Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

எண் 700-710இன் விளக்கம் செப்டம்பர் 2000 இதழில் வெளியாகியுள்ளது.

  1. அகந்தையின் ஆயுள் முடிந்துவிட்டது. அது கரைய வேண்டும். அகந்தையின் வளர்ந்த நிலையான குடும்பம் கரைவதும் அவசியமாகும்.

    வரும் காலத்தில் அகந்தைக்கும், குடும்பத்திற்கும் வேலையில்லை.

    கர்வம், திமிர் என்பதை நாம் அகந்தை என்றறிவோம். உலகத்திலிருந்தும், பரமாத்மாவிலிருந்தும், ஜீவாத்மாவைப் பிரிப்பது அகந்தை என்கிறார். ஒருவர் அடிபட்டு விழுந்தால், நம்முடலில் வலிதெரிவதில்லை. ஏனெனில் அவனுடல், நம் உடலிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பிரிப்பது அகந்தை. சம்பந்தமில்லாத ஒருவர் வெற்றி நமக்கு சந்தோஷம் தருவதில்லை. ஏனெனில் அவனுடைய சந்தோஷம் வேறு, நம் சந்தோஷம் வேறு. இவற்றைப் பிரிப்பது அகந்தை. எதிரேயுள்ளவருடைய எண்ணம் நமக்குப் புலப்படுவதில்லை. புலப்படாமல் தடுப்பது அகந்தை. அகந்தை அழிந்த நிலையில் பிறர் எண்ணம் நம் எண்ணமாகவும், மற்றவர் உணர்ச்சி நம் உணர்ச்சியாகவும், அடுத்தவர் வலி நம் உடலின் வலியாகவும் தெரியும். அது தெரியாதவரை அகந்தையுள்ளது எனப் பொருள்.

    மனிதன் வளர ஆரம்பித்த காலத்தில் அவன் தனித்துச் சாதிக்க அவனைச் சுற்றியொரு வேலியிருந்தது. உதாரணமாக ஒரு சிறுவன் படிக்க வேண்டுமானால், அவன் எதையும் கற்றுக் கொள்ளலாம், எவரும் அவனுக்குப் பாடம் சொல்லித் தரலாம். நடைமுறையில் அவனும் படிப்பதில்லை, எவரும் சொல்லித் தருவதில்லை. அவனுக்குப் படிப்பு வருவதில்லை. படிப்பு வரவேண்டுமானால், முதலில் அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், விளையாடுவதிலிருந்து தடுக்க வேண்டும், பள்ளியில் ஒரே வகுப்பில் இருத்த வேண்டும், ஆசிரியர் சொல்வதைக் கண்டிப்பாகப் படித்து, எழுதிப் பயிலவேண்டும். வீட்டிலிருந்தும், விளையாட்டிலிருந்தும் பிரித்து, ஒரே வகுப்பில் இருத்தி, படிக்கச் சொன்னால்தான் படிப்பு வரும். இந்தத் தடைகளும், முறைகளும் சிறுவன் படிப்பைச் சாதிக்க அவசியம். அதுபோல் ஒரு ஆத்மா, தான் சாதிக்க அதற்கென ஓர் உடல் தேவை. பிறர் செயலிலிருந்து தன்னை அவ்வாத்மா பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்குச் சுயநலம் உதவும். அகந்தை எனும் கூட்டுக்குள் சுயநல வேலியால் ஒருவர் சாதனை பூர்த்தி பெறும். இவ்வேலையைக் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக அகந்தை செய்தது. அதன் காலம் முடிந்துவிட்டது. இனியும் அகந்தையின் எல்லைக்குள் சுயநலத்தால் மனிதன் செயல்பட முடியாது. இனி அவன் சாதனை உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும், இறைவனுக்கும் தேவை. அதை அகந்தையுள் பூர்த்தி செய்ய முடியாது. எனவே அகந்தை அழிய வேண்டும்.

    உலகம் என்ற ஆபரணத்தில் வைரமாக ஜொலிப்பது குடும்பம். உலகம் என்ற மாளிகையில் குடும்பம் ஒரு செங்கல். இது மனிதனைத் தயார் செய்து உலகுக்களித்தது. தயார் செய்யும்பொழுது அவனது அகந்தையையும், சுயநலத்தையும் விரிவுபடுத்தி, குடும்பத்தின் சுயநலமாக, குடும்பத்தின் அகந்தையாக்கியது. தனிமனிதனுடைய பரநலம், குடும்பத்தின் சுயநலமாயிற்று. உலகம் ஒரே மனித சமுதாயமாக வேண்டும் என்ற நிலையில், சுயநலமான குடும்பம் அழிந்து, பரநலத்தை அடிப்படையாகக் கொண்ட பொது ஸ்தாபனங்கள் (company, institution, society) கம்பனி, ஸ்தாபனம், சொஸைட்டி ஆகியவை அதற்குப் பதிலாக எழ வேண்டும்.

    முடியாட்சி முடிந்துவிட்டதால் இனி ராஜாயில்லை. விறகு அடுப்பு மாறிவிட்டதால் இனி காஸ் அடுப்புதான். விறகும், அடுப்புமில்லை என்பதுபோல் இன்று மாறியவை ஆயிரம். அதற்கு விளக்கம் தேவையில்லை. போனதை திரும்ப கொண்டு வர முடியாது. போவதைத் தடுக்க முடியாது.

    அகந்தை உலகத்திற்குச் செய்த சேவை பெரியது. இன்று மனிதன் உள்ள நிலைக்கு அவனைக் கொண்டு வந்தது அகந்தை என்கிறார் அன்னை. ஆனால் இனி அது தேவையில்லை எனில் அதை நாம் விட்டுவிட வேண்டும். மேலும் அதையொட்டி குடும்பமும் கரைய வேண்டும் என்கிறார் அன்னை.

    இவற்றைப் புரிந்து கொள்வது சிரமம். அரசியலில் இதுபோன்ற பெரிய கருத்துகள் உண்டு. நாம் அவற்றை ஆராய்ச்சி செய்யாவிட்டாலும், குறிப்பிடலாம்.

    • இனி ராணுவம் தேவையில்லை.
    • இனி பணம் இருக்காது.
    • National market உள்நாட்டு மார்க்கெட் போகிறது. உலகமே மார்க்கெட்டாகும். Global market is the only market.
    • கல்லூரிகட்கு எதிர்காலமில்லை என்றெல்லாம் பேசுகின்றனர். இராணுவம்தான் இதுவரை நமக்குப் பாதுகாப்பு அளித்தது. எல்லையைக் காத்தது. இதுவரை இராணுவம் என ஒன்றில்லாவிட்டால், நாடு என்பதிருக்காது. நாடு, வாழ்வு, மார்க்கெட், சரித்திரம் ஆகியவற்றை இதுவரை ஏற்படுத்தியது இராணுவம். இராணுவத்தின் காலம் முடிந்துவிட்டது. இனி இராணுவம் கலைக்கப்பட வேண்டும். ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்ற கருத்து பெரும்பாலும் ஏற்பட்டு வருகிறது.

     பவுன், வெள்ளி பணமாக இருந்த நாள் போய் 100 ஆண்டுகளாகிறது. கரன்சி, நோட் பணமாயிற்று. இன்று நாம் வாழும் உலகம், பெற்ற வசதிகள், படித்த படிப்பு, ஞானம் அனைத்தையும் பணத்தால் பெற்றோம். மேல் நாடுகளில் 50 ஆண்டுகட்கு முன் பணப்புழக்கம் குறைந்தது. செக் cheque வந்தது. செக் வந்தபின் பணம் பின்னணிக்குப் போயிற்று. 20 ஆண்டுகட்கு முன் credit card கார்ட் வந்தது. கார்ட் வந்தபிறகு அவர்கள் நோட்டைப் பார்க்கவேயில்லை. இனி பணம் இருக்காது என்கிறார்கள். அதே போல் நாடு, உள்நாட்டு மார்க்கெட், கல்லூரி, பட்டமிருக்காது என்ற கருத்து அதிகமாக ஏற்கப்படுகிறது.

    திருமணம் பெரும்பாலும் மேல்நாடுகளில் இப்பொழுதில்லை. குடும்பம் என்பது தனிமனிதன் ஏற்படுத்தியது. அகந்தை வளர மனிதன் குடும்பத்தை ஏற்படுத்தினான். அகந்தையே அழிய வேண்டும் எனில் அதன் அடிப்படையில் ஏற்பட்ட குடும்பம் அழிய வேண்டும் என்பது சரியாகப்படுகிறது. ஆனால் ஏன் குடும்பம் அழிய வேண்டும்? அழிந்தால் பிள்ளைகளை யார் வளர்ப்பார்கள்? பண்பு எப்படி அடுத்த தலைமுறைக்கு வரும் என்ற பெரிய கேள்விகள் எழுகின்றன. இவை யுகத்திற்குரிய கேள்விகள். பதிலும் யுகதர்மத்திற்குரியதே. சுருக்கமாக அன்னை சொல்லியவற்றையும், அதன் அடிப்படையில் ஏற்படும் விளக்கங்களையும் கூறலாம்.

    • பண்பு ஏற்பட பாசம், வசதி, படிப்பு தேவை.
    • வசதியும், படிப்பும் நாட்டில் வளம் பெருகினால் பெருக வாய்ப்புண்டு.
    • பாசம் என்பது இன்று ஓரளவுக்கு வசதியாலும், படிப்பாலும் ஏற்படுவதென்றே சொல்லலாம். அதைக் கடந்த பாசம் உண்டு. அது குறைவு. விதிவிலக்கு.
    • விதிக்கு வழியேற்பட்டால், பிறகு விதிவிலக்குக்கும் வழி ஏற்பட முடியும்.
    • Information, data, educationசெய்தியும், படிப்பும் அதிகமாக வளர்ந்தால் பாசம் இன்று அளிப்பதை அன்று வசதி அளிக்க முடியும். இது குழந்தைக்குப் பெருங்கல்வியும் அதிக வசதியும் வரும்பொழுது தாய்ப் பாசத்தை முழுவதும் தரமுடியும். இன்று குடும்பம் தரும் பாசத்தை அன்று தாய் தரமுடியும். ஒரு காப்பகமும் (creche) தரமுடியும்.
    • விலக்காக இன்று நாம் தாயிடம் பெறாத அன்பை, காப்பகத்தில் குழந்தை பெறுவதையும் காண்கிறோம்.
  2. தேசத்தின் ஆத்மா வளர்ந்து பிரபஞ்சத்தின் ஆத்மாவாக மாற இருக்கும் நிலையில் குடும்பம் அழிய வேண்டும் என்பது முரணானது. குடும்பம் கரைந்தாலன்றி அகந்தை கரையாது என்பது உண்மை. முரணாகத் தெரிந்தாலும், முரண்பாடில்லை.

    தேசமும், பிரபஞ்சமும் வளர குடும்பம் அழிய வேண்டும்.

    மனிதன் உயர்ந்து, குடும்பத்தை ஏற்று, குடும்பம் சமுதாயத்தை ஏற்று, சமுதாயம் நாட்டை ஏற்பது என்பது நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. நாட்டின் ஆத்மா வளர்ந்து உலகின் ஆத்மா ஆகவேண்டும் என்ற நிலையில், இடைப்பட்ட குடும்பம் அழியவேண்டும் என்பது தொடரை அறுப்பது போலுள்ளது. உண்மை வேறு.

    அன்னை அனைத்திலும் புரட்சிகரமானவர். மதவழிபாடு என்பதை அறவே ஏற்க முடியாதவர். அவர் தாயார் தெய்வநம்பிக்கை அறவேயில்லாத பகுத்தறிவுவாதி. ஏர்க், கடவுள் என்ற சொல்லே அன்னைக்குப் பிடிக்காது. ஐரோப்பாவில் இச்சொல்லை வைத்துச் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் அறிந்தவர் அன்னை. எந்தச் சட்டத்திற்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள விரும்பாதவர் அன்னை. அவருடைய புரட்சிகரமான கருத்துகளில் இங்கு நாம் முக்கியமாகக் கருதுபவை,

    • சொத்துரிமை கூடாது.
    • ஒருவர் பெற்ற சொத்தை அவர் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
    • திருமணம் பெண்களுக்கு விலங்கு.
    குடும்பம் என்பதன் கரு திருமணம். அதற்கு ஆதரவு சொத்து. அதை ஆர்வமாகப் பாதுகாப்பது வாரிசுக்காக. இவை அனைத்தும் அன்னைக்கு உடன்பாடில்லை. திருமணம், சொத்து, வாரிசு இல்லை எனில் குடும்பம் மறைந்து போகும். அதுவே அன்னையின் இலட்சியம்.

     இன்றைய சமூகம் நாட்டின் எல்லைவரை பரவியுள்ளது. அதன் அடிக்கல் குடும்பம். எதிர்காலச் சமூகம் நாட்டின் எல்லையைக் கடந்து உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பது அன்னையின் கொள்கை. உலகச் சமுதாயத்திற்கு இன்றைய அடிக்கல் (unit) உதவாது. அதற்குரிய பெரிய அடிக்கல் தேவை. அதன் கொள்கை அகந்தையாக இருக்க முடியாது. அது போன்றவை இன்றெழுந்துள்ள சமூக ஸ்தாபனங்களான கம்பனி, சொசைட்டி போன்றவை. அவற்றுள் அகந்தை வளர சந்தர்ப்பமில்லை. ஆயிரமாயிரம் பேர் கொண்ட இந்நிறுவனங்கள் 8 பேர் 10 பேர் கொண்ட குடும்பத்தை விட 1000 மடங்கு பெரியது. பெரியது என்பதால் பெரிய சமுதாயமான மனித குலத்திற்கு இவை அடிக்கல்லாக அமையும். அகந்தை வளரும் நிலை இவற்றுள் இல்லை என்பதும் முக்கியம். அகந்தை அழிந்த நிலையில் வேலை மட்டுமே இருக்கும். தான் எனும் முனைப்போ, தன் குடும்பம் என்ற மனநிலையோ இல்லாமல், கடமையைச் செய்யும் சூழ்நிலை இருக்கும்.

    அந்த ஸ்தாபனம் உலகச் சமுதாயத்தை உண்டு பண்ணும். அகந்தை, சுயநலம் ஆகியவையால் வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளையும், இவற்றை வளர்க்க உதவும் ஸ்தாபனங்களையும் அன்னை விலக்க முயல்வதால், திருமணம், சொத்துரிமை, குடும்பம் ஆகியவை இனித் தேவையில்லை என்பது அவர் நிலை.

    டெல்லி ஹோட்டலில் ஒருவர் 100 ரூபாய்க்குச் சில்லரை கேட்டார். சில்லரையில் ரூ.5/- நோட்டு வரவில்லை. அது வேண்டும் எனக் கேட்டார். சில்லரை கொடுத்தவர் சிரித்துவிட்டு இப்பொழுது டெல்லியில் ரூ.5/- நோட்டை யாரும் பயன்படுத்துவதில்லை என்றார்.

    இந்திய ஏற்றுமதி வியாபாரி 25 வருஷத்திற்கு முன் நியூயார்க் பேங்க் ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். இவர் சிறு வியாபாரி. ஆர்டர்கள் 10 லட்சம், 20 லட்சம் என்று வரும். பாங்க் இவர் கடிதங்களுக்கு பதில் போடுவதில்லை. சங்கடமான நிலை. நியூயார்க் சென்ற பொழுது பாங்க்கிற்குப் போனார். ஏன் தம் கடிதங்கட்கு பதில் எழுதவில்லை எனக் கேட்டார். 1 மில்லியன் டாலருக்குக் குறைந்த கடிதங்களுக்கு – ‘அன்றைய நிலவரத்தில் 2 கோடி ரூபாய்’ - பதில் எழுதினால் எங்களுக்குக் கட்டுப்படியாகாதென்றனர்.

    வேலை பெருகும்பொழுது நம் அடிப்படையும் பெருக வேண்டும்.

    உலகம் முன்னேறுகிறது. இனிக் குடும்பம் அடிப்படையாக இருக்க முடியாது. அதைவிடப் பெரிய அடிப்படை வேண்டும். அதுவே இனி எதிர்காலத்திற்குரிய இலட்சியம்.

    ஆன்மா வளர வேண்டும். நாட்டின் ஆன்மா வளர வேண்டும். Universal soul பிரபஞ்சத்தின் ஆன்மா வளர வேண்டும். அதனால் பழைய அடிப்படையான குடும்பம் இனிப் பயன்படாது. இனி உலகில் குடும்பத்திற்கு எதிர்காலமில்லை. நாம் வேலை செய்யுமிடம் - ஆபீஸ் - குடியிருக்குமிடம் - neighbourhood - குடும்பத்திற்குப் பதிலாக நமக்கு முக்கியமாக வேண்டும். அதற்கே எதிர்காலமுண்டு.

    சத்திய ஜீவன் பிறந்தால் அவனுடலில் ஜீரண உறுப்புகள், இதயம், நுரையீரல் போன்றவையிருக்கா. அதற்குப் பதிலாக அவ்வுறுப்புகட்குரிய சூட்சுமச் சக்கரங்கள் – subtle centres - இருக்கும் என்கிறார் அன்னை.

    • செயல் நிலை உயர்ந்தால், அடிப்படை பெருக வேண்டும்.
    • பணம் செலாவணி அதிகமானால் சில்லரை போய் நோட்டு வரும், சிறிய நோட்டு மறைந்து, பெரிய நோட்டு வரும்.
    • பள்ளி சிறியதாக இருக்கும்பொழுது, ஙகஆ விழாவுக்கு வருகிறார். பள்ளி பிரபலமாகி வளர்ந்தால், கல்லூரி, பல்கலைக்கழகமென மாறினால் விழாவுக்கு பெருந்தலைவர்கள் வருவது அவசியம்.
    • பீடம் உயர்ந்து அகன்றால், அகன்று உயர்ந்தால், சிகரம் உயரும்.
    • தாழ்த்தப்பட்டோரை உயர்த்தும் நாடு, விரைவாக முன்னேறும்.
    • சிறு விஷயங்களைச் சிறப்பாகச் செய்யும் ஸ்தாபனம் பிரபலமானது.
    • ஸ்தாபனம் பிரபலமானால், சிறு விஷயங்களையும் பெருவிஷயம்போல் கவனிக்க வேண்டும்.
  3. சரணாகதியை அளவுக்கு மீறிச் செய்ய முடியாது. ஏனெனில் உள்ளிருந்து எழும் சரணாகதியின் வீச்சு வளர்ந்தபடியிருக்கும், முயற்சி முடியும்பொழுது அதுவும் முடிகிறது.

    அளவை மீறமுடியாத அமைப்புள்ளது சரணாகதி.

    பகவானுடைய சிறப்புகள் பல. அவற்றை நாம் அறியோம். அன்னை சொல்வதால்தான் அவை நமக்குத் தெரியவரும். தெரிந்தாலும் சில புரியும், மற்றது புரியாது. அவற்றுள் ஒன்று சரணாகதி. ஸ்ரீ அரவிந்தர் சரணாகதியை ஒரு யோக முறையாகக் கண்டுபிடித்தது பெரிய காரியம் என்றார் அன்னை.

    பக்தர்களும், சாதகர்களும் சரணாகதி எனில் மனிதன் இறைவனைச் சரண் அடைவது எனப் புரிந்து கொள்கிறார்கள். மனிதனால் சரணடைய முடியாது. ஜீவாத்மா பரமாத்மாவுக்கு சரண் அடைவதே சரணாகதி என பகவான் தெளிவாகக் கூறுகிறார். ஜீவாத்மாவைக் கண்டவன் ஜீவன் முக்தன். ஜீவன் முக்தனாலேயே சரணாகதியை மேற்கொள்ள முடியுமானால், மற்றவர் நிலை என்ன? மனத்தால் செயல்படுபவன் மனிதன். மனிதன் சரணாகதியை மேற்கொண்டால், மனிதன் மனத்தைச் சரண் செய்ய வேண்டும். இது முடியாது. கோபம், ஆசை, பயம், பிராணனைச் சேர்ந்தன. கோபத்தை அடக்க, ஆசையை வெல்ல, பயத்தைப் போக்க பிராணனால் முடியாது. ஒரு கரணம் தன்னைத் தான் அடக்கும் திறனுடையதன்று. மனம் உயர்ந்த கரணம். மனத்தால் கோபத்தை அடக்க முடியும். என்னை மீறி கோபம் எழுந்தது. பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன் என்றால் பிராணனை மனத்தால் அடக்க சிரமப்பட்டோம் எனப் பொருள்.

    மனத்தை மனமே அடக்க முடியாது. சரண் செய்ய முடியாது. மனத்தை ஆன்மா அடக்கும், சரண் செய்யும். எனவே ஆன்மாவை - ஜீவாத்மாவை - உணர்ந்தவனே சரணாகதியை மேற்கொள்ள முடியும். ஞானயோகத்தின் முடிவான சித்தி, பூரணயோகத்தில் முதல் சித்தியாகும். பகவான் சொல்வது அது அன்று. ஜீவாத்மாவைக் கண்டு, பிறகு சரணாகதியை மேற்கொள்ளும்படி பகவான் சொல்லவில்லை. சமர்ப்பணத்தை ஏற்று ஆசையை அழித்து, அகந்தையைக் கரைத்து, சமர்ப்பணத்தை சரணாகதியாக மாற்றச் சொல்கிறார். இது எல்லாச் சாதகர்களாலும் முடியக் கூடியது. ஆசை விலகி பிராணமயப் புருஷன் - ஆன்மா - வெளிவந்தால் சைத்தியப் புருஷன் சரணாகதியை மேற்கொள்வான். முறை எளியது, எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ஆசையையும், அகந்தையையும் அழிப்பது சிரமம். அதை ஏற்பவன் சாதகன்.

    அகந்தை அழியும்பொழுது, சைத்தியம் வெளிவரும். அது சரணாகதியின் பாங்கு, இதை அதிகமாகச் செய்தால் அகந்தை முழுவதுமாகக் கரைந்த நிலையில் சைத்தியம் வெளிவரும். அகந்தை கரைந்த பின், சைத்தியம் சரணாகதியை மேற்கொள்ளும். அகந்தை உள்ளவரை மனித முயற்சி. அது முடிந்தால் முயற்சி முடிகிறது. ஆன்மீகத்தில் போலி வேஷம் போடலாம். ஜடாமுடியும், காவியும் மட்டும் அணிந்து ஏமாற்றலாம். ஆனால் போலியாக சத்திய ஜீவன் பெற்றதாக நடிக்க முடியாது என்கிறார் அன்னை போலிக்கு இடம் அளிக்காதது சத்திய ஜீவியம். Overdoing அதிகமாகச் செய்ய முடியாதது சரணாகதி.

    சரணாகதி முடியுமிடத்தில் ஆன்மா எழுவதால் overdoing அதிகமாகச் செய்வது முடியாது. சத்திய ஜீவியத்திற்கு வாழ்வு கட்டுப்பட்டதால், அதைப் பெற்றதாக நடிக்க முடியாது.

    அளவு கடந்து செயல்படுவது overdoing திறமைக் குறைவுக்குரியது. திறமை அதிகமாக இருக்கும்பொழுது, அது தேவைப்படாது. புதுப்பணம் வந்தால், திருமணம் ஆடம்பரமாகும், கழுத்தில் 300 பவுன் நகையிருக்கும். காது குத்துவதற்குத் திருமணம் போல் விமரிசை எழும்.

    பெரிய விஷயங்களை அளவு கடந்து கடைப்பிடிக்க முடியாது. அடக்கம், பக்குவம், பவித்திரம், பக்தி, தூய்மை, கற்பு, நட்பு, விஸ்வாசம், சிறப்பு போன்றவை அமைதியாக இருக்கும். சரணாகதி அவ்வரிசையில் சிறந்தது. அதை அளவு கடந்து பின்பற்ற முடியாது.

    அளவு கடந்து செயல்படுவது முயற்சி. முயற்சி அகந்தைக்கு உரியது. பெரிய அம்சங்கள் முயன்று பெறுவதன்று. இயல்பாக இருப்பவை பெரியவை. முயன்று பெறுபவை சிறியவை. ஆரம்பத்தில் சமர்ப்பணம். முடிவில் சரணாகதி. இவற்றிற்கு முயற்சி தேவை. பெருமுயற்சியால் சாதிக்கக் கூடியவை இவை. சாதித்தபின், முயற்சி போல் இயல்பாக அமைதல் நன்று.

    • அளவு கடந்து (overdoing) செயல்படுதல் முயற்சியின் தன்மை.
    • முயற்சியிருந்தால் அகந்தை உயிரோடிருக்கிறது எனப் பொருள்.
    • அகந்தை சிறியது (finite).
    • அன்னை பெரியது (infinite).
    • சரணாகதி, அகந்தை விட்டகன்று, அன்னையை அடையும் முறை.
    • பெருவெற்றிகளை பறையறைவிப்பதில்லை என்கிறார் அன்னை. 

    எதையும் அளவுகடந்து செய்யக்கூடாது என்பது நல்ல கொள்கை. அதை நிதானம் என்கிறோம். அளவு கடந்த நிதானம் வேண்டும் என்று சிறிய உள்ளம் விழையும்.

    • வாழ்வு பெரியது, மனிதன் சிறியவன்.
    • பெரிய வாழ்வைச் சிறியதாக மாற்றுவது தெய்வீக வாழ்வு.
    • அதன் கருவி சரணாகதி.
    • அதற்குரிய நல்ல முறை அளவுகடந்த நிலையை மனம் நாடாதது.
    • பொறுமை, நிதானம், பக்குவம் சரணாகதியைச் சேர்ந்தன.
    • அவசரப்பட்டவன் பொறுமையை நாடினால், அன்னை அவனை நாடுவதைக் காணலாம்.
    • அன்னை நாடுவதை வாழ்வில் அதிர்ஷ்டம் என்கிறோம்.
    • அன்னை நம்மை நாடுவதை ஆன்மீகத்தில் அருள் என்கிறோம்.
    • அருளைக் கடந்த நிலை பேரருள்.
    • பேரருள் காத்திருக்கும்பொழுது, அளவு கடந்து செயல்பட மறுப்பது சரி. 
  4. ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு அடுத்த நிகழ்ச்சியைப் புரிந்து கொள்ள முயல்வது மடமை, அறியாமை, அறிவீனம். முதியவர்கள் தங்கள் இளமைப் பருவத்தைக் கொண்டு இளைஞர்களைப் புரிந்து கொள்ள முயல்கின்றனர்.

    காலம் மாறினால் கணக்கு தப்பாகும்.

    இந்து மதத்தவர் அடுத்த மதத்தில் சேர்ந்தபின் அவர்கள் கோயிலுக்கு தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம் வாங்கிப் போவதில்லை. அப்படிச் செய்வது அறிவுடைமையில்லை. தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு என்பதால் ஒரு நாட்டு மொழியை நாம் அடுத்த நாட்டில் பேசுவதில்லை. காலம் மாறினால் பழக்கம் மாறும். இடம் மாறினால் பண்பு மாறும். நாடு மாறினால் பழக்கம் மாறும். முதியவர் இளைஞரைத் தம் இளம்பிராயப்படி கணித்தாலும், இளைஞர் வயோதிகரை இன்றைய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முயன்றாலும், அவர்கள் கணக்கு தவறாகும்.

    வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்களைப் பற்றிச் சொல்லும் குறைகள் ஏராளம். அவற்றுள் ஒரு சிறு பகுதி மேற்சொன்ன படியிருக்கும். 40, 50, 60, 70 வயதானவர்களுடைய உடை, முடியலங்காரம் ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு மாறுபட்டிருக்கும். சற்று யோசனை செய்தால், அல்லது அவர்களை விசாரித்தால், அல்லது வயதால் உங்களுக்கு இவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது வந்த புது பாஷன் நினைவிருந்தால், ஒவ்வொருவரும் அவர்கள் காலத்துப் பாஷனை ஏற்றுக் கொண்டு, இன்றுவரை மாற்றாமல் பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவரும். தாம் சிறுவயதில் ஏற்றுக் கொண்டதை மாற்ற முடியாதவர்கள், இன்று இளைஞர்கள் இன்றைய பாணியை ஏற்றுக் கொள்வதில் குறை காண்பது சரியில்லை என்பதை உணர்ந்தால் பல குடும்பங்களில் இத்தலைப்பால் ஏற்படும் சச்சரவு மறையும்.

    குடுமியும் பூணூலும் போனபின் என்ன இருக்கிறது என்று அன்று புலம்பிய குடும்பங்களில் இன்று குழந்தைக்கு கிராப் வெட்டுவது முறையாகிவிட்டது.

    பேண்ட் போட்டுக் கொண்டு எப்படி கோவிலுக்குப் போவது என்பது மாறிவிட்டது. மனம் ஒத்து வரவில்லை எனில் ரத்து செய்துவிட்டு வேறு திருமணம் செய்வது சரி என்று பேசுவது வழக்கமாகிவிட்டது.

    பெருந்தொகைக்கு செக் வாங்கமாட்டேன் என்று மறுத்தவர், இன்று பணம் வேண்டாம், செக் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

    நம் வீட்டில் பணம் பத்திரமாக இருப்பதை விட்டு ஏன் வேறிடத்தில் அதை வைப்பது என்று பாங்கை நம்பாதவர்கள் கேட்டார்கள்.

    ஒரு தொழில் செய் என்றால் ‘அதெல்லாம் எனக்குத் தேவை இல்லை' என்றவர் தம்பி ஏதாவது ஒரு நல்ல project தொழில் சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

    ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் பிள்ளைகள் எதிர்க்கட்சியான காங்கிரஸில் சேர்ந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் பிள்ளைகள் கம்யூனிஸ்ட் கட்சி, DMKஇல் சேர்ந்தனர். வ.உ.சி.யின் பேரன் திமுக பிரச்சாரகராக இருப்பதாகச் சொன்னார். காங்கிரஸ் முனிசிபல் சேர்மன் மருமகன் திமுக எம்.எல்.ஏ.வாக நின்ற பொழுது அவர், ‘இதையும் ஒரு காங்கிரஸாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.

    5½ வயதிற்கு முன் குழந்தைக்குப் பாடம் சொல்லிக் குடுப்பது சரியில்லை என்பது அன்றைய psychology மனோதத்துவம். மூன்று மாதத்தில் குழந்தை எளிதில் கற்றுக் கொள்ளும் என்பது இன்று கண்டுபிடித்தது.

    பிறர் கண்ணோட்டத்திலும், காலத்தை ஒட்டிய நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள முயல்வதில் தவறு வாராது. உள்ளதை உள்ளபடி அறிவது அறிவு. நம் சந்தர்ப்பம், பிறர் சந்தர்ப்பத்திலிருந்து மாறும். அடுத்தவரைப் புரிந்து கொள்ள அவர் கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும்.

    இன்று முதியவர்கள் இளைஞர்கள் போக்குச் சரியில்லை என்கிறார்கள். சற்று யோசனை செய்தால் அதன் பகுதிகள் பல.

    1. முதியவர்கள் பழக்கப்படி இளைஞர்கள் சரியில்லை என்பது முதற் பகுதி.
    2. சரியில்லை, தவறு தவறுதான் என்பது அடுத்த பகுதி.
    3. இளமையில் சரியில்லாதவர் பிறகு சரியாகிவிடுவதுண்டு.

     

    1. இன்று 60 அல்லது 70 வயதானவர் இளைஞர்கள் போக்குச் சரியில்லை என்றால், தம் 10, 15ஆம் வயதைச் சிந்தித்துப் பார்த்தால், அன்றைய முதியவர்கள் கண்ணோட்டத்தில் அவர் எவ்வளவு சரியாக இருந்தார் எனக் கருதினால், அன்று அவரிருந்ததுபோல், இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
    2. எந்தக் காலத்திலும், எந்த நாட்டிலும் மறுக்க முடியாத தவறுகள் உண்டு. காலம் மாறும் நேரம், இத்தவறுகளை மறைவாகச் செய்ய முனைதல் மனித இயல்பு. அவர்கள் சாதுர்யமான சாமர்த்தியசாலிகள். அவர்களை நாம் முந்தைய நிலையிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும்.
    3. இளமையின் துடிப்புக்குச் சரி, தவறு புரியாது. ஆசை சரி என நினைக்கும், பண்பான குடும்பம் இத்துடிப்புக்கு இடம் தாராது. சாதாரணக் குடும்பத்து நல்ல இளைஞர்கள் ஆடி, ஓடி ஓய்வது வழக்கம். 60 வருஷத்திற்கு முன்னும் அந்த ஆட்டமிருந்தது. என்றுமிருந்தது. இன்றும் உண்டு. இதைத் தவறு என நினைப்பது தவறு.

      அன்றைய ஆட்டம் சிறியது. இன்று அதிகமாக இருக்கிறது. சிறியதும் பெரியதும் ஓய வேண்டியதுதான். நமக்கு அது ஓயும்வரை பொறுமை வேண்டும். 

    இந்த மூன்று நிலைகட்கும் பொதுவானதென்ன? காலத்தாலும், வயதாலும், சரி, தவறு என்பவை நிர்ணயிக்கப்படுவதில்லை. என்றும், எக்காலத்திற்கும், சரி என்பதுண்டு, தவறு என்பதுண்டு. அந்தப் பாகுபாடு நமக்கில்லை. நாம் காலத்தை ஒட்டிப் போகிறோம். காலத்திற்குரிய மொழியைப் பேசுகிறோம். Being, Becoming, Being of the Becoming, வாழ்வு, துறவறம், இல்லறத்தில் துறவறம் என்ற மூன்று நிலைகளில் மனிதன் வாழ்வை ஏற்கிறான். ரிஷி துறவறத்தை நாடி இல்லறத்தை உதறுகிறார். இல்லறத்தின் துறவறம் என்பது வாழ்வனைத்தும் யோகமாகும். அது ஸ்ரீ அரவிந்தம். வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஸ்ரீ அரவிந்தம் கூறும் மனப்பான்மையிருந்தால், இத்தவறு வாராது. தாயன்பு அத்தகையது. அங்கு தவறு எழுவதில்லை. ஊர் மெச்சிக் கொள்ள தாய் மகனைப் பாராட்டுவது சிறுமை. அதில் எல்லாத் தவறுகளும் எழும்.

    தாயன்பு என்பது கனிவு.
    ஆசை கடுமையில் முடியும்.

  5. சமூகப் பழக்க வழக்கங்களை மாற்றுவதுபோல், மனம் ஏற்ற பழக்கங்களை மாற்ற முடியாது. உடையை மாற்றுவதுபோல், நல்லது கெட்டது, உயர்ந்தது தாழ்ந்தது என்பதை மாற்ற முடியாது.

    சமூகப் பண்புகள் மனத்திற்குரியவை. எளிதாக மாற்ற முடியாது.
    மனம் தன் பண்புகளை மாற்ற அனுமதிக்காது.

    மனிதனுக்கு ஒன்றை கற்றுக் கொள்வது சிரமம். கற்றுக் கொண்டால் அதைப் பின்பற்றுவது சிரமம். பின்பற்றினால் தொடர்ந்தும் பின்பற்றுவது சிரமம். தொடர்ந்து பின்பற்றும் விஷயங்கள் மனத்தில் ஊறிப் பதிந்து விடும். மனம் கற்றதை உணர்வு ஏற்கும். உணர்வு ஏற்றதை உடல் ஏற்கும். ஏற்றதின் மீது பாசம், பற்று ஏற்படும். அதை விரும்பி நாடுவோம். முடிவாக அதனுடன் இரண்டறக் கலந்த நிலையில், அது நம் பண்பாகும். பண்பானபின் அதை விட முடியாது. மாற்ற முடியாது. மாற்ற முயன்றால் மனம் இடம் தாராது. இதுபோல் நாம் ஏற்றவை ஏராளம். அவற்றுள் நல்லவை அதிகம். முதல் நிலையில் அவை சமூகப் பழக்கவழக்கங்களாகும். அடுத்த நிலையில் மனம் ஏற்ற பழக்கங்களாகும். அவற்றுள் சிலவற்றைக் குறிக்கிறேன்.

    • நல்ல உடையில்லாமல் வெளியில் போக மனம் வாராது.
    • தெரியாதவர்களிடம் உதவி கேட்க முடியாது.
    • உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போகாமலிருக்க முடியாது.
    • வாங்கிய பொருளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.
    • கடமைகளை நிறைவேற்ற முடியாது எனப் பேசுவதில்லை.
    • நாலு பேர் முன்னிலையில் நம்மை உயர்வாகப் பேச மனம் வாராது.
    • வரிசையாக நிற்பவர்களை மீறி முதலில் போக வெட்கப்படுவோம். 

    இவை போன்றவை சமூகத்திற்குரிய பழக்கம். அவற்றை மாற்றுவது சிரமம். நாலு பேர் மாறினால், மாறுவது சிரமமன்று. எவரும் மாறாதபொழுது, மாறுவது எளிதன்று. இதற்கடுத்த ஆழ்ந்த நிலை மனம் ஏற்றுக் கொண்டவை (psychological). அவற்றை மாற்றுவதோ, விட்டு விடுவதோ இதைவிடச் சிரமம். அவற்றுள் சில.

    • ஓர் ஆபீசில் சிலர் காசு வாங்கினால், சுத்தமானவனால் அந்த எண்ணத்தையும் நினைக்க முடியாது.
    • உடன் பிறந்தவர்களோடு பணவிஷயத்தில் நமக்கு ஆதாயமாக நினைக்க முடியாது.
    • பரம்பரைச் சைவனால், மாமிசம் சாப்பிட முடியாது.
    • வயதில் சிறியவர்களுடைய அந்தஸ்தால் அவர்களுக்குப் பணிய மனம் இடம் கொடுக்காது.
    • நம் ஊர், குடும்பம், ஜாதி, தொழில் ஆகியவற்றைத் தவறாகவோ, குறைவாகவோ நினைக்க முடிவதில்லை. 

    இவைபோன்ற பழக்கங்களை மாற்ற வேண்டிய அவசியம், நேரம் வந்தாலும் மாற்ற முடியாமல் நாம் திணறுவதுண்டு. பூரண யோகத்தை மேற்கொள்ள இவை மாறுவது இன்றியமையாதவை. சுபாவத்தால் ஏற்பட்ட பழக்கங்களை மாற்றுவது இதைவிடக் கடினம். சுபாவத்தை மாற்ற முன்வருபவர்க்கே பூரணயோகம் பலிக்கும். அவசரம், நிதானம், பேராசை, உதவி மனப்பான்மை, பொறுமை, தெளிவாகச் செயல்படுதல் போன்றவை சுபாவத்திற்குரியவை. அவசரத்தைப் பொறுமையாக அவசியம் மாற்ற வேண்டும். வேகமாகச் செயல்பட வேண்டிய இடத்தில் பொறுமைசாலி, பொறுமையைக் கைவிட்டு விரைவாகச் செயல்படுவது அவசியம். இவை மிகவும் கடினமானவை. பழக்கங்கள் பல வகையின. அவை வாழ்வுக்கும், நாம் வளர்ந்த கலாச்சாரத்திற்கும் உரியவை. ஆன்மாவுக்கோ, மனத்திற்கோ, நம் உணர்வுக்கோ உரியவையில்லை. உடலையும் அவை சேரா. என்றாலும் அவை நம் கலாச்சாரத்தின் மூலம் நம் ஆன்மாவை வெளிப்படுத்துபவை. ஒரு முறை நாம் அவற்றை ஏற்றுக் கொண்டால் மாற்றுவது சிரமம். சமூகம் மாறினால் மாறலாம். அதுவும் 80% மக்களால் முடியும். மற்றவர்களால் முடியாது. ஆன்மீகத்தை வாழ்வில் ஏற்றால், அவற்றிற்கு அர்த்தமில்லை. அன்னை வாழ்வுக்கு அவை புறம்பானவை. தடையானவை. அவசியம் நேர்ந்தபொழுது அவற்றை மாற்ற நாம் முன்வர வேண்டும் என அன்னை வலியுறுத்திக் கூறுகிறார். அவற்றை மாற்ற முடியாதவர்க்கு அன்னையில்லை, யோக வாழ்வு என்ற அன்னை வாழ்வில்லை. அது போன்றவை,

    1. உடை
    2. உணவுப் பழக்கம்
    3. மொழி
    4. நாம் இன்று வணங்கும் தெய்வம்
    5. திருமணம், வாழ்வு, சாவுக்குரிய கலாச்சாரப் பழக்கங்கள்
    6. திருமணம்
    7. பண்பு நாம் அறியும் பழக்கங்கள் 

    7ஆம் தலைப்பு, நட்பு, உறவு, விஸ்வாசம், நாணயம், கற்பு போன்றவற்றைக் குறிக்கும். உடை, உணவு பழக்கங்களை மாற்றுவது போல் மொழியை மாற்றுவது சுலபமன்று. 800 ஆண்டுகட்கு முன் தமிழ்நாடு வந்த சௌராஷ்டர்களும், 500 ஆண்டுகளாக நம்முடன் வாழும் தெலுங்கர், கன்னடியர்களும் வீட்டில் அவர்கள் பாஷையே பேசுகிறார்கள். அதை மறந்தால் துரோகம் செய்ததுபோல் நினைக்கின்றார்கள். நாம் இதுவரை வணங்கிய தெய்வத்தை மாற்றுவது மேலும் கடினம். அதைச் செய்தவர்களும் பண்புகளை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால், அதைத் தவறாகக் கருதுகின்றனர். முடியாது எனக் காண்பவர் பலர். 1960இல் பள்ளி ஆசிரியர்கட்கு சீருடை நிர்ணயிக்க வேண்டும். Pant, closed coatஉம் போட வேண்டும் என்று பேசினர். B.A., B.Ed. படித்து பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர் கிராமவாசி. வேஷ்டி கட்டுபவர். "இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால் நான் வேலையை ராஜினாமா செய்துவிடுவேன்'' என்றார். வெளிநாட்டுக்குப் போய் புதிய உணவை ஏற்க முடியாமல், உடனே தாய்நாடு திரும்பியவர் பலர். வேறு மதத்தைத் தழுவிய பின்னும், தாலி, சுபமுகூர்த்தம், ஜாதகத்தை விட முடியாதவருண்டு. கடைசிக் காலத்தில் வறுமையால் திரு. வி.க. வாடியபொழுது அவர் பெற்ற லட்ச ரூபாய் நன்கொடையை அவரால் ஏற்க முடியவில்லை. மறுத்தார். பிறருதவியால் வாழ்வது தவறு என்ற பண்பை மாற்றி நாட்டில் புலமை பெற்றவரைச் செல்வர் ஆதரிப்பது முறை என திரு. வி.க.வால் ஏற்க முடியவில்லை. வறுமையில் இறந்தார். மறுமணத்தை சமூகம் ஏற்க படும்பாட்டை நாம் அறிவோம். கருத்தை ஏற்றாலும், செயலை ஏற்க மனம் இசையாதவர் பலர்.

    • ஆன்மீக வாழ்வுக்கு நாடு, மொழி, பண்பு, இன வேறுபாடில்லை.
    • அவற்றைக் கடக்க முடியாதவருக்கு ஆன்மீக வாழ்வு எனும் அன்னை வாழ்வு இல்லை.

      முக்கியமாகச் சைவ உணவை ஆன்மீகம் என நாம் கருதுகிறோம். அப்படிப்பட்டவரை அன்னை அசைவ உணவை உட்கொள்ளும்படிச் சொல்வார். தாமே கோழி முட்டையைக் கொடுத்து சாப்பிடச் சொல்வார். ஏற்றுச் சாப்பிட்டவர் பலர். ஏற்கமுடியாதவர் பலர்.

தொடரும்....

*****



book | by Dr. Radut