Skip to Content

07. சிறு குறிப்புகள்

“சிறு குறிப்புகள்”

எனக்கு வேலையில்லை, பிரார்த்தனை பலிக்கவில்லை

"கணவன் வேலையில்லாமலிருக்கிறார். வேலை கிடைக்கப் பிரார்த்தனை செய்தால், பலனில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை என்றால், நிதானமாகப் (equality) பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்ற பதில் எனக்கு எப்படிப் பயன்படும்? வேலை கிடைத்தால் தானே நிதானம் வரும். நிதானம் வந்தால் வேலை வரும் என்றால் எப்படி? பிரார்த்தனை பலிக்கவில்லை எனில் நம்பிக்கை போதாது என்றார். சென்ற முறை வேலை இல்லாத பொழுது 5 மாதம் கழித்துக் கிடைத்தது. 1 வருஷம் வேலையிருந்தது. மீண்டும் போய்விட்டது. மார்க்கெட்டே சரிவான நேரம். எனக்கு இதற்கு மேல் வழியில்லையா?''

இது பலரும் கேட்கும் கேள்வி. இது சம்பந்தமாக அன்னை கூறியவை,

  • இனி போக வழியில்லை என்ற நேரமே, என்னை அழைக்கப் பொருத்தமான நேரம். நான் தவறாது, உடனே வருவேன்.
  • உண்மையான பிரார்த்தனை தவறாது பலிக்கும்.
  • ஓர் அன்பனுக்கு அன்னையால் பிரார்த்தனை மூலம் வேலை கிடைத்தால், மார்க்கெட் அதன் மூலம் மாறிவிடும்.
  • நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருந்தாலும், ஆழ்ந்த பிரார்த்தனைக்கு அன்னை, மார்க்கெட்டில் உள்ள (exceptional circumstances) ஏதாவது விசேஷ சந்தர்ப்பம் மூலம் பதில் தருகிறார்.
  • 3 நாள் இடைவிடாத பிரார்த்தனை பலிக்கவில்லை என்று இதுவரை எவரும் கூறியதில்லை.

சுமார் 1000 பேர் நம்மூரில் வேலையில்லாமலிருந்தால் அவருள் 10 அல்லது 20 பேராவது நிதானமாக, அமைதியாக நிலைமையைச் சமாளிப்பார்கள். மற்றவர்கள் பல அளவில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். வாழ்வில் இந்த நிதானமான 10 அல்லது 20 பேர் பெறுவது என்ன?

  • மற்ற 990க்குள்ள அவதியிருக்காது. நிதானமாகப் பிரச்சினையை அனுபவிக்கலாம்.
  • ஒரு 50 அல்லது 100 வேலை உற்பத்தியானால், அந்த நிதானமான 10 அல்லது 20 பேருக்கு முதலில் கிடைக்கும் எனக் கூற முடியுமா?
    • அந்தப் புது வேலைகளில் ஆர்ப்பாட்டம் செய்த சிலர், அழிச்சாட்டியம் செய்த பலர், சிபார்சுள்ளவர்களுக்குக் கிடைக்கும். நிதானமானவரில் ஓரிருவருக்கும் கிடைக்கும். இது வாழ்வு.
    • அன்னையிடம் நிதானமாக உள்ள அனைவருக்கும் தவறாமல் வேலை கிடைக்கும்.
    • அன்னைக்கும், வாழ்வுக்கும் இந்த வித்தியாசம் எப்பொழுதும் உண்டு.
  • வேலையில்லாவிட்டால், குடும்பம் எப்படி நடக்கும்? வேலை கிடைக்கும் வரை என்ன செய்கிறோம்? சிறிய வேலையை மனக் கசப்போடு ஏற்கிறோம். முகத்தைச் சுளிக்கும் உறவு, நண்பரிடம் அதைப் பொருட்படுத்தாது போய் உதவி கேட்கிறோம்.
  • மனம் கசப்பதும், மற்றவர் தரும் அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளவும் எடுக்கும் முயற்சியை, பிரார்த்தனைக்குச் செலுத்தினால், தவறாது வேலை கிடைக்கும்.
  • நிலைமையைச் சமாளிக்க எடுக்கும் முயற்சியை, பிரார்த்தனைக்கு செலவு செய்வதில்லை.

வாழ்வா, அன்னையா என்று வரும்பொழுது, நாம் வாழ்வுடன் சேர்ந்துகொண்டு ஆர்வமில்லாமல் பிரார்த்தனை செய்வதால் பலனில்லை. வாழ்வை நம்புவதற்குப் பதிலாக, அன்னையை நம்பினால் பிரார்த்தனை தவறாது, தவறவே தவறாது.

******



book | by Dr. Radut