Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(அக்டோபர் 2013 இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

7. வெளியிலிருந்து வரும் தூண்டுதல்களுக்கு உடனே response வழங்க வேண்டாம். எப்பொழுதுமே சற்றுப் பின்வாங்கி மறுபரிசீலனை செய்து அதன் பின்னர் response வழங்குவது நல்லது. அப்படிப் பின்வாங்குவது முதற்கட்டம். சலனம் இல்லாமலிருப்பது இரண்டாம் கட்டம். நிரந்தர சமநிலை அடைவது மூன்றாம் கட்டம்.

சமநிலை என்பது equality. இது அனந்தத்தின் ஜீவியம் (consciousness of Infinity). அனந்தம் சமநிலையின் ஆன்மிக மூலம். வாழ்வில் சமநிலை பொறுமையாக வெளிப்படுகிறது.

சமநிலையை எய்த முனைவது அனந்தத்தை அடைய முயல்வதாகும். பொறுமை வாழ்வில் அனந்தமாகச் செயல்படுகிறது என்பது விளக்கம். பகவான் பொறுமைக்கு ஒரு விளக்கம் தருகிறார். தனக்கு 1914-இல் பொறுமையில்லாத நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். Synthesis-இல் முதல் அத்தியாயத்தில் கடைசி வாக்கியம் பொறுமையின் விளக்கம். சாஸ்த்திரம், உற்சாகம், குரு, காலம் யோகத்தில் செயல்படுவதை விளக்கும் அத்தியாயம் இது. காலம் என்ற கருத்தைப் பொறுமை மூலம் பகவான் கூறுகிறார். யோகம் பயில சாஸ்த்திர ஞானம் தேவை. அதைப் பெற்றபின் அதை நிறைவேற்றும் உற்சாகம் தேவை. ஞானமும், உற்சாகமும், சரியான மனித குருவைக் காட்டும். மனித குரு முடிவானவரில்லை. அந்தராத்மா அசரீரியாக எழும்வரை அவர் தேவை. அசரீரி, வாணி, inner voice என்பது குருவாகச் செயல்படும். ஒரு முறையும் தவறாது. அதைப் பணிந்தால் அசரீரி ஜகத் குருவாகும். அதுவே உண்மையான குரு.

இந்தக் குரு செயல்பட்டு பலிக்கக் காலம் கருவி. காலம் என்பது ஆத்மாவின் அகச் சலனம். இடம் அதன் புறச்சலனம். இடத்தைக் கடந்தவன் காலத்தை அடைவான். நமக்கு இடம் என்பது புலன்களின் செயல்கள். புலன்கள் செயல்பட்டால் மனத்தில் எண்ணம் ஓடும். ஓடும் எண்ணங்கள் நின்றால் புலன்களின் செயல்கள் நின்றதாகப் பொருள். ஓடும் எண்ணம் நின்றபின் சிந்தனை இருக்கும். சிந்தனை மனத்தின் ஆழத்திற்குரியது. சிந்தனை நிற்பது ராஜ யோகம். ஓடும் எண்ணம் நிற்பது ஞானயோகம்.

ஞான யோகம் முற்றி ராஜ யோகமானால் ஓடும் எண்ணங்களும் சிந்தனையும் கரையும்.

ஓடும் எண்ணங்களும், சிந்தனையும் மனம். இவை நின்றால், கரைந்தால் மனம் செயல்படுவது நிற்கும். ஓரளவு மனத்தைக் கடந்தவராவோம். மனத்தைக் கடந்ததற்கு அடையாளம் (Censor) எச்சரிக்கை அடங்குவது, அழிவது. மனத்தைக் கடந்தவன் ஆத்ம விழிப்புப் பெற்றவன். மனம் எதிர்பார்க்கும், சிந்திக்கும், அவசரப்படும். மனோ வேகத்தில் செயல்படும். மனம் அழிந்து அல்லது அடங்கினால் ஆத்மா வெளிவரும். அது பொறுமையே உருவானது. பொறுமை காலத்தின் கருவி என்கிறார் பகவான். அதை விளக்கும் வாயிலாக பொறுமையின் இரு அம்சங்களைக் கூறுகிறார்.

  1. க்ஷணத்தில் செயலை முடிக்கும் திறமை முதல் அம்சம்.
  2. செயல் முடிய யுகங்கள் இருப்பதால் அவசரம் அழிந்து அதற்குரிய பொறுமை எழ வேண்டும்.

அவசரம் அழிவது மனம் அழிவது. பொறுமை எழுவது ஆத்மா விழித்துச் செயல்படுவது. மனம் அழிந்து ஆத்மா செயல்பட்டால், காரியம் க்ஷணத்தில் முடியும்.

அடுத்த நிகழ்ச்சி, பகவான் அன்னையை முதன்முறையாக அவர் கணவருடன் சந்தித்தார். அன்னை அப்பொழுது கீதையின் யோகத்தை முடித்தவர். கிருஷ்ணாவதார நிலையில் இருந்தார். இது Overmind. அன்னைக்கு அடுத்தகட்ட மௌனம் தேவை. அது சத்திய ஜீவிய மௌனம். அதற்காக அன்னை எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். பகவானால் அதை அன்னைக்குத் தர முடியும். பெறும் தகுதி போதும். அன்னைக்கு அத்தகுதியுண்டு. பகவான் ரிச்சர்டுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அன்னைக்கு அம்மௌனத்தைக் கொடுத்துவிட்டார். அன்னை தரையில் உட்கார்ந்திருந்தார். தலையில் ஏதோ நடப்பதை உணர்ந்து மகிழ்ந்தார். நன்றியுடன் ஏற்றுக் கொண்டார். மௌனம் நிலைத்தது. கடைசிவரை அவருடனிருந்தது. பகவான் கொடுப்பதைப் பெற தகுதி தேவையில்லை. பெறும் விருப்பமிருந்தால் போதும். ‘அன்னைக்கும் வேறொருவருக்கும்’ அம்மௌனத்தைக் கொடுத்ததாகக் கூறுகிறார். ரிச்சர்ட் எனக் கூறவில்லை. அவர் மனம் சலனமிழந்து மௌனமாயிற்று. அவர் மனம் செயலை இழந்ததைத் தான் மடையனானதாகக் கருதி ஓலமிட்டார். மௌனம் விலகி மனம் மீண்டும் செயல்பட்டது. அந்த நாளில் தனக்குப் பொறுமையில்லை என பகவான் கூறுகிறார். ரிச்சர்ட் பேரறிஞர், புதுவையில் எலக்க்ஷனுக்காக வந்திருக்கிறார். தனக்குப் பொறுமை இருந்திருந்தால் மௌனத்தைப் பெறத் தகுதியற்றவருக்கும் மௌனத்தைத் தான் கொடுத்திருக்க முடியும் எனக் கருதும் பாணியில் பகவான் எழுதுகிறார். அது என்ன பொறுமை? அது மனத்தைக் கடந்த ஆத்மா. ஆத்மாவைக் கடந்த சத்திய ஜீவியப் பொறுமை. அது க்ஷணத்தில் செயல்படும்.

(தொடரும்)

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

மலையும் கடலும் ஆத்மாவுக்குரியது.
மலை வலிமை தரும். கடல் தேஜஸ் தரும்.
மலையும் கடலும் இணைந்த ஆத்மா பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

*********



book | by Dr. Radut