Skip to Content

08. பாரதம் நமக்குக் கற்றுத் தரும் நுணுக்கமான உண்மைகள்

பாரதம் நமக்குக் கற்றுத் தரும் நுணுக்கமான உண்மைகள்

கர்மயோகி

வியாசர் எழுதியது மகாபாரதம். இதிலில்லாதது உலகிலில்லை. கிருஷ்ணாவதாரம் செய்தது சிஷ்ய பரிபாலனம். அதை நிறைவேற்றியது துஷ்ட நிக்ரஹம். இது இதிகாசம். இந்நூல் நமக்குத் தருபவை நுணுக்கமான உண்மைகள். அதில் முதலானது முதன்மையானது. கிருஷ்ணன் செய்ததை நாம் செய்ய முடியாது. சொல்லியதைச் செய்ய வேண்டும். இதன் நடைமுறை வீட்டில் நாம் செய்வது குடும்பம். பாரதம் படித்தால் கலகம் வரும். படித்தால் கலகத்தை எழுப்பக்கூடிய நூல் உலகில் உள்ள அனைத்தையும் உட்கொண்டது என்பது நுட்பம். உலகுக்குக் கட்டுப்பட்ட உத்தம புருஷனால் மனைவியின் கற்பைக் காப்பாற்ற முடியாது. அதைத் தெய்வம்தான் காப்பாற்றும் என்ற சூட்சுமத்தை நுணுக்கமாக உணர்த்தும் நூல் பாரதம். பாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் வெற்றி பெற்றது. அது சூட்சுமமாக வெற்றி பெற்ற நேரம் திரௌபதி மானம் காப்பாற்றப்பட்ட சபை. முனிவர் தந்த வரமான மந்திரத்தால் சூரியன் என்ற கடவுளுக்குப் பெற்ற பிள்ளையை கன்னியால் காப்பாற்ற முடியாது. உலகம் திருமணம் என்ற ஸ்தாபனத்தை ஏற்பது சூரியனை ஏற்பதைவிட முக்கியம் என்பது பேருண்மை. சூரிய புத்திரனும் தேரோட்டி புத்திரனானால் உலகம் ஏற்காது, தாயாரும் ஏற்க மாட்டாள், தர்மமும் அவனுக்குக் கை கொடுக்காது. பிறந்தவுடன் கழுதையாகக் கத்திய துரியோதனன் தீமையின் திருவுருவம். இருளின் இன்றியமையாத தெய்வம். அவனே ஆதரிப்பான், அந்தரங்க நண்பனாவான். உண்மைகள் பெரியவை. ஆத்மாவை உலகில் வெளிப்படுத்துபவை. ஆனால் அவை சூட்சுமமாகவே வெளிப்படும். அதை அறிய மனிதன் நுணுக்கம் பெற்றவனாக இருக்க வேண்டும். கற்புடைய மனைவி ஐவரைக் கலந்த தேவி. திரௌபதியை அம்மனாகக் கோயில் கட்டி மக்கள் வழிபடுவது போல் இராமனை, கிருஷ்ணனை, விநாயகரை, முருகனை வழிபடவில்லை. அவள் வழிபாடு காலை நெருப்பு சுடாமல் காப்பாற்றும். ஆச்சாரியர் அனைத்தும் அறிந்தவர். கர்ணனை “வா, குந்தி புத்ரா” என அவர் வரவேற்றபொழுது கர்ணன் ஆச்சரியப்பட்டான். உலகம் அறியாத உண்மையை அறியவல்ல ஞானம் பெற்றவர் ஆச்சாரியர். அவருக்கும் அவமானம் உண்டு. பழி வாங்கும் மனப்பான்மையுண்டு. பழிவாங்க சபதம் செய்வார். செய்த சபதம் நிறைவேறும். அவமானப்படுத்திய நண்பனைக் கட்டி இழுத்து வர அவர் சிஷ்யனால் முடியும். இத்தனையும் அவர் குழந்தைக்குப் பால் பெற்றுத் தராது. ஞானம் செல்வம் ஈட்டாது என்பது சூட்சும ஞானம். அஸ்வத்தாமன் இறந்தான் என்ற பொய் செய்தியின் உண்மையை அறிய அவருடைய பெரிய ஞானம் போதாது என்பது உண்மை. மானத்தைக் காக்க பெண் அலறுகிறாள். ‘பெண் பாவமன்றோ, பெண்களுடன் பிறந்தீர்’ எனக் கேட்ட கற்புக்கரசியின் கற்பைக் காக்க முன்வர துரோணருடைய ஞானமும் பீஷ்மருடைய பிரம்மச்சரியமும் உதவாது என்ற உண்மையை பாரதம் நமக்குக் கற்றுத் தருகிறது. தருமனால் முடியாததை, பீஷ்மர், துரோணரால் முடியாததை இன்று அன்பனால் நிறைவேற்ற முடியும் என்பது அன்னை சூழல் நுணுக்கமாக நமக்குக் கூறுவது. ரிஷிகள் அதிதிகளாக வந்தபின் செய்வதறியாத திரௌபதி கிருஷ்ணனை அழைக்கிறாள். மாம்பழம் மரத்திலிருந்து விழுந்ததைக் கண்ட கிருஷ்ணன் ஆபத்தை உணர்ந்து அழைக்காமல் வருகிறான். அன்னை செயல்படும் வகை வேறு. எதிரி 10 ஆண்டிற்குப் பின் பொய் கேஸ் போடப் போவதை முழுவதும் முறியடிக்க வாதியே அறியாத முக்கிய தஸ்தாவேஜை (document), அன்னை அனுமதியளித்ததை, எதிரி கைதவறி வாதிக்கு அனுப்பிய file-களில் வைத்து அனுப்பச் சொல்கிறார். வாதி கேட்பதை எதிர் வக்கீல் தன் பிராதில் எழுதிக் கேட்கிறார். ஜட்ஜ் அந்த டாக்குமெண்டை மனப்பாடம் செய்து கோர்ட்டில் 3 முறை கூறி “இதுவே Beauty Land-இன் constitution” என்றார். இது என்ன பாதுகாப்பு? இதை எந்தச் சூட்சுமம் எந்த நுணுக்கத்தால் அறிய முடியும். ஏக்கரில் அயன் நஞ்சை 400 ரூபாய் தரும் நாளில் புஞ்சை 1000 தரும் என்பதை அன்னை நிரூபித்தார். அதன்பின் குடிசைத் தொழிலால் ஒரு ஏக்கர் 64,000 ரூபாய் 1970-இல் சம்பாதிக்க எதுவுமில்லாதவருக்கு 200 ஏக்கர் நிலம் வாங்க பார்ட்னரை அன்னை அளித்தார். மகாபாரதம், யுதிர்ஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மா, திரௌபதி, துரோணர் கூறும் உண்மைகள் உலகில் பெரியவை. இந்திய ஆன்மிகம் தவிர வேறெதுவும் அறியாத ஞானம், வாழ்வின் சூட்சுமமான நுணுக்கங்கள். நாம் இன்று நம் வாழ்வில் செய்யக் கூடியது என்ன?

அன்பர்கள் பாரதத்தைப் படித்தால் Life Response-ஐ பல கோணங்களில் அறியலாம். இரண்டாவதாக சூட்சும லோகம். சூட்சும ஞானம். சூட்சும சூசகங்களை அறியலாம். முக்கியமாக அன்னை கூறியவற்றையும், அன்னை நம் வாழ்வில் செயல்பட்ட வகைகளையும் பூரணமாக அறிய, அவற்றின் சூட்சும நுணுக்கங்களை முழுவதும் அறியலாம். பல ஆண்டுகளாக ஒரு பிரச்சனையிருக்கும். அது வியாதியாகவுமிருக்கும். அது diabetics எனக் கொள்வோம். அவரே அன்பரானால், ஏதோ ஒரு வகையில் மனம் வியாதியை ஏற்றுக் கொண்டதால் அது இருப்பதை அவர் அறியார். திரௌபதியின் மாங்கனி கூறுவது: மனம் ஏற்பதை அறிவதால் எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனை தீரும். மரத்திலிருந்து விழுந்த பழம் மீண்டும் மரத்தையடையும் என மனம் பார்த்தபிறகும் நம்பாது. Diabetics விஷயத்தில் மனம் நாலுபேர் நம்புவதையே நம்பும். ஒரு அமெரிக்கருக்கு Diabetics வந்தது. டாக்டரிடம் போனார். மருந்தாலும் குணப்படுத்தலாம். உணவாலும் குணப்படுத்தலாம் என்றார். வந்தவர் உணவை ஏற்றார். Diabetics-ஐப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. Sugar 1300-க்கு வந்து மயக்கம் போட்டு கோமாவிலிருந்தவர் 3 மாதம் ஆஸ்பத்திரியிலிருந்து, வெளிவந்து, சொந்தமாக பல்வேறு பரிசோதனை செய்து வியாதி, மருந்தைவிட உணவால்தான் நிரந்தரமாகக் குணமானதைப் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த அமெரிக்கர் அந்த புத்தகத்தைப் படித்தார். பயின்றார். Diabetics குணமாயிற்று. சொந்தமாக சோதனைகள் செய்தார். பூரண குணம் பெற்றார். இன்று 15 வருஷமாக சுகமாக இருக்கிறார். இதுபோன்ற நூல்களைப் பயில்வதாலும், உணவே குணப்படுத்தும் என்று அறிவதாலும், ஆயுர்வேதம் சித்த முறைகளை அறிவதால் மனம் பெற்ற நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் அசைந்து கொடுத்தால் 3 நாள் பிரார்த்தனை குணப்படுத்தும். இந்த விதிக்கு விலக்கு: தெரிந்தோ, தெரியாமலோ நெருங்கியவர் வியாதியைப் பிரியத்தால் ஏற்றவர்க்கு இந்த முறையோ, எந்த முறையோ பலிக்காது. அவர்கட்கு மருந்து அவசியம். அவருக்கும் பகவானிடம் வழியில்லாமலில்லை. அது கடினம். பொறுப்பற்றவருடைய பொறுப்பை ஏற்பது அறிவீனம். உயர்ந்த பக்தியில் அதை ஏற்பது “தன்னால் முடியாததை ஏற்பதாகும்.” எதுவும் முடியும் என்றாலும் அதற்குரிய முறையால் முடியும். முறையை அடமாக விலக்குபவர் பிரச்சனையை அடுத்தவர் ஏற்பது சரியில்லை.

அவரவர் பிரச்சனையை அவரவரே தீர்க்க வேண்டும் என்பது சரி. அதை மீறி, பிரியத்தால் ஒருவர் அடுத்தவருக்காக ஆயிரம் செய்ய முடியும். அது பிரியம், பாசம், பரோபகாரம். அதற்கும் எல்லையுண்டு. ஒருவருக்காக அடுத்தவர் படிக்க முடியாது, சாப்பிட முடியாது, மருந்து சாப்பிட முடியாது, — exercise செய்ய முடியாது, மேற்சொன்னது இத்தலைப்பில் வருவதாகும். இதற்கும் வழியில்லாமலில்லை என்றேன். அவர் மீதுள்ள பாசத்திலிருந்து விலகிச் செய்யும் சமர்ப்பணம் அவர் மனம் மாறி, நிலைமை மாறி தானே மருந்து சாப்பிட, — exercise செய்ய, சாப்பிட, படிக்க ஆரம்பிப்பார். இது மலையைப் புரட்டுவது. நெடுநாளாக இதற்கு நான் கூறும் உதாரணம் ஒன்றுண்டு. நாம் சென்னையிலும் அண்ணன் அமெரிக்காவிலுமிருந்தால் அவர் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க அவர் அதை அனுப்பாம- லிருந்தால் நாம் போய் அதை வாங்கி வரலாம். இது முடியும் என்றாலும் அர்த்தமற்ற வேலை, செய்வது சரியில்லை. ஒரு முறை செய்தால் பல முறையும் அதையே செய்ய முடியாது. உரித்த வாழைப்பழ சோம்பேறிக் கதை உற்பத்தியானது அப்படியே. அரசியல்வாதி தன் மகன் B.L.. பரிட்சைக்குப் படிக்கவில்லையென கேள்விப்பேப்பரை வாங்கிக் கொடுத்தார்! அவன் பெயிலானான்! தகப்பனார் கேட்டதற்கு மகன் “நான் கேள்விப் பேப்பரை என்ன செய்ய, விடையெழுதிய பேப்பர் அவர் எனக்குத் தரவில்லையே” என்றான். இவை போகாத ஊருக்கு வழி கேட்பதாகும். விதிவிலக்கை நாமும் விலக்குவோம்.

பாரதம் சூட்சுமம், நுணுக்கம்

எது சூட்சுமம், எந்த நுணுக்கத்தால் நாம் அதையறியலாம்? கர்ணன், குந்தி புத்திரன் என்பதை எவரும் கூறாமல் அறியும் ஞானம் உள்ள ஆச்சாரியருக்கு 1) குழந்தைக்குப் பால் பெறும் திறனில்லை, 2) அஸ்வத்தாமன் உயிரோடிருக்கும்பொழுது அவன் இறந்தான் எனக் கேட்ட சொல் பொய்யெனத் தெரியவில்லை.

முதலில் கூறியது செல்வத்தின் சூட்சுமம். இரண்டாவது கூறியது ஞானம் முழுமையுடையதல்ல என்பது. துருபதனை ஆச்சாரியர் சிஷ்யன் தோற்கடித்து கட்டிப்போட்டு அவர் காலடியில் போட்டது வில்வித்தை கொடுத்த பவர். எதிரியை வெல்லும் திறமை. செல்வம் சமூகத்திற்குரிய பவர். எதிரியை வெல்வது தனிப்பட்ட சாமர்த்தியம். பணம் சம்பாதிப்பது தனிப்பட்டதல்ல. ஒருவர் செல்வத்தை உற்பத்தி செய்ய முடியாது. ஒருவரால் நெல் பயிரிட முடியும். மாம்பழம் பயிரிடலாம். பலரும் இணைந்து ஒருவரை ஒருவர் சூட்சுமமாக நம்பி அதன் சிம்பலாக எழுவது பணம். பலராலும் உற்பத்தி செய்யப்பட்ட பணம் தனிப்பட்டவர் கற்ற வித்தைக்குக் கட்டுப்படாது என்பது சூட்சுமம். ஆச்சாரியருடைய வித்தை கர்மத்திற்குக் கட்டுப்பட்டதால் அஸ்வத்தாமன் செய்தி புலப்படாது. அன்னை கர்மத்தைக் கட்டுப்படுத்துவார். செல்வம் ஈட்டுவார்.

இலக்கிய நயம் ஈடுபாட்டுடன் பயில்பவர்க்கே தெரியும். ஓட்டமும் நடையுமாகப் படிப்பவர் கண்ணில் படாது. நாம் கருதுபவை ஆன்மிக சூட்சுமங்கள். பாரதம் கூறும் எந்த நிகழ்ச்சியிலும் அந்நுணுக்கங்கள் இல்லாமலில்லை. அதிகபட்ச முக்கியத்துவம் உள்ளவை பிருந்தாவனம். உலகில் இந்தியாவில் தவிர எங்கும் ஆன்மிகம் வளரவில்லை. உலகம் முழுவதும் பரவிய மதங்கள் ஆன்மிக அடிப்படையில் பரவியவையல்ல. ஒரு மகானுடைய ஆன்ம விழிப்பை உலகம் ஏற்பதால் வளர்ந்தது மத வழிபாடு. இந்தியாவில் மதவழிபாடும், குடும்ப வாழ்வும், அரசியலும் பொது வாழ்வும் ஆன்மிக அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டவை. ஆசிரமங்களில் வாழ்ந்த ரிஷிகள் உலக வாழ்வுக்கு வழிகாட்டியானார்கள். அதன் நுணுக்கங்கள் முழுவதும் பாரதத்திலுள்ளன. பொதுவாக நாம் அதையறிவோம். குறிப்பாக அறிய ஞானம் வேண்டும். பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவதரித்தபின் ஆன்மிகம் பரிணாம வளர்ச்சி பெற்று சத்திய ஜீவியமாகும் காலம் பிறந்தது. அது புது ஆன்மிக யுகம். அவருக்கு முதல் சித்தி ஜெயிலிலும் அடுத்தது புதுவையிலும் கிடைத்தது. 1956-இல் அவர் இலட்சியம் புவியில் பூர்த்தியாகி விட்டது.

அன்னை வாழ்வின் பல ஆயிரம் நிகழ்ச்சிகளை நாம் அறிவோம். அவர் கோட்பாடுகள் அனைத்தையும் நாமறிவோம். பாரதத்தின் சூட்சுமங்களை அறியாதவர் அன்னையை அறிவதால் அதன் மூலம் தெளிவாக அறியலாம்.

13 நாட்களில் 13 ஆண்டுகள் முடிந்ததை பரமாத்மா கூறியபொழுது தர்மபுத்திரரால் அதை ஏற்க முடியவில்லை. அதன் சூட்சுமம்: காலம் நிலையானதல்ல. காலம் மனிதன் நிர்ணயிப்பது. யுதிர்ஷ்டிரர் ஏற்காததால், 13 ஆண்டுகள் வனவாசமிருக்க வேண்டி வந்தது. ஏற்காத மனிதருண்டு. சூட்சுமத்தையறியாதவருண்டு. அருளை ஏற்காதவருண்டு. பாரதம் சூட்சுமத்தைக் காட்டும், ஊட்டாது. அன்னையின் சூட்சுமத்தை அறியாதவர், ஏற்காதவரை அன்னை கைவிடுவதில்லை. சூழலை மாற்றி அவரறியும்படி செய்வார். பிறர் மூலம் அந்த அனுபவத்தைத் தருவார். அப்படி மனம் மாறி ஏற்றவரை அருள் ஏற்கும். அருள் பேரருளாகப் பலிக்கும். பொய்யில் ஊறி அருளை அடமாக மறுத்தால் அருள் செயல்பட்டு பலித்தபின் இருளை ஏற்று நடந்தால் அருள் பலிக்காது, ஆனால் விலகாது. தடை விலகியவுடன் பலிக்கும். பலிக்கத் தவறாது. அருள் அடுத்தத் தலைமுறைவரை காத்திருக்கும். அதன் பிறகும் பலிக்கும். தர்மபுத்திரர் மறுத்ததால் விலகிய அருள் மீண்டும் அவர் வாழ்வில் வந்து பலிக்கவில்லை. ஒரே முறை தரிசனம் செய்தவர் அந்த ஆண்டில் அவர் சம்பளம் போல 10 மடங்கு சம்பாதித்தபின் குதர்க்கமாக இருளை நாடி அழிந்தார். அவர் அழிந்தபின் அவர் தரிசனம் பெற்ற அருள் அடுத்த தலைமுறையில் 1000 மடங்கு பலித்தது. இது பாரதம் அன்பர்க்குக் கூறுவது.

திரௌபதி சுயம்வரத்தில் ஜராசந்தன் மணப்பெண்ணை கடத்திச் செல்லக் காத்திருந்த செய்தி பரமாத்மாவுக்கு வந்தது. அவனுக்கு எச்சரிக்கை செய்ய விரும்பினார். போனவர் தன் ஆயுதங்களை அவன் பாசறைக்கு வெளியே வைத்துவிட்டுப் போனார். எதிரியை எதிர்கொள்ளும்பொழுது தன் வலிமையை நம்பாமல் செயல்படுவது அன்னை சக்தி செயல்பட உதவும். பாரதத்தில் அதைப் பரமாத்மா மட்டும் செய்யலாம். எல்லோரும் செய்ய முடியாது. சட்டம் உண்டு. அந்த நாளில் அது பலிக்க ஒருவர் பரமாத்மாவாக இருக்க வேண்டும். அன்னை பக்தர்கள் அனைவருக்கும் அந்தச் சட்டம் செல்லும். பிரபஞ்சத்தில் உள்ள தெய்வீக சக்திகளைப் பாரதம் சுட்டிக்காட்டுகிறது. அது போல் பாரதம் காட்டத் தவறிய பவர், சட்டம், சூட்சுமமில்லை. அன்னை அதுபோன்ற அனைத்தையும் அன்பர்கள் வாழ்வில் செயல்படச் செய்கிறார். பிரார்த்தனையாலும் அதை அன்பர்கள் பெறலாம். பிரார்த்திக்காதவருக்கும் சூழலாய், நாட்டின் சட்டமாக, புது வாழ்வின் பொலிவாக அவை எழுந்து தானே செயல்படும். யுத்தத்திற்கு நரபலி வேண்டும் என்பது பிரபஞ்ச சட்டம். பாரதப் போருக்கு அரவான் பலியிடப்பட்டான். சட்டம் உண்டு, காலம் மாறினால், அருள் உலகில் செயல்பட்டால், அன்னையே அவதாரமாக இருந்து காரியங்களை நடத்தினால், நரபலி தவிர்க்கப்படும். அதையும் செய்தபின் வைதிகர் நேரத்தை மாற்றியமைத்ததால் ஆசிரம வாயிலில் ஓர் சாதகர் ஆகஸ்ட் 15, 1947 அன்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

தெய்வமானாலும், மனிதப் பிறவி எடுத்தபின் மனிதச் சட்டத்திற்கு உட்பட வேண்டும் என்பது உண்மை. சூரிய புத்திரனும் தேரோட்டி மகனாகவே நடத்தப்படுவான் என்பது கர்ணன் வாழ்வு கூறுவது. அன்னை சூழலின் மகிமையை ஆழ்ந்து பூரணமாக உணர்ந்தவர்கள், பாரதம் கூறும் உண்மையிலிருந்து இரு விஷயங்களை அறியலாம். 1) கர்மத்தை மீற முடியாதது போல் காலத்தின் - சமூகத்தின் - சட்டத்தை மீற மனிதனால் முடியாது, 2) வாழ்வின் கடுமையை காலம் பாரதத்தில் காட்டுவதை நன்குணர்ந்தவர் அதை மீறும் சக்தியையுடைய அன்னை அருளின் மகிமையை அறியலாம். Prince and the Pauper இல் “உடை என்ன செய்யும், உள்ளதே முக்கியம்” எனக் கூறி அரண்மனையை விட்டு வெளியேறிய இராஜகுமாரன் உடை மட்டுமே முக்கியம் எனக் கண்டான். பன்றியை அவன் திருடவில்லை. அதற்காக அவன் தூக்கு தண்டனையை எதிர்நோக்கினான். ஓராண்டு சிறைவாசம் கிடைத்தது. ஜெயிலுக்கும் பிறகு போனான். சாட்டையடியும் வழங்கப்பட்டது. இராஜகுமாரன் என்பது அரண்மனையில் உண்மை. வெளியில் திருடனின் மகன் என்பது மட்டுமே உண்மை என ஒரு 10 அல்லது 15 நாட்களில் எட்வர்ட் புரிந்து கொண்டான். அரச வாழ்வை விட்டு எளிதில் வெளியேறலாம். மீண்டும் உள்ளே வர முடியாது என்பது உண்மை. காலம், கர்மம், சமூகம் ஒரு கட்டுக்கோப்பு. அதனுள் உள்ளவரைதான் அதன் பாதுகாப்புண்டு. வெளியில் வந்தால் அது இல்லை. மனித வாழ்வுக்குப் புறத்தோற்றம் மட்டுமே முக்கியம் என்பது கர்ணன் வாழ்வில் வெளிப்படுவது பேருண்மையானாலும் அன்னை ஒளி அக்கட்டுக்கோப்பை விட்டு ஒருவரை வெளியில் எடுத்து அவருக்கே உரியதை - அன்னை அவருக்குக் கொடுத்ததை - அனுபவிக்க உதவும். விதுரன் விவேகத்திற்குப் பேர் போனவன். வியாசருக்குப் பிறந்தவன். அவர் விவேகமும், வியாசர் ஆன்மிகமும் “வாழ்வில்” செல்லாது. தர்மம், சத்தியம், நியாயத்தைக் காக்கும் நேரம் வந்தால் அவர் உள்ள இடமே பேசும். மற்றவை அனைத்தும் வெறும் பேச்சு. பீஷ்மர் பிதாமகன். பிரம்மச்சாரி. பிரம்மத்தை வணங்குபவன் பிரம்மச்சாரி. அது ஆன்மிக உண்மை. வாழ்வில் திருமணமாகாதவனை “பிரம்மச்சாரி” என்பர். பீஷ்மர் வாழ்வு தூய்மையானதே, ஆனால் அவரது பிரம்மச்சரியம் அவர் மனம் ஏற்றதல்ல. அவரே விரும்பி ஏற்ற விரதமல்ல. சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் மனத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். வலியச் செய்யும் கட்டுப்பாடு வன்முறையாகும் என்பது ஆன்மிகச் சட்டம். கட்டுப்பாடு கடுமையானால் பாதாளத்தில் எழும் வன்முறையும் கடுமையாகும் என்பது வாழ்வையும், தவத்தையும் கடந்த ஆன்மிக உண்மை. அவ்வுண்மையின் புற உருவம் அம்புப்-ப டுக்கை. உடல் பெற்ற வேதனை. உடலின்பம் உயிருக்குரியது இயல்பு. குடும்பஸ்தன் அனுபவிப்பது. தபஸ்வி தன் தபோபலத்தால் உடல் நாடும் இன்பத்தை ஆன்மா அறியும் இன்பமாக மாற்றுகிறான். பீஷ்மர் தவத்தை மேற்கொள்ளவில்லை. மறுத்த சுபாவத்தை மாற்ற முயலவில்லை. தகப்பனாருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விரதத்தை மேற்கொண்டார். சுபாவத்தின் தன்மை விரதத்தின் சக்தியை மீறக்கூடியது என்ற அடிப்படை உண்மை அவருக்கு அம்புப்படுக்கையில் உடல் வேதனையைக் கொடுத்தது. இயற்கை நியதிகளை ஓரளவு மீறலாம், மீறுவதற்கு முறையுண்டு. பீஷ்மர் அம்முறையை ஏற்கவில்லை. நியதியை மீற முயன்றார். புறவாழ்வில் புனிதன் என்று பெயர் வந்தது. ஆனால் திரௌபதியைக் காக்கும் திறன் பெறவில்லை. பரமாத்மாவின் தூதை ஏற்கும்படி துரியோதனனுக்குக் கூற முடியவில்லை. “செஞ்சோற்றுக் கடன்” என தன் நிலைமையை அறிந்தார். “சோறு” என்பது செல்வம் தருவது. ஆன்மிகம், விரதம், பிரம்மச்சரியம், சபதம், தூய்மை ஆகிய அனைத்தையும் செல்வம் மீறியது. ஆன்மிக வாழ்வின் அடிப்படைக்குச் செல்வம் முக்கியம் என பகவான் கூறுவதன் பொருளை இதன் மூலம் பாரதம் எடுத்துக்காட்டுகிறது. முழுமை எழும்பொழுது பகுதியானாலும் அதன் குறை தன்னை வலியுறுத்தும். இதுவரை எழாத “குறை” முழுமையை நாடும்பொழுது எழுந்து குரல் கொடுத்து “நானிருக்கிறேன், என்னைப் புறக்கணிக்க முடியாது” எனக் கூறுகிறது.

12 ஆண்டு வனவாசம் முடிந்தபின் ஓராண்டு அஞ்ஞாத வாசம் உண்டு. இதன் முக்கியத்துவம் உலகம் அறியும். ஆன்மிக உண்மை பேருண்மையைக் கடந்த பெரிய சத்தியம். நாளடைவில் அது படிப்படியாக இறங்கி வரும், மாறும், உருமாறும், திருவுருமாற்றமும் பெறும் போலும். தமிழ்ப் பண்பில் பெண் வீரனை விரும்பி மணப்பாள். வீரன் என்பவன் போரில் எதிரியை வெல்பவன். புறமுதுகு காட்டாதவன். உயிரைவிட வீரத்தை முக்கியமாகக் கருதுபவன். வீரன், சூரன், தீரன் என்பவர்கள் உலக வாழ்வு உயிரைக் காப்பாற்றும் வாழ்வாக இருந்த நாளில் ஊருக்கு முக்கியமானவர்கள். சிறுபடையைத் தலைமை தாங்கி பெரும்படையைத் தாக்க முனைவது போர்க்களத் தர்மப்படி அறிவீனம். பெரும் வீரனான சர்ச்சில் அதுபோன்ற நேரம் சரணடைவது அறிவுடைமை என முன்னோர்களைச் சான்று கூறிப் பேசுகிறார். வீரம் எழுந்தால் அது போர் தேஜஸ் பெற்றதாகும். இராமபிரான் விபீஷணனை நோக்கி “தேஜோமயமாய் எதிரில் நிற்பவன் யார்?” எனக் கேட்டபொழுது அவனே இராவணன் என அறிந்தார். தேஜஸ் அறிவுச்சுடர். தைரியம் செயல்படும்முன் வேள்வித்தீயாக எழும். அது தலைவனுக்கு மட்டும் உதவும் சுடரானால் அவன் சிறந்த போர் வீரனாகலாம். அவனைச் சுற்றியுள்ள 10 அல்லது 100 பேரை அச்சுடர் சூழுமானால் அவனுடைய வீரத்தால் அத்தனை பேரும் போரிடுவார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் கூறுவது, “வீரர்கட்குச் சாப்பாடு, துணி, செருப்பைவிட முக்கியம் போரில் வெற்றி”. ஒருவர் வீரம் எதிரில் உள்ள 10 அல்லது 15 பேரை மிரண்டு ஓடச்சொல்லும். வீரனுடைய வீரம் எதிரியின் நெஞ்சில் பயத்தை எழுப்பும். நெப்போலியன் போர்க்களத்தில் வீரர்களை உற்சாகப்படுத்தினால் அப்படை ஊரையே வெல்லும், உலகத்தையே வெல்லும். இந்திய சேனைகள் சேனைத் தலைவர் மீதுள்ள பாசத்தால் போரிடுபவை. ஆங்கிலேய வீரர்கள் இராணுவ சட்டம் அறிந்தவர், அதன் திட்டப்படி செயல்படுபவர்கள். தலைவர் - General - இறந்தாலும், இராணுவம் கலையாது. இந்தியப்படை தலைவர் இறந்தால் கரைந்து மறையும். சர்ச்சில் வீரம் இங்கிலாந்து மக்களையே தட்டி எழுப்பியது. போர்க்களம் அன்றாட வாழ்விலும் உண்டு. எளியவன் பெரிய காரியம் செய்யும் நேரம் உண்டு. எல்லோரும் அறிந்த காரியத்தை ஒருவர் செய்தால் அது எவர் கண்ணிலும் படாது. வழக்கு செல்லும். வழக்கத்திற்கு மாறானது அனைவர் கண்ணிலும் படும். நாட்டில் அஞ்ஞாத வாசம் என்ற பெரு நெறி கண் திருஷ்டி என வழங்குகிறது. எவர் கண்ணிலும் படாமல் நடப்பதே நடக்கும். ஒருவர் கண்ணில் பட்டாலும் உயிர் போகும். கண் என்பது பார்வையல்ல. எண்ணம் தீண்டுவது கண்படுவது. எண்ண-ö மல்லாம் கெட்ட எண்ணம். நம் செயல் மீது நம் எண்ணம் பட்டாலும் - தீண்டினாலும் - அது தவறு. காரியம் கெடுவதைக் காணலாம். “எனக்கே பொறுக்கவில்லை” என்கிறோம். இது பிரபஞ்ச சட்டம். விலக்கேயில்லாத விதி. இதன் ரூபங்கள் ஆயிரம். நம்மவர்கட்கு எல்லா ரூபங்களும் தெரியும். குறிப்பாக அவற்றின் தவறான அம்சம் தெரியும். சிறு குழந்தைக்குத் திருஷ்டிப்பொட்டு முதல் புதிய கட்டடத்திற்குக் கட்டும் பூசணிக்காய் வரை உள்ள அம்சங்கள் ஆயிரம். இதன் நல்ல அம்சம், உயர்ந்த அம்சம் அறிந்து செயல்பட வேண்டுமானால், அதுபோன்ற பெருங்காரியங்களில் ஈடுபட்டவர் சாதிக்க வேண்டுமானால் இந்த அஞ்ஞாதவாசத்தின் விபரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். இதை நன்கு அறிந்தவர் உலகில் சாதிக்க முடியாதது இல்லை.

காலம், கர்மம், சமூகம், ஊர், பலர் திருஷ்டியின் எல்லா அம்சங்களும் பாரதத்தில் ஏராளமாக வருகிறது. துர்வாசர் முனிவர். பரமாத்மா தெய்வம். முனிவரைக் கடந்த ரிஷி, யோகியைக் கடந்த நிலை தெய்வ நிலை. கிருஷ்ண பரமாத்மாவுக்கு துர்வாசர் வரம் கொடுத்தார். “உன் உடலில் எங்கும் காயம் படாது என்றார்.” பிரதமர் பதவியேற்கப் போகும்பொழுதும் ஒரு டிரைவர் காரை ஓட்ட வேண்டும். பரமாத்மாவுக்கும் வரம் தரும் திறன் முனிவருக்குண்டு, பிரதமர் பாண்டி வந்தபொழுது வழக்கமான கவர்னர் டிரைவரை விட்டு நல்ல டிரைவர் ஒருவரை ஓட்டச் சொன்னார்கள். கார் டிரைவர் வரும் காலத்தில் முதன் மந்திரியானார். கார் டிரைவரானாலும், பிரதமருக்குச் செய்யும் சர்வீஸ் பவித்திரமான பக்குவம் உடையதானால் (Perfection) சிறப்பு பெறுவதால் தொழிலின் சிறப்பு நிலைக்கு சிறப்பளிக்கும். இது வாழ்வின் சட்டம். பாரதம் முழுவதும் உலகிலுள்ள எல்லா வாழ்வின் சட்டங்களையும் கூறுவது. ‘நாள் செய்வதை நல்லவர் செய்ய மாட்டார்’. Virgin Moment என்பது பகவான் சொல்.வெறும் நாளை ‘நாளா’க்குவது பவித்திரம், பக்குவம், சிறப்பு. சகாதேவன் துரியோதனனுக்கு அவன் வெற்றி பெறும் நாளைக் குறித்துக் கொடுத்தான். இது பெருந்தன்மை. எதிரிக்கும் சாஸ்த்திரம் சரியாகச் சொல்லப்பட வேண்டும் என்பது சாஸ்த்திரம். நிலைமை மீறி விட்டது. பரமாத்மா செயல்பட்டார். நிலைமை மாறியது. சாஸ்த்திரம் சாஸ்திரோத்தமாகப் பின்பற்றப்பட வேண்டும் எனில் சமயத்தில் அது நாமறியவும் உதவும். இது காலத்தின் குணம். இதைக் காலத்துள் வாழ்பவர் எவரும் அவருடைய பெரும் திறமை- யாலும் எதுவும் செய்ய முடியாது. காலம் காரியத்தை மீறிப்போனால் தெய்வம் துணைசெய்தாலன்றி வழியில்லை. அன்பர்கட்கு அத்தெய்வமாக அன்னை அருள் சூழலில் காத்திருக்கிறது. பாரதத்தில் இதுபோன்ற எல்லா கட்டங்களும் ஆபத்தை விலக்கத் தேவைப்படுகிறது. அன்பன் ஆபத்தை அறியான். தேடிப் போனால் ஆபத்துண்டு. அன்பனுக்கு இதே போல் அருள் செயல்படும் நேரம் எல்லாம் அற்புதமான நேரம். அதிகபட்ச வாய்ப்பை சாதிக்கும் நேரம். பிரதமரிடம் சந்தித்துப் பேச முடியாத மனிதனை அருள் பிரதமரை நியமிக்கும் நிலைக்கு உயர்த்தும் வாய்ப்பு அது. ஊர் ஒருவனுக்கு எதிரியானால் அவன் அழிவான். அவன் ஏழையானால் அவதிப்பட்டு அழிவான். வாழ்வில் values பண்புகள் உண்டு. அவை சான்றோருக்குரியவை. அவற்றை ஏற்பவர் சான்றோராவார். சான்றோர் மனதாலும், கனவிலும், கற்பனையிலும் குறையறியாதவர். Dr. தார்ன் என்பவருடைய நிலை அது போன்றது. £150 சம்பாதிக்கும் டாக்டர் அவர். அவரிடம் £3,00,000 சொத்தை டிரஸ்டியாகக் கொடுத்து, “அடுத்த நான்கு வருஷத்தில் உடையவன் இறந்து விட்டால் இந்தச் சொத்து உங்கள் அண்ணார் மகளுக்குடையது” எனக் கூறியபின் அவன் பிழைக்க மனதார பிரம்மப்பிரயத்தனம் செய்தார். அவன் இறந்து விட்டான். எதிரியான “ஊர்” ஓராண்டாகச் செய்யும் அவல ஆர்ப்பாட்டம் தலைகீழே மாறி அழிக்க விரும்பிய பெண்ணை அழகு தெய்வமாக ஏற்றனர். பாரதம் கூறுவது ஒன்று இரண்டல்ல. ஓராயிரம்.

(முற்றும்)

**********

ஜீவிய மணி

அன்பு (Divine Love) என்பது அழகான பழக்கம் மட்டும் அன்று. நல்ல சொல் மட்டும் அன்று. நம்மைப்போல் பிறரைக் கருதுவது மட்டும் அன்று. நம்மை மீறி எழுவது. அனைவரையும் அனைத்தையும் நாடுவது. பலன் எதிர்பாராதது. கொடுக்காமல் இருக்க முடியாது என்பது.

**********



book | by Dr. Radut