Skip to Content

06. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

19. தேவையான செலவுகளை மனம் சுருங்காமல் செய்து கொண்டு வந்தால் பண வரவு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு ஏதுவான வாய்ப்புகள் நம் வாழ்க்கையில் திறந்தேயிருக்கும்.

நமது குறிக்கோள் என்ன? பணம் சேமிப்பு வேண்டுமா? செலவுக்குப் பணம் வேண்டுமா? ஏராளமான பணம் வந்து குவிய வேண்டுமா?

தடையின்றிப் பணவரவு வேண்டுமானால்
தடையின்றிச் செலவுகளைச் செய்ய வேண்டும்

என்பது அன்னை கூறுவது. நீருற்று இறைக்க இறைக்க ஊறும். சமூகம் ஒரு பெரிய நீர் நிலை போன்றது. பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்ற நம் பழக்கம் மேலும் தொடர்ந்தால் அது அதிகப் பண வரவுக்குத் தடையாகும். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பது போல் செலவு செய்தால் பணம் சந்தோஷப்பட்டு மேலும் மேலும் நம்மிடம் வரும் என்ற கருத்து நமக்குப் புலப்படுவதில்லை.

200 அல்லது 300 ஆண்டுகட்குமுன் விவசாயி அறுவடை சமயம் மட்டும் பணத்தைப் பார்ப்பான். அது செலவானால் பணம் அடுத்த அறுவடையில்தான். எனவே சிக்கனம் நமது பிறப்புரிமை. மாதச் சம்பளம் பெறுபவர் மாதாமாதம் பணத்தைப் பார்க்கிறார். விவசாயிக்கு அந்த அனுபவமில்லை. வியாபாரியிடம் பணம் தினசரி வரும், போகும். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது 80% விவசாய நாடாக இருந்தது. சிக்கனம் விவசாயியின் குணம். அது அவன் தவறல்ல, பழக்கம் மாறாது. அந்த நாளில் பெரும்பாலும் கூலி பணமாகக் கொடுப்பதில்லை. வேலை செய்தால் சோறு போடுவார்கள். அதுவே கூலி. வீட்டு வேலைக்கு மாதம் லீ ரூபாய் கூலி கொடுத்த காலம் அது. எப்படி மக்கள் தாராளமாகச் செலவு செய்வார்கள். அந்த அரை ரூபாய் இன்று ரூபாய் 3000/-. நம் நாட்டில் இந்தக் கூலி வழங்கிய நாளில் இங்கிலாந்தில் 1 நாளைக்குக் கூலி 1½ ரூபாய், அமெரிக்காவில் 10 ரூபாய். அவை பணக்கார நாடுகள். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், கத்தியைத் தீட்டினால் கூராகும், பழகாத கத்தி துரு பிடித்து விடும். தாயார் குழந்தையைப் பிரிந்திருந்தால் குழந்தைக்குத் தாயாரை அடையாளம் தெரியாது.

பணம் புழக்கத்தால் பெருகும் என்ற கருத்து

நம் நாட்டிற்குப் புதியது. உலகுக்கே புதியது. அது அன்னையின் முக்கிய கருத்தில் ஒன்றாகும். வெட்ட வெட்ட துளிர்க்கும் வேலங்காடு. தலைமுடியை வெட்டினால் வளரும். தெய்வமே துதி பாடினால் மகிழ்ந்து வரம் தரும்.

விவசாயம் பயிரிட்டுச் சாப்பிடலாம்.
வியாபாரம் பணம் பெருகும் துறை.

கடல் கடந்து வாணிகம் செய்தனர். பட்டினத்தார் செட்டியார், வாணிகன், ஏராளமான பொன்னும் மணியும் குவிந்த வீடு அவருடையது. விவசாயிக்கு அந்த வாய்ப்பில்லை, கோவலன் செல்வன். பணம் வியாபாரத்தால் வந்தது. உழுபவன் கணக்குப் பார்த்தால் உழவுகோலும் மிஞ்சாது என்பர். நெல் பயிரில் ஏக்கரில் 30 ரூபாய் நிகர லாபம் கிடைக்கும்பொழுது கரும்பு பயிரிட்டு ஆலைக்குச் சப்ளை செய்தால் 150 ரூபாய் நிகரமாக இலாபம் நிற்கும். கரும்புக்குப் பணப் பயிர் எனப் பெயர். ஏனெனில் கரும்பு சர்க்கரையாகி விலை போகிறது. ஆலையுள்ள பகுதிகளில் கல் வீட்டுக்காரன் எனில் கரும்பு குடித்தனக்காரன் என்பார்கள். அந்த நாளில் ஒரு பணம், இரண்டு பணம் எனப் பேசுவார்கள். பணம் என்றால் ரூபாயில்லை, இரண்டணா. (12 பைசா) ரூபாயை எளிய மக்கள் காண்பது அரிது. ஒரிஸ்ஸா விவசாயி ரயிலில் பிரயாணம் செய்தவர் அன்னையைப்பற்றி பேசுவதைக் கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டு வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த 1 ரூபாயை எடுத்துக் கொடுத்து “இதுவே என் சேமிப்பு. அன்னையிடம் சேர்ப்பிக்க வேண்டும்” என்றார். அன்னை அந்த ரூபாயைப் பெற்று மகிழ்ந்தார். திருமணங்களில் வரிசையென 1 ரூபாய் வைப்பார்கள். புரோகிதர் அதை 1 கோடி கட்டி வராகன் என்பார். 1958-இல் நான் ஆசிரமம் வந்தபொழுது காணிக்கையாக 1 ரூபாய் வரும். மணியார்டரில் அன்னையே கையெழுத்திட்டு வாங்குவார்.

ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்குக் குபேர சொத்துள்ள இடம் எனப் பெயர். தாசீல்தார், சப் இன்ஸ்பெக்டர், சப் ரிஜிஸ்ட்ரார், சப் மாஜிஸ்ட்ரேட் போன்ற ஆபீசர்கட்கு ஆரம்ப சம்பளம் ரூபாய் 60. அன்னை அன்று ஒரு சாதகருக்கு 75 ரூபாய் செலவு செய்தார். குபேர சொத்தல்லவா? அன்னை 1920-இலிருந்து 1942-வரை தன் சொந்த பணத்தால் ஆசிரமத்தை நடத்தினார்.

*********

ஜீவிய மணி

ஊர் என்பது சமூகம். அது உணர்வால் செயல்படுவது நம்பிக்கையால் செயல்பட்டால் மனிதன் உணர்விலிருந்து உயர்ந்து அறிவுக்கு வந்ததாகப் பொருள். அது சமூக வளர்ச்சியல்ல, பரிணாம வளர்ச்சி. பரிணாம வளர்ச்சி என்பதாலும், மனம் செயல்பட ஆரம்பித்துவிட்டது என்பதாலும் அதற்குச் சக்தி அதிகம். உடலுக்குரிய வாழ்வு முதற்கட்டம், உயிருக்குரிய வாழ்வு அடுத்த கட்டம், மனத்திற்குரிய வாழ்வு அதற்கும் அடுத்தது. ஆன்மிக வாழ்வு உயர்ந்தது.

சத்திய ஜீவிய வாழ்வு முடிவான தெய்வீக வாழ்வு.

********



book | by Dr. Radut