி வேறில்லை என மாறும்.
  • மாயை மாயையில்லை, மகேசனின் மகிமை எனப் புரியும்.

****

Comments

08. லைப் டிவைன் -

08. லைப் டிவைன் - கருத்து

 Para  2  -  Line  4  -    செயலி ல்   -    செயலில்



book | by Dr. Radut