Skip to Content

07. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

மூலம்: ஸ்ரீ கர்மயோகி
சொற்பொழிவு: திரு. M. ஜகந்நாதன்
சொற்பொழிவு ஆற்றிய தேதி: 06.09.2015

1. பொய்யான தோற்றத்தை அறிவுக்கேற்றது போல் ஏற்பதை மனிதன் விவேகம் என்கிறான். விவேகம் திரைக்குப்பின் ஊடுருவிக் காணவல்லது. பகுத்தறிவு விவரங்களை நிர்ணயிக்கிறது. அவற்றை வேறுபடுத்திக் காண்கிறது. பகுத்தறிவு பிரிக்கிறது. விவேகம் எதிரானதை இணைக்கிறது. சுமுகமான இணைப்பு விவேகத்தின் இலட்சியம்.

தோற்றம் பொய்யென மனிதனால் அறிய முடியவில்லை. திருட்டுக் காவல்காரனின் பணிவான நடத்தை தோற்றம். பொய்யெனத் தெரிவதில்லை. விவேகம் தோற்றமென்ற திரைக்குப் பின்னுள்ள நோக்கத்தையறியும். அது நிலைமையுடன் பொய்யான பணிவை இணைத்துப் பார்க்கும். திருட்டு வெளிவரும். பிரச்சனை விலகும். வியாதி தோற்றம். தோற்றத்தை நம்புபவன் வைத்தியம் செய்கிறான். நான் அன்பன். எனக்கு வியாதி வராது. இது தோற்றம். தோற்றத்தை நம்பாமல், என் நம்பிக்கையை நம்புவேன் எனில் வியாதி சிறுநீரகக் கல் மஞ்சள் காமாலை போல் விலகும். விவேகம் நம்பிக்கையையும், பலனையும் சுமுகமாக இணைக்கும். அறிவு பிரிக்கும், பிரித்ததை முடிவாகக் கருதும். அது பிரச்சனை. விவேகம் பிரிக்காது. பிரிந்ததை சுமுகத்துள் சேர்க்கும். அது பிரச்சனையைத் தீர்க்கும், சில சமயம் பிரச்சனையை வாய்ப்பாக்கும். சர்க்கார் மனையை எடுத்துக் கொண்டு ஆர்டர் போட்டதை அறிவு முடிவாகக் கருதுகிறது. அன்பர் அன்னை தரிசனம் செய்தவர் என்பது பின்னணியில் உள்ள வாய்ப்பு. ஆர்டர் முடிவில்லை. பிரச்சனையை அன்னை தரிசனத்துடன் சுமுகமாக இணைத்தால் ஆர்டர் ரத்தாகும். பெரும் செலவு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுள்ளது. ஒரு செலவுக்கே வழியில்லை. அறிவு பிரச்சனையை நம்பிக்கையிலிருந்து பிரிக்கிறது. பிரித்தது முடிவு. முடிவு முடியாது எனக் கூறுகிறது. மனம் அதை ஏற்கிறது. பிரச்சனை தீரவில்லை. ஆன்மாவுக்கு விவேகம் உண்டு. விவேகம் பிரிக்காது. இணைக்கும். சுமுகமாக இணைக்கும். “எனக்குப் பக்தி நம்பிக்கையுண்டு.” அது விவேகத்தின் கண்ணுக்குப் புலப்படும். பிரச்சனையை நம்பிக்கையுடன் இணைத்தால் சுமுகம் எழும். புது வாய்ப்பு எழும். இரண்டு பிரச்சனைகளும் எதிர்பாராதது போல் தீரும். அன்னையைத் தரிசித்தவர் அன்னையை மறப்பது வழக்கம். அன்னை மறப்பதில்லை. அவர் நினைவு எதிர்பாராத வாய்ப்பாக வரும். IAS Special Recruitment வருவதுண்டு. அது 40 வயதுவரை உள்ளவர்க்குதவும். ஒரு அன்பருக்காகவும் அன்னை அவர் போன்ற அனைவருக்காகவும் சலுகை வழங்குவது அன்னையின் பிரபஞ்ச அம்சம். பஸ் ஓர் ஊருக்கோ அல்லது ஒருவருக்காகவோ மட்டும் ஓடாது. பஸ் அனைவருக்கும் உண்டு. அன்னையின் செயல்கள் பிரபஞ்ச செயல்கள் (impersonal, Universal). யாருக்காக வாய்ப்பு வந்ததோ அவர் அறிவைப் பயன்படுத்தினார். இருப்பது 8 இடம். 8 பேரை எடுக்கப் போகிறார்கள். 80/- ரூபாய் மாதச் சம்பளம். தகப்பனார் மேஸ்த்திரி என்றால் என்ன மார்க் வாங்கினாலும் எடுபடாது என நினைத்து போக வேண்டாம் என முடிவு செய்தார். தான் அன்னை தரிசனம் செய்ததையும் தனக்கு General Knowledge-இல் உள்ள பெரும் திறமைகளையும் மறந்தார். மேலும் அவருடைய ஆங்கிலப் புலமையின் பெருமையையும் அவர் அறியவில்லை. பிரச்சனையை 80/-ரூபாய், மேஸ்த்திரி என நிர்ணயம் செய்தார். பிரித்துப் பகுத்தார். பிரிவினையை ஏற்றார். பரிட்சைக்குப் போகவில்லை. கல்லூரிப் பேராசிரியராக ஓய்வு பெற்றார். அவர் பகுத்தறிவுவாதி. 80/-ரூபாய் ஒரு மாத சம்பளம். இருப்பது 8 இடம். பெற்றோர் நிலை வேலைக்குக் குந்தகம். அவர் பிரித்துப் பகுத்து நிர்ணயம் செய்தவை அறிவுக்குப் பொருத்தம். வாழ்வு அறிவால் நடத்தப்படவில்லை. அறிவு முடிவு தரும் எனில் அவர் எடுத்த முடிவு சரி. நடந்தது என்ன? அவருடன் வேலை செய்தவர் விண்ணப்பித்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். General Knowledge&-லிலும் ஆங்கிலப் புலமையிலும் அவர் மிகவும் பின் தங்கியவர். இவருக்கு வந்த வாய்ப்பு அவருக்குப் போயிற்று. அன்னை கொடுத்த வாய்ப்பு என்பதற்கு அடையாளம் எல்லாக் கட்டங்களிலும் தெரிந்தது. அவர் United Nations-க்குப் போனார். இந்திரா காந்திக்கு செக்ரடரியானார். 3 முறைகள் கவர்னரானார். ஜனாதிபதி தேர்தலுக்கு அவரை நியமிக்க விரும்பினார்கள். இது எந்த IAS ஆபீசரும் பெறாத பேறு. அன்னை கொடுத்த வாய்ப்பு என்பதன் முத்திரை. சென்னை கவர்னராக 50 ஆண்டுகள் கழித்து அவர் வந்த பொழுது அவரைச் சந்தித்தவர்களிடம் அன்பரைப்பற்றி விசாரித்தார். சுமுகம் வாய்ப்பால் எழுவது. நம் திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள சுமுகம் creative படைப்புத் திறனுள்ளது. அன்பர் பரீட்சை எழுதியிருந்தால் நேர்முகத் தேர்வில் மேஸ்த்திரி மகனாக இருந்தும் இவ்வளவு உயரம் அறிவு வளர்ந்ததைப் பாராட்டி, அவர் ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்து தேர்ந்தெடுத்திருப்பார்கள். நாட்டின் ஜனாதிபதியாகியிருப்பார். இது ஆன்மாவின் விவேகம் அறிவது. அன்பர் வாழ்வில் உள்ள வாய்ப்பை அன்பரால் அறிய முடிவதில்லை. சந்தர்ப்பத்தால் சேவை செய்ய வேண்டியிருக்கும். அது அவர் குதர்க்க புத்தியைத் தாண்டி தரிசனத்திற்கு அழைக்கும். அவர் போற்றும் அபரிமிதமான செல்வம் தரும். மனிதன் குறையுடையவன். அவன் அறிவு குறையை அறியும். அதையே முடிவாகக் கருதும். தன் நிறைவை மனிதன் அறிவதில்லை. இல்லாத பெருமையை அறிவான். அது நிறைவில்லை. தனக்குத் தொந்தரவு விலக ஒருவரை அன்னையிடம் அறிமுகப்படுத்துவதுண்டு. அது எவ்வளவு பெரிய சேவை, அதன் பலன் என்ன என்பதையும் மனிதன் அறிய முடிவதில்லை. தன் பக்தி பிறருக்குப் பலிப்பதைக் கண்டும் நம்பிக்கை எழுவதில்லை. அருகிலிருந்தும் நம்பிக்கை எழுவதில்லை. இதெல்லாம் செய்வது பகுத்தறிவு.

(தொடரும்)

**********



book | by Dr. Radut