Skip to Content

11.யார் சாதகர்?

"அன்னை இலக்கியம்''

யார் சாதகர்?

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

அழகான நாற்காலியொன்றில் பூ வேலைப்பாடுடைய தூய சேலையைத் தலைக்கு முக்காடிட்டுத் தழைய அணிந்திருந்த ஸ்ரீ அன்னை அகிலத்தின் அனைத்திற்கும் நானே பொறுப்பு என்பதாகக் கம்பீரமாக வீற்றிருந்தார். அவருக்குப் பின்புறம் ஒரே செடி கொடிகள். பூக்கள் அவரைத் தரிசிப்பதற்காகவே பிறந்தோம் என்பதுபோல் மலர்ந்து சிரிக்கின்றன. அருகில் சாதகர் ஒருவர் மலர்ப் பிரசாதங்களை வைத்துக் கொண்டு நிற்கிறார். ஸ்ரீ அன்னை நளினமான தம் நீண்ட பொற்கரத்தால் தன்னிடம் தலைவணங்கும் பக்தனை ஆசிர்வதிக்கிறார். உடன் மலர்ப்பிரசாதம் வழங்குகிறார். வழங்கும்போது முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார். எத்தனை அழகு? ஒரு முறை இதனைக் கண்டவர் வேறெதையும் காண ஆசைப்படமாட்டார். உலகத்தின் தூய்மை, மென்மை, தாய்மை யாவும் ஒருங்கே அங்கு ஆட்சி புரிந்ததை உள்ளே உணர்ந்தான். அவரைக் கண்டவுடன் யுகயுகமாய் அறிமுகமான அன்புத் தாயைக் காண்பதாக உணர்ந்தான். அவரும் இவனை அந்நியமில்லாது பார்த்து அருள் வழங்கினார். நலமாக இருக்கிறாயா? என்பது போன்ற பார்வை பார்த்தார். நானிருக்கிறேன் என்பதுபோல் சிரித்தார். வாழ்நாளிலேயே முதன் முறையாக உண்மை அன்பைக் கண்டான். இதுதான் தான் நாடி வந்த அன்பு என்றது உள்ளுணர்வு. இவ்வாறு இவனை இங்குக் கொண்டு செலுத்துவதற்காக இறைவன் அனுப்பியவர்கள்போல் இவனை இங்கு அழைத்து வந்தவர்கள் சென்றுவிட்டனர். செல்லும் போது இவனையும் அழைத்தனர். ஆனால் இவன் அவர்களுக்கு மிகுந்த நன்றி கூறி, இனி என் வாழிடம் இதுவே. என் குறிக்கோள் அன்னையே. அவர்க்கே நான் என்னை அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டான்.

அன்னையிடம் நிரந்தரமாய்த் தங்க போலித்தனமான அன்பும், பணிவும் போதாது. தூய அன்புடன் அவரை ஏற்பவர் பொறுப்பை அவர் ஏற்கிறார் என்ற செய்தியை யாரோ யாருக்கோ சொல்லும்போது அசரீரிபோல் கேட்டுணர்ந்தான். பயன் கருதாது கிடைத்த வேலையை நேர்மையுடன் திருத்தமாகச் செய்தான். இவனுடைய இந்தச் செயல் இவனை ஓர் அன்னை அன்பரிடம் அறிமுகப்படுத்தியது. இவர் கட்டட வேலை ஒப்பந்தக்காரர். இந்தச் சிறுவனை தாம் சிற்றுண்டி உண்ணுமிடத்தில் சந்தித்தார். அநாதையான இவனைத் தம் வீட்டில் தங்கிக் கொள்ளச் சொன்னார். இவன் வீட்டில் தங்கும் நேரம் இரவு மட்டும்தான். பகலில் சிறுசிறு வேலைகளுக்குப் போவான். தவறாது ஆசிரம வாயிலுக்குச் சென்று நீண்ட நேரம் தவம்போலக் காத்திருப்பான். மாலையில் தவறாது அன்னை காரில் செல்வதைக் கண்டான். பிறகுதான் இவர் டென்னிஸ் விளையாடச் செல்வதைக் கண்டறிந்தான். விளையாட்டு மைதானத்திற்கு எதிரேயுள்ள நாந்தெய்யில் (கட்டடத்தில்) டென்னிஸ் விளையாடச் செல்வார். இதை அறிந்தது முதல் முற்பகல் வேலைகளை முடித்துவிட்டு சரியாக அன்னையின் கார் கட்டட வாயிலுக்கு வருமுன் இவன் வந்து நின்றுவிடுவான். ஏனெனில் கார் நின்றதும் கணப்பொழுதில் இறங்கி விரைந்து சென்றுவிடுவார். அப்போது அவர் பார்வை இவன்மீது படும். புன்சிரிப்புடன் கூடிய நட்புணர்வான பார்வை அது. உன்னை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன் என்பதுபோல உணர்வான். இந்த அந்தரங்கமான அன்பு மற்றவர்களால் கண்டுகொள்ள முடியாது. திடீரென ஒரு நாள் கார் நின்றதும் ஓடிவந்து கதவைத் திறக்க வந்தான். டிரைவர் குறுக்கிட்டு அவனைத் தடுக்க முயன்றபோது அவனைத் தடுக்க வேண்டாம் என்பதுபோல் சைகை செய்தார். அதேபோல் திரும்பவந்து காரில் ஏறிக்கொள்ளும் முன்பும் ஓடிவந்து கதவைத் திறந்து அன்னை வண்டியில் அமர்ந்தவுடன் கதவை மென்மையாக மூடிவிட்டு நிற்பான். இதை அன்னைக்குச் செய்யும் பெருந்தொண்டாக அகமகிழ்ந்தான். அன்னையைத் தரிசன நேரத்தில் மட்டுமே வரிசையில் நின்று முறையாக தரிசிக்க முடியும். எல்லா நேரங்களிலும் எல்லோரும் எளிதாய் அவரை நெருங்கிவிட முடியாது. ஆனால் யாரென்றே அறியாத இந்தச் சிறுவன் திடீரென வந்து இந்த ஊமை நாடகம் நடத்தியது டிரைவருக்கு வியப்பூட்டியது. எந்தப் புறச்சூழலையும் சாராது, சரியான ஆன்மீக மனப்பான்மையுடன், அன்னையுடன் அகத்தொடர்பை உண்டாக்கிக் கொள்வதே முக்கியமான விஷயம் என்பதை ஸ்ரீ அரவிந்தர் அடிக்கடி கூறுவாராம். இந்நிலை இச்சிறுவனுக்கு இயல்பாய் அமைந்திருந்ததே இதன் சூட்சுமம். தன்னைக் கொடுப்பதே இறைவன் மீதுள்ள அன்பு. அதில் கோரிக்கை இருக்காது, அது பணிவும், சமர்ப்பணமும் நிறைந்ததாக இருக்கும். அது உரிமை கோராது. நிபந்தனை விதிக்காது. பேரம் பேசாது, பொறாமை, கர்வம், கோபம் ஆகிய மூர்க்கத்தனங்களில் இறங்காது. ஏனெனில் இவையெல்லாம் அந்த உண்மை அன்பில் இல்லை. இந்த அன்பிற்குப் பதிலாக பராசக்தி அன்னை தன்னையே கொடுக்கிறாள்.

இத்தகைய அன்புடன் அவன் அச்செயலைச் செய்தான். இதற்குப் பரிசாகவே அன்னையும் புன்னகைக்கிறார். இந்தப் புன்னகை ஒருவனை மேன்மேலும் புனிதப்படுத்துவது.

தொடரும்...

 


****

Comments

11.யார் சாதகர்? Para  1  - 

11.யார் சாதகர்?
 
Para  1  -  Line  1  -  நாற்காயொன்றில்    -   நாற்காலியொன்றில்



book | by Dr. Radut