Skip to Content

11. அன்னை இலக்கியம் - பார்வைகள்

அன்னை இலக்கியம்

பார்வைகள்

(பிப்ரவரி 2015 இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

20. சந்துருவின் பார்வை

பூரணி வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் வீடு இதுவரை நான் அறிந்திராத ஒன்றாக மாறிவிட்டது. சீர்திருத்தங்களை அவள் வேண்டுகோள்களாகத்தான் எங்கள் முன்-வைத்தாள்.

அவற்றை கட்டளைகளாக ஏற்றுக் கீழ்ப்படிந்தோம்.

எல்லா பொறுப்புகளையும் அவளிடம் விட்ட பின்பு, வாழ்வு அமைதியான நதியாகி விட்டது என்று தோன்றியது. ‘பணப்பொறுப்பையும் பூரணியிடமே கொடுத்து விடட்டுமா?’ என்று மற்றவர்களிடம் கேட்டபோது ‘உடனே செய். உன்னைவிட நன்றாக நிர்வாகம் செய்வாள்’ என்றனர்.

குடும்பத்தில் ஒருத்தியாக வந்த நாளே அவளை என்னால் ஏற்க முடிந்தது. மற்றவர்களுக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டன.

மந்திரா மறக்காமல் தினமும் ‘பூரணி எப்போது ஊருக்குத் திரும்பிப் போவாள்?’ என்று கேட்டுக் கொண்டிருந்தாள். என் பதில்கள் அவளைத் திருப்திப்படுத்தவில்லை.

இன்று காலை நான் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அலுவலகத் தலைவரான பெரிய சார் என்னை மணியடித்து அழைத்தார். ஒரு மணியடித்தால் பியூன். இரண்டு மணியடித்தால் நான். சின்ன சார் பெயரைக் கூவி அழைப்பார்.

‘நீ பெரிய எழுத்தாளனாமே? மந்திரா சொன்னாள்’ என்று கேட்டார் சார்.

‘என் அக முன்னேற்றத்திற்காக எழுதிக் கொள்ளும் சாதாரண எழுத்தாளன்தான். என் எழுத்து பெண்களின் எழுத்து போல குண்டு, குண்டாக, பெரியதாக இருக்கும். அதனால் பெரிய எழுத்தாளன் என்று மந்திரா சொல்லி இருப்பாள். என்மேல் பிரியம் கொண்ட விஷமி!’ என்றேன்.

‘பெரிய பத்திரிக்கைகளில் உன் கதைகள் வருமா?’ என்று கேட்டார் சார்.

‘பல புனைப் பெயர்களில் முன்பு எழுதிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் நிறுத்தி விட்டேன்’ என்றேன்.

‘ஏன்? சன்மானம் குறைவோ?’ என்றார் சார்.

‘அது பிரச்சனை இல்லை. தமிழில் நல்ல கதைகள் எழுதி சம்பாதித்துவிட முடியுமா என்ன! அது மலையாளத்திலும், கன்னடத்திலும்தான் முடியும். தமிழில் சினிமா தொடர்பு இருந்தால் ஒருவேளை அது நடக்கலாம். அமுதம் பத்திரிக்கைக்காக உபநிஷதத்தில் வரும் நசிகேதன் சொல்லும் ஐம்புரவித்தேர் பற்றிய ஒரு கதை எழுதினேன். கதைக்குப் பக்கத்தில் பிரபல நடிகர், நீச்சல் உடை அணிந்த ஐந்து நடிகைகளை அணைத்துக் கொண்டிருப்பது போல படம் போடப்பட்டிருந்தது. அன்றோடு வணிகப் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதை விட்டுவிட்டேன்’ என்றேன்.

‘அதிலென்ன தப்பு? அப்படி படம் போட்டால்தான் வயதானவனும் பத்திரிக்கை வாங்குவான். வியாபாரம் நடக்கும். விளம்பரம் கிடைக்கும். பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த முடியும். மனிதனுக்கு உயர்ந்த மனம், பண்பு, குணம் என்று எதுவுமே வளரவில்லை. எல்லோருமே சட்டை போட்ட காட்டு மிருகங்கள்தான். பசியும், காமமும்தான் மனிதனோடு பிறந்தவை. இயற்கையானவை. பசி தன்னை வளர்ப்பதற்கு. காமம் தன் இனத்தை வளர்ப்பதற்கு. அவை இரண்டுமே மூச்சடங்கும் வரை, திரும்பத் திரும்ப எழுந்து கொண்டே இருக்கும். இதைப் போய் பெரிய குற்றமாகச் சொல்கிறாயே?’ என்றார் சார்.

‘சார், உடல் மட்டுமே மனிதனில்லை. நீங்கள் சொல்வது உடலின் பழக்கங்கள்’ என்றேன்.

‘அவற்றை மாற்றக் கிளம்பிவிட்டாயா?’ என்று கேட்டார் சார்.

‘என்னுடைய உலகத்தை, அகத்தை, அனுபவங்களைப் புரிந்து கொள்ள, புரிந்து கொண்டதை தெளிவோடு தொகுத்துக் கொள்ள, அதன் மூலம் ஆன்மிக முன்னேற்றம் அடைய எனக்காக நான் எழுதுகிறேன். வணிகப் பத்திரிக்கையின் வழிமுறை எனக்கு ஒத்து வரவில்லை. என் லட்சியம் வேறு வகையானது. நேர்மையானது’ என்றேன்.

‘அப்பா சம்பாத்தியத்தில் வாழ்கிறாய் அல்லவா? அதனால் லட்சியவாதியாக இருப்பது சுகமாக இருக்கும். சொந்தமாக சம்பாதிக்கும் போது உன் லட்சியவாதக் கோளாறு சரியாகிவிடும்’ என்றார் சார்.

‘என் லட்சியமும், நேர்மையும் தீவிரமானவை’ என்றேன்.

‘ஆடிட்டராகப் பயிற்சி எடுக்கிறாய். காலையிலிருந்து மாலைவரை கள்ளக் கணக்குத்தான் எழுதுகிறாய். அப்போதெல்லாம் உன் லட்சியமும், நேர்மையும் நினைவுக்கு வராதா?’ என்று கேட்டார் சார்.

நான் மௌனமாக நின்றேன்.

‘கதை என்றால் எல்லோரும் படிப்பது போல எழுத வேண்டும். உபநிஷதம், நசிகேதன் என்று எழுதினால் எவன் படிப்பான்? காதல் கதை அல்லது மர்மக் கதை எழுது. பிரபலமாகி விடுவாய்’ என்றார் சார்.

‘சரி சார்’ என்றேன் சலிப்போடு.

‘நீ பொதுவாக என்ன மாதிரியான கதை எழுதுவாய்?’ என்று கேட்டார் சார்.

‘ஆன்மிக நோக்கு இருக்கும் கதைகள்’ என்றேன்.

‘அதற்கும் நல்ல வரவேற்பு இருக்குமே. சுலபமாக எழுதி விடலாம். ஒரே சூத்திரம்தான். கதாநாயகனுக்கு கஷ்டம் வரும். கடவுளிடம் வேண்டிக் கொள்வான். எல்லாம் சரியாகிவிடும். நானே கூட எழுதலாம்’ என்றார் சார்.

‘என்னுடைய ஆர்வம், ஆன்மிகத் தத்துவங்கள், மனிதப்பண்பாடு, மானுட அறங்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆராய்வது’ என்றேன்.

‘அடேங்கப்பா! உன் கற்பனா சக்தியை இப்படிப்பட்ட தேவையில்லாத விஷயங்களில் வீணடிப்பதற்குப் பதில், அதை வாடிக்கையாளர்களின் வருமான வரிக் கணக்குகளை எழுதப் பயன்படுத்தினால் நமக்கு வருமானம் பெருகும்’ என்றார் சார்.

‘சரி சார்’ என்றேன்.

‘என் பையனுக்குப் பள்ளிகூடத்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடக்கிறது. பிரெஞ்சுத் தலைவர் எவரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவனுக்குப் பரிசு கிடைக்கும்படியாக ஒரு கட்டுரை எழுதிக் கொடு’ என்றார் சார்.

‘கன்னிமாரா நூலகத்தில்தான் பிரெஞ்சுத் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் கிடைக்கும்’ என்றேன்.

‘நீ எங்கே வேண்டுமானாலும் போ. என்ன வேண்டுமானாலும் செய். மூன்று நாட்களுக்குள் எனக்கு கட்டுரை வேண்டும்’ என்றார் சார்.

‘இப்போதே கன்னிமாராவிற்குக் கிளம்புகிறேன்’ என்றேன்.

‘சரி’ என்றவர் தொடர்ந்து ‘உன்னுடைய ஐம்புரவித்தேர் கதை வந்த பத்திரிக்கை பிரதியை எனக்கு கொடப்பா. படம் பார்க்க வேண்டும்’ என்றார்.

சிரித்தேன். ‘வருகிறேன் சார்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.

ஆசிய கண்டத்திலுள்ள பெரிய நூலகங்களில் ஒன்று என்று பெயர் வாங்கியிருந்த கன்னிமாரா நூலகம் வாசிப்பாரின்றி, கவனிப்பாரின்றி, தூசி படிந்த புத்தகங்களோடு என்னை வரவேற்றது.

‘மாதாமாதம் பணம் அனுப்புகிறேன். வீடு நிறைய வேண்டிய சாமான்களை வாங்கி வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருங்கள்’ என்று கூறி வெளிநாடு சென்று விட்ட பிள்ளைகள் கைவிட்ட தனித்து வாழும் வயதான பெற்றோர்களை கன்னிமாரா நினைவூட்டியது. எவரும் பயன்படுத்தாத புத்தகங்களைப் பார்த்தபோது ‘கன்னிமாறா’ நூலகம் என்று பெயர் வைத்திருக்கலாமோ என்று தோன்றியது.

பல மாடிகள் கொண்ட நூலகத்தில் செய்தி, வாரப் பத்திரிக்கைகள், நாவல்கள், சமையல் புத்தகங்கள் உள்ள பகுதிகளான முதல் மாடியிலும், இரண்டாவது மாடியிலும் ஓரளவு கூட்டமிருந்தது.

அறிவியல், வரலாறு, தத்துவம், பொருளாதாரம் பற்றிய புத்தகங்கள் கீழ்த்தளத்தில் இருந்தன. மனித நடமாட்டமின்றி புத்தகங்கள் அஞ்சி உறைந்திருந்தன.

பிரெஞ்சுத் தலைவர்களில் எவரைப் பற்றி எழுதுவது? நெப்போலியன்? எல்லோரும் அவனைப் பற்றித்தான் எழுதுவார்கள். டூப்ளே? நன்றாக வாழ்ந்திருக்க வேண்டியவன். மனைவிமேல் கொண்ட பிரியத்தால் அவள் தவறான போக்கை ஆதரித்து அழிந்தவன். எதிர்மறையானவர்களைப் பற்றி எழுதுவதால் ஒரு பயனும் இல்லை.

ஜோன் ஆப் ஆர்க் நினைவிற்கு வந்தாள். உற்சாகமானேன். அப்போதே பரிசு வாங்கிவிட்ட உணர்வு உண்டாகிவிட்டது.

எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எந்த அடுக்கில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது இந்திய நூலகங்களில் உள்ள எழுதப்படாத சட்டம். அதனால் ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். ஸ்ரீ அரபிந்தோ என்று தலைப்பிட்ட முப்பது தொகை நூல்களும், மதர் என்று தலைப்பிட்ட பதினேழு தொகை நூல்களும், அஜெண்டா என்று தலைப்பிட்ட பதின்மூன்று தொகை நூல்களும் கண்களைக் கவர்ந்தன. அழகான கட்டமைப்பு. நல்ல காகிதம். சிறிது நேரம் அவற்றை வருடிக் கொடுத்தேன். இவற்றை வாசிக்க இப்போது நேரமில்லை. எனக்கு ஜோன் ஆப் ஆர்க்தான் வேண்டும். இத்தொகை நூல்களில் ஜோனைப்பற்றி எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

சிறிது நேரத்தில் ஜோனைப்பற்றிய மூன்று புத்தகங்கள் கிடைத்தன. அவற்றில் ஆழ்ந்தேன். என்னை மாணவனாக பாவித்துக் கொண்டு, எளிமையாக சிந்தித்தேன். பல வருட இலக்கியப் பயிற்சியை மறந்தேன். எழுதுவதில் மட்டும் தனிப்பட்ட கவனம் செலுத்தி அதில் மனத்தை ஒருமுனைப்படுத்தினேன். பிற அனைத்தையும் மறந்தேன்.

பூரணி கொடுத்தனுப்பியிருந்த மதிய உணவை நூலகத்திலேயே உண்டேன். மாலை நான்கு மணிக்குக் கட்டுரை தயாராகிவிட்டது. அதற்குமேல் அலுவலகம் செல்வது அவசியமில்லை என்பதால் வீடு திரும்பினேன்.

புன்னகையோடு வரவேற்றாள் பூரணி. ‘ஏன் சீக்கிரம் திரும்பினாய்?’ என்று கேட்டால்தான் என்ன? தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி எவரையும் எதுவும் கேட்க மாட்டாள். கேட்க நினைக்கவும் மாட்டாள் என்று தோன்றியது. அதனால்தானோ என்னவோ அவளிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் உண்டாகிவிடுகிறது. கன்னிமாரா சென்று கட்டுரை எழுதியதைப் பற்றிக் கூறினேன். ஒரு தட்டு நிறைய கேசரி கொடுத்தவள், ‘தெளிவான அழைப்பு! அபாரமான விழிப்பு!’ என்றாள்.

‘புரியவில்லை. ஆனால் கேசரி பிரமாதம்’ என்றேன்.

‘முந்தைய பிறவிகளில் ஸ்ரீ அரபிந்தோ நெப்போலியனாக இருந்தாராம். மதர் ஜோன் ஆப் ஆர்க்காக இருந்தாராம்’ என்றாள் பூரணி.

‘நான் கூட காளிதாசனாகவும், அதன்பின் கம்பனாகவும் இருந்திருக்கிறேன்’ என்றேன்.

‘அதனால்தான் உங்கள் கதைகளில் பெண்களைப் பற்றி வர்ணிக்கும்போது பேனாவில் மைக்கு பதில் மலைத்தேனை நிரப்பிக் கொள்கிறீர்கள் போலிருக்கிறது! ஆனால் எனக்கென்னவோ நீங்கள் விகடகவியாக இருந்திருப்பீர்கள் என்றுதான் தோன்றுகிறது. எதைச் சொன்னாலும் இடக்காக பேசுகிறீர்கள்’ என்றாள்.

நான் சிரித்தேன்.

‘உங்களுக்கும், ஸ்ரீ அரபிந்தோவிற்குமான போன ஜென்மத்து உறவு தொடர்கிறது’ என்றாள் பூரணி.

போன ஜென்மத்தைப் பற்றித் தெரியாது. ஆனால் இந்த ஜென்மத்தில் உறவு இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் என் அப்பா ஸ்ரீ அரபிந்தோவின் நிறுவனம் ஒன்றிற்கு மின்சார வேலை செய்து தந்தார். அவருடன் சென்றிருந்த அம்மா திரும்பி வந்தபின் ஒரு வாரம் அங்கிருந்த மலர்களைப் பற்றி புகழ்ந்து கொண்டே இருந்தார். ‘ஒரு முறைதான் போனார்களா? மீண்டும் போகவில்லையா?’ என்று இந்த இடத்தில் நீங்கள் கேட்க வேண்டும்’ என்றேன்.

‘நான் கேட்டாலும், கேட்காவிட்டாலும் சொல்லத்தானே போகிறீர்கள்’ என்றாள் பூரணி.

‘ஒரு வாரம் கழித்து அரசாங்கம் அப்பாவை ஐந்து வருடங்கள் வெளிநாட்டிற்குப் போய் வர ஆணையிட்டது. நான்கு மடங்கு அதிகச் சம்பளம் என்றாலும் சிறு குழந்தைகளை விட்டுவிட்டுப் போக முடியாது, படிப்பு கெட்டு விடும் என்று அப்பா மறுப்புக் கடிதம் எழுதிவிட்டார். அதற்கு அடுத்த வாரம் ஒரு வேடிக்கை நடந்தது. அதே போல ஆணை என் சித்தப்பாவிற்கு வந்தது. அவர் அதை உடனே ஏற்றுக் கொண்டு தன் குழந்தைகளை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்று விட்டார்! அதன்பின் அப்பாவிற்கும் பதவி உயர்வு வந்து வேறு பிரிவிற்கு மாறிவிட்டார். அதனால் மீண்டும் அந்த நிறுவனத்திற்கு போகும் வாய்ப்பு அவருக்கு ஏற்படவில்லை’ என்றேன்.

‘இந்த இடத்தில் ‘நீங்கள் போயிருக்கிறீர்களா’ என்று கேட்க வேண்டுமா?’ என்று கேட்டாள் பூரணி.

‘அரசியல்வாதிக்கும், மதவாதிக்கும் கேள்வி கேட்டால் பிடிக்காது. கேள்வி அவன் எதிரி. கதைசொல்லிக்கும், ஆன்மிக-- வாதிக்கும் கேள்வி கேட்டால்தான் மேற்கொண்டு சிந்திக்கவும், பேசவும் உற்சாகம் வரும். கேள்வி அவனது பிரிய தோழி’ என்றேன்.

‘நீங்கள் போயிருக்கிறீர்களா?’ என்று கேட்டாள் பூரணி.

‘எந்த நிறுவனத்தோடும் என்னைப் பிணைத்துக் கொள்ள நான் விரும்பியதில்லை’ என்றேன்.

‘உங்கள் தனித்துவமும், சுதந்திரமும் பறி போய்விடுமாக்கும்’ என்றாள் பூரணி.

‘ஆமாம்’ என்றேன்.

‘புறம் வேண்டாம் என்றாலும் அகம் விரும்புவதுதான் நடக்கும்’ என்றாள் பூரணி.

‘இன்னொரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. போன வருடம் வங்கித் தணிக்கைக்காக திண்டிவனம் போனேன். தாம்பரத்தில் பாலத்தைப் பழுது பார்க்கிறார்கள் என்று சொல்லி வண்டியைப் பாண்டிச்சேரி வழியே திருப்பி விட்டார்கள். வண்டியோ பாண்டியில் பழுதாகி நின்றுவிட்டது. சரி செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். கடற்கரைக்குப் போனேன். போகும் வழியில் ஸ்ரீ அரபிந்தோவின் சமாதி இருக்கும் வீட்டைப் பார்த்தேன். உள்ளே போகாமல் அப்படியே கடற்கரைக்குச் சென்று சுடச்சுட பட்டாணி, சுண்டல், குளிரக்குளிர கரும்புச்சாறு சாப்பிட்டு விட்டு திண்டிவனம் சென்று விட்டேன்’ என்றேன்.

‘சரியான ஜடப்பிரம்மம்’ என்றாள் பூரணி.

‘ஆன்மிகம் எனக்குப் பிடித்தமான விஷயம்தான். ஆனால் இதுதான் வழி என்று என்னை எந்த வகையிலும் குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. எதையும் நிராகரிக்கவும் இல்லை. எல்லா வழிகளையும் ஆராய்ந்து, பொருத்தமானவற்றை ஒன்று சேர்த்து வாழ விரும்புகிறேன்’ என்றேன்.

‘அது பூரண சிந்தனை இல்லாமல் வேறு என்னவாம்? மனிதனுக்குச் சுயமாக தெரிந்தெடுக்கும் சுதந்திரமான உரிமை உண்டு என்றாலும் சில விஷயங்கள் சிலருக்குத்தான் என்று இறைவன் நிர்ணயித்துவிடுகிறான். அதைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் மீற முடியாது’ என்றாள் பூரணி.

அழைப்புமணி வேகமாக ஒலித்தது. ‘நான் சீக்கிரம் திரும்பினால் மற்றவர்களும் அப்படியே செய்கிறார்கள்’ என்று கூறியபடி வாசல்கதவைத் திறந்தேன். எவருமில்லை. தரையில் மாதப் பத்திரிகையான ‘கல்பதரு’ வீசி எறியப்பட்டிருந்தது. எடுத்துக் கொண்டு உள்ளே வந்தேன்,

‘பூரணி, நீங்கள் வேலைக்குச் சேர்ந்த தினத்தன்று போன மாத ‘கல்பதரு’ வந்தது. வாடகை நூலகம் நடத்தும் பையன் பக்கத்து வீட்டில் போடுவதற்கு பதில் இங்கு போட்டுவிட்டான் என்று நினைத்தேன். அவன் வேண்டுமென்றே போட்டிருக்கிறான் என்று இப்போது தோன்றுகிறது. அடுத்த வாரம் வந்து பணம் கேட்பான்’ என்றேன்.

என்னிடமிருந்து வாங்கி கல்பதருவைப் புரட்டிய பூரணி, ஏதோ ஒரு பக்கத்தைக் கண்டதும், அதை கவனமாகப் படிக்க ஆரம்பித்துவிட்டாள். சில நிமிடங்கள் கழித்து என்னை நிமிர்ந்து பார்த்தாள். ‘ஆன்மிகக் கட்டுரை. படித்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்’ என்றாள்.

‘போனமாதம் இந்தக் கட்டுரை ஆசிரியர் பிரார்த்தனை மூலம் தொழிலை வளர்ப்பது எப்படி என்ற தலைப்பில் எழுதியிருந்தார். வியாபார விருத்தி யந்திரமோ, தாயத்தோ வாங்கச் சொல்வார் என்று நினைத்துக் கொண்டு, அதை வாசிக்கவேயில்லை’ என்றேன்.

‘இந்த மாதம் ஏழு வகையான அறியாமைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். உங்களுக்கு மிகவும் பயன்படும் என்று கூறி வாய்விட்டுச் சிரித்தாள் பூரணி.

கட்டுரையை வாசித்தேன். மீண்டும் வாசித்தேன். திரும்பவும் வாசித்தேன்.

சிறிது நேரம் தலைக்கு மேலே சுழன்ற மின்விசிறியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘உடனே கல்பதரு அலுவலகம் சென்று, இந்த எழுத்தாளர் எழுதியிருக்கும் புத்தகங்களை வாங்கி வருகிறேன்’ என்றேன்.

புன்னகைத்தாள் பூரணி.

‘நீங்களும் வாருங்களேன்’ என்றேன்.

‘ஓ’ என்று கூறி உடனே கிளம்பினாள் பூரணி.

என் மோட்டார் சைக்கிளில் பூரணி ஏறி, என் தோளைப் பற்றிக் கொண்டு பாதுகாப்பாக, பின்னிருக்கையில் அமர்ந்ததும், எதிர் வீட்டுப் பெண்மணி எங்கள் இருவரையும் கூர்ந்து பார்த்தாள்.

‘அவர் இரண்டு புத்தகங்கள்தான் எழுதி இருக்கிறார்’ என்று பத்திரிக்கை ஆசிரியர் கூற, ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள் வாங்கினேன். பத்திரிக்கை ஆசிரியரும் பிரபல எழுத்தாளர்தான் என்றாலும் அவர் எழுதிய நாவல்களை வாங்க எனக்கு விருப்பமில்லை. பூரணி வாங்கினாள்.

வீடு திரும்பும்போது ‘வாசிப்பதற்காக வாங்கவில்லை. அவருக்கு நன்றி சொன்னேன்’ என்றாள் பூரணி.

தேனாம்பேட்டையிலிருந்த ஒரு புத்தகக் கடையைக் கடந்தபோது, காலையில் நான் நூலகத்தில் பார்த்த புத்தகங்கள், கண்ணாடிப் பெட்டியில் இருப்பது கண்ணில் படவும், வண்டியை நிறுத்திவிட்டேன். ‘இத்தனை நாளாக இவை கண்ணில் படவே இல்லை’ என்றேன். அறுபது புத்தகங்களையும் வாங்கும் ஆர்வம் எழுந்தது. இவ்வளவு செலவு செய்தால் பூரணி என்ன சொல்வாளோ!

‘வாசிக்காதவன் மூட நம்பிக்கையோடு ஒரு புத்தகம் வாங்கினால்கூட தப்பு. வாசிப்பவன் புத்தகக் கடையையே வாங்கினாலும் தப்பில்லை’ என்று கூறிக் கொண்டே கடைக்காரரிடம் எல்லா புத்தகங்களையும் கட்டச் சொன்னாள் பூரணி.

சந்தோஷத்தோடு நான் மோட்டார் சைக்கிளிலும், புத்தக மூட்டையோடு பூரணி ஆட்டோவிலும் வீடு திரும்பினோம்.

(தொடரும்)

********book | by Dr. Radut