Skip to Content

10. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

P. நடராஜன்

காணாமற்போன பொருள் அன்னைக்குக் காணிக்கை வைத்தவுடன் கிடைத்த அனுபவம்

காணாமற்போன பொருள் அன்னைக்குக் காணிக்கை வைத்துப் பிரார்த்தித்தவுடன் கிடைப்பது அன்பர்களுக்குப் புதியது அல்ல. ஆனால் ஸ்ரீ அன்னையின் அருள் செயல்படும் நுணுக்கம், சிதம்பரம் அன்பர் K. ரமேஷ் அவர்களின் அனுபவம் வழியாக சிறிதளவு எனக்குப் புரிந்தது.

அன்பர் Apple iPod என்ற இசைக் கேட்கும் கருவியைப் பயன்படுத்துவது வழக்கம். சார்ஜ் போடவேண்டி Charger Cable-ஐ iPod வைத்திருந்த பெட்டியில் பார்த்தால் காணவில்லை. பொருள்களை நன்கு வைத்துக்கொள்ளும் நெறியானவர் இவர். அலமாரி, ஷெல்ப் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. Apple electronic பொருட்களின் spares மற்ற கம்பெனி பொருட்கள் போல் எளிதில் கிடைப்பதில்லை. எனவே மனதில் சங்கடம் எழ, அவரது தம்பியிடம் வேறு ஒரு கேபிள் கிடைக்குமா எனக் கேட்டதற்கு, அவரும் கிடைக்கும் கீண்.1000/-த்திற்குமேல் இருக்கும் என்று கூறினார்.

மனதில் அமைதியை வரவழைத்துக்கொண்டு, அன்னையின் திருவுருவப் படத்தின்முன் காணிக்கை வைத்து, ‘அன்னையே என் தவறு கேபிளை கவனமாக வைத்துக் கொள்ளாதது’ எனப் பிரார்த்தித்து, மீண்டும் ஒருமுறை அலமாரியில் தேடிவிட்டு கம்ப்யூட்டரில் அவரது வேலையைப் பார்க்கப் போனார்.

வேலையை முடித்துவிட்டு பொருள்களை மீண்டும் எடுத்த இடத்தில் வைக்கும் போது, அந்த iPod பெட்டி கம்ப்யூட்டர் மேல் இருந்ததை, இது ஏன் இங்கிருக்கிறது! என எண்ணியபடியே எடுத்து வைக்கப் போனால், பக்கத்தில் ஒரு கறுப்புப் பெட்டி இருக்க, அதைத் திறந்து பார்த்தால், அதனுள் charger கேபிள் இருந்திருக்கிறது. சந்தோஷத்துடன் அன்னைக்கு நன்றி சொல்லி மீண்டும் அதை iPod பெட்டியில் பத்திரப்படுத்தினார்.

அன்னையிடம் காணிக்கை வைத்த ஒரு மணி நேரத்தில் பொருள் கிடைத்துவிட்டது என சந்தோஷத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அந்த iPod பெட்டி எப்படி அங்கு வந்தது என நான் கேட்டபோது, முதலில் charger கேபிள் இல்லை என்றவுடன், iPod பெட்டியை அலமாரியில் வைத்து விட்டதாகவும் பின் அன்னையிடம் வேண்டியபின் மீண்டும் தேடிய போது, கை மறதியாக அப்பெட்டியை computer மீது வைத்தாகவும் கூறினார்.

தேடும் போது கை மறதியாக வைத்த iPod பெட்டிக்குப் பக்கத்தில்தான் கேபிள் இருந்த பெட்டி இருந்துள்ளது.

அன்னையிடம் கூறியவுடன் அருள் iPod-ன் ஜீவனைத் தீண்டியதால் அதுதானாகவே தனக்குச் சொந்தமான கேபிள் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டது.

iPod அதன் பொருளை அதுவே தேடிக் கொண்டது.

*********

ஜீவிய மணி

எதிரியைக் கொன்று வெற்றி வாகை சூடியது ஒரு காலத்து நீதி. எதிரியுடன் சமாதானம் செய்து அமைதியாக வாழ்வது அடுத்த காலத்தில் நீதியாகக் கருதப்பட்டது. எதிரி இல்லாமல் இருப்பது, எதிரியுடன் ஒத்துழைத்து அவர் உயர்வு பெறுவது என்ற நீதி அதற்கு அடுத்த நிலை. கொல்வது ஜடமான உடலுக்கு உரிய நீதி. சமாதானம் செய்வது உணர்வுக்கு உரியது. ஒத்துழைப்பது அறிவின் நீதி. ஆன்மாவுக்கு உரிய நீதி எது?

Each is in all, all is in each

நான் உன்னிலும், நீ என்னிலும் இருப்பது ஆன்மாவுக்கு உரிய நீதி. இதை நடைமுறையில் பின்பற்றுவது எப்படி? உனக்கு இழைக்கும் தீங்கு எனக்கு இழைக்கப்படுவதாக நான் உணர்வதும், நீ என்னைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றி என் வெற்றி என உணர்வதும் ஆன்மிக நியதியாகும்.

***********



book | by Dr. Radut