Skip to Content

08. பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

வியாதிகளைக் குணப்படுத்தும் டாக்டர்களிடம் வழங்கும் சொல் ஒன்றுண்டு. Treat the patient, not the disease மருந்து வியாதிக்கல்ல, மனிதனுக்கு என்பது அச்சொல். சர்க்கரை வியாதி பரவலாக உள்ள காலம் இது. இது வந்தால் போகாது என்பது பொதுவான அனுபவம். வாயைக் கட்டுவது முக்கியம். மருந்து ஒரு வேளை தவறுதல் கூடாது. ஒரு டாக்டர், "சாப்பாடு சாப்பிடும் நேரம் முக்கியம்'' என்பார். என்ன சாப்பிட வேண்டும் என்பது அவ்வளவு முக்கியமில்லை. அரிசி கூடாது என்பதில்லை. கோதுமை வேண்டும் என்பதில்லை. எதைச் சாப்பிட்டாலும் அதற்குரிய அளவோடு சாப்பிடுவதானால், இட்லி, தோசை ஆகிய எதையும் சாப்பிடலாம். நேரம் முக்கியம். அவரிடம் உள்ள டயாபடிக்ஸ் வியாதிஸ்தர் அவர் கூறும் சாப்பாட்டை அவர் சொல்லும் நேரத்தில் சாப்பிட்டால் ஒரு மாத காலத்தில் எல்லா மாத்திரைகளையும் அடியோடு நிறுத்திவிடுவார்கள். வியாதிக்கு மருந்து கொடுப்பதைவிட, மனிதனை அறிந்து அவனுக்கு மருந்து தர வேண்டும். பெண் குடும்பத்தை நடத்தும் முறை இதுவே. அவளுக்குத் தெரியலாம், தெரியாமலிருக்கலாம். குழந்தைகளைக் கவனிப்பது அத்தியாவசியம். கவனம் தர நேரம் தேவை என்பது முழு உண்மையில்லை. தாய் என்னைக் கவனிக்கிறாள் எனக் குழந்தை உணர்வது முக்கியம். புத்திசாலிப் பையன் முதல் மார்க்கு வாங்குவான் என்பது உண்மை. புத்திசாலியாக இல்லாத குழந்தை தாயின் பாசம் நிறைந்த கவனிப்பால் புத்திசாலிப் பையனை மிஞ்சுவதை அனைவரும் அறிவதில்லை. தாயின் கவனம், பாசமுள்ள அக்கரையுள்ள கவனம் உள்ள புத்திசாலித்தனத்தை அபரிமிதமாகப் பலன் தரச் செய்யும் என்ற உண்மை கல்வித்துறை நுணுக்கம் அறிந்தவர் அறிந்தது. பிரெடரிக் என்ற ரஷ்ய மன்னன் பெரும் புகழுடன் வாழ்ந்தவர்.

அவருக்குக் கோபம் வந்தால் அடங்க சில நாட்களாகும். அந்த நாட்களில் அவர் எடுக்கும் முடிவுகளால் அடியோடு அழிக்கப்படுபவர் ஏராளம். அவரிடம் பணியாள் bar maid ஒருத்தியுண்டு. அவருக்கு மறுநாள் வரும் கோபம் அவளுக்கு முதல் நாளே தெரியும். அவரைச் சமாதானப்படுத்த அவள் அவர் தலையைத் தன் மார்பில் பொருத்தித் தடவிக் கொடுத்து கொஞ்ச நேரத்தில் கோபத்தை அழித்து விடுவாள். பிற்காலத்தில் அரசர் அவளை மணந்து கொண்டார். இதுபோன்ற உயர்ந்த பெண்ணின் குண விசேஷங்களைக் கருதி "ஆவது பெண்ணால்' என்ற பழமொழி எழுந்துள்ளது. அகிலனுடைய கதாநாயகி கமலம் சிறந்து விளங்கும் கதாப்பாத்திரங்களில் ஒன்றாகும். தலைசிறந்தவள் எனவும் கூறலாம். நினைவு முகம் மறக்கலாமோ என்ற பெண்ணின் அந்தரங்க ஆத்மீக அம்சம் பெற்றவள். ஆண் மறக்கலாம். வேறு உயர்ந்த இலட்சியங்களை நாடலாம். காதல் அவனுக்குப் புனிதமானாலும், அதைவிட நாடும், காந்தியும் உயர்ந்து தோன்றலாம். பெண் மனம் அப்படியல்ல. மலரும் மலர் ஒரு முறையே மலரும் என்ற கொள்கைக்கு எடுத்துக்காட்டான வாழ்வு பெற்றவள் கமலம். இந்தியப் பண்பு, கலாச்சாரம் உயர்ந்தது என்பதை நிரூபிக்க கமலத்தைவிட சிறந்த பாத்திரமில்லை. அவளுக்குத் திருமணமாகலாம், பிள்ளை பிறக்கலாம். அவளால் அன்று நினைத்து வரித்தவனை மறப்பது முடியாது. இதுபோன்ற கதாபாத்திரங்கள் எல்லா இலக்கியங்களிலும் உண்டு. இந்திய இலக்கியத்தில் அதற்கு ஆன்மீகப் பரிணாமம் ஏற்படுவதால் அவள் இல்லக்கிழத்தியாக மட்டுமில்லாமல் ஆவித் துணையாகிறாள். அந்த உயர்வு இந்தியப் பெண்கட்கேயுண்டு. Dr. Thorne தார்ன் என்ற கதையில் மேரி திருமணத்திற்கு முன் பிறந்தவள். பேரழகு வாய்ந்த பெருந்தவத்து நாயகியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்த பிரபு, போதை மருந்து கொடுத்து அனுபவித்து கர்ப்பமாகிறாள். அவள் தமையன் பிரபுக்கு அத்தியந்த நண்பன். அவன் வீடு கட்டும் கொத்தன். விஷயம் தெரிந்து குடித்துவிட்டு அவரைத் தேடி வருகிறான். அவர் வீட்டில் சந்திக்கிறான். வலுவான தடியால் ஆத்திரம் தீரும்வரை அடிக்கிறான். அந்த இடத்திலேயே உயிர் போகிறது. அவனைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். பிரபுவின் தம்பி Dr. Thorne டாக்டர் தார்ன், அளவு கடந்து கோபப்படுகிறார். அவனை ஒழித்துக்கட்ட விரும்புகிறார். விஷயம், அதிலுள்ள உண்மை, அண்ணன் செய்த கொடுமை சிறிது சிறிதாகப் புரிகிறது. மனம் மாறி அவன் மீது அனுதாபப்படுகிறார். அவனை சிறையில் போய்ப் பார்த்துப் பேசுகிறார். அவரே செலவு செய்து வழக்கை நடத்துகிறார். அநியாயம் பொறுக்க முடியாமல் ஆத்திரத்தால் நடந்த செயலுக்குச் செய்தவன் முழுப் பொறுப்பில்லை. இது கொலைக் குற்றமில்லை. அது திட்டமிட்டுச் செய்ததாகும். Man slaughter கொலை. ஆனால் அந்த நேரம் எழுந்த வேகத்தால் கொலை செய்தவனை man slaughter என்பர். அண்ணனைக் கொலை செய்தவனுக்கு ஆதரவாகக் கேஸ் நடத்தி, ஆறு மாத தண்டனையாக ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனையில்லாமல் செய்கிறார். அவன் தங்கை மேரி பேரழகி. அத்தனை பெருந்தன்மையான பெரிய உள்ளம் படைத்த உத்தமி. பலர் அவளை மணக்க விரும்புகின்றனர். இந்த நிலையில் அவளுக்குப் பெண் குழந்தைப் பிறக்கிறது. ஓர் இரும்புக் கடை வியாபாரி கண்ணியமானவர். அவளை மணந்து இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா அழைத்துப் போக விரும்புகிறார். அவரால் அவள் யாருக்கோ பெற்ற குழந்தையை ஏற்க முடியவில்லை. டாக்டர் தார்ன் முன்வந்து தானே குழந்தையை தந்தைபோல் திருமணம் செய்து கொள்ளாமல் காப்பாற்ற உறுதி கூறுகிறார். மேரி இரும்புக் கடைக்காரரை மணந்து அமெரிக்கா போகிறாள். டாக்டர் சிறு குழந்தையைப் பாதுகாத்து லண்டனில் எவருக்கும் தெரியாமல் போர்டிங் பள்ளியில் 12 வயதுவரை வளர்க்கிறார். டாக்டர் குடும்பம் பரம்பரையான பிரபு குடும்பம். அக்குடும்பத்திற்கேயுரிய அத்தனை பெருமைகளையும் பெறும்படி வளர்க்கிறார். 12ஆம் வயதில் அண்ணன் மகளாக லண்டனிலிருந்து வருகிறாள். எவரும் மேரியைக் கண்டு கொள்ளவில்லை. உள்ளூர் பிரபு பெரும் செல்வர் கிரஷம். டாக்டர் அவருக்கு நண்பர். அவருக்கு ஆண்டிற்கு 14,000 பவுண்ட் வருமானமுண்டு. 30,000 பவுண்ட் ஆண்டு வருமானமுள்ள பிரபுவின் தங்கை லேடி அரபெல்லாவை மணக்கிறார். மேரியின் உயர்ந்த குணங்களால் கிரஷம் மேரியை அவரது அரண்மனையிலேயே தம் பெண்களுடன் கல்வி, சங்கீதம் கற்க ஏற்பாடு செய்கிறார். அவர் பெண்கள் சிறப்பானவர்கள். மேரி அவர்களிலும் உயர்ந்தவள். லேடி அரபெல்லாவின் ஊதாரித்தனத்தால் கிரஷம் சொத்து திவாலுக்கு வருவதால் வீடு பதைக்கிறது. செய்யும் வழி தெரியவில்லை. கிரஷம் மகன் பிராங்கிற்கு இப்பொழுது 21 வயது. பணமுடைய பெண்ணாகத் தாயார் பார்க்க விரும்புகிறார். அவன் நிலையில்லாத நல்ல உள்ளம் படைத்த அர்த்தமற்ற இளைஞன். அவன் திட்டவட்டமாக மேரியைத் திருமணம் செய்வதாக அறிவித்து அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறான். மேரி அவன் வயது, அவள் பிறப்பு ஆகியவற்றை கிரஷம் தவிர அனைவரும் மறந்துவிட்டனர். லேடி அரபெல்லா பீதியடைந்து மேரியை அரண்மனைக்கு வரக் கூடாது என்று மூன்று ஆண்டுகள் நூறு வகையாக மேரியையும், டாக்டரையும் கொடுமைப்படுத்துகிறாள். இதற்கிடையில் வீடு கட்டும் கொத்தன் ரயில்வே காண்டிராக்டராகி இந்தியா, சைனா, ஐரோப்பாவில் பிரபலமாகி, 3,00,000 பவுண்ட் சொத்து பெற்று, கிரஷம் நிலத்தையெல்லாம் அடமானமாகப் பெற்று, குடியால் உடல் நலிந்து, தன் சொத்தை எல்லாம் தங்கை மகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு உயிருக்குப் போராடுகிறான். மேரி அரண்மனையிலிருந்து விலகி, பிராங்கை நினைத்து, வேறு எந்த விடியலுமறியாமல் உள்ளம் குழைந்து ஊனும் உருகுகிறாள். அவள் உயர்வு, உண்மை, சாந்தமான குணம் இப்பெரும் சொத்தைப் பெறுகிறது. பிராங்க் தடையின்றி அவளை மணந்து உய்விக்கிறான்.

  • இது பெண்ணின் தவம் பார்த்த நிகழ்ச்சி.
  • உள்ளம் உயர்ந்து உருகி நெகிழ்ந்தால் உலகம் அவள் காலடியில் வரும்.
  • பெண்ணின் பெருமை தழலாய், தணிந்து மலர்வது வாழ்வு.

P & P பெண்மணிகளின் தனிச்சிறப்பு:

பெண்கள் யதார்த்தவாதிகள். நடைமுறையில் கருத்தானவர்கள். அவர்கள் இலட்சியத்தை ஏற்கும் நேரம் உண்டு. யதார்த்தவாதி இலட்சியத்தை ஏற்றால் நடைமுறையில் அது பூர்த்தியாவது அவள் குறிக்கோளாகும். எனவே, பெண் இலட்சியத்தை ஏற்றால் இலட்சியம் இலட்சியமாகப் பூர்த்தியாகும். தவறு என்பதைப் புறக்கணிக்கும் பெண் தவற்றால் ஏற்படும் மற்ற ஆதாயம் எவ்வளவு பெரியதானாலும், அதைக் கருதவேமாட்டாள். இதம், இங்கிதம் நம் மொழியிலேயே உயர்ந்த சொற்கள். தன்மையெனவும் நாம் அவற்றைக் குறிப்பிடுகிறோம். முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்ற கருத்து இதமாகப் பழகும் அவசியத்தைக் குறிக்கிறது. சொல்லின் நயம் மனத்தின் உண்மையை உணர்வாக வெளிப்படுத்துவதை அது குறிக்கும். இக்கருத்துகள் ஜேன், எலிசபெத், Mr. கார்டினர் செயல்களில் வெளிப்படுவதை நாம் இங்குக் காண்போம்.

ஜேன் மனம் தூய்மையானது. அவள் சித்தம் அழகால் அலங்கரிக்கப்பட்டது. அதனின்று எழும் அமைதி அவள் முகத்தின் பொலிவாகக் காணப்படுகிறது. எவரிடமும் குறையில்லையென உணரும் குணக்குன்று ஜேன். தங்கை எலிசபெத் சுறுசுறுப்பானவள். கலகலப்பான களிப்புப் பொங்கி எழுவது அவளியல்பு. அவளைக் கவர்ந்தவள் ஜேன். ஜேன் மனம் சிந்தனையற்ற அமைதியைப் பெற்றிருப்பதை விவரம் தெரியாதவர் அறிவற்ற பேரழகி எனவும் நினைக்கத் தூண்டும். அப்படி அவர் கருதி சற்று ஏளனமாகப் புன்முறுவலிப்பது ஜேனுக்குப் புன்னகையாகத் தெரியுமேயொழிய அதனுள் புதைந்துள்ள கேலி தெரியாது. பிறர் தன்னைக் கேலி செய்வார் என்பதையே கருத முடியாத கணிப்பு அவளது. முதல் அசெம்பிளியில் பிங்கிலியை பென்னட் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அவன் பார்வை ஜேன் மீது விழுகிறது. அவன் மனம் அவளுள்ளத்தில் நிறைந்து மலர்ந்து மரியாதையான மெல்லிய புன்முறுவலாக ஏற்றுக் கொள்கிறாள். ஆண், பெண்ணை நாடும் அவசரச் சட்டம் காதலர் உலகம். கண்டதும் கருத்து இசைந்தது. இது மனம் பயிலும் சட்டம். சமூகத்திற்குரிய சட்டமும் இதுவே. எனினும் ஊருக்கும், உள்ளத்திற்கும் ஏற்ற வடிவங்கள் உள. அதில் ஜேன் ஏற்றுக் கொண்ட வடிவம் தான் முதலில் ஆடவனை நாடக்கூடாது என்பது. ஆண், பெண்ணை ஆர்வமாக நாடும் பொழுது, அதை மனதாலும், செயலாலும் ஆரம்பிப்பவள் பெண் என்பது மேதைகள் கூறுவது. காளிதாசன் முதல் ஷேக்ஸ்பியர் வரை, ஜேன் ஆஸ்டினிலிருந்து பிரேம்சந்த் வரை ஆமோதிக்கும் கருத்து அது. ஜேன் அதற்குரிய இலக்கணம். காதல் திருமணம் காலத்தால் போற்றப்பட்ட இலட்சியம் ஆண்ட காலம் ஜேன் ஆஸ்டின் Pride & Prejudice எழுதிய காலம். நான் காதலிக்காத ஒருவனை மணக்க மாட்டேன், காதல் எழாதது திருமணமில்லை, பெற்றோருக்கு உரிமையிருந்த காலமானாலும், பெண் ஏற்ற இளைஞனை ஏற்கவோ, மறுக்கவோ பெற்றோருக்கு உரிமை உண்டு. ஆனால் பெற்றோர் மகளுக்கோ, மகனுக்கோ, வரன் பார்க்கும் உரிமையை அந்நாளிலும் சமூகம் அவர்களுக்களிக்கவில்லை. அது அன்று இங்கிலாந்தின் மரபு. இளம் பெண்களிடம் அன்று அந்த நாட்டில் பரவலான காதலைப் பற்றிய கருத்தொன்றுண்டு. காதல் எனில் அது பெண் ஆரம்பிப்பதில்லை. அது அவளுக்குக் குறைவு. அவளை நாடி அவளிடம் அக்கரைக் காட்டிய இளைஞன் தன்னை விரும்புகிறான் என அவள் உணர்ந்தால், தன் மனத்தில் அவன் மீது பிரியம் இருக்கிறதா என அவள் கண்டு, அவள் அவனை ஏற்பதா, இல்லையா என முடிவு செய்வது பண்பிற்குரிய சிறப்பு எனக் கருதப்பட்டது. அதுவே ஜேன் விரும்புவது. ஊரில் அனைவரும் அவளை அப்படிப்பட்டவளாகக் கருத வேண்டும் என்பதே அவளது சமூகக் குறிக்கோள். தன் விருப்பம் எதுவாயினும் தன் மனம் இடம் பெயர்ந்து தன் கட்டுப்பாட்டை மீறி அவனை நாடுவது உசிதமல்ல. அப்படி மற்றவர் புரிந்து கொள்ளும்படி அவள் நடைமுறையிருந்து விட்டால் அது அவளுக்குப் பெண் என்ற அளவில் அழகல்ல என்பது ஜேன் ஆழ்ந்துணர்ந்து போற்றும் மனநிலை. அப்படியே அவள் 4 முறை பிங்கிலியுடன் டின்னர் சாப்பிடுவதைக் கண்டு சார்லேட் உள்ளத்திற்குரிய உண்மையை லிஸ்ஸியிடம் கூறுகிறாள். ஆதரவு பெறாமல் அன்பு செலுத்தும் இதயம் அரிது. ஜேன் பிங்கிலி மீது பிரியம் கொண்டது உண்மை. வெளிப்படையாகத் தெரிவதே உலகம் அறியும், உள்மனத்தை உலகம் அறிய முயலாது. பிரியத்தை அறிவிக்கும் அறிகுறிகள் ஜேனிடம் காணப்படவில்லை. அது அவசியம் என்கிறாள் அனுபவம் வாய்ந்த 27 வயதான சார்லேட். அன்றிலிருந்து, பிங்கிலி இலண்டன் போன பின்னும், லிடியா ஓடிய காலத்திலும், தாயார் மனம் உடைந்த பொழுதும், லிஸ்ஸியால் ஜேனிடம் அக்கருத்தின் முக்கியத்தை அவள் ஏற்கும்படிக் கூற முடியவில்லை. ஜேன் தன் இலட்சியத்தை முடிவு வரை நிறைவேற்றி வெற்றி பெற்றவள். இது பெண்மையின் சிறப்பு, இலட்சிய வெற்றி. மனத்தை அறிந்தவர் மகத்தானது எனப் போற்றும் பாங்கு.

பணம் எழுந்தவுடன் மனம் அதை நாடும். அதற்கேற்ப நடக்கும். அதற்குரிய பாஷையைப் பேசும். பணம் பெற்றவன் சொல் உண்மையாகத் தோன்றும், உள்ளமும் அதை ஆமோதிக்கும். இது மனித சுபாவம். இதைக் கடந்து வர மனிதன் பிரியப்படுவதில்லை. இந்த நிலையில் திக்கற்ற பெண் மனம் எப்படிப் பேசும்? இந்திய சமுதாயத்தில் பெண்ணுக்கு எந்த உரிமையுமில்லை. பிறக்கும் உரிமையேயில்லை. பெண் பிறந்ததைப் போற்றுவாரில்லை. அவள் சாவையும் சதிக் காலத்தில் சமூகம் நிர்ணயித்தது. பெண்ணென ஒருத்தியிருப்பதாக ஆண் நினைக்காத காலம் அது. நம்மிடமில்லாத பொருள்கட்கு மொழியில் சொல் எழுவதில்லை. மேஜை, ரேடியோ நம் நாட்டில் உற்பத்தியாகவில்லை. அது போன்ற ஆயிரம் பொருள்கட்கு தமிழில் சொல் எழவில்லை. எச்சில் ஆங்கிலேயருக்கில்லை. ஒருவர் எச்சப்படுத்தியதை மற்றவர் சாப்பிடுவார்கள். தீட்டு என்ற கருத்தேயில்லை. அவர்கள் நாட்டில் ஜாதியில்லை. ஆங்கிலத்தில் இக்கருத்துகட்குரிய சொற்கள் உருவாகவில்லை. பெண் வியாபாரம் செய்வதில்லை. ஞானத்தையடைய தவம் செய்யும் உரிமை அவளுக்கில்லை. வியாபாரி, ஞானி என்ற சொற்களுக்குப் பெண்பாலில்லை. மடையன் என்ற சொல்லுக்கும் பெண்பாலில்லை. மடைமைக்கும் உரியவளில்லை. அதாவது பெண்ணென ஒரு ஜென்மம் இருப்பதாக ஆண் மனம் கருதாத காலத்திய மொழி வளர்ச்சி இது போன்றவை. நம் நாட்டில் 3 வயதிலும் திருமணம் செய்தார்கள். அந்த நாளில், குழந்தை மணையில் உட்காராது என்பதால் பெற்றோர் மடியில் உட்கார்ந்து திருமணமாயிற்று. நடைமுறையில் மேல்நாட்டிலும் பெண் நிலை அன்று அது போன்றது. அழகு உயர்ந்தது, முக்கியமானாலும், அழகிற்காக மட்டும் திருமணமாவதில்லை. அந்தஸ்து, சொத்துக்குத் திருமண உரிமையுண்டு. இன்று எந்தப் பெண்ணும் ஏறெடுத்துப் பார்க்காத இளைஞனுக்குச் சொத்து வந்தால் அத்தனை பெண்களும் மனம் மாறி அவனை ஏற்கக் காத்திருப்பது இயல்பு.

தொடரும்.....

********

ஜீவிய மணி
 
உண்மைக்கு நம்பிக்கை;
ஆசைக்கு மூடநம்பிக்கை.
 

*******



book | by Dr. Radut