Skip to Content

05.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

அன்னையை ஏற்கும் குடும்பங்கள் பல அளவில் ஏற்கின்றன. பொதுவாகப் பிரார்த்தனை பலிக்கும் தெய்வமாக ஏற்பது வழக்கம். ஈடுபாட்டுடன் ஏற்பவர்கள் ஏராளம். ஈடுபாடு பெரும்பலன் தரும். அன்னையை ஏற்பது உயர்ந்த வாழ்வை - சத்தியஜீவிய வாழ்வை -ஏற்பதாகும். நம் வாழ்வு சமூக வாழ்வு. சமூகத்தில் பலரும் செய்வது சரி என்றாகும். சரி என்பது சத்தியம். எவர் செய்தாலும் செய்யாவிட்டாலும், நாம் சரி என்பதை மட்டும் செய்வோம் என்பது நம் மனநிலைக்கு ஒத்துவாராது. நாலு பேரைப் பின்பற்றுவது எளிது.சத்தியத்தைப் பின்பற்றுவது எளிதன்று. நாலு பேரை பொதுவான விஷயங்களில் பின்பற்றினாலும், முக்கியமான விஷயங்களில் நாம் நாலு பேரைப் பின்பற்றுவதில்லை. நமக்குப் பிடித்தது, நமக்குச் சௌகரியமானதை மட்டும் பின்பற்றுவோம். அத்துடன் அதுவே அன்னையைப் பின்பற்றுவது எனவும் பேசுவோம். இது மனிதச் சுபாவம். இது பொய். இப்படிப் பேசாமல், சத்தியத்தை மட்டும் பின்பற்ற முயல்வது அன்னை வாழ்வு.

அப்படி ஒரு குடும்பம் இல்லை. ஆனால் எந்த பக்தர் குடும்பத்திற்கும் வரும் வாய்ப்புகள் எப்படிப்பட்டவை என அவர்கள் அறிவதில்லை. அது ஏராளம். சமூகத்தின் உச்சகட்ட வாய்ப்பு வந்து கதவைத் தட்டுவதை அவர்கள் அறிவதில்லை. ரமண மகரிஷி ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு ராஜா தனக்கு வாரிசாக ஒருவனை மனதில் நினைத்து, அவனை அழைத்து உனக்கென்ன வேண்டும் எனக் கேட்டபொழுது "அரையணா'' வேண்டும் (3 பைசாவை அன்று அரையணா என்பர்) என்று கேட்டான் என்பது கதை. அவனுக்கு ஆண்டவன் தர விரும்புவது ராஜ்ய பரிபாலனம். அவன் மனம் நாடுவது அரையணா. மனம்போல மாங்கல்யம். ஒருவர் மனதை மீறி ஆண்டவனும் அவனுக்கு வசதி தர முடியாது என்பது சட்டம். அன்பர் மனநிலை அது போன்றது. நாம் அன்னையை ஏற்று சத்தியமான வாழ்வை நடத்தினால், "எனக்கு அன்னை தர விரும்புவதை நான் அன்புடன் ஏற்கிறேன்'' என்ற மனநிலையிருந்தால், இன்று வெறும் மனிதனாக இருப்பவன், நாளை உலகம் அறியும் மனிதனாவான் என்பது அன்பருலகம் அறியாத உண்மை.

இக்கருத்தை ஒரு குடும்ப வாழ்வு மூலம் சில இடங்களில் உரையாடலாகவும், மற்ற இடங்களில் உரைநடையாகவும் விளக்க முயல்கிறேன். சுமார் 10 ஆண்டுகட்கு முன் தாயார் அன்னையை அறிந்து, மனத்தால் ஏற்றவர். தகப்பனாருக்குப் பக்தியில்லை. குடும்பம் அன்னையை ஏற்பதில் ஆட்சேபணையில்லை. தம்மைக் கட்டாயப்படுத்தக் கூடாது. ஏதோ ஒரு சமயம் அவரும் அனைவருடன் சேர்ந்து அன்னையை ஏற்றதாகப் பேசுவதும் உண்டு. உலகில் குடும்பங்களை 1 முதல் 100 வரை நிர்ணயித்தால் இக்குடும்பம் 3 அல்லது 4ஆம் நிலையிலிருந்தது. இதுபோன்ற குடும்பங்களில் பெரும்பாலானவை 5 அல்லது 6ஆம் நிலைக்கு உயரும். உள்ளதைக் காப்பாற்ற முடியாதவர் பலர். இந்த 10 ஆண்டுகளில் இக்குடும்பம் 15ஆம் நிலையை எட்டியுள்ளது. வீட்டில் எவரும் குடும்பம் உயர்ந்ததைக் கருதவில்லை. (Take it for granted) என்றும் இந்த 15ஆம் நிலை தமக்குரியது போன்ற நினைவு, மேலே போக முயற்சியில்லை. மீண்டும் பழைய நிலையை அடையவேண்டிய அனைத்தையும் முயன்று அனைவரும் செய்கிறார்கள். தாயார் மட்டும் அன்பர். அவரால் எதுவும் செய்யமுடிவதில்லை. செய்ய முடிந்ததையும் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு. இத்தனை அட்டூழியத்திற்குப் பின்னும் எப்படி வந்தது அழியாமலிருக்கிறது என்று அவர் ஆச்சரியப்படுவதை மற்றவர் அறியார். முதல் பையன் பெரிய வேலையில் மிகப் பெரிய சம்பளத்திலிருக்கிறான் பொதுவாகப் பொறுப்பில்லாதவன். வயது ஆனாலும் வயதுக்குரிய அறிவோ, நிதானமோ இல்லாதவன். அன்னையை ஏற்பதாகக் கூறுவான். நேரம் வந்தால் தன் இஷ்டப்படி மட்டும் நடப்பான். அது அன்னைக்கு நேர் எதிராகவுமிருக்கும். அதுவே அன்னைக்குகந்தது எனவும் பேசுவதுண்டு. மற்ற சமயங்களில் தன்னால் அன்னையைப் பின்பற்ற முடியாது, அது அவசியமில்லை என்றும் கூறுவான்.

சிறியவனுக்கு அன்னை மீது நம்பிக்கையுண்டு. அடிக்கடி பிரார்த்தனை செய்வான். சில பலிக்கும், பல பலிக்கா. ஏன் அவை பலிக்கவில்லை என்ற பிரச்சினையை எவரிடமும் எழுப்பமாட்டான். பெண் ஒருத்தியுண்டு. அடக்கமானவள், நல்லவள். அன்னை மீது மரியாதையுண்டு, பக்தியில்லை. அன்னையை நம்புவதில்லை, மறுப்பதில்லை. பொய்யாகவோ, அலட்சியமாகவோ, அதிகப்பிரசங்கித்தனமாகவோ பேசமாட்டாள். பொதுவாக நல்ல பழக்கங்கள் குறைவான குடும்பம். மனம் போனபடி பேசுவார்களே தவிர, எப்படிப் பழகுவது அழகு என்ற நினைவில்லாதவர்கள். எவரும் இவர்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை என்பதால், தங்கள் பழக்கம் தரக்குறைவானது என்ற சொரணையில்லாதவர்கள். பொதுவான வழக்கப்படி மற்றவர் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். அதே குறைகள் தங்களிடம் உண்டு என்பது மனதில் படாது.

தாயார் தவிர எவரும் ஒரு விஷயத்தில் குறியானவர்கள். ஒரு விஷயம் என்று எழுந்தால் அதன் பிடி அவர் கையிலிருந்தால் மயிரிழைகூட அப்பிடியை விட்டுக்கொடுக்காமல் தங்கள் சௌகரியப்படி நடப்பதில் அனைவரும் உஷாரானவர்கள். மனிதச் சுபாவத்தின் சூட்சுமம் உள்ள இடம் இது. பண்பு உற்பத்தியாவது இங்கே. இந்த இடத்தில் குறையிருந்தால் அன்னையிடம் நெருங்க முடியாது. எந்த அளவுக்கு நம் பிடியை விட்டுக்கொடுக்கிறோமோ, அந்த அளவிற்கு அன்னை நம் வாழ்வில் செயல்படுவார் என்பதை எல்லாம் அறியாதவர். இந்த வீட்டிற்கு வந்த வாய்ப்புகளை எவரும் நம்பமாட்டார்கள். எளிய வீட்டிற்குக் கோடீஸ்வரன் வீட்டு வரன் வந்ததும் தெரியாது, தவறியதும் தெரியாது. பல நாட்களுக்குப்பின் அவர்களே சொல்லியதால் தெரியும். இல்லையெனில் தெரிந்திருக்காது.

நம் குடும்பம் அன்னைக்குகந்த மாதிரியில்லாவிட்டாலும், இவ்வளவு பெரிய வாய்ப்பு அருளால் வந்துள்ளது எனவும், சரியில்லாததால் தவறியது எனவும் குடும்பத்தாரால் உணரமுடியவில்லை. இனியாவது வருவது பலிக்கும்படி நடக்கவேண்டும் என்ற எண்ணம் உதயமாகவில்லை.

வீட்டிலுள்ள ஒரே ஒரு பக்தரான தாயார் மட்டும் அறிவார். பெண் என்பதாலும், அன்னைக்குரிய கட்டுப்பாட்டை ஏற்றிருப்பதாலும், தாயார் தம் மனத்தின் எண்ணங்களை வெளியிடுவதில்லை. காரியம் எப்படிக் கூடிவந்தாலும் Mother's Grace என அனைவரும் கூறி ஏற்பார்கள். காரியம் கூடிவராத நேரம் கீழ்க்கண்ட உரையாடல் நிகழ்ந்தது.

பெரியவன் - காரியம் கூடிவராததும் அன்னை செயலன்றோ?

பெண் - நீ குதர்க்கமாகப் பேசினாலும், அதிலும் ஓர் உண்மையுண்டு.

சிறியவன் - என் காரியம் கெட்டுப்போனது உனக்கு Mother's Grace. உன் காரியம் கெட்டுப்போனால் அப்பொழுது தத்துவம் பேசுவியா? என்னைக் கேலி செய்ய உனக்கு Mother துணை.

தகப்பனார் - எது Mother's Grace ?

சிறியவன் - என்னை காலேஜ் teamஇல் எடுக்கவில்லை. அதை Mother's Grace என்று அண்ணன் கேலி செய்கிறான்.

பெண் - அம்மாவைக் கேட்போம்.

சிறியவன் - எனக்குத் தத்துவம் வேண்டாம், அம்மாவைக் கேட்காதே.

அம்மா - பையன் நொந்து போயிருக்கும்பொழுது நாம் பேசக்கூடாது.

பெண் - எனக்கு விபரம் தெரியவேண்டும்.

அம்மா - பெரியது வர, சிறியது தவறும் என்பது அன்னை சட்டம்.

சிறியவன் எழுந்து மாடிக்குப் போய்விட்டான். பெண் மேலே போய் அவன் சோகமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு வருகிறாள். போன் சத்தம் கேட்கிறது. தாயார் போனில் தம் தம்பி கூப்பிடுவதை எடுத்துப் பேசுகிறார். தம்பி ஆக்ரா போவதாகவும் சிறியவனை அழைத்துப்போக வேண்டும் என்கிறார். தாயார் சம்மதிக்கிறார்.

பெரியவன் - என்ன மாமா பேசினார், அதுவும்  Mother's Grace என்று கூறலாமா?

பெண் - உனக்கு அருள் வேண்டாம் என்றால், அருளைக் கேலி செய்யாதே.

பெரியவன் - நான் கேலி செய்யவில்லை. அருளின் உயர்வை எடுத்துக் கூறுகிறேன். தவறுவதும் அருளில்லையா? எல்லாமே அருளாயிற்றே.

சிறியவன் படியிலிருந்து சிரித்துக்கொண்டு வருகிறான். மாமா பேசிய விஷயம் அவனுக்குத் தெரியாது. ஆனால் சூழல் மாறிவிட்டது. அவன் மலர்ந்துவிட்டான். அம்மாவிடம் போய் இரகஸ்யமாக அண்ணன் போன வருஷம் பெயிலானது அருளன்றோ என்றான். தாயார் அதைப் பொருட்படுத்தவில்லை. பெயில் என்ற சொல்லை யூகித்த அண்ணனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவன் முகம் சுருங்கியது. அவன் பரீட்சையில் பெயிலாகவில்லை. கம்பனியில் எழுதிய பரீட்சையில் பெயிலானான். பிள்ளைகள் பேச்சு தாயாரைச் சிந்திக்க வைத்தது. தம் மனத்தைச் சோதனை செய்தார். தமக்கு அந்தக் குணமில்லையா எனக் கருதினார். தாம் பிள்ளைகள்போலப் பேசுவதில்லையே எனத் தோன்றியது. மேலும் சிந்தனை செய்தாள். தன்னிடமில்லாமல் பிள்ளைகளிடம் வாராதே என நினைத்தபொழுது தமக்கு அக்குணம் உண்டு, பழக்கமில்லை என்று தெரியவந்தது. தம் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தார். சற்று நேரத்தில் பெரியவன் பேசினான்.

அந்தப் பரீட்சையில் பாஸாயிருந்தால் பாம்பேக்கு மாற்றலாகியிருக்கும். தான் பாஸாகாததால் மாற்றல் இல்லை. பிறகு அதே பிரமோஷன் இங்கேயே கிடைத்தது என்று அம்மாவிடம் கூறி, "ஒன்று தவறினால் பெரியது வரும். தம்பிக்கும் அது நடக்கும்'' என சமாதானமாகப் பேசினான். தற்சமயம் கேலிக்குரலில்லை. அதைக் கேட்ட தாயார், சிறியவனுக்கும் அது நடந்துவிட்டது. அவன் teamஇல் சேராததால் மாமாவுடன் ஆக்ரா போக இருக்கிறான் என்ற செய்தியை வெளியிட்டார். கேலிச் சூழல் மாறி சுமுகம் ஏற்பட்டது.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பெண், தகப்பனார் வந்தவுடன் நடந்தவற்றைக் கூறி அன்னை நோக்கில் விளக்கும்படிக் கேட்டுக்கொண்டாள். தகப்பனாருக்கு ஆச்சரியமாக இருந்ததே தவிர என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் புரியவில்லை. தாயார் மனம் மாறியது, பெரியவன் மனம் மாற உதவியது. சூழலை மாற்றியது எது என அவருக்குத் தெரிய வழியில்லை. பெண் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினாள். தகப்பனார் இவையெல்லாம் எப்பொழுதும் நடப்பதுதானே. ஏதோ நடக்கிறது, நாமெப்படிக் காரணம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிட்டுத் தம் வேலையை கவனித்தார்.

தாயார் அன்னை எழுதியவற்றை எல்லாம் படித்தவர். அவற்றை மனதால் முழுமையாகப் பின்பற்றப் பிரியப்படுபவர். அதிகமாகச் சிந்திப்பவர். தாம் மட்டும் இந்த வீட்டில் பக்தராக இருப்பதால் குடும்பம் ஏராளமாக உயர்ந்தது என அறிவார். அவர் மனம் நடந்ததை அறியும்.ஆனால் நன்றி உணர்ச்சியாக எழுந்து உடல் புல்லரிப்பதில்லை என அறிவார். தமக்குத் தெரிந்தவற்றைக் கணவரிடம் கூறினால் ஒரு வேளை அவர் ஏற்கலாம் அல்லது மறுத்துக் கேலி செய்யலாம். தாயாருக்குள்ளவை பிரச்சினையா, இலட்சியமா, யோகமா என்பது பெரிய கேள்வி. அவற்றைக் கீழ்க்கண்டவாறு கருதலாம்.

  1. நான் பெண் என்பதால் என் பேச்சு எடுபடாது. பேசாமலிருப்பது நல்லது.
  2. அன்னையை அறிவதால் நினைப்பவை பல நடப்பதால், அதை முழுவதும் நடத்திக்கொள்ளலாம்.
  3. எதுவானாலும், நானே காரணம் என்பதால், என்னை மட்டும் திருத்துவதே முறை.
  4. நான் சொல்வதை ஒரு பிள்ளை கேட்டால், அதைப் பூர்த்தி செய்ய அடுத்தவர் ஒத்துவர மாட்டேன் என்கிறார்.
  5. என்ன செய்ய முடிந்தாலும் முடிவாக அவரவர் பாணியிலேயே அது முடியும்.
  6. கணவர் சுயநலமி, எதையும் தமக்குச் சாதகமாகக் கொள்வார். அன்னையையும் அப்படியே எடுத்துக்கொள்வார்.
  7. எவ்வளவு முயன்றாலும், அது என் - என் அகந்தையின் - சாதனைதானே.
  8. சரணாகதி உயர்ந்தது என்றாலும், என் சரணாகதிக்கு ஒரு எல்லையுண்டல்லவா?
  9. நடப்பதாக இருந்தால், இவ்வளவு நாள் நடந்திருக்க வேண்டாமா?
  10. இன்று நான் காண்பதே அதிகபட்சமன்றோ?
  11. மனித முயற்சி ஒன்று இல்லையா?
  12. யோசனை மீது யோசனை செய்தால் வாழ்வே யோசனையாகுமன்றோ?
  13. இதுவரை உயர்ந்தது பெரியது. வந்து தவறியது மிகப் பெரியதல்லவா?
  14. தவறுகிறது என்றால் அதுவே அதிகபட்சமன்றோ?
  15. மேலும் நான் செய்யக்கூடியதில்லையா?
  16. அதையும் சரணம் செய்வது மேலில்லையா?
  17. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் புரிகிறதோ, அந்த அளவுக்குக் கேள்விகளும் எழுகின்றன.
  18. முடிந்தவரை அமைதியாக இருப்பது நல்லது.
  19. அமைதிக்குத் தூய்மை வேண்டாமா?
  20. தூய்மையான அமைதியைக் கருதினால் விரக்திதான் வருகிறது.

மேற்சொன்ன எண்ணங்களுடன் தாயார் வாழ்வை நடத்துகிறார். முடிவாக அவர் கண்டது "ஓர் எண்ணம் எழுந்தவுடன் அதை சமர்ப்பணம் செய்ய முடியும்வரை செய்வதுதான் அதிகபட்சம் செய்யக்கூடியது''.

கணவன் வந்தவுடன் வீட்டில் ஏதோ விஷயம் நடப்பதாக அறிந்து மனைவியை விபரம் விசாரித்தார். பெரியவன், சிறியவன் பேச்சு வார்த்தைகளை மனைவி கூறினார். கணவன் அலட்சியமாக, கேலியாக அதுவும் சிறியவனுக்கு நல்லதுதான் என்றார். மனைவி தம் தம்பியின் அழைப்பைக் கூறியபொழுது, முதலில் இவ்விஷயத்தை அறிந்தபொழுது நினைத்தது போலில்லாமல் கணவன் சற்று நிதானித்து கேலியை விட்டுவிட்டு இது அருளன்றோ என்றார். மேலும் அவர் உரையாடல் தொடர்ந்தது.

கணவன் - நான் முன் கேள்விப்பட்டபொழுது இச்செய்தி என் மனத்தைத் தொடவில்லை. இப்பொழுது அன்னையை நினைக்கும்படிச் செய்கிறது. உன் பக்தியால் இது ஏற்படுகிறது என நினைக்கிறேன். ஒரே விஷயம் பேசுபவரைப் பொருத்துப் பலன் தருகிறது.

இதைக் கேட்டவுடன் மனைவிக்குக் கணவனிடம் மேலும் அன்னையைப் பற்றியும் குடும்பத்திற்கு இதுவரை வந்து தவறிய பெரிய - பிரம்மாண்டமான - வாய்ப்புகளை மீண்டும் பெறலாம் எனக் கூறத் தோன்றிற்று. ஆனால் அந்த எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்யும் நினைவு வரவில்லை.

மனைவி - நமக்கு மிகப்பெரிய சந்தர்ப்பங்கள் வந்தன அல்லவா?

கணவன் - என்ன வந்தது? எப்பொழுது வந்தது? எனக்குத் தெரியாமல் வந்ததா?

கணவன் பேசும் பாணி மனைவிக்குத் தாம் சமர்ப்பணம் செய்ய மறந்ததை நினைவுபடுத்தியது. எண்ணம் தோன்றியவுடன் சமர்ப்பணம் செய்திருந்தால் இவர் இப்படிப் பேசமாட்டார் என நினைத்து பேசாமலிருந்துவிட்டார்.

கணவன் - ஆமாம், இப்பொழுது நினைவுக்கு வருகிறது. வந்தது உண்மைதான். அதனால் என்ன பலன், பலிக்கவில்லையே. பலிக்காததைப் பற்றிப் பேசுவானேன்.

மீண்டும் மனைவிக்குத் தன் கட்டுப்பாட்டை மீறி பதில் கூறத் தோன்றியது. கூறினாள்.

மனைவி - கொடுப்பது அன்னை, பலிப்பது நம் பவித்திரம்.

கணவன் - அருள் தானே செயல்படுவது என்று அடிக்கடி சொல்வாயே.

மனைவி - தானே செயல்பட்டாலும், நம் நம்பிக்கையால் செயல்படுகிறது.

கணவன் - உனக்கு அன்னை மீது நம்பிக்கை இருக்கிறது. நீ குடும்பத்திற்கு எதைச் செய்வதையும் நான் தடை செய்யவில்லை. செய், பார்ப்போம்.

பளிச்சென்று மனைவிக்கு விஷயம் புரிந்தது. தாம் குடும்பத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கும்வரை இவர் இப்படித்தான் பேசுவார். அந்த எண்ணத்திலும் அகந்தையில்லாவிட்டாலும், சுயநலம் கலந்துள்ளதால் கணவன் சவால் விடுகிறார். நாம் உள்ளபடி நல்லவராக இருந்தால், நல்லது தானே நடக்கும். நல்லது நடக்க வேண்டும் என தான் நினைப்பது எதனால்? நான் நல்லவளாக இல்லாததால் நல்லது நடக்கவேண்டும் என நினைக்கிறேன் என்பது விளங்கியது. போன கணவர் மீண்டும் வந்து அன்பாகப் பேசினார்.

தொடரும்... 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நல்ல நோக்கத்துடன் செயல்படுவது சமர்ப்பணம்; இறைவனுக்காகச் செய்வது நல்நோக்கம்.

இறைவனை நோக்கிச் செல்வது நல்ல நோக்கம்

****

Comments

05.எங்கள் குடும்பம் Para  3 

05.எங்கள் குடும்பம்
Para  3  -  Line  8       -   நிலையிருந்தது                 -     நிலையிலிருந்தது
Para 21 -  Line  5       -   கேலி க் குரலி ல்லை      -     கேலிக் குரலில்லை
Para 21 -  Line  6       -   அவன்team                          -     அவன் team
Para 23 -  Line  7       -    கேசெய்யலாம்                  -     கேலி  செய்யலாம்
Para 24  - Point 16     -   மேல்லையா                     -    மேலில்லையா
Para 26  - Line  5       -    முதலி ல்                           -     முதலில்
Para 26  - Line  6       -    போல்லாமல்                     -      போலில்லாமல்
Para 26  -  Line 6       -    கேலி யை                          -     கேலியை
Para 31  -  Line 3       -    பேசாமலி ருந்துவிட்டார்  -    பேசாமலி ருந்துவிட்டார் 



book | by Dr. Radut