Skip to Content

08. அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

அனந்தம், அபரிமிதம், அதிகபட்சம்

நமது அதிகபட்சத் திறமை நம் வாழ்வில் பயன்பட்டால், பலன் அதிகபட்சமாகும். அது அபரிமிதமன்று. அபரிமிதம் அதிக பட்சத்தைக் கடந்தது. அபரிமிதம் அனந்தமன்று. அனந்தம் என்பது முடிவற்றது.

 • அதிகபட்சம் என்பது நம் திறமைக்கு அதிகபட்சம்.
 • அபரிமிதம் என்பது தேவையைக் கடந்தது.
 • அனந்தம் என்பது இவையிரண்டையும் கடந்த முடிவில்லாத பலன்.

ஆன்மீகரீதியாக உயர்ந்தது என்பது பிரம்மம். தாழ்ந்தது என்பது உடல். இன்று உடல் உழைத்து சம்பாதிக்கிறது. அதிகபட்சம் சம்பாதிக்க அறிவைப் பயன்படுத்துகிறது. ஒரு பில்லியன் டாலர் என்பது 4500 கோடிப் பணம் ரூபாய். உலகில் 450 பேர் இந்த அளவு சொத்துள்ளவர்கள் என்று கணக்கெடுத்துள்ளார்கள். இவர்கள் அறிவால் உழைத்துச் சம்பாதித்தவர்கள். அறிவிலிருந்து பிரம்மத்திற்கு இடையே 9 நிலைகள் உள்ளன. மேலே செல்வது 9 நிலை, இறங்கி வருவது மேலும் 9 நிலை.

பிரம்மம் உடலில் வெளிப்படுவது அனந்தமான அபரிமிதத்தை மனிதயத்தனத்தின் அதிகபட்சமாக நாம் அறிவோம்.

சாதனை நமது இலட்சியம். அபரிமிதமான பணம் சம்பாதிப்பது நம் சாதனையாக இருப்பது இலட்சியமானால், பணத்தைப் பற்றிய கருத்துகளை விளக்க வேண்டும். இந்த ஞானத்திற்குத் திறன் உண்டு. ஞானத்தைப் பெற்றவர் திறனாக மாற்ற மனத்தாலும், ஆத்மாவாலும் உழைக்க முன்வர வேண்டும்.

ஞானம் எப்படிப் பலனாக மாறும்? திறனால் பலனாகும். அறிவு என்பது ஞானம், உறுதி என்பது (will) திறன். உறுதிக்கும் அதனுள் புதைந்துள்ள ஞானம் உண்டு. ஞானத்திற்கு உறுதி பணிந்து செயல்பட்டால், செயல்பாடு ஆகும். அது பாடாவதியாகவும் ஆகும். விவரம் தெரியாமல் உழைப்பது. விவரம் தெரிவது திறமை (skill). அது பாடு என்பதாகாது, வேலையாகும். வேலை தெரியாதவன் திணறுவதை நாம் பார்க்கிறோம். வேலை தெரிந்தவன் ஆர்வமாக, அழகாக வேலை செய்வது பார்க்க இனிக்கும். வேலையை நூறு, ஆயிரம் பாகமாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் செய்யக் கற்றுக் கொள்வது உறுதியான ஞானம் பெறுவதாகும். இது ஞானம் பலனாக மாறும் பாதை. பிரம்மம் உடலில் எப்படி வெளிப்படும், அது எப்படிப் பலனாக மாறும், அது பணமாக எப்படி மாறும் என்ற ஞானத்தை விளக்கமாகவும், விபரமாகவும் இந்நூலிலிருந்து பெறலாம்.

அணுவினுள் அகிலம் முழுவதும் பரவும் சக்தியுண்டு. இதை நேரடியாக, வேறு சிரமமில்லாமல் வெளிப்படுத்தினால், உலகில் சக்திக்குப் பஞ்சமில்லை. (Solar power) சூரிய வெளிச்சம் மின்சாரமாகிறது என்பது ஓரளவு நடைமுறையில் வந்துள்ளது. (Wind power) காற்று மின்சாரமாகிறது என்பதும் ஓரளவு நாம் எங்கும் காண்கிறோம். இவை முழுவதும் நடைமுறைக்கு வந்தால் உலகில் (power) சக்திக்குப் பஞ்சம் உண்டா?

பண்டமாற்றாக ஆரம்பித்தது பணமாயிற்று. பவுன் பணம், பொருள் பணம், currency பேப்பர் பணமாயிற்று. தபால், தந்தி வந்தபொழுது பணத்திற்கு அதிக மதிப்பு வந்தது. விளம்பரம் வந்தபொழுது பேப்பர் விலை குறைந்தது, T.V செலவில்லாமல் வருகிறது. ஒரு நியூஸ் பேப்பர் அடக்கவிலை ரூ.100/-. அதை 3 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். மீதி விலையை விளம்பரம் தருகிறது. இன்ஸுரன்ஸ் மூலம் நாம் சிறு பிரீமியம் கட்டி, பெரிய தொகையைப் பெறுகிறோம்.

கம்ப்யூட்டர்போல் எது புதியதாக வந்தாலும், பொருள்கள் மலிவாகின்றன. அதாவது நமக்கு உபரியாகப் பணம் உற்பத்தியாகிறது. காற்றுபோல ஒரு காலத்தில் பணம் அபரிமிதமாகும். அனைவருக்கும் அது கிடைக்கும். இது சமூகம் பெற்றுக்கொண்டு வரும் திறன். இன்றே அதைத் தன் வாழ்வில் அபரிமிதமாக அனுபவிக்க மனிதன் முன்வரலாம்.

இது யாருக்குப் பலிக்கும்?

பலிக்க என்ன செய்யவேண்டும்?

பலிக்கும் வகை எது? நாம் செய்யக்கூடியது என்ன? நமக்கே பலிக்குமா? நம் போன்றவர் எவருக்காவது பலிக்குமா? என்ற கேள்விகட்கு இந்நூலில் பல இடங்களில் பதில் வரும். முடிவில் இதை விளக்கமாக எழுதுகிறேன். அதன் சுருக்கம்,

 • கை வேலையில் (skill) திறமை சிறந்தவர் - உடல்.
 • பிறர் வாழ மனம் விழைபவர் - உயிர்.
 • பிரம்மத்தை ஞானமாகப் பெறுபவர் - மனம்.
 • செயலில் பிரம்ம ஞானத்தை சத்தியமாக வெளிப்படுத்துபவர்,

ஆகியோருக்குத் தங்கள் வாழ்வில் அபரிமிதமான செல்வத்தை உற்பத்தி செய்யும் திறன் பலிக்கும்.

 • மேல்நாட்டார் செயலில் பிரம்மத்தைக் கண்டவர், உண்மை மட்டும் பேசுபவர்.
 • அவை நம்மிடம் வித்தாக உள்ளன. அகத்திலும், புறத்திலும் அவ்வுண்மை வெளிப்படும்படி, சொல்லும், செயலும் அமைய வேண்டும்.

மனத்தின் சிருஷ்டித் திறன் - பணம்

உலகம் மனத்தால் சிருஷ்டிக்கப்பட்டது, அகந்தையால் சிருஷ்டிக்கப்பட்டது என்பவை இந்திய ஆன்மீக மரபு. அதனால் வாழ்வு மாயை என்றும் கூறுகின்றனர். உலகத்தை சிருஷ்டித்தது சத்தியஜீவியம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். மனம் சத்தியஜீவியத்தின் பகுதி (subordinate power). சத்தியஜீவியத்தில் ஜீவியம் இரண்டாகப் பிரிகிறது. ஞானம், உறுதி என்று பிரிகின்றது. ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி பிறக்கிறது. அதுவே ப்ண்ச்ங் வாழ்வு எனப்படும். மனம் வாழ்வை உற்பத்தி செய்தது. பணம் வாழ்வில் கடுகளவான பகுதி. வாழ்வை உற்பத்தி செய்த மனம் அதன் பகுதியான பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.

மனத்தில் நல்லதும், கெட்டதும் உண்டு. பணத்தை முடிவில்லாமல் மனம் உற்பத்தி செய்யும் என்பதை நாம் இங்கு எடுத்துக் கொண்டுள்ளோம். மனமே இரு பகுதிகளாக இருப்பதால், மனம் நல்ல பணத்தை உற்பத்தி செய்வதுபோல், கெட்ட பணத்தையும் உற்பத்தி செய்யவல்லது. நடைமுறையில் அவை கலந்தே காணப்படுகின்றன. பணம் நல்லதாக மட்டுமோ, கெட்டதாக மட்டுமோ இருப்பதில்லை. நல்லதும், கெட்டதும் கலந்த மனிதனால் சம்பாதிக்கப்பட்டதே பணம்.

மனத்தின் திறன்கள் பல. பணத்தை உற்பத்தி செய்வது மட்டும் நமக்குரியது. இக்கோணத்தில் மனம் எப்படியிருக்கிறது, எப்படியிருந்தால் பணம் உற்பத்தி செய்ய உதவும் என்பதை,

 • அடுத்தவர் எவரானாலும் மனிதன் அவர் நிலை உயரப் பொறுக்கமாட்டான் என்று கூறலாம்.
 • பிறர் பெருவாழ்வு வாழ மனம் விழைவது பணத்தை மனம் உற்பத்தி செய்ய உதவும். 

இன்று சமூகம் தனிமனிதன் நல்வாழ்வு வாழ பல துறைகளில் பாடுபடுகிறது. எந்தக் காலத்திலும் சமூகம் தனிமனிதனுக்கு உதவியாகயுள்ளது. கடினமான வாழ்வைக் கடுமையற்ற வாழ்வாக மாற்றியுள்ளது. விலங்குபோல் நாடோடியாகத் திரிந்த மனிதனை ஊரும், உறவுமாக வாழ வைத்தது. வேட்டையாடியும், காய்கனியைப் புசித்தவனுக்கும் விவசாயம் ஏற்பட்டது. தொடர்ந்து மனிதனுக்கு சமுதாயம் சேவை செய்கிறது. மருந்து மூலம் வியாதியிலிருந்து விடுதலையளித்ததுபோல் இன்று மனிதன் அனுபவிக்கும் அத்தனை சௌகரியங்களையும் அவனுக்கு அளித்தது சமூகம். சமூகம் மனிதனுக்குச் செய்த சேவைகளில் முக்கியமானவை பல. அவற்றுள் பணம் முக்கியமானது.

மனிதன் வாழ சமூகம் நல்லெண்ணம் கொண்டுள்ளது.

இந்த நல்லெண்ணத்தின் அம்சம் பணம், பணம் நமக்குச் செய்யும் சேவைகள். நாளுக்கு நாள் பணம் பெருகுகிறது. பெருகும் பணம் பெருகி வரும் நல்லெண்ணம். காலத்தை வென்று, கர்மத்தை வென்று, நல்லெண்ணமாக உருவம் பெற்றது பணம். பணம் நம் வாழ்வில் பெருக வேண்டுமானால்,

அனைவரும் தொடர்ந்து உயர வேண்டும் என்ற நல்லெண்ணம் நம் மனத்தில் பெருக வேண்டும். அது அடிப்படையான நிபந்தனை.

இன்று பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களா என்ற கேள்வி மனத்தில் எழும். இது வேறு கேள்வி. இதனுள் வேறு பல அம்சங்கள் அடங்கியுள்ளன. ஏனெனில் பணத்தைப் பல வழிகளிலும் சம்பாதிக்கலாம். தவறாகவும் சம்பாதிக்கலாம். பணத்தை நல்ல முறையாகச் சம்பாதிப்பது மட்டும் நமக்குரிய கருத்து. இக்கேள்விக்குரிய பதிலின் சுருக்கத்தை மட்டும் கூற முடியும்.

எவர் அதிகப் பணம் சம்பாதித்தாலும் பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பெரிய சௌகரியமில்லாமல் சம்பாதிக்க முடியாது.

மனிதன் சுயநலமானவன். அவன் சுயநலத்தை விட்டு, பிறர் நலம் பேணுவது finite மனிதன் infiniteஆக மாறுவதாகும். ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய மிகப்பெரிய இரகஸ்யத்தைக் கூறுகிறார். அது ஆன்மா ஜடத்தை ஆளும் இரகஸ்யம். சமூகத்தில் கிராக்கியான பண்டங்கள் பல. நாளாக ஆக கிராக்கியான பண்டங்கள் அதிகமாகக் கிடைக்க சமூகம் வழி செய்தது. 1952 எலக்ஷனில் சுதந்திரம் பெற்ற காங்கிரஸ் தோற்றதற்கு அரிசி கிடைக்காததே காரணம். "ஆறு அவுன்ஸ் சர்க்கார் அழிக'' என்று மக்கள் காங்கிரஸைத் தோற்கடித்தனர். இன்று நெல்லும், அரிசியும், கோதுமையும் உபரியாகக் கிடைக்கின்றன. 1970க்கு முன் கார் வாங்க முன்பணம் கொடுத்து காத்திருக்க வேண்டும். இன்று கார் வாங்க லோன் கொடுக்கும் பாங்க்குகட்கு லோன் பெற ஆளில்லை. ஒரு காலத்தில் கிராக்கியான சரக்கு, பிற்காலத்தில் உபரியாகக் கிடைப்பதுபோல்,

இன்று கிடைக்காத பணம் எதிர்காலத்தில் காற்று, தண்ணீர், நெல்போல் அபரிமிதமாகக் கிடைக்கும்.

தொடரும்...

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தாழ்ந்தது, உயர்ந்தது என்பவை அடிப்படையில் ஒரே செயல்களாகும். நம் தாழ்ந்த உணர்ச்சியை, உயர்ந்த ஆர்வமாக நாம் கருதும்பொழுது மனம் பொய்யை மேற்கொண்டு வக்கிரமாகப் போகிறது.
 
தாழ்ந்ததும் உயர்ந்ததும் இறைவனுக்கு சமமான செயல்களாகும்.book | by Dr. Radut