Skip to Content

06. அன்பர் உரை

"அன்பர் உரை"

மனத்தால் செய்யும் வேலை மதர் செய்யும் வேலை

(வேலூர் தியான மையத்தின் ஐந்தாமாண்டு துவக்க விழாவில் 17.02.02 அன்று திருமதி உஷா ராம்தாஸ் நிகழ்த்திய உரை).

அன்னை வேலையைப் பற்றிப் பேசும்பொழுது, நமக்குப் பிடித்தமான வேலை வேண்டும் எனக் கேட்கக் கூடாது. இருக்கும் வேலையை ஆர்வமாகச் செய்ய வேண்டும் என்கிறார். இப்படிச் செய்யும் வேலை இறைவனுக்கு அர்ப்பணமான வேலை. கடமையாகச் செய்ய வேண்டிய வேலை கசப்பாக இருக்கும். கசப்பான வேலையை ஆர்வமாகச் செய்வதுதான் யோகம் எனில் யோகம் கசப்பானது எனப் புரியும். சொல்வதை மேலெழுந்தவாரியாக எடுத்துக் கொண்டால் கசப்பாக இருக்கும். அதன் தாத்பர்யம் என்ன என்று மனம் புரிந்து கொள்ள முயன்றால், கசப்பு என நாம் அறிவது, கடமையென உணர்ந்தால், கடமையைச் செய்ய ஆர்வமிருப்பதால், மனம் பெறும் தெளிவு, கசப்பை விலக்கும். அந்த வேலையைக் கசப்பின்றிச் செய்யலாம். அதன் உட்கருவை மனம் உணர்ந்தால்,

இனி எந்த வேலையிலிருந்தும் கசப்பு அடியோடு விலகும்.

வேலையிலிருந்து கசப்பு விலகினால், மனித வாழ்வு, தெய்வீக வாழ்வுக்குரிய தகுதிகளில் ஒன்றைப் பெறும். இதுவரை விவரம் புரியாமல் கணக்கு என்றால் கசப்பாக இருந்தது. மார்க்கே வாராது. நான் மனம் மாறியபின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. முதலில் ஆசிரியர் மாறினார். பிறகு புரியாத சில இடங்கள் புரிந்தன. நான் கடினம் என்று கைவிட்ட விஷயங்கள் கடினமன்று என்றாயிற்று. நாளாவட்டத்தில் அவை சுலபமானதுடன், நான் மற்ற நண்பர்கட்கும் கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். இப்பொழுது கணக்குக் கசப்பாகவோ, கடினமாகவோ இல்லை. மார்க் ஏராளமாக வருகிறது என்ற அனுபவம் மனம் மாறினால் ஏற்படுவதுண்டு.

தினமும் சுமார் $ 30,000 விற்கும் கடை. பிரதம சேல்ஸ்மேனுக்கு இந்த விஷயத்தைக் கூற முதலாளி முயன்றார். 20 சேல்ஸ்மேன் உள்ள கடை. ஒருவர் தினமும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் விற்பார்கள். அதற்குரிய கமிஷன் வரும். "இதுவரை நாம் நம் சாமர்த்தியத்தால் விற்றோம், இனி மனத்தால் விற்போம" என்றார் முதலாளி. இது சேல்ஸ்மேனுக்குப் புரியவில்லை. மற்ற நாடுகளில், வாடிக்கைக்காரர் மனம் குளிர நடப்பார்கள். எப்படி வாடிக்கைக்காரர் சந்தேகங்களைப் போக்குவது, அவரை எப்படித் திருப்திப்படுத்துவது என்பதே சேல்ஸ்மேன் பெற்ற பயிற்சி. முதலாளி அன்னை பக்தர். ஆரம்பத்திலேயே சேல்ஸ்மேன் முட்டுக்கட்டை போடுகிறாரே, இவரை எப்படி வாடிக்கைக்காரரிடம் அனுப்பி வெல்வது என்ற கேள்வி முதலாளிக்கு வந்தபொழுது, ஏன் நாம் இம்முறையை, சேல்ஸ்மேனிடம் கடைப்பிடிக்கக் கூடாது என நினைத்து, மாலை அவரைச் சந்திப்பதாகச் சொன்னார். அத்துடன், சேல்ஸ்மேனிடம் கூறவேண்டியதை அன்னையிடம் கூறினார். அடுத்த நிமிஷம் சேல்ஸ்மேன் "எப்படி எனக் கற்றுக்கொடுத்தால் நானும் பின்பற்றுகிறேன்" என்றார். இவரிடம் அன்னையைப் பற்றிப் பேசலாமா, பேசுவது சரியா என முதலாளி மனத்தால் வாதாடிக் கொண்டிருந்த பொழுது, "இவையெல்லாம் அன்னை முறைகளா? நீங்கள் அன்னை பக்தர் என நான் அறிவேன். பலிக்கிறது என்றால் எனக்கு அன்னை ஆட்சேபணையில்லை" என்றார். முதலாளிக்கு சந்தோஷம் வந்தாலும், அன்னையைப் பற்றி அவரிடம் பேசத் தைரியமில்லை. Jesus, God என்று பேசலாம். ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு வாடிக்கைக்காரரை திருப்திப்படுத்துவதைவிட அவர் மனதிலுள்ள தெய்வத்தைத் திருப்திப்படுத்துவது நல்லதன்றோ என்றார். முதலாளி அன்னையை விலக்கிப் பேசினாலும், சேல்ஸ்மேன், "அவர் மனதிலுள்ள அன்னை என்றே கொள்ளலாம்" என்றார். தைரியம் வந்ததால், முதலாளி கீழ்க்கண்டவாறு கூறினார்.

  • வாடிக்கைக்காரரைத் திருப்திப்படுத்துவோம்.
  • அதைவிட அவருடைய நியாய மனப்பான்மையைத் திருப்திப் படுத்துவோம்.
  • அடுத்து அவர் மனதிலுள்ள அன்னையைத் திருப்திப் படுத்துவோம்.
  • திருப்திப்படுத்துவோம் என்பதை அவருக்கேற்ப நடப்போம் என்று கூறலாம்.
  • இவையெல்லாம் உயர்ந்த முறைகள். அதிகப் பலன் தரும் என்றாலும், அத்தனையும் புறத்திற்குரியவை.
  • புறம் அகமாவது அதனினும் உயர்ந்த முறை.
  • புறம் அகமாவது எனில் வாடிக்கைக்காரரின் அன்னையை நாடுவதற்குப் பதிலாக, நம் மனதிலுள்ள அன்னையை நாடுவோம்.
  • சரக்கு விற்பதற்குப் பதிலாக, Good Morning என்று கூறி, நம் மனத்துள் சென்று, அங்குள்ள அன்னையில் லயிப்போம்.
  • இதற்கும் அடுத்த கட்டம் ஒன்றுண்டு. அதைப் பிறகு பார்க்கலாம், என்று முதலாளி கூறிவிட்டுப் போனார். அரை மணி கழித்து அந்த சேல்ஸ்மேன் முதலாளியைத் தேடி வந்து, "ஒருவர் $ 2000க்கு T.V. வாங்க வந்தார். நான் நீங்கள் சொன்ன முறையைக் கடைப்பிடிக்க விரும்பினேன். எதிரில் வாடிக்கைக்காரரை உட்கார வைத்துவிட்டு, "இவற்றை எல்லாம் எப்படிச் செய்வது?' என்று நான் திணறியபொழுது, அவர் என் திணறலைக் கண்டு, "நான் ஒரு சிறு பொருளுக்காக வந்தேன்' என என் தயக்கத்தைப் போக்க முனைந்தார். அவர் கேட்ட பொருளைக் காட்டினேன். விலை $ 2000 என்று கண்டார். பேரம் முடிந்துவிட்டது. நான் என் திணறலைவிட்டு வர அவகாசமில்லை. அவர் தாம் வீடு கட்டுவதாகவும், கட்டி முடிந்தபின் Home entertainment வேண்டும்; மீண்டும் வருகிறேன் என்றார். சற்று கழித்து அவற்றைப் பார்க்க விரும்பினார், காட்டினேன். சம்மதமாகப் பேசினார். அதன் விலை $ 250,000 என்பதால் என்னால் பேரத்தைச் சமாளிக்க முடியாது என உங்களை அழைத்துப் போக வந்தேன்'' என முடித்தார். முதலாளி போய் பேரத்தை முடித்தார். $ 50,000 அட்வான்ஸ் கொடுத்துவிட்டுப் போனார் வாடிக்கைக்காரர். மனதால் செய்வது மதர் செய்வது என்பது பெரிய முறை. அமைதியாக முறையை மனம் ஏற்றுக் கொண்டு நிதானமாகச் செயல்பட்டால், நடப்பதை நாம் நம்ப முடியாது.

இது யோகத்திற்குரிய முறை. சமர்ப்பணம், சரணாகதி எனப் பெயர். ஆரம்பிக்கும் முன் பலிக்கும் முறை. மேலும் ஒரு கட்டம் உண்டு என்றோம். அது என்ன? நாம் நம்முள்ளே சென்று அங்குள்ள அன்னையைத் தேடுவதற்குப் பதிலாக அன்னைக்குகந்த உள்ளம் உடையவரானால், நாம் தேடும் அன்னை மேல் மனத்தில் இருப்பதையும், அதன் கீழ் அன்னை தம்மை நம் ஜீவனில் பிரதிஷ்டை செய்திருப்பதையும் காணலாம்.

நாம் அன்னையைத் தேடாவிட்டால், அன்னை நம்மைத் தேடி வருவார். அதன்பின் பிரார்த்தனை தேவையில்லை. இந்த முறைகளை எந்த அளவில் பின்பற்றினாலும் நல்லது. முடிவான முறையை முதலாகக் கொண்டு, எல்லாச் சிறிய காரியங்களையும் அப்படிச் செய்வது யோகம்.

  • முக்கியமான காரியங்களில் இம்முறையை முடிந்த அளவு பின்பற்றினால், மனம் மாறுவது தெரியும். அன்னை பிரத்யட்சமாவார். காரியம் சிறப்பாக முடிந்தாலும், மறந்தே போகும்.
  • முக்கியமான காரியங்களில் இம்முறையை முடிவான கட்டத்தில் பின்பற்ற முயன்று வெற்றி பெற்று, பெற்ற வெற்றியைப் பூரணம் செய்வது ஆரம்பம்.
  • பின்னர் மற்ற சிறு காரியங்கட்கும் இவற்றைப் பின்பற்றலாம்.
  • காரியத்தின் பலனுக்குச் செய்தால் காரியம் நிச்சயம் பலிக்கும்.
  • காரியத்தைவிட, பலனைவிட, முறை முக்கியம் என்பது மேலும் சிறப்பு.
  • முறையைவிட வேலை பெரிது.
  • வேலையைவிட அன்னையை நாடுவது பெரியது.
  • பெரியதை நாடாத மனம் உயர்ந்த மனம். உயர்ந்த மனத்தை அன்னை நாடி வருவார்.

ரேடியோ ஸ்டேஷன் டைரக்டர் தம் நண்பருடன் வந்த அன்பருக்கு உபசாரமாகச் சொல்லவேண்டி, நீங்கள் AIRஇல் பேச வேண்டும். ஒரு பேச்சு எழுதிக் கொடுங்கள் என்றார். எழுதிக் கொடுத்த பேச்சு கிணற்றில் போட்ட கல் போலாயிற்று. அன்பர் அதை மறந்து தம் வேலையைச் செய்தபொழுது பிரபல ஆங்கிலப் பத்திரிகை நிருபர் அன்பரை அணுகி, "உங்கள் திட்டம் பற்றி அனைவரும் பேசுகின்றனர். எங்கள் பத்திரிகையில் அதைப் பற்றி எழுதுங்கள்" என்றார். எழுதியபொழுது, இக்கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கிறது. போட்டோ இரண்டு கொடுத்தால், அவற்றையும் பிரசுரிக்கிறோம் என பிரசுரித்தபொழுது ஊர் முழுவதும் இதே பேச்சு.

ரேடியோ ஸ்டேஷன் டைரக்டர் தம் நண்பரிடம் வந்து, "நான் உங்கள் நண்பரின் சொற்பொழிவைப் படித்தேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதனால் இதைச் சொற்பொழிவாக்குவதற்குப் பதிலாக உரையாடலாக மாற்ற விரும்பி எழுதியபொழுது, யாரை உங்கள் நண்பருடன் பேசச் சொல்லலாம் என்று நினைத்தேன். நானே உரையாட முடிவு செய்தேன" என்றார்.

அந்த ரேடியோ உரையாடல் இரண்டு பெரிய ஊர்களை அடியோடு மாற்றிவிட்டது. மேற்சொன்ன முறைகளைக் கடைப்பிடிக்காத நிலையில் ஏற்பட்ட பலன் இது. முறைகள் பலமானவை. கடைப்பிடிப்பது சிறப்பு.

  • அமைதியும், அன்பும் அன்னை.
  • சுத்தமும், சத்தமின்மையும், மெய்யும் அன்னை.

*****

 



book | by Dr. Radut