Skip to Content

11. அன்னை இலக்கியம் - புலன்களுக்குப் புலப்படாதது

"அன்னை இலக்கியம்"

புலன்களுக்குப் புலப்படாதது

இல. சுந்தரி

பக்கத்து வீட்டு லட்சமி படித்த பெண். வேலை பார்க்கின்றவள். சிறந்த அன்னை பக்தை. எனவே அவள் ஸ்ரீ அன்னையின் திருவுருவப் படம் ஒன்றைக் கொடுத்து, "இதைக் குழந்தையிடம் கொடுத்து வையுங்கள். இவரே அவளுக்குத் துணையிருப்பார்'' என்று கூறினாள்.

ராமையாவும் குழந்தையைச் சமாதானப்படுத்த வேறு வழியின்றி, 'இதுவும் தெய்வச் செயல்' என்று புரியாமலேயே படத்தைக் குழந்தையிடம் கொடுத்தார்.

குழந்தையின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. மிகுந்த பரவசமானாள். கருணை பொங்கும் சிரிப்புடன் கம்பீரமாய்க் காட்சி தரும் தன் பாட்டியைக் கண்டு பெருமிதம் கொண்டாள் சிறுமி. அந்தப் படத்திலுள்ள தன் பாட்டியுடன் பேசி மகிழ்ந்தாள். அந்தத் தெய்வீகப் பாட்டியின் வரவிற்குக் காத்திருந்தாள்.

ஒவ்வொரு நாளும் தன் கனவில் பாட்டியார் வந்து தன்னை வருடிக் கொடுப்பதை அனுபவித்தாள். சொல்லிக் கொடுப்பதைக் கற்றுக்கொண்டாள். வீட்டின் பொருள்களைத் தன் பிஞ்சுக் கைகளால் இவள் ஒழுங்கு செய்வதைக் கண்ட ராமையா, "என்னம்மா செய்கிறாய்?'' என்பார்.

"ஒழுங்காகப் பொருட்களை வைக்க வேண்டும் என்று கனவிலே பாட்டி சொன்னாங்களே, அதைத்தான் செய்கிறேன்'' என்பாள்.

இன்னும் இதுபோல் எத்தனையோ. பாட்டியின் நினைவு குழந்தையை நாளுக்கு நாள் அழகுற வளர்த்தது ராமையாவிற்கு வியப்பூட்டியது.

சப்தமிட்டுப் பேசக்கூடாது என்பாள். பொருள்களைக் காலால் இடறக்கூடாது என்பாள். குப்பையை வீட்டில் போடக்கூடாது என்பாள். சட்டை சிறிது அழுக்கானாலும் சுத்தம் செய்யவேண்டும் என்பாள்.

மேல்நாட்டுப் பாட்டியைச் சிறுமி கற்பனை செய்கிறாள் என்று ராமையா நினைத்துக் கொண்டார்.

லட்சுமியோ, அன்னையின் சட்டங்களைக் குழந்தை கடைப்பிடிப்பது கண்டு மகிழ்ந்தாள்.

இவையேதுமறியாத குழந்தை தன் பாட்டியின் அன்பில் தன்னை முற்றிலுமாகக் கொடுத்திருந்தாள்.

ஒரு நாள் பாட்டியாரிடமிருந்து இவளுக்கு நிறைய உடைகள், பரிசுப் பொருட்கள் யாவும் வந்தன. ஆனால் அதில் பாட்டியின் முகவரியில்லை. எல்லாம் ஏதோ மாய மந்திரம் போலிருந்தது. உண்மையில் அதை அவள் பாட்டியே அனுப்பியிருந்தார்.

திடீரென்று ஒரு நாள் நாகரீகமாய் உடையணிந்து இனிய சுபாவத்துடன் மேனாட்டு இளம் பெண்ணொருத்தி வந்தாள். இவளைப் பற்றி விசாரித்தாள். ராமையாவுக்கு மகிழ்ச்சி ஒரு புறம், வியப்பு ஒரு புறம். ஒன்றும் புரியவில்லை. விரைந்து சென்று லட்சுமியை அழைத்து வந்தார். லட்சுமி வந்திருந்த பெண்ணிடம் இனிய முறையில் உரையாடினாள். வந்திருந்த பெண் தமிழ் கலந்த ஆங்கிலம் பேசினாள். தான் அமிர்தாவின் பாட்டியார் செய்த ஏற்பாட்டின்படி அவளை அழைத்துச் செல்ல வந்திருப்பதாய்க் கூறினாள்.

ஒரே குழப்பம். இதை எப்படி நம்புவது? அவள், அமிர்தாவின் பாட்டியார் மருத்துவமனையில் இருந்தபோது தன்னுடன் இவள் சேர்ந்திருக்கும்படி ஒரு புகைப்படம் எடுக்கச் செய்து, அத்துடன் இவள் வசம் குழந்தையை ஒப்படைக்குமாறு கடிதமும் எழுதி அனுப்பியதாகக் கூறினாள். அது இவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இவள் தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, தன் பெயர் மீரா என்பதையும், தான் ஆரோவில்லில் வசிப்பதையும், வருடத்தில் ஒரு முறை அமெரிக்கா சென்று வருவதையும், அப்படிச் சென்ற சமீபத்தில்தான் அமிர்தாவின் பாட்டியாரைச் சந்தித்த விபரமும் கூறினாள். இறுதியில் அவள் பாட்டியும் இறந்துபோன செய்தியை எப்படிக் குழந்தையிடம் சொல்வது? அதைச் சொல்ல வேண்டாம் என்று முடிவாயிற்று.

"குழந்தை எங்கே? அவளைக் கூப்பிடுங்கள்'' என்றாள் மீரா.

அதற்குள் அவள் பெயரைக் கேட்டு வியப்படைந்தாள் இலட்சுமி. "உங்கள் பெயர் மீராவா? இது இந்தியப் பெயராயிற்றே?'' என்று அன்பும் ஆச்சர்யமுமாய்க் கூறினாள்.

"நான் மேல்நாட்டுப் பெண்தான். என் பெற்றோர் அன்னை மீது கொண்ட அன்பால் எனக்கு வைத்த பெயர் இது. சிறு வயது முதல் அன்னையைப் பற்றிக் கேட்டும், படித்தும், அவரது கோட்பாடுகளில் பெரிதும் நாட்டம் கொண்டு ஆரோவில்லுக்கு வந்து தங்கிவிட்டேன்'' என்றாள்.

எல்லாம் அன்னைமயமாவதைக் கண்டு லட்சுமி மகிழ்ந்தாள்.

வெளியே விளையாடச் சென்றிருந்த அமிர்தாவை அழைத்து வந்து மீரா முன் நிறுத்தினாள் லட்சுமி.

சிறுமி, மீராவிடம் விரைந்து சென்று, "ஆண்ட்டி, நீங்க வந்திட்டீங்களா? என்னை என் பாட்டியிடம் அழைத்துப் போவீர்களா?'' என்றாள்.

அறிமுகமானவர்களிடம் பேசுவதுபோல் இவள் பேசுவது எல்லோர்க்கும் வியப்பளித்தது.

தொடரும்...

*****



book | by Dr. Radut